திங்கள், 31 அக்டோபர், 2022

நல்லதோர் உலகம்

 ஏதோ அவல் வேண்டும் அசைபோட

தீதோ நன்றோ பிறர் தர வாரா
உண்மை தானே சொன்னது சரிதானே
உலகம் போகிற போக்கும் அதுதானே
கசடுகள் மிதக்கிற பானை விளிம்புகள்
அசடுகள் பேசுதல் அனைத்து மூலையிலும்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருக்க காய் தேடியே
சொல்லில் செயலில் எங்கும் வன்மம்
பல்லில் நாக்கு படாத சொற்கள்
மனிதம் மறைந்து மதங்கள் ஓங்கியே
புனிதம் இதுவா கேள்வி பதிலில்லை
விடியல் மேகக் கூட்டத்தில் இருளாய்
கடின வாழ்க்கை கசந்து போனது
புதிய உலகம் பழையது் நோக்கி
ஓதியது வேதாளம் சாத்திரம் ஒன்றை
மாற்றம் நல்லதாய் மனிதனை வாழ்விக்க
சீற்றம் கொண்ட புயலாய் உருவாகி
நல்லதோர் உலகம் மீளுமா விரைவில்
வல்லவர் எவரோ விடை சொல்வீரா ?

கருத்துகள் இல்லை: