வெள்ளி, 8 மே, 2026
வீடு
தெருவோரக் குப்பை அள்ளும் குப்பனுக்கு மரநிழலே வீடு
வருவோர் போவோரிடம் கையேந்தும் பாலனுக்கு நடைபாதை வீடு
நாடோடி ஊரோடிக் கூத்தாடும் குயிலிக்கு திறந்தவெளியே வீடு
நாடுவிட்டு நாடுவந்து அகதியான அழகனுக்கு எல்லையே வீடு
பாடுபட்டு மூட்டை தூக்கும் முனியனுக்கு குடிசையொரு வீடு
பாலைவன வெயிலிலே காயும் கண்ணனுக்கு டார்மிட்டரி வீடு
சோலைவனத் தோட்டத்தே் காவலனாம் கோபிக்கு கடைசியிலே வீடு
சேர்த்த பணத்தோடு வங்கிக் கடனோடு சோமனுக்கு வீடு
சேராத அடுத்த வீட்டினருக்கும் இவனுக்கும் சண்டையோ பெரும்பாடு
ஊருக்கு வெளிப் புறமாய் தன்னந் தனியே கிரவுண்ட்
பேருக்கு ஒன்றாய் கர்ணன் கட்டிய ஒற்றை வீடு
நகருக்கு நடுவே அரசியல் வாதிக்கு மாளிகை வீடு
நல்லதொரு காவலுக்கு நம்பி அவன் நாள்தோறும் வாயிலிலே
நம்பி படித்தது பட்டப் படிப்பு முதல் வகுப்பில்
நம்ம எம்எல்ஏ எட்டாம் வகுப்பை எட்டாத மேதாவி
பல அடுக்கு கோபுர வீடு அதன் அருகே
சில பல கோடிகளைக் கொட்டி கட்டிய வீடு
எத்தனை கார்களோ வகையாய் அந்நிய பிராண்டாம் அவையாவும்
சொத்துக்கள் சேர்த்த விதம் ஊரறியும் உற்ற நண்பனால்
கேள்வி கேட்க யாருக்கும் துணிவில்லை உயிர்ப் பயத்தால்
கேளாத பிணமாய் மாறிட யாருக்குத் தான் ஆசை
காலம் மாறிப் போனது பேரனே
ஞாலம் சுழற்சியில் வீடுகள் மறைந்தன
கூட்டுக் குடும்பங்கள் மறைந்தே போயின
கூடுகள் துறந்த குருவிகள் போலவே
முற்றம் முழுதும் நிறைந்த குடும்பம்
முற்றிலும் மாறிய மூன்று பேராய்
வயதான தாயும் தந்தையும் இங்கே
அயலக வாழ்வில் மகளும் மகனும்
வீடுகள் மறைந்து அடுக்கு மாடிகள்
காடுகள் மறைந்து வணிக வளாகங்கள்
அமைதி மறைந்து ஆரவாரக் கூச்சல்
அடுத்தது என்னவோ அடியேன் அறியேன்
உழைப்பவர் பெருமை
இன்றல்ல என்றுமே உழைப்பவர் அவர்
இறைக்கு ஈடான உறுதி கொண்டவர்
இயங்கும் உலகே இவர்தம் தயவால்
இயந்திரம் போன்றே இயங்கும் மனிதர்
மண்ணைப் பொன்னாக்கும் வித்தை கற்றவர்
எண்ணெய் சுரக்க எரிதழல் வெயிலில்
தன்னைச் சுட்டு தரணிக்குத் தருபவர்
தன்னலம் பாராத தகைசால் பெருமகனார்
உண்ண உணவும் உழுபவர் கைகளில்
சொல்லி மாளாது சோர்விலா மானிடர்
வெல்வது சிலரே வறியவர் பலரே
ஊருணி நீரும் ஊரெல்லாம் சாலையும்
பாருக்கே ஒளியும் மாடமாளிகை கோபுரமும்
உழைக்கும் உடலின் வியர்வைத் துளிகளில்
உழைப்பவர் பெருமை ஒருநாள் அல்ல
தினம்தோறும் போற்றுதற் குரியது அன்றோ ?
மனங்கள் மகிழ வாழ்த்துகள் சொல்வோம்
வாழ்த்திப் பாடு
வாழ்ந்தாயா
தாழ்ந்தாயா
வீழ்ந்தாயா
வாழ்த்திப் பாடு
தாழ்த்தி விடாதே
காழ்ப்பு ஏனோ
ஏழ்மை கொடியதே
வாழ்க்கை வாழவே
பாழாய்ப் போகாதே
பழகக் கற்றுக் கொள்
வழக்கும் வாதமும்
முழக்கும் முரசும்
செழித்த நாட்டின்
வழிவழி வந்தது
தொழுவது இறைவனை
முழுமுதற் கடவுளை
அழுதாலும் மாண்டோர்
எழுவது இயலுமோ
கழுவினில் ஏற்றிய
கொழுத்த கள்வனோ
பழுத்த பழமென்றால்
விழுந்தே ஆகுமன்றோ
நாவழுந்தச் சொல்வதென்றால்
நானூறு வார்த்தையுண்டு
தமிழ் அமிழ்து
பழகிப் பாருமின்!
உழைத்த காலம்
வாழ்க்கை ஒரு வட்டம்
உழைத்த காலம் போனது
பிழைப்பு தேடி ஓடலே
கழைக் கூத்தாடி ஆகலே
கூழைக் கும்பிடும் போடலே
ஏழை என்றும் ஆகலே
ஊரைச் சுற்றி வந்தோம்
பேரைச் சொல்ல பிள்ளைகள்
நரைச்ச முடியும் மீசையும்
கரையைச் சேர்ந்த படகாய்
தரையில் நின்ற கால்கள்
அசைபோட ஆயிரம் உண்டு
வசைபாட நேரம் இதுவல்ல
இசையோடு பாடும் நேரம்
திசைமாறிப் போகாதே நண்பா
அசைந்தாடி அன்போடு உறவாடு
கற்பனைக் குதிரை ஏறி
பற்பல ஊரைச் சுற்றிவா
கற்பதற்குக் காலம் இல்லை
குற்றம் பார்ப்பது தவி்ர்
சுற்றம் சேர்ந்து வாழ்
அன்னைத் தமிழே
தமிழோடு உறவாடி தகைசான்ற நல்லோரோடு கலந்து
தலையாய மொழியான தாயோடு் சேயாகி விளையாடி
அழகான வரிகளில் அமைந்திடும் கவிதைகள் படைத்து
பழகிய தமிழில் பற்பல படைப்பை நல்கி
நாளும் எனக்கு நல்வரம் நல்கும் அன்னைத் தமிழே
தாளது பணிவேன் சிரம் தாழ்த்தி நானே !
ஆண்டொன்று போனாலும் மூப்பில்லை உனக்கே தாயே !
கண்டேன் கற்பனை உருவில் இளமங்கை நீயே
கனியோடு தேனும் பாலும் பருகிட தினமும்
கரையாத செல்வம் போன்றே உன்னத மொழியாய் என்றும்
உனது பிறப்பை தமிழில் காண்பேனா என்றாவது
ஏனது மட்டும் வேற்று மொழியினில் அறியேன்
மாற்றம் உண்டோ மனதில் தமிழ் ஆண்டாய் உருவாக்க
சீற்றம் வேண்டாம் பெரியோரே சொல்வதை ஆராய்வீர்
அழகான சொற்கள் ஆயிரம் உண்டு எளிதே என்பேன்
பழகினால் எதுவும் நன்றாகத் தோன்றும் அல்லவா
சிந்தனை செய்வீர் சீர்தூக்கிப் பார்ப்பீர் அறிஞரே
நிந்தனை செய்யாது நினைத்துப் பார்த்து அறிவீர்
தமிழ்ப் புத்தாண்டு சிந்தனை என்றே கொள்வீர்
தக்கதொரு விடையினை நல்குவீர் நம்புகிறேன் சான்றோரே !
நல்லவர் அவரா
சொல்லுங்கள் கடவுளர் பெயரால் கொழுக்கும் சிலரே
நல்லவர் அவரா நல்லது மட்டுமே செய்தாரா
சொகுசான வாழ்க்கை சொர்க்கமாய் வசதிகள் எவ்வாறு
வர்க்கப் பிரிவுகள் உண்டு வழிபடும் வகையில்
எளிமையற்ற எகத்தாளம் பேச்சில் எத்தனை கர்வம்
களிநடனம் புரிந்தே கடல் கடந்து போவார்
காசுக்காய் இவரோ கடவுளைத் தொழுவரோ வினாக்கள்
மாசற்ற வாழ்வும் இல்லாமல் போனதால் ஏமாற்றம்
மக்கள் இவரால் மயக்கம் கொள்வதும் ஏனோ?
விடைகள் தெரிந்தால் சொல்வீரா பெரியோரே உண்மையில்
தமிழே உயிர்
தாயென் உயிர் என்றால் தமிழும் உயிரே
சேயென் நாவில் எழுதிய அழகு மொழியே
வாயென் உயிரோடு இணைந்தே இருந்திடு எந்நாளும்
ஓயேன் புகழ்பாட ஒருநாளும் தாயே தமிழே !
மூத்த மொழியே உலகின் முதல் மொழியே
காத்து நிற்போம் நின் பெருமை எந்நாளும்
சங்கம் வளர்த்த தமிழே தொன்மை மொழியே
எங்கள் உணர்வோடு உறைந்த பெருமை பாட இனியவளே இயல் இசை நாடகம் ஆனவளே
கனியெனத் தித்திக்கும் கணக்கில் அடங்கா பாடல்கள்
காலம் கடந்த முதல் இலக்கண நூலே
காத்து பலகாலம் வளமாய் எம்மோடு கொண்டோம்
யாரும் உன்னை அழித்திட இயலாது அணைத்துக் காப்போம்
பேரும் புகழும் உலகில் என்றும் நிலைக்கும்
உனது புகழ் பாட ஒருநாள் போதுமா
மனதில் மகிழ்வு பெருகும் வரிகள் வளமாகும்
குறட்பா நாலடி அகநாநூறு புறநாநூறு எட்டுத் தொகை
குறையாத வகைகள் எண்ணில் அடங்கா நூல்கள்
வாழ்வின் நெறிகள் காதல் கல்வி ஈகை
வாகை சூடல் மனை மாட்சி மங்கலம்
எத்தனை எத்தனை புதைந்த இலக்கிய பெட்டகங்கள்
இன்று ஒருநாள் போதாது பெருமை பாட
என்றும் உன் நினைவில் வாழ்வோம் தாயே !
கோப்பை முழுவதும் கண்ணீர்
புரியாமலே எனக்குள் தேடினேன் எதனால்
புரிந்ததும் புரியாமலே விடையும் கிடைத்தது
அழாமலே கண்ணீர் உண்டா ஆராய்ந்தேன்
அதற்கும் ஒருவிடை ஆனந்த மிகுதியால்
சரிசரி கோப்பை நிறையுமா இயலாதே
சரிவர யோசித்தே நாளும் கடந்தது
இன்றாவது விடையுண்டா தெரியாது குழப்பமே
நன்றாக தலைப்பு வேண்டாமா சோகமேன்
ஒன்றாக பலவாக பெருகினால் நிறையும்
ஒன்றும் ஒன்றும் இரண்டு விடையிங்கே
யுத்தம் என்று வந்தாலே கண்ணீர்
புத்தன் சொன்னதை எவன் கேட்டான்
அழிவின் காரணம் அளவில்லா ஆசையே
அடுத்தவன் நாட்டை அடையப் பார்க்கும்
மலிந்தவன் தலையை நசுக்கி நகைக்குது
எலியைப் பூனைகள் வேட்டை ஆடுது
பொய்களின் போர்வையில் குளிரும் காயுது
பொல்லாத புத்தி எத்தனை நாட்களோ
மனிதனை மனிதனே மாய்க்கும் பாதகம்
புனிதம் எங்கோ தொலைந்து போனது
கண்ணீரின் கடலில் மூழ்கிடும் மனிதர்
கண்ணியம் அற்ற தலைவர் மற்றவர்
இருவேறு துருவங்கள் இங்கும் அங்கும்
கோப்பை மட்டுமா குளங்களாய் உதிரம்
கோரிக்கை யாரிடம் வைப்பது நிறுத்திட
இயற்கை கொடுப்பது அனைவர்க்கும் சமமாய்
இரக்கம் அற்றவர் அனைத்தும் கேட்பர்
இறைவன் உண்டெனில் இவரை அழிக்கட்டும்
ஆனந்தக் கண்ணீரில் கோப்பை நிறைந்தால்
ஆள்பவர் என்ன அண்டமே மகிழும்
அனைத்தும் அனைவர்க்கும் என்பதே சமத்துவம்
அதிலென்ன குறையோ ஆள்பவர் கண்டார்
தனக்கென வாழாத் தலைவர் மறைந்தனர்
தன்னலம் மிக்க மாக்களின் ஆட்சி
தறிகெட்ட பாதையில் தரணியே ஓடுது
வெறிகொண்ட மிருகமாய் வேட்டை ஆடினர்
முடிவே இல்லாத கதையாய் சரித்திரம்
முதலில் இருந்து மீண்டும் ஆரம்பம்
, நண்பர்கள் சுற்றுலா
பயணங்கள் பலவகை, தனி மனிதச் சுற்றுலா, குழுக்களுடன் சுற்றுலா, நண்பர்கள் சுற்றுலா என்று. பார்த்த இடங்களுக்கே பல முறை செல்லவேண்டியும் இருக்கும், சுற்றுலா என்பதை விட இன்ப உலா எனலாம், நண்பர்களுடன் கலந்துரையாடல், சூடான விவாதங்கள், சிறு சிறு சண்டைகள் அனைத்தும் உண்டு.
பன்னிரண்டாம் தேதி சென்னையிலிருந்து, இரு நண்பர்கள், பெஙலகளூரில் இருந்து நான், டிரையினில் பயணித்து, நாகர்கோவிலில் சந்தித்து, Home stay அடைந்த போது அழகான பங்களா ஒன்றில் தனித்தனியான இரண்டு வீடுகளில் எங்கள் படுக்கைகள், சமையல் முதல் சிறிய நீர்த்தொட்டி வரை அனைத்து வசதிகளுடன். கணேஷ் ஐயர் சென்னை பல்லாவரத்திலிருந்து, குடி பெயர்ந்து, முப்பது வருடங்களுக்கு முன்பு இங்கே செட்டிலாகி இருந்தார்.
தயாராகி முதல் நாள் சென்ற இடங்கள் மண்டைக்காடு பகவதி அம்மன், முட்டம் கடற்கரை, விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, வேக்ஸ் மியூசியம். கன்யாகுமரி கோவில்கள் கேரள சாயலில். திருவள்ளுவர் சிலையின் காலடியில் உயரே பார்வையிட சுறறமைப்பு, முட்டம் கடற்கரை அழகு படுத்தப்பட்டு, பார்வையாளர்களுக்கு, வசதிகளும், கட்டுப்பாடுகளும். வேக்ஸ் மியூசியம் ₹150 கொள்ளை என்றே சொல்லலாம்.
அடுத்த நாள் ஜடாயு எர்த் சென்டர் மூன்றரை மணி நேரப் பயணத்தில், ₹555 இங்கும் கொள்ளை, ஜடாயுவின் சிலை, கேபிள் கார் பயணத்திற்கு இவ்வளவு கட்டணம், பராமரிப்புக்காக பல இடங்கள்மூடி இருந்தாலும் கட்டணம் குறைக்கப்படவில்லை. வர்க்காலா பீச்சின் வெப்பத்தில் கடல் அலைகள் காலைக் கழுவ, பிற்பகலில் Cliff தோற்றம், கடை வீதிகள் பார்வையிட்டு ஹோம் ஸ்டே திரும்பவே இரவாயிற்று.
மூன்றாம் நாள், சுசீந்திரம் தாணுமாலயனும், ஆஞ்சநேயரும் தரிசித்து, பத்மநாப புரம் அரண்மனை சென்ற போது, தமிழ்நாட்டில் கேரளம் தெரிந்தது. முழுவதுமாக கேரள அரசின் பராமரிப்பில். படிகளில் ஏறி இறங்கி சுற்றிப் பார்த்து, தொட்டிப் பாலம், மாத்தூருக்குச் சென்ற போது, நீர் ஓடை போல் ஆற்றில். பல வருடங்களுக்குப் பிறகு அன்னாசிப் பழ இனிய சுவை, இவ்வூருக்கே உரித்தானது. திற்பரப்பு அருவி நீர் வரத்து குறைந்து ஞாயிற்றுக் கிழமை கூட்டம் அலை மோதியது. குளிக்கும் ஆசை தள்ளிப் போடப்பட்டது. மாலையில் சோத்தவிளை கடற்கரை சென்னை மெரீனா போன்று, மக்கள் கூட்டத்துடன்.
இரவு நண்பர் பரமநாதனை டிரையினில் அமர வைத்து, நானும் அசோக் மட்டும் பேருந்துகளில் பயணித்து, தென்காசி புதுப் பேருந்து எதிரில் ஓட்டலை அடைந்த போது இரவு ஒரு மணி. காலையில் அசோக்கின் இனிய நணபர் தந்துதவிய i10 காரில் மணிமுத்தாறு அணையைப் பார்த்து, சேமியா ஐஸ்கிரீம் சாப்பி்ட்டு, அனுமதிச் சீட்டு பெற்று, அருவியை அடைந்த போது ஆர்ப்பரித்துக் கொட்டிய நீர் வரவேற்றது. ஆசை தீரக் குளியல், குறைந்த
கூட்டம் வார நாள் என்பதால்.
கடைசி நாளான 17/3 அன்று ஆர்யங்காவு ஐயப்பன் கோவிலில் சந்தனக் காப்புடன் பார்த்து, வற்றிய ஆற்றங்கரை, பிறகு குண்டாறு அணையும் வறண்ட தோற்றமுடன், ஓட்டல் திரும்பி, பேருந்தில் மாலையில் பயணித்து, அரை மணி இடை வெளியில், வெவ்வேறு பாதைகளில் அவரவர் ஊர்களுக்கு, இரவுப் பயணம்.
ஈரான் போரின் தாக்கம் ஓட்டல் உணவு வகைகளில் பிரதிபலித்தது. கேரள தமிழ்நாடு எல்லைகளில் தமிழும் மலையாளமும் உறவாடின. மழையின் வருகைக்கு குற்றால அருவிகள் கண்ணீர் வடித்தன. தென்காசி கோபுரக் காற்று ஏனோ காணவில்லை. பிரதோஷம் என்பதால், நந்தி வழிபாடு, காசி விஸவநாதரை தரிசிக்க கூட்டம் குறைந்திருந்தது. நணபர் சிவராமனின் விருந்தோம்பல் அரிய ஒன்று.
பயணங்களும் நட்பும் தொடர்ந்தே வருவதால், வாழ்க்கை இனியதாகவே தோன்றுகிறது.
பிலிப்பைன்ஸ்
04/03/2025
தொடர்வது முடிவதும், முடிவது தொடர்வதும் காலச் சக்கரத்தின் சுழற்சியில் தவிர்க்க இயலாதவை. மார்ச் 4 , காலை எட்டு மணிக்கே Gold Prince ஓட்டலைக் காலி செய்து, காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு சூடான காப்பி Lotteவை சுவைத்துக் குடித்த பிறகு Cebu பன்னாட்டு விமான நிலையம் நோக்கி அரை மணி நேரப் பயணம்.
விமான நிலையத்தில் இறங்கிய போது, சிறிய விமான நிலையமானாலும், எளிய முறையில், பெரும்பாலும் மரங்களாலான அரை வட்ட வடிவக் கூரைகளால் அழகான தோற்றமளித்தது. செக் இன் செய்து, இமிக்ரேஷன் முதலானவற்றைக் கடந்து, புறப்பாடு வாயிலில் அமர்ந்தோம்.
விமானத்தில் அமர்ந்து புறப்பட்ட போது, இருக்கைகள் பாதிக்கு மேல் காலியாகவே இருந்தன. சுமார் நான்கு மணி நேரப் பயணம் Air Asia வில், கோலாலம்பூர் அடைந்து, Transit பயணிகளுக்கான பாதையில், ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். நான்கு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த வேளையில், மதிய உணவும் சாப்பிட்டு, மீண்டும் பயணம். இப்போது சென்னை நண்பர்களும் நாங்கள் இருவரும், வெவ்வேறு பாதைகளில்.
இரவு பதினொரு மணிபோல், பெங்களூரு விமான நிலையத்தை அடைந்து, முன்னதாக முடிவானபடி, பிரகாஷின் மல்லேஸ்வரம் பிளாட்டில், இரவு தங்கி மறுநாள் காலை கணக்குகள் பார்த்த பிறகு , Uber டாக்ஸியில் வீடு திரும்பிய பொழுது , உடல் சோர்வு மிகுதியாகவே உணர முடிந்தது.
US dollar, Philippines Peso, Indian Rupee என கரண்சிகளின் வண்ணங்களும், மதிப்பும் மாறுவதைப் போல், தட்ப வெப்ப நிலைகளும் மாறிக் கொண்டே இருந்தன. இந்தப் பயணம் மிகச் சிறப்பாக அமைந்ததற்கு, Kalm T Travelsன், நேர்த்தியான திட்டமிடல் உதவியது என Ana வுக்கு , Feedback கொடுத்த பிறகு, மொத்தப் பயணமும், 1.2 இலட்சத்தில் , திட்டமிட்டதை விட பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாக முடிந்த்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
மற்றொரு பயணம் ஒரு வாரத்திலே கன்யா குமரிக்கு சென்னை நண்பர்களுடன் என்பது கூடுதல் தகவல்.
( முற்றும்)
பிலிப்பைன்ஸ்
03/03/2025
உறங்கும் நேரம் மிகக் குறைவாகவே இப்பயணத்தில் கடல் வாழ் டால்பின், திமிங்கல சுறாவோடு அவர்களது நேரத்திற்கேற்ப அனுமதி பெற வேண்டி இருந்ததால். இரண்டு மணிக்கு எழுந்து மூன்று மணிக்குத் தயாராகி, டிரைவர் Consorcio வின் வேகமான 130 கிமீ பயணம், Oslob கடற்கரை நோக்கித் தொடங்கியது. சாலை பல இடங்கிளில் பள்ளம் மேடுகளோடு இருந்ததால் கடினமான பயணமாகவே இருந்தது.
Oslob அடைந்தபோது, Mrs. Rose காத்திருந்தார், கல்லூரிப் பெண் என நினைத்து, பிறகே தெரிந்தது, இரண்டு குழந்தைகளுக்குத் தாயென. முதலில் சென்று அனுமதிச் சீட்டு பெற்று வந்து, கொண்டு வந்த பிரெட் சேண்ட்விச்சை சாப்பிட்டு, படகுத் துறையை அடைந்தபோது, மக்களின் கூட்டம் அலை மோதியது. வாகனங்கள் பார்க்கிங்கில் நெருக்கமாக, திருவிழா போன்று. படகில் ஏறி கரைக்கு மிக அருகிலேயே, நமது நண்பர்கள் அகலமான வாயைத் திறந்து, படகோட்டி போடும் ஜெல்லி மீனுக்காக சுற்றிச் சுற்றி வந்தன. பலரும் படகிலிருந்து கடலில் இறங்கி அதனருகில் நீந்தினர். பழகிய மிருகம் போல் சாதுவாய் அவைகள், படகின் கூட்டங்களுக்கிடையே, பவனி வந்த படி இருந்தன. வீடியோக்கள், போட்டோக்கள் என எடுத்துத் தள்ளினோம். நாங்கள் யாரும் கடலில் இறங்கவில்லை.
சுமார் அரை மணி நேரம் கண் கொள்ளாக் காட்சியாக, திமிங்கல சுறா என்ற பயமின்றி கண்டு களித்த பிறகு கரை சேர்ந்து, ஜீப் ஒன்றில் பயணித்து, அடுத்த இடமான மணல் திட்டு ( Sand bar) எனப்படும் சிறிய தீவான Sumilonக்கு படகொன்றில் பயணம். ஆரஞ்சு நிறப் படகு , அதே கலர் படகில் திரும்ப வேண்டுமென, தகவலுடன். தீவு, தூரத்து மலை, தெளிந்த நீருடன் கடல் என அழகாய் கண்ணைக் கவர்ந்தது. சிறு குன்று ஒன்றும் காடு போன்று. நாங்கள் யாரும் குளிக்கச் செல்லவில்லை. அழகை இரசித்தபடி, ஓய்வெடுத்து, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கரை சேர்ந்து, எங்களது வேனுக்குத் திரும்பி, Tumalong அருவி நோக்கிப் பயணம்.
அருவியை அடைய மலைச் சரிவில், பைக் ரைடர்கள் பின்பு அமர்ந்து சென்றபோது, சற்று பயமாகத் தான் இருந்தது. அருவியை அடைந்த போது, சாரல் போன்று மிக உயரத்திலிருந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது. இத்தகைய அருவியை முதன் முதலாகக் காண்கிறோம். ஆசை தீர ரோஸ் உதவியுடன் போட்டோக்கள் எடுத்தும், நான் மட்டும் குளம் போல் தேங்கியிருந்த ,நீரில் சுண்ணாம்பு கலந்த நிறத்தில், உள்ளே நின்று, போஸ் கொடுத்த பிறகு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தபோது, மாற்று உடை இல்லாததால் குளிக்க இயலவில்லையே என்ற வருத்தம் மனதில். Ana வுக்கு முன் கூட்டியே தெரிவித்திருக்கலாம் என feed back கொடுத்தேன். Mango ice cream, Avacado ice cream சாப்பிட்டு, ரோஸிடம் விடை பெற்ற போது, சில மணி நேரங்களே செலவிட்டிருந்தாலும், நல்ல நண்பியாய் மனதில் பதிந்தார். அவரை இறக்கி விட்டு வேன் மீண்டும் Cebu நோக்கிப் பறந்தது. மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க நிறைய நேரம் கிடைத்தது.
மாலை ஆறு மணி போல நான், கசின், பிரகாஷ் மூவரும் அருகில் இருந்த மசாஜ் செண்டருக்குச் சென்று முதன் முறையாக, Foot மசாஜ் நானும், பிரகாஷ் மட்டும் செய்து கொண்டோம். கசின் வேடிக்கை பார்த்துக் கொண்டு, மசாஜ் செய்த பெண்களிடம் கிண்டல் செய்து பேசிய படியும் ஒரு மணி்நேரம் வேகமாகப் போனது. ஓட்டலுக்குத் திரும்பி, இரவு உணவை முடித்து, படுக்கச் சென்ற் போது, மறுநாள் காலை பிலிப்பைன்ஸ் விட்டு, இந்தியப் பயணம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தலையில் சுற்றியது.
பிலிப்பைன்ஸ்
02/03/2025
Bohol தீவுக்கு விடையளிக்க வேண்டிய நேரம் வந்தது. மார்ச் 2, காலை உணவுக்குப் பிறகு எட்டு மணிக்குப் புறப்பட்டு Cebu செல்ல படகுத்துறைக்குச் சென்ற போது, விமான நிலையம் போல அனைத்துச் சோதனைகளும், முன்னதாக Ana முன்பதிவு செய்திருந்தார். நினைவுப் பொருட்களாக டி சர்ட், பைகள் வாங்கிக் கொண்டு, அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். கடலில் Ferry எனப்படும் சிறிய கப்பலில் வேகமான பயணம். பல தீவுக் கூட்டங்ளைக் கடந்து, சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, Cebuவை அடைந்த போது, Patrick காத்துக் கொண்டிருந்தார்.
பழமையான நகரமாய்த் தோன்றியது. மணிலாவின் ஆடம்பர மாளிகைகள் போலல்லாமல் பழமையான கட்டிடங்கள் அதிகமாக. வியாபாரத் தலங்களும் மிகுதியாக, போக்குவரத்து நெரிசலுடன். Golden Prince என்ற ஓட்டலில் செக் இன் செய்து, மதிய உணவுக்குப்பிறகு, நகரச் சுற்றுலா ஆரம்பம்.
முதலில் Sirao என்ற பூந்தோட்டம், Bali ல் பார்த்தது போல சுற்றி மலைகள் சூழ அழகாகக் காட்சியளித்தது. பூக்களின் நடுவேயும், தூரத்து மலைகளின் காட்சியும் போட்டோக்களில் வண்ண மயமாய் பதிந்தது. ஏனோ பராமரிப்பு அவ்வளவு சரியாக இல்லை.
அடுத்துச் சென்ற இடம் Temple of Leah. இது Teodorico என்பவனால் தன் காதல் மனைவி Leah வுக்காக கிரேக்க கட்டிடக் கலையில் 2012ம் ஆண்டில் கட்டப் பட்டது. Cebuவின் தாஜ.மகால் என்று அழைக்கப் படுகிறது. Leah உபயோகித்த பொருட்கள், அவளது புகைப்படங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன. மிகப் பிரம்மாண்டமான தோற்றத்துடன் காட்சியளித்தது.
அடுத்துச் சென்ற இடம், Tops எனப்படும் மலையுச்சியில் அமையப் பெற்ற காட்சியகம், பல அடுக்குகளில், நகரத்தின் முழுத் தோற்றத்தைக் காண முடிந்தது. கதிரவனின் Sun Set மேகங்களினூடே அழகாய்த் தெரிந்தது. கீழே ஆறு, கடல், நகரத் தோற்றம் அனைத்தும். வெகு நேரம் அழகை இரசித்து, இருள ஆரம்பித்ததும் ஓட்டலை நோக்கிப் பயணம்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, இரவு உணவுக்கு அருகிலுள்ள மாலுக்கு நடந்து சென்ற போது நகரின் மையப் பகுதியின் பிரம்மாண்ட கட்டிடங்கள், நெரிசலான போக்குவரத்து இவைகளைக் காண முடிந்தது. Ayala mall அடைந்த போது கடைகள் அனைத்தும் எட்டு மணிக்கே மூடி இருந்தனர். burger kings மட்டும் திறந்திருந்தது, ஆர்டர் செய்து சாப்பிட்டு அறைக்குத் திரும்பி , சீக்கிரமே உறங்கச் செல்ல வேண்டிய கட்டாயம். மறுநாள் காலை இரண்டு மணிக்கு எழுந்து மூன்று மணிக்குக் கிளம்ப வேண்டும், Whale Shark பார்க்க வெகு தூரம் பயணிக்க வேண்டும்.
பிலிப்பைன்ஸ்
01/03/2025
மார்ச் ஒன்று, காலை ஆறு மணி, முதல் நாள் இரவு சொல்லியிருந்த படி காலையுணவு பேக் செய்யப்பட்டு வரவேற்பில் தயாராக இருந்தது. Lester லாவகமாக வேன் Bohol ன் நேர்த்தியான சாலைகளைக் கடந்து கடற்கரையை நோக்கிச் சென்றார். இந்தத் தீவெங்கும் பசுமை கொட்டியிருந்தது.
Balcasag தீவின் கடற்கரையை அடைந்தபோது, படகோட்டும் கைட் தயாராக இருந்தார். இயந்திரப் படகு எங்களைச் சுமந்து கடலின் உள்ளே வேகமாகப் பயணித்தது. சுமார் இருபது நிமிடப் பயணத்திற்குப் பிறகு, திடீரென கடலில் வரிசையாக நீந்திச் செல்லும் டால்பின்கள் காட்சியளித்தன. பத்து டால்பின்கள் இருக்கலாம் நேர்கோட்டில் நீந்தியபடி படகுகளுக்கு இணையாக. காணக் கண்கோடி வேண்டும் என்று சொன்னது இதற்குத் தான் போலும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை கடலின் ஆழத்தில் மறைந்து மீண்டும் மேலே வந்து, விளையாட்டு காட்டின. எங்களைப் போன்றே பல படகுகள். சுமார் பத்து நிமிடத்திற்குப் பிறகு கரையை நோக்கிப் பயணம்.
அடுத்து Snorkelling, Turtle watch இரண்டுமெனச் சொல்ல, லைப் ஜாக்கெட் மற்றும் பிரத்யேகமான இரப்பர் ஷூ அணிந்து, நானும் கசினும் மட்டும் சிறிய படகொன்றில் ஏறி ஆழம் குறைவான பகுதிக்குச் சென்ற போது என்னை நீரில் இறங்கச் செய்தார். காலை பின்னோக்கி எடுத்துச் சென்று நீரில் மிதக்க வேண்டும். முடியவே இல்லை, வேண்டாமென்று படகில் ஏறுவதே ஆடும் படகில் அவ்வளவு கடினமாகத் தோன்றியது.
நீச்சலில் வல்லவரான எனது கசின் கடலில் இறங்கி நிற்க முற்பட்ட போது, அலைகள் அவரை அலைக்கழித்தன. ஒரு வழியாக சில நிமிடங்கள் நீந்திய பிறகு படகுக்குத் திரும்பினார். கடல் ஆமை ஒன்று எங்களைக் கடந்து சென்றது. படகோட்டி கடலின் தரைப்பகுதிக்குச் சென்று, Go pro வில் வீடியோ எடுத்து வந்தார். மீண்டும் கரை சேர்ந்து, மொபைலில் வீடியோ போட்டோக்கள் டவுன் லோடு செய்ய 1200 Pesos. நாங்கள் இருவரும் பிரெட் துண்டுகள் சாப்பிட்ட பிறகு இளநீர்க் கடையில் மிகப் பெரிய அளவில் இருந்த இளநீரைப் பருகுவதே சவாலாக இருந்தது.
மீண்டும் படகுச் சவாரி Oceanica Resort நோக்கி. கரையில் இறக்கி விட்டு படகோட்டி சென்று விட்டார். ரிசார்ட்டில் நுழைய ஆளொன்றுக்கு 500 Peso கட்டணம், ஆனால் அது மதிய உணவு பில்லில் குறைக்கப்படும் என்றனர். ஆடைகள் மாற்றி, கடலை நோக்கி அமைந்த ரெஸ்டாரெண்டில் அமர்ந்து நிதானமாக மதிய உணவை முடித்த போது, சில நூறு Pesoக்களே கொடுக்க வேண்டி இருந்தது. ஓய்வுக்குப் பிறகு, Lester க்குப் போன் செய்து வரச் சொல்லி, ஓட்டலுக்குத் திரும்பினோம். மதிய ஓய்வு, மாலையில் சோம பானம், இரவு உணவு கீழே ரெஸ்டாரெண்ட்டில் என்று நாள் கடந்தது. மறுநாள் காலை தீவிலிருந்து புறப்பட வேண்டும் என்ற போது மனது கனத்தது.
பெண் எனும் பிரபஞ்சம்
படைப்பின் அதிசயம் இவளா என்றேன்
படித்துப் பார் எனச் சொன்னான்
உழைப்பின் சின்னம் இவளா என்றேன்
உரைத்துப் பார் எனச் சொன்னான்
அன்பின் உருவம் இதுவா என்றேன்
அணைத்துப் பார் எனச் சொன்னான்
காதலின் மொழியா இவளெனக் கேட்டேன்
காதலித்துப் பார் எனச் சொன்னான்
தாய்மை என்பதே இவளா என்றேன்
தாரமாய் ஏற்றுக் கொள் என்றான்
வீரமங்கை என்பதும் இவளா என்றேன்
பாரங்கே போரில் அவளை என்றான்
எத்தனை உண்டோ இவளில் என்றேன்
எல்லாமே உண்டிவளில் என்றது அசரீரி
தாயாக இவள் மடியில் குழந்தையானேன்
தமக்கையாய் விளையாட அவள் வந்தாள்
காதலைச் சுமந்து மனதில் பாரமானாள்
காமத்தைச் சுமந்து கர்ப்பம் ஆனாள்
மக்களைப் பெற்ற மகராசி ஆனாள்
மங்கை அவள் தாயவள் ஆனாள்
குடும்பத் தலைவி பதவி உயர்வு
குடுகுடு கிழவி மூன்றாம் கால்தேடி
வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி அவளே
வாழ்த்துப் பாடிட இன்று போதுமா ?
அழகின் சொல்லுக்குப் பொருளே அவள்தான்
அருகில் இருந்தாலே அனைத்தும் மறப்போம்
மெல்லிய நடையும் மெட்டி ஒலியும்
துல்லியப் பார்வையும் துறுதுறு கண்களும்
கருத்த கூந்தலின் நறுமண வாசமும்
களுக்கெனச் சிரிப்பும் கள்ளப் பார்வையும்
அன்பின் உருவமாய் பெண்ணே நீதான்
பாடிய புலவர் பலரும் இவளை
கூடியே நிலவின் குளிராய் மாற்றினர்
இன்பமும் துன்பமும் கலந்த கலவையாய்
இவளது அருகாமை என்றும் பகர்ந்தனர்
புரியாத புதிராய் வலம் வருபவள்
தெரியாத சூத்திரம் ஆனதும் உண்டு
மொத்தமாய் சேர்ந்து பிரபஞ்ச வெளியில்
சத்தமாய் சொல்வேன் இவளின்றி உலகில்லை
பிலிப்பைன்ஸ்
27/02/2025
Bohol என்பது ஒரு தீவு மற்றும் Province. Pangalo என்பது விமான நிலையம் உள்ள சிறு நகரம். வருகை வாசலில் Lester வரவேற்று எங்களை ஓட்டலுக்கு. Early check in செய்ய அழைத்துச் சென்றார். பிலிப்பைன்ஸ் ஓட்டல்களில் செக் இன் பிற்பகல் 3 மணி, செக் அவுட் காலை 11 மணி.
ஓட்டலை அடைந்த போது அறைகள் தயாராகவில்லை, வரவேற்பில் உட்காரச் சொன்னாள் ரிசப்னிஸ்ட். Bohol ல் மட்டும் மூன்று நாட்களும் தங்க மூன்று அறைகள். மற்ற இடங்களில் இரண்டு. பிரகாஷ் எங்களுள் மூத்தவராதலால் தனி அறை ஒதுக்கப் பட்டது. காப்பி ஆர்டர் செய்து காத்திருந்த போது, அறை கீ கார்ட் தரப் பட்டது.
பதினொரு மணியளவில் தயாராக வேண்டுமென்பதால், சிறிது ஓய்வுக்குப் பிறகு பயணம் ஆரம்பம்.
முதலில் Bohol Bee Farm, தோட்டமும், கை வினைப் பொருள்கள் தயாரித்தல், விற்பனைக் கடைகள் என சுற்றிப் பார்த்த போது, Bee Farm அங்கிருந்து தூரத்தில் உள்ள இடத்திற்கு மாற்றி விட்டதாகச் சொன்னார்கள். ஐஸ் கிரீமும், மதிய உணவு கடலைப் பார்த்த உணவகத்திலும் முடித்து, அடுத்ததாக புராதன மாதாகோவில் விசிட்.
உள்ளே நுழைந்து ஜெபம் செய்து, படங்கள் கிளிக்கி வெளி வந்த போது, மிதமான வெயிலின் தாக்கம் தெரிந்தது.
முன்னதாக Hinagdanan cave ல் கீழே இறங்க நானும் கசினும் சென்ற போது குகையினுள் குளம் போன்ற நீரில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். நீர் சுத்தமாகவே காணப் பட்டது. இருட்டாக இருந்ததால் போட்டோக்கள் தெளிவில்லை.
குகையிலிருந்து வெளியேறி, கடையொன்றில் நினைவுப் பொருட்கள் செலக்ட் செய்து வாங்கிய போது, விலைகள் ஒன்றும் மலிவில்லை எனத் தெரிந்தது.
அடுத்து ATV Ride செய்யும் இடம் சென்ற போது , மற்றவர்கள் யாரும் விரும்பாததால், நான் மட்டும், 1400 Peso செலுத்தி, கைட் ஒருவர் முன்னே செல்ல காட்டுப் பாதையில் ஓட்டிச் சென்ற போது மிகவும் திரில்லிங்காக இருந்தது. மேடு பள்ளங்கள், பாறைகள் மட்டுமின்றி, சில இடங்களில் இடது புறம் சரிவும், பெருங் கடலும் தெரிந்தது. கரணம் தப்பினால் கடல் என்பதால், பொறுமையாக ஆக்சிலேட்டரை அழுத்தி ஓட்ட வேண்டியதாயிற்று. சுமார் நாற்பது நிமிடத்திற்குப் பிறகு திரும்பலாம் என்று கைடிடம் சொல்லி, புறப்பட்ட இடத்திற்கே திரும்பியானது. கைகள் ஹேண்டில் பாரை லாவகமாகக் கையாள்வதில் வலிக்கத் தான் செய்தன.
மீண்டும் பயணித்து, சோம பானம்,நொறுக்குத் தீனி முதலானவற்றை வாங்கி, அறையில் அருந்திய பிறகு, இரவுi உணவுக்கு, Pangalo ஓட்டலிலே பிலிப்பைன் உணவு வகைகளை ஆர்டர் செய்து, சாப்பிட்டு, மறு நாள் காலை ஒன்பது மணிக்கு புறப்பாடு என்பதால் ஏழு மணிக்கு, நீச்சல் குளம் செல்ல நானும் கசினும் முடிவெடுத்து உறங்கச் சென்ற போது, சாக்லேட் மலைகள் எப்படி இருக்குமென் கற்பனை ஓடியது.
பிலிப்பைன்ஸ்
26/02/2025
இரவு முழுதும் பயணித்ததால், Ana விடம் கூறி, ஓட்டலில் Early Check in செய்து, தயாராகி, முதலில் இந்தியன் ரெஸ்டாரெண்ட்டில், உணவு ஆர்டர் செய்து பில் வந்த போது, கொஞ்சம் தலை சுற்றியது. ஒரே வேளைக்கு 11000₹+ . அடுத்து வரும் நாட்களில் எப்படி சமாளிப்பது என்ற பயம் தொற்றிக் கொண்டது.
மதிய உணவிற்குப் பிறகு, National Anthropology Museum விசிட். பிலிப்பைன் மக்கள் வாழ்வியலை நெற்பயிர் வகைகள் கேலரியில் ஆரம்பித்து, முதுமக்கள் தாழி வரையிலான விவரிக்கும் விதமாக நன்றாக அமைந்திருந்தது. கால்கள் வலிக்க ஆரம்பித்தது. கண்கள் தூக்கமில்லாமல் எரிய ஆரம்பித்தது. வெளிச் சுற்றில் ஓடு பாதையில் பலரும் ஓடிக் கொண்டிருந்தனர். எதிரிகளுடன் போராடிய பெரும் வீரன் ஒருவனின் சிலை முகப்பில் நிறுவப்பட்டிருந்தது.
வெளியே வந்து Luneta Park சென்றபோது இருட்ட ஆரம்பித்தது. அழகான பெரிய கார்டன், பலவித வண்ண நிறத்தில் நீரூற்றுகள். மக்கள் பொழுது போக்கச் சிறந்த இடம். குழந்தைகள், பெரியவர் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீரூற்றுகள் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் மிகப் பிரமாண்டமாய்.
இதற்கு மேல் எங்கும் போக முடியாது என்பதால், இரவு உணவுக்கு, Mall of Asia விற்குள் Thai Restaurant ல், ஆர்டர் செய்து, சாப்பிட்டு முடித்த போது, பில் இத்தடவை கட்டுக்குள் வந்து, செலவின் பயத்தைப் போக்கியது.
மறுநாள் Bohol என்ற தீவிற்கு விமானப் பயணம், காலை 6 மணிக்கு, கார் பிக்அப் என Ana மெசேஜ் அனுப்ப, உறங்கச் சென்ற போது, பிரகாஷ் சீக்கிரமே உறங்க, நான் புரண்டு படுத்தபடி இருக்க, எனது கசினின் குறட்டைச் சத்தம் உச்சஸ்தாயியைத் தொட்டது.
பிலிப்பைன்ஸ்
(25/02/2025 & 26/02/2025)
இந்த முறை நண்பர்கள் ஐந்து, கல்லூரி நண்பர்கள் மூன்று, பெங்களூர் நண்பர் பிரகாஷ் மற்றும் ஒன்று விட்ட சகோதரர். மூன்று மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து, விமான பயணச்சீட்டு, பிலிப்பைன்ஸ் சுற்றிப் பார்க்க பயண ஏற்பாட்டாளர் என ஒவ்வொன்றாக பேசி முடித்து, பயணச் செலவை தோராயமாக முடிவு செய்து நண்பர்களுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொன்றாக, முன் பதிவும் செய்து, பயணத்திற்கான நாளும் வந்தது.
சென்னையிலிருந்து ஐவரும் புறப்படுவது என்றும், Cebu விலிருந்து திரும்பும் போது இருவர் பெங்களூரு மூவர் சென்னை என்பதும் முடிவானது.
அந்த நாளும் வந்தது, 25/02 காலை மைசூர் சென்னை எக்ஸ்பிரஸில் 7 50க்குப் புறப்பட்டு, சென்னையை மதியம் 2 மணி அளவில் அடைந்தபோது அசோக் லால்பாக்காக திரும்பும் நாங்கள் வந்த டிரெயினுக்குக் காத்திருந்தார். அவரோடு பேசி காப்பி சாப்பிட்டு, நண்பர் பிரகாஷுடன் , டாக்ஸியில் பயணித்து, ஈக்காட்டுத் தாங்கல் சிவராஜ் வீடு அடைந்த போது நான்கு மணியானது.
அவருடன் பேசிக் கொண்டிருந்த போது சம்பந்தமும் அண்ணாநகரிலிருந்து புறப்பட்டு என்னைப் பார்க்க வந்திருந்தார். சூடான இட்லி, சட்னி தயாராய் சமையல் அம்மா செய்ததை ருசித்துச் சாப்பிட்டு, எட்டு மணிக்கு மேல் ஓலா டாக்ஸியில் புறப்பட்டு, ஏர் போர்ட் பயணம், செக் இன் செய்து, ஐந்து பேரும், சிங்கப்பூர் விமானத்திற்காகக் காத்திருந்தோம். பிலிப்பைன்ஸ் மணிலா விமான டிக்கெட், சென்னை சிங்கப்பூர்,சிங்கப்பூர் மணிலா இரண்டிற்குமான விமான டிக்கெட்டும் சென்னையிலேயே.
விமானம் புறப்பட்டு கடல் கடந்து சிங்கப்பூரைத் தொட்டபோது விடிந்திருந்தது.நேரமும் இரண்டரை மணி நேரம் கூடியிருந்தது. அதிகக் காத்திருப்பு இல்லாமல், மணிலாவை நோக்கிப் பயணம் மீண்டும். இரவு உணவு நள்ளிரவு, தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து வயிறு கடமுடா செய்தது. ஒரு வழியாக மணிலாவில் தரை இறங்கிய போது காலை பதினொரு மணி.
இமிக்ரேஷன் முடித்து வெளியே வந்தபோது, Kalm Travels, Ana அவரது கணவருடன் காத்திருந்தார்
கனவில் வாழ்ந்த நினைவு
ஒன்றில் தோன்றுவது மற்றொன்று எனின்
தோன்றும் ஒன்று கனவா நினைவா
இரண்டும் வெவ்வேறா அல்லது ஒன்றா
முரண்டு பிடியாமல் விடையளி கவிஞரே
உறைந்த நினைவு கனவாய் மாறும்
உரைத்த பெரியோர் சொற்கள் உண்மையா
நிஜத்தின் நிழலாய் ஒன்று உறக்கத்தில்
நினைவோ நடந்த உண்மையின் மறு பதிவாய்
தொடரும் வாதம் முடிவற்று நிற்கும்
தொலைந்து போனது இரவில் வருவது
கண்களை மூடிய உறக்கம் தொடுவது
தொலையாமல் தொடர்வது மீண்டும் மீண்டும்
கலையாத நினைவின் அலைகள் கற்பனையல்ல
கனவில் வாழ்ந்த நினைவுகள் வந்துபோகும்
கதம்பமாய் பலநேரம் காட்சிகள் தொடர்பற்று
கதைக்களம் குழப்பமாய் முடிவற்ற திரையில்
விடிந்ததும் மறந்து போகும் நினைவற்று
உன்னருகே நானிருந்தால்
நிமிர்ந்து நிற்கும் இலக்கிய வட்டம்
நிமிர் கவிஞர் பெரு மக்களே
உன்னருகே நானிருந்தால் ஊறும் கவிதையங்கு
என்னருகே தமிழிருந்தால் எண்ணற்ற சிந்தனைகள்
கண் விழித்துப் பாட்டெழுதி விடியும் காலை
பெண் என்றவள் பற்றிப் பாடுவதா
புள்ளி வைத்துக் கோலம் போட
கள்ளி அவள் கைவிரல்கள் நடனமாட
வண்ணச் சித்திரம் வாசலில் அழகாய்
நளினம் நடையிலா அசைவிலா அறியேன்
பட்டிமன்ற வாதம் ஒன்றில் தெரியுமோ
கட்டியம் கூறிட காலின் கொலுசு
எட்டி அவள் வருகையிலே பூவாசம்
கட்டி அணைக்க கைகள் துடிக்கும்
பேசிடச் சிரித்திட மயக்கம் பிறக்கும்
வசியம் செய்யவே வந்தவள் போலும்
வாலிபம் என்பதே காதல் செய்வதோ
வானத்தில் விண்மீன் வனிதை ஆவதோ
நிலவும் நீரும் காற்றும் மலரும்
உலவும் அவள் உருவாய் வரிகளில்
கற்பனைத் தேரில் புரவிகள் சொற்கள்
பற்பல வடிவில் நர்த்தனம் ஆடிட
இளமையில் தோன்றும் இனிய வாழ்க்கை
வளமையாய் மாறும் வயோதிக வயதில்
உன்னோடு நானிருந்தால் உலகம் மறக்கும்
உடலோடு உடல் சேர்ந்து உறவாடும்
உனக்காக நானும் எனக்காக நீயும்
உருகிக் காதல் ஊற்றாய் மாறும்
பருகிட அன்பும் பாசமாய் விளையும்
வாழ்வில் என்றும் வசந்த விழாவே
வாலிபம் போனாலும் தொடர்ந்தே நிற்கும்
உன்னருகே நானிருந்தால் உலகம் மறந்துபோம்
உனது மூச்சுக் காற்றின் வெப்பம்
எனது உடலின் குளிர் போக்கும்
கண்ணோடு கண் நோக்கி காதல் சொல்லும்
பண்பாடும் பரவசம் ஊட்டும் நரம்பில்
மந்திர மொழியில் மயக்கம் பிறக்கும்
தந்திர வலையில் தவிக்கும் மனது
ஈர்ப்பின் இலக்கணம் எழுதப் படுமிங்கே
ஈடேறும் நாடகம் அங்கே நாள்தோறும்
இளமைக் காதலில் இத்தனை உண்டா
இறங்கிப் பார்த்தாலே ஆழம் தெரியும்
பிரிவின் ஏக்கம் பெரிதாய் மாறும்
புரியாத வாழ்வின் சூழ்ச்சும முடிச்சு
ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழ்க்கை
ஆயிரம் கதைகள் கொண்ட புத்தகம்
திருப்பு முனைகள் திகில் நிகழ்வுகள்
திகட்டாத நாடகக் காட்சிகள் பலவும்
வாழ்ந்தே பார்க்க வழிகள் பிறக்கும்
வாலிபம் தொடங்கி வயோதிகம் வரையில்
ஆழ் மனதின் சூறைக்காற்று
உள்ளக் கொந்தளிப்பில் வீசும் சூறைக் காற்று
கள்ளர்கள் உலகம் கயவர்கள் ஆட்டம் எங்கும்
உன்மத்தர்கள் உலாவரும் வீதிகள் நாடெங்கும் பெருகியே
உண்மைகள் புதைந்து பொய்களின் பேயாட்டம் எங்கும்
மயக்கம் புத்தியை மங்கச் செய்த கூட்டம்
தயக்கம் இன்றி தர்க்கம் செய்கிற ஆணவம்
நல்லவை நசுக்கி நஞ்சினை ஊட்டும் துரோகம்
பொல்லாத செயல்கள் பொறுப்பற்ற வாதங்கள் மட்டுமே
எங்கே போகிறோம் என்பதே அறியாத மனிதர்கள்
என்ன செய்வது என்றே அறியாத மற்றவர்
மானிடம் மரித்ததா மண்டையில் மூளையே இல்லையா
மாற்றம் வருமா என்ற கேள்விகள் மனதில்
மதத்தின் பெயரால் கடவுளர் பெயரால் பாதகம்
மக்கிப் போன சரித்திரக் குப்பைகள் நாற்றம்
ஐயகோ யாரிடம் சொல்வேன் ஆழ்மனப் போராட்டம்
ஐயம் பலவும் தீர்ப்பது எவரோ அறியேன்
ஆழ் மனதின் சூறைக் காற்று அடங்குமா ?
சூழும் கரு மேகங்கள் கலைந்து போகுமா?
வினாக்கள் விடை தெரியா குழப்பம் மனதில்
விடியலைத் தேடியே தினம் தினம் போராட்டம்
அமைதி கிட்டுமா அலைகள் ஓயுமா அறியேன்
அடங்க மறுக்குது சூறைக் காற்று இன்றும்
54 ஆண்டுகள் நட்பு
காலம் வேகமாக ஓடிக் கொண்டே தான் இருக்கும். நிகழ்வுகள் தினமும் நடந்தேறிய படியே இருக்கும். தொடங்கும் அனைத்தும் முடிவதும் இயற்கை. நண்பர்கள் பயணத்தில் இன்று இறுதி நாள். காலை உணவுக்குப் பிறகு, விடுதிக் காப்பாளரிடம், உணவுக்கான தொகையைச் செலுத்தி விட்டு, பயணம் மதுரையை நோக்கி ஆரம்பித்தது.
முதல் நிறுத்தம், Sacred Heart பள்ளியின் வளாகத்தில் அமைந்த மியூசியம். நுழைவுக் கட்.டணம் செலுத்தி உள்ளே நுழைந்த போது ஆர்வம் அதிகமில்லை. ஆனால் அங்குள்ள கலெக்ஷன்ஸ் பிரமிக்க வைத்தது. பெரும்பாலானவை இங்குள்ள காடுகளிலும், மலைகளிலும் கண்டெடுக்கப் பட்டவை. பதப்படுத்தப்பட்ட குழந்தை முதல், மிருக எலும்புகள், தோல்கள், பாம்பு, பூச்சி வகைகள், முதுமக்கள் தாழி, நாணயங்கள் என சிறிய இடத்தில் இத்தனையும். ஆச்சரியப் பட்டு போனோம். அதனுடைய பொறுப்பாளர் ரோம் நகர போப் பால் II விடம் பணி புரிந்தவர், எண்பது வயது கடந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. ஸ்டனிஸ்லாஸ் என்ற அவரிடம் ஆசி பெற்று பயணத்தை மதுரைச் சாலையில் தொடர்ந்தோம்.
வழி நெடுகிலும் மூன்று நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையாதலால், வாகனங்கள் வரிசையாக மேலேறிச் செல்வதைக் காண முடிந்தது.
ஓரிடத்தில் தேநீர் அருந்த நிறுத்திய போது, கடைக்காரருக்குச் சொந்தமான நாயின் தாயன்பைக் காண முடிந்தது. நண்பர் சாம் பிஸ்கட் வாங்கிக் கொடுத்த போதே டிரைவர் சொன்னபடி தரையில் போடாமல் அதன் வாயில் கொடுத்த போது, முதல் பாதி மட்டும் தான் தின்று, அடுத்தடுத்துக் கொடுத்தவைகளை கீழே பள்ளத்தில் அமைந்த வீட்டுக் கூரைக்கு எடுத்துச் சென்றது ஏனென்று பார்த்தால் குட்டிகள் இரண்டு அங்கே இருந்தன. முதலில் ஒன்றுக்கும், அடுத்தது மற்றொன்றுக்கும் எனப் பகிர்ந்தளித்தது. ஏனோ மேலே இருந்த மூன்றாவது குட்டியை அவ்வளவாக கவனிக்கவில்லை.
தேநீர் அருந்தியபடிநே மலைச்சரிவில் அவரைக் காய் தோட்டத்தைப் பார்வையிட்டு, கீழே இறங்க ஆரம்பித்து, பாட்டி ஒருவரின் பழக் கடையில் நிறுத்தி பலாப்பழ சுளைகள் சுவைத்து, மலை வாழைப்பழம், ஆரஞ்சு முதலானவற்றை வாங்கிக் கொண்டு, வத்தலகுண்டு ஈடன் உணவகத்தை அடைந்த போது மதிய உணவு நேரம் ஆகியிருந்தது.
மதிய உணவுக்குப் பிறகு பயணம் தொடர்ந்தது. மீனாட்சி அம்மன் கோயில் மூன்று மணியளவில் அடைந்த போது, அனைத்து வாயில்களிலும் மக்கள் கூட்டம், தொடர்ந்த விடுமுறை காரணமாக. வெளியே நின்றே அம்மனைக் கும்பிட்டு விட்டு, திருமலை நாயக்கர் மகால் சென்ற போது, பள்ளிச் சிறுமிகளின் பெருங்கூட்டம். ஐந்து மணிக்கு மூடுவதாகவும், ஒலி ஒளிக் காட்சி நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆனதென்றும் தகவல் தெரிந்தது. விரைந்து உள் நுழைந்து, பார்வையிட்டு, போட்டோக்கள் எடுத்து, படிகளில் உட்கார்ந்த போது, வெளியேறுமாறு விசில் சத்தம்.
இரயில் நிலையம் நோக்கிப் பயணித்து, ஓட்டுனர் சக்திவேலிடம் பயணக் கட்டணம் செலுத்தி விடை பெற்று, குளோக் ரூமில் லக்கேஜ்கள் வைத்து, ஏழு மணியளவில், அருகில் உள்ள ஓட்டலில், இரவுச் சிற்றுண்டி சாப்பிட்டு சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, பாலும் அருந்தி, சென்னைக்கு நண்பர்கள் விடை பெற்ற போது நெஞ்சம் ஏனோ கனத்தது.
எனது ட்ரெயின் நடுநிசியில் பிளாட்பாரத்துக்கு வரவும், ஏறி பெர்த்தில் படுத்து கண்மூடி உறங்க முயன்ற போது இன்னொரு பயணம் இது போல் அமையுமா என்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் அவரவர் இல்லம் சேர்ந்தனர் என்ற மெசேஜ்களோடு இந்த நட்பின் பயணக் கட்டுரை முடிவுறுகிறது. மீண்டும் பயணிக்கும் வரை ஓய்வு விரல்களுக்கு.
( முற்றும்)
54 ஆண்டுகள் நட்பு
உடலில் சூரியக் கதிர்களை உள் வாங்கி மூன்று நாட்களும் D விட்டமின் சேகரிக்க முடிந்தது. சூடான இட்லி, சட்னி, சாம்பாருடன் விக்னேஷ்வரன் செய்த காலையுணவு முடித்து இன்றைய பயணம் தொடங்கியது.
முதலில் மேரி மாதா சர்ச்சில் பிரேயர் முடித்து, பேரி நீர்வீழ்ச்சிக்குச் சென்ற போது, ஓரளவுக்கு நீருடன், கேரளப் பெண்கள் குழுமத்துடன், அழகாகக் காட்சியளித்தது. சூடான இஞ்சி தேநீர் அருந்தி, அடுத்ததாக பில்லர் ராக்ஸ் என்னும் தூண் பாறைகள் சென்ற போது பளிச்சென்ற சூரிய ஒளியில் பிரகாசித்தது. அதன் உச்சியில் இருவர் ஆண், பெண்ணாக இருக்கக் கூடும் நடமாடுவது தெரிந்தது. தடை செய்யப்பட்ட பகுதியில் எப்படி நுழைந்தனர் எனத் தெரியவில்லை. காதலர்களா என்ற ஐயம் எங்களுக்கு.
போட்டோக்கள் கிளிக்கி,அடுத்து சென்ற இடம் குணா கேவ் சாலை, உள்ளே நுழைய அனுமதி இல்லாததால், தொடர்ந்து பயணித்து, பைன் காட்டை அடைந்த போது மிதமான குளிர் காற்று, அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்த படி அடர்ந்த மரங்களை, இரசித்தபடி, நண்பர்களுடன் பேசியபடி நேரம் கடந்தது.
மற்றொரு சிறிய அருவி் தோட்டக்கலை அலுவலகம் அருகே பார்வையிட்டு, மதிய உணவுக்கு மிகச்சுமாரான ஓட்டலுக்குச் சென்று, உணவுக்குப் பிறகு, மோயர் பள்ளத்தாக்கு வியூ பாயிண்ட் , பனி மூடி இருந்தது.
அங்கிருந்து புறப்பட்டு, கடைசியாக அப்பர் லேக் வியூ போட்டோக்கள் முடித்து, அறைக்குத் திரும்பிய போது, மலை உச்சி காதலர்கள் என்னவானார்கள் என்ற எண்ணம் ஓடியது.
இரவு சீட்டாட்டம், வாழ்க்கைத் திருப்பங்கள் விவாதம், பேக்கிங் என நேரம் ஓடியது. இடையே டி20 இந்திய அணி அபார வெற்றி மறுநாள் கோடையிலிருந்து திரும்பும் பயணம், செலவுக் கணக்கு பற்றிய பேச்சு முடிந்து உறக்கம் தொடங்கியது
54 ஆண்டுகள் நட்பு
நட்பின் பரிமாணம், விட்டுக் கொடுத்தலில் விரிவாகிறது. மற்ற உறவுகளில் இருந்து மேம்படுவதும் இதனாலேயே, எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதது. அசோக்கின் பிறந்த நாளுக்கு, நேற்று, கேக் வாங்கி, வெட்டிக் கொண்டாடியதை, அசோக்கின் மகள் ஜனனி, பாராட்டியது மட்டுமல்ல, வீடியோ ஒன்றும் பதிவிட்டது அருமை.
காலை உணவுக்குப் பிறகு, பத்து மணியளவில் புறப்பட்டு பூம்பாறை நோக்கிப் பயணம், சுமார் 20 கிமீ பயணம். வழி நெடுகிலும் பைன் மரங்களின் அணி வகுப்பு. சிறுத்தை ஜாக்கிரதை என்று அறிவிப்பு.
பழனி மலை வியூவில் நிறுத்தி பள்ளத்தாக்கின் அழகை இரசித்தபடியே போட்டோக்கள் கிளிக்கிய போது, பழனி மலை பனி மூட்டத்தில் ஒளிந்திருந்தது. அடுத்த நிறுத்தம் மகாலஷ்மி கோயில் மலை உச்சியில், தனியார் நிறுவியது. மலைகளுக்கு நடுவே அழகாய் அமைந்திருந்தது. மீண்டும் புறப்பட்டு பூம்பாறை நோக்கிப் பயணித்து, குழந்தை வேலப்பர் கோயிலில் நிறுத்தி, நண்பர் சம்பந்தம் அர்ச்சனை செய்து, வெளி வந்து மலைப் பூண்டுகளை வகை வகையாய் வாங்கி சிறிய மூட்டை ஒன்றை காரில் வைத்து, கீழே கிராமத்தை அடைந்த போது, பள்ளத்தாக்கை நோக்கிய படி சிகரங்களின் முனையில் கிளாம்பிங் என்ற வெண் துணி டென்ட்கள் முளைத்திருந்தன. இதற்கா பல ஆயிரங்கள் வாடகை என எண்ணத் தோன்றியது. நாங்கள் தங்கியுள்ள நாயுடுபுர வில்லாவே இதை விட அழகான இடத்தில் அமைந்துள்ளது.
போட்டோக்கள் கிளிக்கிய பிறகு, தேநீர் அருந்திய மெஸ்ஸில், மதிய உணவுக்கு நிறுத்தி, சுவையான வீட்டுச் சாப்பாடு சுடச்சுட. நண்பர்கள் பீட்ரூட் பொரியல், கீரைக் கூட்டை பலமுறை கேட்டு சுவைத்தனர்.
மீண்டும் பயணித்து, கோடை ஏரியை அடைந்து, துடுப்புப் படகில் ஏரியில் உலா, பிறகு அருகில் உள்ள பிரையண்ட் பூங்காவில், வலம் வந்த போது பல , இளஞ்ஜோடிகள், அங்கிருந்த போட்டோகிராபர்கள் உதவியுடன், பல வித போஸ்கள் கிளிக்கிய படி இருந்தனர். நினைவுப் படம் ஒன்றை நாங்களும் எடுக்கச் சொல்லி, புகைப்பட பிரிண்ட்டை வாங்கிக் கொண்டு, சிறு பருவ நினைவுகளோடு, மீண்டும் போட்டோக்கள் எடுத்த போது, பனி மூட்டம் சூழ ஆரம்பித்தது.
கடை வீதிகளில் நடந்து , சுக்கு காபி குடித்து, பேரன் பேத்திகளுக்கு ஹூடிகள் வாங்கி, அறைக்குத் திரும்பி, சீட்டாட்டம், இரவு உணவு முடித்து, நண்பர்களுடன் அளவளாவி, உறங்கச் சென்ற போது அடுத்த நாளின் நீண்ட பயணம் மனத் திரையில் ஓடியது
54 ஆண்டுகள் நட்பு
பல ஆண்டுகள் ஆயிற்று, சிறு பருவ நண்பர்கள் ஒன்று சேர்ந்து. அந்தோணி, அசோக், சம்பந்தம், விஜயன் வெவ்வேறு கொள்கைகள், ஆனால் சீரிய நட்பு. திட்டமிட்டு வெவ்வேறு இடங்களுக்குச் செல்லலாம் என விவாதித்து, கொடைக்கானல் செல்ல முடிவெடுத்து, இரயில் டிக்கெட்டும் ஜனவரி 20 புறப்பட்டு, 25 திரும்ப புக் செய்தாயிற்று.
மற்ற மூவரும் சென்னையிலிருந்தும், நான் பெங்களூரில் இருந்தும் இரவு புறப்பட்டு, காலை நான்கரை மற்றும் ஆறரைக்கு நண்பர்கள் சந்தித்துக் கொண்டோம். கொடை ரோடு இரயில் நிலையத்தில், டாக்சி ஓனர்கள் எங்களிடம் பேச ஆரம்பித்து, அங்கிருந்து போவதில் இருந்து 24 ந்தேதி மதுரையில் இறக்கி விடும் வரை கட்டணம் முடிவானது.
புறப்பட்டு அரை மணியளவில்,ஈடன் ரெஸ்டாரெண்டில் காலையுணவு முடித்து, வழியில் டம்டம் பாறை, மஞ்சளாறு அணை பார்வையிட்டு, சில்வர் காஸ்கேட் அருவி நிறுத்தம், போட்டோக்கள், தேநீர் அருந்துதல் முடித்து, புறப்பட்டு பயணித்து, மலை உச்சியில் உள்ள ஹர்ஷினி வில்லா என்ற ஹோம் ஸ்டே, முன்னதாக புக் செய்து இருந்த்து ஆன் லைனில், அடைந்து, குளித்து தயாராகி, புறப்பட்டு, ஹில் டாப் ரெஸ்டாரெண்டில் அருமையான மதிய உணவு.
மதிய உணவுக்குப் பிறகு, கோக்கர்ஸ் வாக் நடை, பனி மூட்டம் பள்ளத்தாக்கின் பாதியை மறைத்து இருந்தது. பாதை முழுதும் செப்பனிட்டு, தடுப்பு ரெயிலிங் போட்டுக் கொண்டிருந்தனர். ஹூடி ஒன்றை வாங்கிய பிறகு, அறைக்குத் திரும்பி, முகம் கழுவி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் பயணித்து, நல்ல தரிசனம் முடித்து, அன்னதான நன்கொடை கொடுத்து, புறப்பட்டு அறையை அடைந்து, சீட்டாட்டம், இரவு உணவு, கிரிக்கெட் மேட்ச் என்று, நேரம் சென்றது. பத்தரை மணியளவில் உறங்கச் சென்ற போது மறுநாள் நீண்ட தூரப் பயணங்கள் மனதில் ஓடியது.
வாரீயளா?
ஏர் உழ நான் போறேன்
ஏத்தம் இறைக்க வாரீயளா ?
நாத்து நட நான் போறேன்
சேத்த கலக்க வாரீயளா?
களை யெடுக்க நான் போறேன்
உரம் போட வாரீயளா?
கதிர் அறுக்க நான் போறேன்
கட்டு கட்ட வாரீயளா?
கதிர் அடிக்க நான் போறேன்
நெல் குமிக்க வாரீயளா?
வைக்கோல் கட்ட தூக்கப் போறேன்
தூக்கி விட வாரீயளா?
நெல் மூட்டை அடுக்கப் போறேன்
கூடமாட உதவ வாரீயளா?
மாட்டு வண்டி பூட்டப் போறேன்
சந்தைக்குப் போக வாரீயளா?
நெல் அரைச்சு அரிசி ஆக்கோணும்
ஆலைக்குப் போறேன் வாரீயளா?
டெண்ட் கொட்டா சினிமாக்குப் போறேன்
படம் பாக்க வாரீயளா?
சுடு காட்டுல பேய் இருக்காம்
என் துணைக்கு வாரீயளா?
மலை மேலே தேக்கஞ் செடி
கட்டி வர வாரீயளா?
பன மரத்து நுங்கு வெட்டி
ருசிச்சு சாப்பிட வாரீயளா ?
ஏரியிலே மீன் பிடிச்சு நாளாச்சு
மத்யானம் போலாம் வாரீயளா?
மாந்தோப்பு கயித்துக் கட்டில் தூக்கம்
சுகமா இருக்கும் வாரீயளா? S
உயிர்த்தெழும் சொற்கள்
கடுகைத் துளைத்தும் அணுவைத் துளைத்தும்
கருவான தமிழே தாயே வணக்கம்
கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றி வந்தவளே
கண்நோக்கி கருத்தாகி கணையாகத் தோன்றியவளே
உயிரோடு என்வரியில் உறைந்து நிற்பவளே
உன்தாள் பணிந்து தொடர்கிறேன் பெருமகளே !
புதைந்து பூமியிலே புதையல் வரிகளாய்
புவியெங்கும் பரவி நின்று வாழ்பவளே
என்னுள்ளே புகுந்து உயிர் பெறுவாய்
எண்ணற்ற கவிதைகளை இவ்வுலகில் தருவாய்
எதுகை மோனை சீர் தளை
எதிலும் அடங்கா திமிரோடு நீயும்
விலங்கை உடைத்து உயிர்த் தெழுவாய்
கற்பனைத் தேரில் பவனி வரும்
கொற்றவை என்றே கொள்வேன் நான்
வரிகளில் கோடிட்டுக் காட்டிடுவேன்
சொற்கள் உயிரின் ஆழத்திலே உருவாகி
பற்பல வடிவம் தாங்கி வரியாகி
கவிதைக் களம் கண்டு வளர்ந்து
கற்பனை ஊற்றோடு கலந்து மரமாகி
காயும் கனியுமாய் நம்முன்னே நிற்குமாம்
காலம் கடந்தும் மனதில் நிலைக்குமாம்
புரிகின்ற பெருமகனார் சபைதனில் உன்புகழை
எல்லைகள் அற்ற உலகம் சுற்றிவர
தொல்லைகள் இல்லா விதிகள் செய்வோம்
புத்தி பேதலித்த உன்மத்த மானிடர்
கத்தியினால் காயம் தீண்டிச் செல்வார்
சத்தியம் சொல்லில் இல்லை இவர்தம்மில்
அமைதிக்கு அவதூறு செய்யும் ஆணவம்
அடங்க மறுக்கும் அதிகாரம் கொண்டதனால்
அடையப் பார்க்கிறார் அந்நிய மண்ணை
அழிவை நோக்கி அனைத்து மனிதரும்
அச்சம் கொண்டனர்
வானளாவிய அதிகாரம் கொடுத்தவர் எவரோ
வானரமாய் தாவிநின்று இங்கும் அங்கும்
அனைத்தும் எமதென்று ஆர்ப்பரித்து நிற்பார்
அடக்க வேண்டும் அநியாய ஆட்டமிதை
தொடக்கம் இதுவானால் முடிவும் உண்டன்றோ
பொங்கலோ பொங்கல்
பாட்டனும் பூட்டனும் சகதியில் கால் வச்சு
பாடுபட்ட பூமியிலே நெல் மணிகள் சிரிச்சன
ஓடுவீடு இல்ல மலைமேல அறுத்த மஞ்சம்புல்
குடிசையிலே களிமண் தரை முச்சூறும் சாணம் பூசி
பள பளக்க வச்சா மூத்த கிழவி அவ
காதுல குண்டலமா தொங்கட்டான் கழுத்துலே
தாலியிலே குண்டுமணி கோத்திருப்பா
மூக்குத்தி
மினுமினுக்க சாணியக் கரச்சி தெளிச்சு
வாசலிலே போடுற கோலம் தெருவ அடச்சு நிக்கும்
ஏலே பேராண்டி ஒசத்த குரல் தெருக்கோடி
வர கேக்கும்
ஆட்டுப் பாலுலே வச்ச காப்பித் தண்ணி
குடிச்சு புட்டு புள்ள ஸ்கோலுக்கு போனா
ஒரே வாத்தி ஒண்ணாம் கிளாசும் அஞ்சாங் கிளாசும் பாடஞ் சொல்லுவார்
பொங்கலு வந்தாக்க டவுனுல வாங்கியாந்த துணில ஒய்யார பாவாட தங்கைக்கு பிளவுசோட
எனக்கோ தொளதொள டவுசரு அத்தோட சட்டையும்
வீட்டு முத்தத்துலே காய்கறி வச்சு சூரியனக் கும்பிட்டு
கலவைக் காய்கறிக் குழம்போட புதுப் பச்சரிசி பொங்கல்
கரும்பும் மஞ்சளும் வச்சு படைச்ச கையோட தேக்கம் இலைலே சாப்பாடு
மறுநாள் காலைலே மாட்டைக் குளிப்பாட்டி கொம்புக்கு வண்ணம் பூசி புது மாப்புள கணக்கா அலங்காரம்
இருட்டு வரதுக்குள்ளே மிரண்டு ஓடுற ஓட்டம்
கழுத்து மணிச் சத்தம்
கோவில் ரேடியோ சத்தம் எல்லாமும் சேந்து கிராமமே பள பளக்கும்
வந்துருங்க நீங்களும் பொங்கலோ பொங்கலைப் பொங்கிக் கொண்டாட
வியர்வையின் விளைச்சல்கள்
வயலோடும் நீரும் வளர் கதிர் நெல்லும்
வகையான பயிர்கள் விளைகின்ற பூமி எங்கும்
கதையாகச் சொல்வது என்ன வியர்வையின் விளைச்சல்கள்
உயர்ந்தோங்கி நின்று தலை நிமிரச் செய்யும்
உருவான மாளிகை பலவும் நகரம் என்றும்
உணர்த்தி நிற்பதுவும் இங்கே வியர்வையின் விளைச்சல்கள்
கடலோடி பலகளம் கண்டு வாகை சூடிய
மன்னர் படை வீரர்
சரித்திரச் சான்றுகள்
வீரத்தின் மாண்பை பறை சாற்றும் விளைச்சல்கள்
உடல் நோக உயிர் உருக உழைத்து
சுமை தூக்கும் தொழிலாளி காக்கும் குடும்பங்கள்
கடமை தவறாத மானிடத்தின் மகுடமான விளைச்சல்கள்
தன்னலம் மறந்த தாயின் அன்புக்கு இணையேது
பாசத்தின் விளிம்பில் ஓயாது உழைக்கும் உள்ளம் தாயினது
ஈடேது இதற்கு
இதுவே தியாகத்தின் விளைச்சல்
தாயகம் காத்திட தன்னுயிர் ஈந்து எல்லையில்
உயிரையும் துறக்கும் உன்னத வீரனின் மாண்பு
ஒப்பற்ற தேசப் பற்றின் அடையாள விளைச்சல்
வியர்வையின் விளைச்சல் முத்துக்கள் எண்ணில் அடங்கா
அயராது உழைக்கும் அத்தனை மனிதரும் மாணிக்கங்கள்
விலையேது மதிப்பிட தலை வணங்கி ஏற்போம்
தூறலில் நனையும் நினைவு
தூறலில் ஏன் நினைவு நனைய வேண்டும்
தூக்கம் வராமல் யோசித்தேன் புரியாமலே
வாரம் தோறும் வரும் தலைப்பே
காரம் கொஞ்சம் இனிப்பும் கொஞ்சம்
கதம்ப மாலை ஒன்று போதும்
கதைகள் சேர்க்க கற்பனை வேண்டுமே
மூளைக்குச் சலவை செய்கிற நேரம்
வேளைக்குப் பாட்டெழுத கவிஞனா நான்
கற்பனை கடையில் விற்கிற சரக்கா
விற்பனை அமோகமா நடக்கும் அப்போது
வாங்கத் தான் செல்கிறேன் வகையாய்
வாங்கி வர வருவீரோ நீரும்
பாங்காய் இரண்டு வாஙகலாம் தானே
தூற்றாமல் இருந்தாலே போதும் ஐயா
காற்றோடு போகாமல் காத்து விடலாம்
எண்ணத் தூறல்களில் நனைந்த நினைவுகள்
என்றோ தொலைந்ததை நினைவூட்டும் தூறல்கள்
மனதின் ஆழத்தில் உறைந்து போனவை
கனவாய் சிலநேரம் உறக்கம் துறக்கும்
கற்பனை வானில் பறந்து திரியும்
பற்பல வகையாய் வண்ணப் பூச்சாய்
எல்லைகள் அற்றது எங்கும் உலவும்
தொல்லைகள் யார்க்கும் அதனால் இல்லை
சோகமும் சுகமும் கலந்த கலவை
மோகமும் கூட நினைவில் வரலாம்
கரை தொடும் அலை போல்
கனவு தொடும் நினைவு ஆகும்
மனந் தொடும் எண்ண அலைகள்
தினந் தோறும் வந்து போகும்
மற்றவர் பார்க்காமல் கண் கசியும்
உற்றவர் பிரிந்த சோகம் தாக்கி
தொலை தூரம் என்றாலும் செல்லும்
விலை இல்லா பயணம் அதுவே
நினைவு என்பதே பறவை போன்றே
நிற்காது பறந்து செல்லும் வானில் தூறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக என்றும்
மனதின் பரப்பை நனைத்துப் போகும்
நினைவுகள் அதனில் நனைந்து ஈரமாகும்
காலச் சக்கரம்
காலச் சக்கரம் உருண் டோடும்
காட்சித் திரைகள் மாறி நிற்கும்
கனவுக் காட்சிகள் மறைந்து போகும்
கலையாத நினைவுகள் நெஞ்சில் பதியும்
வாலிபம் மறைந்து வயோதிகம் தோன்றும்
தோலின் சுருக்கம் உடலில் கண்டிடும்
உயரப் பறப்பது இறங்கியே தீரும்
அயராத உழைப்பு அடங்கிப் போகும்
அனைத்தும் மனித வாழ்வின் சரித்திரம்
அத்தியாயங்கள் மட்டும் கூடும் நூலது
இரவுக்கு என்ன கோபம்
காலத்தின் கோலங்களைக் கண்டதால் கோபம்
ஞாலத்தில் அமைதி தேடியே கோபம்
மனிதன் மாறவில்லை என்ற கோபம்
புனிதம் எங்கே சென்றதென கோபம்
பிரிவினை ஒன்றே வாசம் எங்கும்
புரிதல் இல்லை எவர்க்கும் இங்கே
எத்தனை யுகமோ மாறுதல் எங்கே
புத்தனும் பிறந்த பூமி அன்றோ
சாதிப் பேய்கள் ஆட்டம் போடுது
சாக்கடை அரசியல் சதிர் ஆடுது
நாடுகள் தோறும் எல்லைப் பிரிவுகள்
நாடும் அமைதி தொலை தூரத்தில்
மதங்களின் சண்டையில் மனிதம் மரித்தது
வேதங்கள் வெறும் வரிகள் ஆனது
தலைமைகள் தகுதி அற்றதாய் தாண்டவம்
தறிகெட்ட கொள்கைகள் தலை விரித்தே
நெறிகெட்ட மனிதர் வாழும் உலகம்
பறிபோன ஒழுக்கம் பகையான உள்ளம்
இரவுக்கு இதனால் அத்தனை கோபம்
விடிவதா இல்லையா என்ற தயக்கம்
நன்றெனச் சொல்ல எத்தனை உண்டு
நலிந்த மக்கள் உயர்ந்து போயினரா
வானத்தில் பறக்கும் விமானம் தருமா
வாடிய முகங்களில் வண்ணச் சிரிப்பை
கூடுகள் கட்டும் பறவை கூட
காடுகள் கடந்து இரைதந்து காக்கும்
வறுமை போக்காத வளமிருந்து பயனென்
வயலை உழுதாலே பசிக்கு உணவாகும்
எவரும் வருந்தாத உலகே வேண்டும்
எங்கும் அமைதி என்பதே வேண்டும்
எவரும் உலகில் எங்கும் செல்ல
எல்லைகள் அற்ற உறவு வேண்டும்
நடக்குமா என்ற ஐயம் என்றும்
நடந்தால் நலமென உள் ளம் சொல்லும்
இரவுக்கு இருளை விலக்கத் தோன்றும்
இல்லாது கோபம் விலகிப் போகும்
தலைப்பைத் தேடுகிறேன்
தலை சரியில்லை எனில் உடல் முற்றிலும் கோணலாகும்
விலை கொடு்த்தாவது தலையைச் சரி செய்து விடுவோம்
தலைப்பை தலைப் பாகையில் தேடிப் பார்க்க இயலுமா
வலைப்பை சென்றால் ஆயிரம் காணலாம் அல்லவா நண்பா
தொலைத்த சிந்தனை தொடர்ந்த குழப்பம் கலங்கிய மனது
கலைத்துப் போட்ட கற்பனைச் சிதறல் கவிதை எங்கே
ஓடிய கால்கள் ஓய்ந்த போதும் கற்பனை ஊறும்
தேடிய சொற்கள் ஊற்று நீர் போல சுரக்கும்
பாடிய வாய்க்கு பாங்காய் வரிகள் வந்து நிற்கும்
வாடிய பயிருக்கு வாய்க் கால் நீராய் என்றும்
நொடியதில் தோன்றும் சிந்தனைச் சிதறல் அருவி போலாகும்
கடியது எனினும் கருத்தைக் கொட்டி. சாடி நிற்கும்
விடியலில் தோன்றும் ஆதவன் ஒளியில் இருளும் போகும்
துடிக்கும் இதயம் காதல் உணர்வில் கசிந்து வடியும்
வடிவம் கொள்வதில் சிற்பியின் எண்ணம் போன்றே இதுவும்
தலைப்பைத் தேடியே ஆயிரம் பாக்கள் ஆனந்தம் கொள்ளும்
மலைப்பாய் தோன்றும் ஒவ்வொரு பாடலும் கவிஞர் வரிகளில்
எங்கிருந்தோ வந்ததோ இத்தனை அழகாய் எண்ணத் தோன்றும்
எத்தனை வேண்டும் தருகிறேன் என்றே தமிழே சொல்லும்
பாரதி
பாரதி என்றொரு கவிஞன்
பாரத மண்ணின் மைந்தன்
வீரம் ஊட்டிய வரிகள்
வீறு கொண்டே எழும்
சாதிகள் சாடிய புலமை
மோதியே மிதிக்கும் கோபம்
அச்சம் தவிர்க்கும் ஆண்மை
அடங்க மறுத்த மேன்மை
ஆயிரம் வேண்டும் இன்று
ஆணவப் பேய்கள் ஒழிக்க
ஆனந்த சுதந்திரம் வேண்டும்
ஆகையால் வருவாயா மீண்டும்
தோள் தேடிய காலம்
தோள் தேடிய காலம் உண்டு
தோழி ஒருத்தி துணை தேடியும்
தூரத்து தேசமதில் காத்திருந்த கண்கள்
பாரத்தை மனதில் வைத்து வாழும்
சோகத்தை சொற்கள் சுமந்து செல்லும்
தேகத்தை உருக்கும் தேய்ந்து போகும்
அவளின் பார்வைக்கு ஏங்கித் தவிக்கும்
அடங்காத காதல் தீயில் கருகும்
அத்தனையும் அடங்கிப் போகும் நொடியில்
ஒரு வார்த்தை அவள் சொல்லில்
ஓராயிரம் வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும்
தோள் சாய வேண்டும்
எத்தனை தோள்கள் தேடுவேன் நண்பனே
அத்தனை உண்டு உலகிலே மறக்க
சிந்தனை முழுதும் நிறைந்தவை என்றும்
எந்தன் தலைசாய தோள்கள் தேவை
தாயைப் போன்றொரு சுமைதாங்கி உண்டா ?
சேயது சாயும் தோளுக்கு இணையில்லை
வாலிப வயதில் வனப்பான தோள்கள்
வயோதிக வயதில் பாசமான தோள்கள்
கவலைகள் போக்க நண்பனின் தோள்கள்
கருணை மனதோடு எத்தனை தோள்கள்
வாடிய பயிருக்கு வாய்க்கால் நீரும்
தேடிய உறவுக்கு தேறுதல் சொல்லும்
பசித்த வயிற்றுக்கு சுவையான சோறும்
படித்த மனிதனுக்கு பாங்கான தொழிலும்
சுமைதூக்கி உழைப்பவன் ஓய்வு நேரமும்
இமைமூட நேரம் கிடைக்கும் காவலனும்
தேடுவது எல்லாமே சுகமான தோள்கள்
ஓடுவது ஓய்வது தோளின் மீதே
பறந்து போனவளே
பாரத்த இறக்கி வக்க தோளத் தான் தேடினேன்
பாராத்தா நீ இல்லே எங்கே தான் போனாயோ
பாவிமவன் சோக மெல்லாம் பாட்டாலே சொல்லி புட்டேன்
பாரா முகமா பரி தவிக்க விட்டு போனாயோ
கண்ண மூடினாலே காணு றது உன் முகமே
கண்ண மூடு முன்னே கண்ணே நீ வருவாயோ
கழனிச் சேறுலே களத்து மேட்டுலே காதலிச்ச நாளெல்லாம்
பழசாப் போச்சுதா பறந்து போனவளே பாவமா இல்லையா
கஞ்சிய குடிச்சாலும் கவளச் சோறு தின்னாலும் பொண்ணே
மிஞ்சி இருக்கும் உன் நினைவே எஞ்சி இருப்பது
உன் நினைவே எத்தனை நாள் காத்திருப் பேன்
பொன் விளையற பூமி பாதம் பட்ட இடம்
காலம் போன பின்னே வந்தா குத்த மடி
காத்த கண்ணும் பூத்துப் போச்சு தடி ஆத்தா
போன வழி சொல்லு விரைவா நான் வாரேன்
போதும் காத்த தெல்லாம் ஓடியே நான் வாரேன்
குழப்பம், நட்பு, தொண்டு
திட்டமிடல் என்பது எச்செயலுக்கும் தேவையானது. பலரும் இணையும் போது கருத்து வேறுபாடுகள் கூடவே, அப்படித்தான் இந்தத் திட்டமிடலும். முதலில் சனிக்கிழமை (22/11) என்பது செவ்வாய்க்கிழமை என்று சொல்லி, முடிவாக திங்கட்கிழமை என்றானது. அடுத்தது புறப்படும் நேரம், நிறுவனர்களிடையே வாக்குவாதம், நேரம் காலை எட்டிலிருந்து 8.45 ஆயிற்று.
ஆனால் நண்பர்கள் இந்திய நேரப்படி தாமதமாக வந்ததால் புறப்பட ஒன்பதரை நெருங்கிற்று. பன்னிரண்டு என்பது பத்து பேருடன் இரண்டு கார்களுடன், என்னுடைய i20, சாம்ஸ் அவர்களின் Innova பங்கு பிரிக்கப்பட்டு கார்கள், கனகபுரா சாலையைத் தொட்டு, மெட்ரோ தொடர்வண்டியின் கடைசி ஸ்டேஷனும் கடந்து வலது புறம் திரும்பி, கிராமச் சாலைகளில், வளைந்து நெளிந்து, பசுமை வயல்களூடே விரைந்தன.
பிடுதி ( Bidadi) அருகில் முதல் நிறுத்தம். முன்னதாக, உணவுக்குத் தேவையான அட்டைப் பெட்டிகளுடன், மாணவர் நோட்புக், பென்சில்கள், பேனா போன்றவற்றுடன் சந்திரசேகர் சென்று காத்திருந்தார்.
முதல் கிராமத்தில் தற்காலிக வீடுகளில் சிலரே இருந்தனர் மற்றவர் வேலைக்குச் சென்றிருந்தனர். தாமதமாக புறப்பட்டதால், திட்டமிட்டபடி அரிசி, பருப்பு முதலான அடங்கிய அட்டைப் பெட்டியை ஒரு சிலருக்கே கொடுக்க முடிந்தது. பிறகு அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாகச் சென்ற போது, ஒவ்வொரு பள்ளியிலும் ஒன்று முதல் ஏழு வகுப்பு வரை ஒரே அறையில். ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக. மதிய உணவும் அங்கேயே பரிமாறுகின்றனர். பள்ளிகளில் 25 முதல் 55 வரை மட்டுமே மொத்த எண்ணிக்கை. ஐந்து பள்ளிகளில் நோட்புக் முதலானவை கொடுத்தபோது, Grocery பெட்டிகளும் கொடுக்கலாம் என முடிவானது.
நண்பகல் உணவு நேரம் பள்ளி ஒன்றில் மதிய உணவை Robin / HHIF நணபர்கள் பரிமாறும் போது நாங்கள் சிலர் உணவை ருசி பார்த்தோம். சிலருக்கு சாம்ஸ் ஊட்டியும் விட்டார். ஐந்தாவது பள்ளியில் எங்களுக்கு சூடான புலவ்வும், சாதம், இரசம் பரிமாறப்பட்டது.
மாணவ மாணவியர் உற்சாகத்துடன் விளையாட்டுகளில் பங்கேற்ன்னர். மாணவர்களுக்கு மதீன் மற்றும் டபசும் உரையாற்றினர். தலைமை ஆசிரியர் எங்கள் அனைவருக்கும் தனித்தனியாக பெயரைச் சொல்லி் நன்றி உரையாற்றினார். பள்ளி ஆண்டு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தேநீர் அருந்தி, பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் பரிசளித்து விடை பெற்றோம்.
மாணவர்களின் உற்சாகம், மகிழ்ச்சி, ஆசிரியரின் நன்றி உணர்வு, கிராம மக்களின் உணர்ச்சி மிக்க பார்வை இவைகளை சுமந்து திரும்பிய Robinhood Army/ Helping Heroes India Foundation தொண்டு நிறுவனத்தின் , தொண்டர்களாகிய நாங்கள் ( Matheen, Shams, Seema, Mrs Matheen, Tabasum, Nirmala, Smitha, Usamah, Vikas, Swapnil, Vijayan) இது ஒரு சுற்றுலா போன்றே மகிழ்வுடன் ஏற்று செய்தோம்.
மதீன் அவர்களின் Farm க்கும் இடையில் சென்று, பழங்கள் பறித்தும், ருசித்தும் நேரம் செலவிட்ட பிறகு மீண்டும் வீடு நோக்கிப் பயணம்.
தொண்டு செய்வது மட்டுமில்லாமல் ஒரு குடும்பம் போன்ற உணர்வு எங்களிடையே இருப்பது பிரமிக்கத் தக்கது. இன்று வே லை நிமித்தமும், கல்லூரி செல்ல வேண்டியும் வரமுடியாமற் போன நணபர்கள் மனதும் எங்களுடன் இருந்தன.
ஓய்வறியா நேரங்கள்
வாழும் வழி தேடி ஓடிக் கொண்டே ஒருவன்
பாழும் பணம் தேடி ஓடிக் கொண்டே ஒருவன்
ஓய்வு எவனுக்கும் இல்லை காலம் முடியும் வரை
தேய்வது தேகம் தேடுவது பொருள் யாரோ உயர்ந்தவர்
பதவி மோகம் பழியும் கூட பாவம் இல்லை
உதவும் கரங்கள் உள்ளம் வெள்ளை நல்ல மனிதம்
இரண்டும் ஓய்வறி் யாது எனினும் சிறந்தது எதுவோ
வளங்கள் போற்றி வசதிகள் செய்து வாழும் தலைவன்
வஞ்சனை செய்து தலைமை ஏற்று பாதகம் செயபவன்
ஓயாது உழைப் பினும் உத்தமன் எவனோ இருவரில்
ஆணவக் கொலையை அஞ்சாது செய்து அரக்கன் ஒருவன்
ஆணோடு பெண்ணை சேர்த்து வைக்கும் உயரிய பண்பினன்
ஒன்றே குலமென்ற உன்னத வாக்கை காக்கும் மனிதன்
நன்று இருவரில் நல்லவன் எவனோ யாவரும் அறிவீர்
நேரங்கள் அனைவர்க்கும் ஒன்றே ஆயினும் வேற்றுமை செயலால்
நேர்மை வழியதே நல்லது ஆகும் நானிலம் போற்றும் !
எழுபதை நோக்கி...
இரவுகள் வழக்கம் போல, வயதானதை நினைவூட்டும் கனவுகளும், குறைந்த தூக்கமும், ரெஸ்ட் ரூமுக்கு பல நடைகளும். பர பரப்பான உலக நடப்புகளிலிருந்து ஓய்வு. காலை ஆறு மணிக்கு கம்பெனி பஸ் பிடிக்க பாஷ்யம் சர்க்கிள் வரை வேக நடை இல்லை. நடு இரவில் தண்ணீருக்கு க்யூவில் நிற்க அவசியமில்லை. காவிரி நீர் பெங்களூருக்கு வராத எண்பதுகள் காலம் போலில்லை.
இரவுத் தூக்கம் ஒரு மணி நேர கம்பெனிப் பேருந்தில் தொடர வாய்ப்பு, சிற்றுண்டி சுவையற்றதானாலும் சாப்பிட்டு, வேலை துவங்க வேண்டும்.
வேலை நிமித்தம் பெங்களூரு சப்ளையரை சந்திக்க வேண்டுமானால் மெதுவாக எழுந்திருக்கலாம். ஒற்றைச்சாலை பெங்களூரு ஓசூர் இடையே. இந்தப் பயணம் தவிர்க்க ஓசூருக்கு குடி பெயர்ந்து, தளி ஹவுசிங் போர்டு B16 வீட்டுக்குப் போனதும், வாழ்க்கை முறை மாறி, தோட்டத்தில் கத்தரிக்காய், பீன்ஸ் நன்றாக விளைந்த போது மகிழ்ச்சி. பிள்ளைகளின் படிப்பிற்காக, சென்னைக்கு மீண்டும் திரும்பிய போது, ஏழு வருடங்களில் பல மாற்றங்கள். நகருக்கு வெளியே வண்டலூரில் குடியேறிய போது கிராமத்து வாழ்க்கை போல.
மறைமலை நகர் செல்ல , பர பரப்பற்ற GST சாலை. போக்குவரத்து மிகக் குறைவு, மணல் லாரிகளின் ஆதிக்கம், பாலாற்று மணல் நகர் முழுதும் சப்ளை.
ஒரு Lamby scooter, CAN 1733 , சென்னையில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் பவனி வந்தது என்னைச் சுமந்து. வண்டலூர், பெருங்குடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை என மே மாத வெயிலில் ஒரே நாளில் சுற்றியது கண் முன்னே இப்போது வியப்பாய்.
வேலை நிமித்தம் பல ஊர்களுக்குப் பயணங்கள், பெரும்பாலும் அவசரப் பயணங்கள், இரயில் ஃபுட்போர்ட் பயணம் நடுநிசி நேரத்தில், ரிசர்வ் செய்ய அவகாசமின்றி. காலம் உருண்டோட சென்னை, பெஙலகளூர் என மாறி மாறி, கம்பெனிகள் 12 , நாக்பூர் வாசம், சீனப் பயணம் என வாழ்க்கை வட்டமடித்தது.
மிக நீண்ட கட்டுரையாக. இதை மாற்ற எண்ணமில்லை. நினைவலைகள் பின்னோக்கிப் போய் எட்டிப் பார்த்துத் திரும்பியது. பிசினஸ் என்ற முயற்சியும் ஒன்பதாண்டு காலத்தில், பாடம் கற்பித்தது. பிப்ரவரி 2021 க்குப் பிறகு, வேறு பரிமாணத்தில் ஊர் சுற்ற ஆரம்பித்து, உலகம் சுற்றும் வாலிபன், Man on Wheels என்ற பட்டங்கள். அனுபவங்கள் கலவை தான், வளைந்தும், நெளிந்தும், உயர்ந்தும் தாழ்ந்தும். காலம் நிற்பதில்லை, நரைத்த முடிக்கு வேண்டுமானால் கருப்பு சாயம் பூசலாம். உடல் மெதுவாகத் தளர்வதை தடுக்க இயலாது.காலையில் எழுந்து பரபரப்பாக ஓட வேண்டிய கட்டாயமில்லை.
எழுபதை நோக்கி விரைகின்ற வயதில் எண்பது வயதைக் கடந்த நண்பர்களை நோக்கி வியப்பாகத் தோன்றுகிறது. கடிகார முற்களோ, மின்னணு கடிகாரமோ நிற்காமல் இயங்குவது போல் மனிதனும் இயங்க முடியுமானால் நலம். ரோபோக்களின் ஆளுமை உலகை தன் வசமாக்கும் காலம் வெகு தூரமில்லை.
வழியெல்லாம் வசந்தம்
வழியெல்லாம் வசந்தமாமே யாருக்கோ சொல்வீரா
வழியற்றுப் போன வறுமை விலகிற்றோ
பழியேற்று பயிர் செய்யும் விவசாயம்
கழிவுநீர் அகற்றி நாற்றம் உடம்பில்
கடைவீதி தன்னில் கத்தும் குரலோசை
படைகொண்டு சென்று உயிர்நீக்கும் வீரன்
உருகும் தார்ச் சாலை உழைப்பாளி
பருகும் நீருக்கு பலகாதம் நடப்போர்
உண்டு கொழுத்த வக்கிர முதலாளி
தொண்டு் செய்பவன் உழைப்பால் உயர்ந்தவன்
பொய்கள் பேசியே உயர்ந்த தலைவன்
காய்கள் நகர்த்தும் சூழ்ச்சி அரசியல்
ஆணவக் கொலைகள் சாதிப் பேய்கள்
ஆண்டவன் பெயரில் அக்கிரமம் செய்பவன்
ஆட்சிக் கட்டிலுக்கு அனைத்தும் செய்பவன்
காட்சிகள் மாறியதா கவிஞர் பெருமக்காள்
வழியெல்லாம் வசந்தம் எதிலும் சுதந்திரம்
வந்ததா உலகில் பதிலும் உண்டா ?
கண்களை மூடியே காதுகள் அடைத்தே
விண்ணிலே பறப்பதாய் ஒரு கூட்டம்
பாவத்தின் நெருப்பில் குளிர்காயும் கூட்டம்.
கூவத்தின் நீரும் வாசனை என்கும்
செய்வது அறியாது அமைதி காக்கும்
பொய்களை நம்பி காலம் கடத்தும்
எங்கே போகிறது எதிர்காலம் என்று
உங்களைக் கேட்க நானிங்கு வந்தேன்
விடைகள் இல்லாத வினாவே இதுதான்
மடைகள் மாற்றிச் செல்வோம் வாரீர் !
காலைப் போதினிலே
வரி யொன்றை எழுதி கவிதை பாட
விரி கின்ற கற்பனை ஊற்றோ. பெருகி
தரு கின்ற அழகே பெருமை அன்றோ
வரு கின்ற சந்தம் வகையாய் அமைய
பெரு கின்ற இன்பம் சொல்லி மாளாது
சிற கொன்றை விரித்து பறவை பறக்க
சிலை யொன்றை. சிற்பி வடிவு அமைக்க
கலை என்று சொல்ல எத்தனை வகைகள்
வலை ஒன்றில் மீன்கள் சிக்கியது போலவே
வார்த் தைகள் கோர்வை கவிதையின் உருவிலே
இசை யோடு சேர்ந்த பாடலாய் மாறியே.
இன்ப மூட்டும் காலைப் போதினிலே
யார் மீது கோபம்
என் மீது கோபம் உன் மீது கோபம்
அவர் மீது கோபம் எவர் மீதும் கோபம்
நெற்றிக் கண் வேண்டும் எரிக்க
சுற்றிப் பார் கொடுமை நாட்டில்
கோபம் பெரிதாய் இருந்தென்ன செய்ய
கோவில் தெய்வம் கும்பிட்டும் என்ன
மனிதன் மாறாத குணமொன்று உண்டே
புனிதம் எதுவென்று அறியாத மடமை
குற்றம் புரிந்து கூட்டம் ஒன்று
குள்ள நரியாய் செயல்கள் செய்ய
பார்த்தே இருக்கும் அமைதி நன்றா
பாதகம் செய்வோரை மிதித்தல் ஆகாதா
கோபம் கொள்ளவே மறந்தே போனதா
கோளாறு மனதில் எதனால் நண்பா
தர்ம நியாயங்கள் பந்தாடும் கூட்டம்
தனதாக்கி அனைத்தும் தாண்டவம் ஆடுது
மௌனமே மொழியாய் இருப்பதும் ஏனோ
மனமதில் ரௌத்திரம் மறந்து போனதோ
வேடிக்கை மனிதர்கள் ஏளனம் பேசியே
வாடிக்கையாக வாதமும் செய்வதே தினமும்
விடிவில்லா இரவாய் இருண்டு போனதே
முடிவைத் தேடியே எங்கே போவது
அடிமைத் தனமாய் அடங்கியே வாழ்வதா
குடிமக்கள் யாவரும் உறங்கிப் போயினரோ
விழித்தெழு இன்றே இருளை விலக்கி
முடிகின்ற நாளின் உறக்கம்
வரப்பு மேட்டிலே ஓடி வந்து
வழுக்கி சேற்றில் காலை விட்டு
கிணற்று நீரில் கழுவி விட்டு
கிழங்குத் தோட்ட நீரைப் பாய்ச்ச
மடையை மாற்றி சேற்றை அணைத்து
மக்கிய இலைகளை எருவாய் மாற்றி
பயிரிட்ட காலம் இன்றும் கண்ணில்
கயிற்றை இடுப்பில் கட்டி தள்ளிவிட
கிணற்றில் தத்தளித்து மூச்சுத் திணறி
கணத்தில் கைகால் அசைத்த நீச்சல்
ஆட்டு மந்தை யோடு மலைமீது
பாட்டுப் பாடி பாறை ஒன்றில்
கட்டுச் சோறு கடிக்க வெங்காயம்
கதைகள் பலவும் கூடவே கேட்டு
அந்தி சாயும் வேளையில் திரும்பி
அத்தனை ஆடுகளும் பட்டியில் அடைத்து
சுடுநீரில் குளித்து சூடாக சாப்பிட்டு
முடிகின்ற நாளின் உறக்கம் சுகமே !
தொடும் தூரத்தில் கனவு
விரல்கள் நீண்டு தொடும் தூரத்தில் விலகிப் போனது கனவு
விதையூன்றி நீர் பாய்ச்ச விருட்சமான நினைவுகள் கனவாய்ப் பெருகின
புதியதோர் உலகம் தேடிப் புறப்பட்ட இரவுத் தேரின் பவனி
புலர்ந்திடும் காலைப் போதில் விளங்கா மலே விலகிப் போனது
தொட்டு விடத் துடித்த மனது துவண்டு போனது
விட்டுப் போனவளின் விரல்கள் தொடாமலே சென்றவள் கனவால் ஒருநாள்
தூரத்துப் பனிமலை சிகரம் ஒன்றில் உயரே என் உருவம்
தூக்கம் துறந்து விழிக்கும் நேரம் தொலைந்து போனது ஏனோ ?
எல்லைகள் அற்ற உலகம் எங்கும் செல்ல அனுமதி உண்டு
எங்கும் அமைதி ஆனந்த வாழ்வில் மக்கள் கூட்டம் இனிதாய்
மதங்கள் மொழிகள் சாதிப் பிரிவுகள் இல்லா அமைதிப பூங்கா
வாதங்கள் வளர்ச்சிப் பாதைகள் பற்றியே வேற்றுமை அற்ற சமுதாயம்
காணக் கண் கோடி வேண்டும் காட்சிகள் அழகாய் எங்கும்
கானல் நீராய்ப் போனது கண் விழித்த நேரம் அந்தோ
தொட்டு விடும் தூரத்தில் கனவு கலைந்து போனது ஏனோ ?
வாழ்க்கையொரு வட்டம்
எழுதியே தீருமின்
பழுதில்லை காண்
வானமும் வசப்படும்
வண்ணமும் வசப்படும்
புதுமை தோன்றும்
பழமை திரும்பும்
வாழ்க்கையொரு வட்டம்
வளைந்தும் நெளிந்தும்
வணங்கிப் போதல்நன்றே
இரவுப் பூக்கள்
இரவுப் பூக்கள் வண்ணத் தாரகைகள் ஆகுமோ ?
இதயம் தொலைத்த கன்னியர் காளையர் ஆகுமோ?
வாழ்வைத் தொலைத்த வறியவர் அனைவரும் ஆகுமோ ?
வாழவே தனது கற்பினைத் துறந்த பெண்டிர் ஆகுமோ ?
கேள்விகள் மனதில் தோன்றிய தருணம் விடைதேடி
கேட்டதால் வருவது வார்த்தைக் கோர்வை கவிதையாய்
கதிரவன் வரவில் மலரும் பூக்கள் உண்டு
காரிருள் இரவில் பூத்திடும் பூக்கள் உண்டா ?
நிலவின் ஒளியில் மலருமோ அல்லி போல்
உலவும் சிந்தனை உள்ளத்தின் பூக்கள் ஆயின
இரவுப் பூக்களாய் மலரும் சிலரின் வலிகள்
இதயம் நுழைந்து உருக்கி கண்ணீர் சுரக்கும்
உடலைப் பணயம் வைத்த வாழ்வுக் கொடுமை
உற்றவர் பசியைப் போக்க மெழுகாய் எரியும்
காலத்தின் கோலமது கடமையின் வலிமை ஆகிடும்
காகிதப்படகு கடலலை மீது அலைதல் போலே
மூழ்கிடும் என்று தெரிந்தே மிதக்க முயலும்
வாழ்வதை இப்பூக்கள் இரவில் மலர்வதாய் ஏற்கும்
வழிகளில் ஒன்று வாழத் துடிக்கும் மகளிர்க்கு
பழித்தல் விடுத்து பழகிடக் கற்போம் மனதில்
பூக்கள் மலரந்தாலே அழகு இரவென்ன பகலென்ன
பூசைக்குச் சிலவும் ஆசைக்குச் சிலவும் மாறிடும்
அழகை ஆராதிப்போம் ஆராய வேறு உண்டு
ஒரு கோப்பை மௌனம்
கேள்விக்குறி கோப்பையினால் மௌனமா மௌனத்தால் கோப்பையா
வேள்விக்குப் பின்னால் வரமா வரம்பெற வேள்வியா
எதனால் இந்த மௌனம் வினாவிற்கு விடையென்ன
சோதனை அல்லவா விடையிறுக்க இயலாத நிலையிது
தெரிந்தே தவறு செய்யும் கூட்டம் ஒன்று
தெரிந்தும் தடுக்காத கூட்டமும் இங்கு உண்டு
அதிகார வர்க்கம் ஆணவம் தலை விரித்தாடுது
சதிகார கும்பல் சர்க்கார் என்பது வேதனை
விதியென்று நொந்து போவதா வழியேதும் இல்லையா
அறியாத மானிடம் கையில் ஒருகோப்பை மௌனமா?
அழியாமல் காப்பாற்ற வழியெது சொல்வது யாரோ
புதைகுழி தோண்டி புதைப்பது அறியா பாமரர்
விதைகள் அதுவாய் மாறி விருட்சமாய் மாறிடும்
மயக்க நிலைமாறி மௌனம் கலைத்து விழித்திடு
தயக்கம் இன்றி கேள்விக் கணைகள் தொடுத்திடு
இருளை விலக்க தீயொன்று எரிந்திட வேண்டும்
இல்லை என்றால் இருண்ட காலம் திரும்பிடும்
பிரிவினை சக்திகள் பேயாட்டம் பெரும் கூச்சல்
புரியாமலே ஆட்டம் போடும் விட்டில் பூச்சிகள்
நெருப்பில் எரியத் தயாராய் கும்மாளம் எங்கும்
நெருங்கும் அழிவைத் தானே தேடும் தற்குறிகள்
வெற்றுப் பேச்சும் பொய்களின் வாதமும் ஓங்குது
வெகுளியாய் கூட்டம் நம்பியே மயக்க நிலையில்
விழித்தெழு மானிடமே விரைவில் தெளிந்து வெளியேறு
பழித்திடும் கூட்டத்தில் நுழைவதை தவிர்த்து விலகிடு
விடியலைத் தேடு விடைகள் கிடைக்கும் உனக்கு
கொடியது எதுவென தெளிந்து நல்லதைப் பற்றிடு
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 14/10 & 15/10/25)
காலை சிற்றுண்டி அருகில் உள்ள விடுதியில் சாப்பிட்டு, எட்டரை மணியளவில் கொல்லி மலை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். தேநீர் இடைவேளைக்குப் பிறகு, பயணம் தொடர்ந்தது, மதிய உணவை தயார் செய்யுமாறு , BNS Village Resort உரிமையாளரிடம் சொன்னோம். மலைப்பாதையை அடைந்து மேலே ஏற ஆரம்பித்த போது எழுபது கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டுமென அறிந்து கொண்டோம். ஹர்ஷா தேர்ந்த ஓட்டுனர் ஆதலால் அழகாக ஓட்டினார். மதியம் ஒன்றே காலுக்கு ரிசார்ட்டை அடைந்து, சூடான சமையல் தயாராய் இருந்ததால், உணவை முடித்து சிறிது நேர ஓய்வுக்குப் பின், அரப்பளீஸ்வரர் கோயில் தரிசனம் முடித்து, முடக்கால் கிழங்கு சூப்பைக் குடித்து, சூப் பவுடரும் வாங்கிக் கொண்டு, ஆகாய கங்கை அருவி 1179 படிகள் கீழே என்பதும், மூன்று மணிக்கு மேல் அனுமதி இல்லை என்பதும் தகவல் பலகை மூலம் அறிந்து, மாசிலா அருவிக்குப் பயணித்து கீழே இறங்கிய போதே மழை தூற ஆரம்பித்தது. கொஞ்ச் தூரம் நடப்பதற்குள் மழை வலுத்தது. குடிசைக் கடை ஒன்றின் கீழே நின்று கொண்டோம். பிறகு ஒவ்வொருவராக குடையைப் பிடித்த படி அருவிக்கு அருகில் சென்று போட்டோக்கள் எடுத்து அறைக்குத் திரும்பி, ஓய்வெடுக்கும் நேரத்தில் சீட்டாட்டம் ஆரம்பம். இடையில் இரவு உணவு சப்பாத்தி, குருமா, சாதம், இரசம். மறுநாள் காலை எட்டரைக்குச் சிற்றுண்டி தயாராகும் என சமையல் அம்மா சொல்ல உறங்கச் சென்றொம். மழை பெய்தபடி இருந்தது.
சிற்றுண்டி தோசை, சட்னி, சாம்பார் சுடச்சுட. மதியம், இரவு, காலை மூன்று வேளையும் simple but tasty. அவர்களிடம் விடை பெற்றுப் புறப்பட்டு சிறிது தூரத்தில் ஓட்டுநர் வயிறு சரி இல்லை, தலை வலி எனச் சொல்லவும் காரை ஓரமாக நிறுத்தி, வயிற்றைக் காலி் செய்து, முகம் கழுவி வந்தார். முப்பத்தேழு வளைவுகளை சற்று நிதானமுடன் கடந்தாலும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. நிறுத்த இடம் கிடைத்த இடத்தில் காரை நிறுத்தி, வெளிக்காற்று வாங்கவும் ஓய்வெடுக்கவும் செய்தும் அவர் சமநிலைக்குத் திரும்பவில்லை.
பிரபாகர் ஓட்டுவதற்கு முன் வந்தார். ஹர்ஷா சட்டையைக் கழற்றி விட்டு ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டார். கார் மெதுவாக வளைவுகளைக் கடந்த போது, டிரைவரின் செயல்கள், அழுகை எங்களை பயமுறுத்தியது. கீழே இறங்கிய உடன் மருத்துவரிடம் செல்ல முடுவெடுத்தோம். கைவசம் இருந்த ஈனோ,Dolo மாத்திரைகள் கொடுத்து ஓய்வெடுக்கச் செய்தோம். மலையின் வளைவுகளைக் கடந்து கீழே இறங்கிய போது மெதுவாக, சம நிலைக்குத் திரும்பி, மருத்துவரிடம் போக வேண்டாமென்றும் ஊர் திரும்பிய பிறகு சென்று பார்ப்பதாகவும் கூறி, சேலத்திற்கு முன்பாக அவரே காரை ஓட்ட ஆரம்பித்தார். அதன் பிறகே நாங்கள் நிம்மதி அடைந்தோம். மதிய உணவு இடைவேளையில், அவர் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டார்.
நைஸ் ரோடு வழியாக பெங்களூரு பன்னரகட்டா ரோடு அடைந்த போதே மணி ஐந்தை நெருங்கி இருந்தது. பிரபாகர் , கோபால் இருவரும் வழியில் இறங்கி, டாக்ஸி பிடித்து தங்களது வீடுகளுக்குச் செல்ல முடிவெடுத்து, மீதமுள்ள நாங்கள் ஒவ்வொருவராக வழியில் இறங்கிக் கொள்ள, கடைசியாக பிரகாஷ் இறங்கிய போது மணி 7 45 ஆனதாக SMS வந்தது.
ஒரு நீண்ட பயணம் இறுதியில் ஏற்பட்ட சிறிய நிகழ்வைத் தவிர மிக அழகான ஒன்றாய் அமைந்தது. இயற்கையோடும், கோயில்களோடும், சரித்திர இடங்களோடும் தொடர்பு கொண்ட மன நிறைவு. ஹர்ஷாவுடன் மறுநாள் தொலை பேசியில் பேசிய போது, மருத்துவரைப் பார்த்ததாகவும், வெறும் Gastric problem என்றும், ஓய்வில் இருப்பதாகவும் சொன்னார்.
( முற்றும்
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 12/10 & 13/10/25)
நணபர்கள் மூவர் மட்டும், சூரிய உதயம் பார்க்கச் சென்று திரும்பி வந்தனர். நான் பல முறை பார்த்து விட்டதால் செல்லவில்லை. காலை சிற்றுண்டிக்குப் பிறகு, புக் செய்த 8 - 8 30 slotல் வரிசையில் நின்று, விவேகானந்தர் பாறைக்குச் செல்ல படகை நோக்கி நகர்ந்த போது, மிகப் பெரிய கூட்டம் புனேவிலிருந்து வந்திருந்தது, முட்டி மோதி ஏறிக் கொண்டிருந்தனர். பத்தே நிமிடப் பயணம் , படகு அக்கரையில். வெயில் காலையிலேயே சுட்டெரிக்கவும், வியர்க்கவும் செய்தது. முதலில் திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடிப் பாலத்தில் சென்று, போட்டோக்கள் எடுத்து, உயரே மாடத்திற்குப் படியேறிச் சென்ற நண்பர்கள் திரும்பும் வரை கடலை இரசித்தபடி அமர்ந்து, அவ்வப்போது தண்ணீரும் அருந்தி, நண்பர்கள் திரும்பியதும், விவேகானந்தர் மண்டபத்தில் நுழைந்து, தியான மண்டபத்தில், சில நிமிடங்கள் தியானம் செய்து முடித்து, கரைக்குத் திரும்ப நீண்ட வரிசையில் நகர்ந்து மீண்டும் படகில் பயணம். கரை சேர்ந்த பிறகு, இரு நண்பர்கள் மட்டும் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்ல, நாங்கள் அறைக்குத் திரும்பி, அடுத்த பயணத்திற்குத் தயாரானோம்.
இராமேஷ்வரம் நோக்கிப் பயணம். கார் வேகமெடுத்து, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்க, முதலில் இராமேஷ்வரத்தில் தங்க வினாயகா ரெசிடன்சி, அடுத்தது, தஞ்சாவூர் NN Palace, கொல்லி மலை BNS Village resort என வரிசையாக தங்குமிடங்களை புக் செய்து, மதிய உணவு நெடுஞ்சாலை உணவகம் ஒன்றில் முடித்துப் பயணம் தொடர்ந்தது. இராமேஷ்வரம் அடைந்த போது, மாலை ஆறைக் கடந்திருந்தது. இரவே கோயிலுக்குச் சென்று வருவதென்றும், விடியற்காலையில் கோபால் மற்றும் பிரபாகர் இருவரும் மறுமுறை தீர்த்த நீராடச் செல்வதென்றும் முடிவெடுத்து, மொபைல், காலணிகளை காரிலே விட்டு விட்டு , தரிசனம் முடித்து , வெளியே வந்து, இரவு உணவை முடித்து, தங்கும் விடுதிக்குத் திரும்ப, ஆட்டோவைத் தேடி, வெகு தூரம் நடக்க வேண்டியதாயிற்று.
சிற்றுண்டி அருகிலிருந்த ரெஸ்டாரெண்டில் முடித்து, முதலில் அப்துல் கலாம் அவர்களின் வீடு, அடுத்தது தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை இவைகளைப் பார்வையிட்ட பிறகு, காரைக்குடி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். பயணம் நெடுஞ்சாலைகளைக் கடந்து, காணாடு காத்தானை அடைந்தபோது, மதிய வேளை ஆயிற்று. செட்டிநாடு அரண்மனை போட்டோக்கள் எடுத்து முடித்து, அருகிலிருந்த ஓட்டலில், மதிய உணவை முடித்து, தஞ்சையை நோக்கிப் பயணம். மாலை ஐந்து மணி போல் NN palace ஓட்டலை அடைந்து, என்னைத் தவிர மற்ற அனைவரும் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். அவர்கள் திரும்பிய பிறகு, இரவு உணவை அருகிலுள்ள விடுதியில் முடித்து, மறுநாள் இப்பயணத்தின் கடைசி நிறுத்தமான கொல்லிமலை போக எட்டு மணிக்குத் தயாராக முடிவு செய்து உறங்கப் போனோம்.
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 10/10 & 11/10/25)
ஆலப்புழா காலை சிற்றுண்டி ஆப்பம் கடலைக் கறியோடு ஆரம்பித்தது. ஒன்பது மணிக்கு சிக்காரா படகு தயாராக இருந்தது. வசதியாக இருக்கைகளில் அமர்ந்த பிறகு படகு கடலின் பேக் வாட்டர் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய ஏரியும், உலகளவில் 16 வது மிகப் பெரியதுமான ஏரி என அறியப் பட்டதாக படகோட்டி நண்பர் சொன்னார்.
கம்போடிய மிதக்கும் கிராமத்தை விட மிக அழகானதாக, கரையின் இருமருங்கிலும் அணிவகுத்த வீடுகளின் அழகும் ஏன் உலகின் அழகான இடமென்று இது அறிவிக்கப் படவில்லை எனத் தோன்றியது. கேரள மற்றும் மத்திய அரசு விளம்பரப் படுத்தலாம் என நினைத்தேன். இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாராவதும் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம்.
கண்ணைக் கவரும் இப்பயணத்தை எத்தனை போட்டோக்கள் எடுத்தாலும் பத்தாது. மூன்று மணி நேரப் பயணம் முடிந்து, படகுப் போட்டிகளும், ஓணம் பண்டிகையின் போது இங்கே நடைபெறுகின்றன என படகோட்டி நண்பர் சொன்னார்.
ஆலப்புழாவின் Rosh inn owner அவரது ஹோம் ஸ்டே புரமோஷன் செய்வதற்கு உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அவரிடம் விடை பெற்று, வர்க்கலா நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.
மலைகளின் வளைவுகளில் மீண்டும் பயணம். மதிய உணவு, தேநீர் இடைவேளை முடிந்து பயணம் தொடர்ந்தது. ஐந்தரை மணிக்கு, முன்பே புக் செய்த ஹோம் ஸ்டேவில் லக்கேஜ்களை இறக்கி, Freshen up ஆகி Sun Set பார்க்க விரைந்தோம். மேகங்களின் மறைவில் சூரியன் ஒளிந்து கொண்டு கண் சிமிட்டினான். போட்டோக்கள் எடுத்த பிறகு கடை வீதியில் நடந்த போது, நண்பர்கள்இரண்டு பேர், மற்றும் நான், Foot massage செல்ல முடிவெடுத்து பாதி வழியில் திரும்பி, மசாஜ் பார்லருக்குச் சென்றோம். ஆளுக்கு அரை மணி நேரம், இரண்டு ஆண்கள் மசாஜ் செய்தனர். நன்றாகவே இருந்தது அன்றிரவு உணவுக்குப் பிறகு நல்ல தூக்கம், கால்களை வெந்நீரில் கழுவிய பிறகு.
மறுநாள் காலை ஹோம் ஸ்டேயிலிருந்து அறைகள் காலி் செய்து, சிற்றுண்டி முடித்து, ஜடாயு பார்க்குக்குப் பயணம். ஒன்பதரைக்கு உள்ளே அனுமதித்தனர். நான் கேபிள் காரில் செல்லவில்லை. நணபர்கள் மட்டும் பயணித்து, பார்வையிட்டு வந்தனர்.
காரின் அருகில் அமர்ந்து அவ்வூரை இரசித்துக் கொண்டுருந்தேன்.
அங்கிருந்து புறப்பட்டு இராஜா இரவி வர்மாவின் ஓவியக் கண்காட்சி, திருவனந்தபுரம் மியூசியம் மற்றும் ஜூவின் இடையே இருந்தது. நுழைவுச் சீட்டு பெற்று, உள்ளே நுழைந்த போது அழகான உயிரோவியங்கள் வெவ்வேறு காலகட்.டத்தில் வரையப்பட்டவை.
மற்ற சிலரின் ஓவியங்களும் பக்கத்து அறையில் பார்வையிட்ட பின் மதிய உணவு இடைவேளை. ஓட்டலில் இருந்து அரை கிமீ் தூரத்தில் உள்ள பத்மநாபபுரம் வடக்கு வாசலுக்குச் சென்று, வேட்டிக்கு மாறி, வெற்று மார்புடன், எங்கள் குழு நண்பரின் தொடர்புள்ள அதிகாரி மூலமாக, கோயிலுக்குள் சென்று, உதவியாளர் ஒருவரின், அனந்த சயன பத்மநாபரின் கால் முதல் தலை வரையிலான விளக்கம் கேட்டு, மூன்று கதவுகளில் கடவுளை எப்படி தரிசிக்க வேண்டுமென்ற தகவலும் தெரிந்து, சன்னிதானத்திற்குள் நுழைந்து, சாமி தரிசனம் முடித்து வெளி வந்து, கன்யாகுமரி நோக்கிப் பயணமானோம். ஓம் ஸடேவில் தங்கி மறுநாள் எட்டு எட்டரை ஸ்லாட்டில் படகில் விவேகானந்தா பாறைக்குச் செல்ல பயணச்சீட்டை ஆன் லைனில் புக் செய்து உறங்கச் சென்றோம்.
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 8/10 & 9/10/25)
இயற்கை அழகை இரசிப்பதும், நண்பர்களுடன் இத்தகைய இடங்களுக்குச் செல்வதும், சிறு விவாதங்கள் செய்வதும். தங்குமிடங்களின் வசதிகள் வேறுபடுவதும், இவை யாவும் பயணங்களின் கூடவே வருபவை. திட்டமிடல், சகிப்புத் தன்மை, வளைந்து கொடுத்தல் இவைகளும் தேவை.
பயணம் தொடர்ந்தது, கொச்சியிலிருந்து புறப்பட்டு மூணார் நோக்கிப் பயணம். மலை மேலே ஏற ஆரம்பித்து சில மணி்நேரம் கழித்து, சீயபாரா என்ற இடத்தில் அருவி அழகாய்க் கொட்டிய படி இருந்தது. காரை நிறுத்தி பல் வேறு கோணங்களில் மொபைல் கேமராவில் கிளிக்கி, புறப்பட்டு வளைவுச் சாலைகளைக் கடந்து மேலேறிய போது, தேயிலைத் தோட்டங்கள் வரிசையாகத் தோன்ற ஆரம்பித்தன, மூணாரின் நுழை வாயில் போல. ஓரிடத்தில் நிறுத்தி தேயிலைத் தோட்டத்தின் பின்னணியோடு காட்சிகள் பதிவிடப்பட்டன.
ஹர்ஷாவின் வற்புறுத்தலில் மூலிகைத் தோட்டம் ஒன்றில் நுழைந்தோம். தோட்டத்தை ஒவ்வொரு செடியாக விளக்கிய படி, பெண்மணி குகை போன்ற வடிவிலிருந்த , செயற்கை மலைப் பாதையில் அழைத்துச் சென்றார். உடம்பில் உள்ள அத்தனை வியாதிகளும் போக்க மருந்து வகைகள் அங்குள்ள செடிகள், மரங்கள், வேர்களில் இருந்தன. சில ஆயிரங்கள் செலவு செய்தால் போதும். எனக்கென்னமோ நாட்டு மருந்துகளின் விலை மதிப்பு எப்போதும் அதிகமாகவே தோன்றியது. இருந்தும் மருந்தொன்றை நானும் நண்பரும் வாங்கிக் கொண்டு, Echo point நோக்கிப் பயணித்தோம். பெரிய ஏரி ஒன்று மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இருந்தது. எக்கோ அவ்வளவாக வரவில்லை. காட்சிப் பதிவுகள் மீண்டும்.
அங்கிருந்து புறப்பட்டு மதிய உணவை முடித்து, ஹோம் ஸ்டே நோக்கி, காடுகளின் ஊடே பயணித்து, வெகு நேரம் கழித்து, பசுமையான சூழலில் காட்டு கிராமத்தில் அழகிய வீடு். எதிரே மலைக் குன்று. தம்பதியர் சுனிலும் அவரது மனைவியும் சுவையான இரவு உணவு மற்றும் காலையில் இட்லி சுடச்சுட. இரவு சிறிது நேரம் சீட்டாட்டம், வெளியே சோவென்று் மழை.
சிற்றுண்டிக்குப் பிறகு பயணம் வாகமான் நோக்கி. சுமார் நான்கு மணி் நேரப் பயணத்தில் , இடையில் பள்ளத்தாக்கு ஒன்றில் நிறுத்தி போட்டோக்களுடன் ஐஸ்கிரீமும் சேர்ந்தது. வாகமான் Glass Bridge நோக்கிப் பயணித்த போது, சுற்றுலாப் பேருந்துகளின் அணிவகுப்பில் சிறுவர், சிறுமியர் கூட்டம். நல்ல வேளை Glass bridge நாங்கள் சென்ற போது கூட்டம் இல்லை. அதன்மீது நடக்கிற போது, பயம் மேலோங்குகிறது. எல்லா பக்கமும் காப்பு இருந்தும், காற்றின் வேகமும் மனப்பட படப்பும் அடங்குவதில்லை. தனியாக குழுவாக போட்டோக்கள் எடுத்த போது உதவியாளர் ஒருவர், நம்மை கவனித்த படி இருந்தார். சிறு சிறு குழுக்களாக மட்டுமே அனுமதித்தனர். தொங்கு பாலம் போன்று கீழே பள்ளத்தாக்கு. சுற்றிலும் மலைகள, மிக அழகான தோற்றம்.
மதிய உணவை Friends Restaurant ல் முடித்து ஆலப்புழா நோக்கிப் பயணித்த போது மழை வேகமெடுத்தது. மலைப் பாதையில் மூடு பனி, மழை மாறி மாறி வரும் போது பார்க்க அழகானாலும், கார் ஓட்டுவது கடினம்.
மூன்று மணி் நேரப் பயண முடிவில் Back waters கரையில் ஹோம் ஸ்டே அடைந்த போது, இரவு நெருங்கி இருந்தது. சிறிது நேர இளைப்பாறலுக்குப் பிறகு இரவு உணவு அருகில் உள்ள சரவணபவனில். மறுநாள் ஒன்பது மணியளவில் சிக்காரா போட் பயணம் என்ற முடிவில் உறங்கச் சென்றோம்.
தினமும் பயண நேரமே பல மணி்நேரம் விழுங்குவது மட்டுமல்ல, உடலும் அசதி அடைகிறது என்பதால், வருங்கால பயணங்களை ஓரிரு இடங்கள், குறைந்த பயணம் இவைகளோடு திட்டமிடலாம் என முடிவு செய்யப்பட்டது.
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 6/10 & 7/10/25)
திட்டமிட்ட படி காலை ஏழு மணிக்கு முன்னதாகவே கிளம்பி, காலையுணவை முடித்து, கொச்சி் நோக்கிப் பயணம். கூகுள் எட்டு மணி நேரப் பயணம் என்று சொன்னாலும், அச்சாலையில் சமீபத்தில் பயணித்தவர்கள், சாலை பழுது பார்த்தல், மேம்பால வேலைகள், மதிய உணவு இவற்றால் ஒன்பது மணி நேரம் ஆகுமென்று கூறினர்.
நெடுஞ்சாலை, மதிய உணவு கடந்து, Pearl house ஹோம் ஸ்டே அடைய மாலை நான்கு மணிக்கு மேலே ஆனது. பால்சன் வீட்டைச் சுற்றிக் காட்டி, மிலிடரி போன்ற கட்டுப்பாடுகள், டிரைவர் தங்க அனுமதி இல்லை என்ற நிபந்தனைகளோடு வீட்டை ஒப்படைத்தார். அனைத்து வசதிகள், வேண்டிய பொருட்கள் அனைத்தும் மிக வசதியான வீடு.
மாலை ஆறரைக்குக் கிளம்பி, மெரீன் டிரைவ் என்ற கடற்கரையோரம் சென்று, படகுச் சவாரிக்கான டிக்கெட் வாங்கி, உள்ளே நுழைந்து, மூன்றாவது படகில் தாவி ஏறிப் புறப்பட்ட போது சுற்றிலும் விளக்கொளியில் மின்னியது. வானின் நிலவு கடல் நீரில் பிரதிபலித்து அழகூட்டியது. படகு கார்கோ கப்பல்களில் கண்டெய்னர் ஏற்றுவதைப் பார்க்க வசதியாக அருகில் சென்று வட்டமடித்துத் திரும்பியது.
இரவு உணவு வெளியே முடித்து அறைக்குத் திரும்பி மறுநாள் ஏழு மணிக்கே, அதிரப்பள்ளி போக முடிவெடுத்து, உறங்கப் போனோம். காலை 6 45 க்கே கிளம்பி போகும் வழியில், காலைச் சிற்றுண்டி முடித்து, அதிரப் பள்ளி நுழைவாயிலை அடைந்த போது பேருந்து ஒன்றும் வர அதிலிருந்த அனைவரும் அருவி கொட்டும் கீழ்ப்பகுதிக்கு நடக்க ஆரம்பித்த போது நானும் நண்பர் சுப்ரமணியும் கடினப் பாதையில் இறங்க ஆரம்பித்தோம். இறங்க முடியாது என்று நினைத்த இருவரும் இறங்கியது சாதனை போன்றானது. அடுத்தது என்ன வெவ வேறு கோணங்களில் புகைப்படங்கள். மேலேறி வரும்போது பல இடங்களில் ஓய்வெடுத்து, வழியில் லைம் ஜூசும் குடித்து மேலேறிய போது உடம்பின் சக்தி முழுதும் கரைந்து போனது போல் தோன்றியது.
மாற்றுத் திறனாளி விற்றுக் கொண்டிருந்த லாட்டரி டிக்கட்டில் இரண்டை (இதற்கு ஒரு தனிக் கதையை பிறகு சொல்கிறேன்) வாங்கிக் கொண்டு, அடுத்து யானை பயிற்சி முகாமுக்கு விஜயம். மான் வகைகள் முதலில் பார்த்த பிறகு யானைகள் வயது வாரியாக, 21 முதல் 63 வரை, பெயரிடப்பட்ட ஆணும் பெண்ணும். தந்தம் ஒன்றுக்கு மட்டும் பெரியதாய்.
மதிய உணவுக்குப் பிறகு நண்பர் சுப்ரமணியன் உடல் நலன் பாதிக்கப் பட்டதால், வீட்டில் இறக்கிவிட்டு, Fort kochiக்கு போக, வைபின் என்ற மெட்ரோ நிலையம் சென்று, கார்கோ Ferryக்கு பதில் எலக்டரிக் வாட்டர் மெட்ரோவில் தவறுதலாக ஏறி, ஹை கோர்ட் சென்று திரும்பி ஃபோர்ட் கொச்சி சேர்வதற்குள் சன் செட் ஆகி வெகுநேரமாய்ப் போனது. இது ஒரு இடம் தெரியாத குழப்பத்தின் விளைவு என்பது பின்பே புரிந்த போது , இதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு, இரவு உணவு முடித்து, மறு நாள் மீண்டும் வேறொரு பயணம் செய்யத் தயாரானோம்.
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 05/10/2025)
முதல் நாளில் திட்டமிட்டபடி முதலில் Glass Bridge போவதென முடிவானது, எட்டரைக்கு. காலைச் சிற்றுண்டி முடித்து, 34 கிமீ தொலைவில் உள்ள அவ்விடத்திற்குச் சுமார் எட்டு கிமீ முன்பே காரில் செல்லப்பாதை இல்லாததால், ஜீப் ஒன்றைப் பேசிய பிறகு, பஷீர் ஓட்ட ஆரம்பித்தார்.
போகும் வழியெங்கும் விவரித்த படியே வந்தார். Land Slide ஆன இடம், கோழிக்கோடு பெங்களூர் போக மலையைக் குடைந்து Tunnel என வயநாட்டின் வளர்ச்சி பற்றி. நேராக Glass bridge அருகிலே சென்று நிறுத்தினார் எங்கள் அனைவரின் வயது நிமித்தம்.
கூட்டம் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை, ஒரு சிலரே. காலணிகளை விட்டு Glass bridge மேலே நடந்து சென்று, பல வித கோணங்களில் போட்டோக்கள் கிளிக்கி, எங்களில் இருவர் மட்டும் உயரே வியூ பாயிண்ட் டவரில் ஏறிப் பார்த்துத் திரும்பினர். மலையேற்றப் பாதை பாதி தூரம் கொழுக்கு மலை போன்றே, பெரிய கற்கள் நிரப்பப் பட்டு, உடல் குலுங்கியது. திரும்ப வரும் போது ஜீப்களின் அணிவகுப்பு பெரியதாய். நல்ல வேளை சீக்கிரம் வந்ததால் கூட்டத்திலிருந்து தப்பித்தோம்.
அடுத்ததாக செம்பரா மலையுச்சிப் பாதை. மலை ஏறும் ஒற்றையடிப் பாதை ஏறுவதற்கு நூறு மீட்டர் முன்பு வரை அனுமதி உண்டு. மலை உச்சி போக வேண்டுமெனில், ஏறுவதற்கு உடல் தெம்பும், காலை ஏழு மணிக்கு வந்தால், முதலில் வரும் 88 பேருக்கு மட்டும் அனுமதிச்சீட்டு. மேலே ஏற மூன்றரை மணியளவு, திரும்புவதற்கான நேர இடைவெளி, குறுகலான பாதை இதனைக் கணக்கில் கொண்டு கணக்கிடப் படுவதாக தகவல்.
மிக அழகான தோற்றம் அடிவாரத்தில் இருந்து, பள்ளத்தாக்கு, உச்சி முகப்பு முதலானவை. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, பூக்கோட் ஏரி, மீண்டும் 24 கிமீ பயணம். ஏரி அவ்வளவு பெரியது இல்லையெனினும், போட்டிங் செல்ல கூட்டம், ஞாயிற்றுக் கிழமை ஆதலால் . பாணாசுர டேம் அங்கிருந்து 13 கிமீ, முந்தைய நாள் கரப்புழா டேம் பார்த்ததால் அங்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்து, வரும் வழியில், இந்தியா கேட் உணவகத்தில் மதிய உணவு முடித்து, திரும்ப ஹோம் ஸ்டே போகத் திரும்பிய போது ஐவர் குழுவின் இளயவர்களான 66 வயது பிரபாகரும், 61 வயது கோபாலும் எடக்கல் கேவ்ஸ் போகிறோம் உங்களை இறக்கி விட்டு எனச் சொன்னபோது வீராப்பாய் சுப்ரமணி்்நாங்களும் வருகிறோம் எனச் சொல்ல, அனைவரும் எடக்கல் 32 கிமீ பயணித்த போது கூகுள் மேப் சேரும் நேரம் 3 46 என்றது. குகை அனுமதி நான்கு மணிக்குள் . இடத்தை அடைந்த போது பத்து நிமிடம் இருந்தது. நுழை வாயிலில் இருந்தே பாதை செங்குத்தாக ஆரம்பித்தது. கால்களின் வலிமை, சாப்பாடு முடித்து சில நிமிடங்களே ஆனது எல்லாம் சேர்ந்ததால், என்னுடன் சேர்த்து மூன்று பேர் மேலே வரவில்லை எனக் கூறி விட்டோம். அந்த இரண்டு இளைஞர்கள் சென்று திரும்ப ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. போட்டோக்கள் மிக அழகாய் இருந்தன. நாங்கள் போயிருந்தாலும் ஏறி இருக்க முடியாதென உறுதி்ப் படுத்தினர். தேநீர் அருந்தி புறப்பட்டு, வீட்டை அடைந்த போது, இருட்டத் தொடங்கியது.
மறுநாள் எட்டு் மணிக்கே புறப்படலாம், கூகுள் மேப் எட்டு மணி்நேரப் பயணம், உணவு இடை வேளை இவை சேர்த்து ஒன்பது மணி் நேரம் ஆகலாம் , வழியெங்கும் நெடுஞ்சாலை விரிவாக்கம், பிரிட்ஜ் கட்டுவதென இருப்பதால். இரவு உணவு அங்கேயே சமைக்க் ஆர்டர் செய்திருந்த படியால் கடலையைக் கொறித்துக் கொண்டே மூன்று் பேர் மட்டும் ஆடி , சாப்பிட்டுத் தொடர்ந்து, நான் முதலில் வெளியேற, நேற்றைய எனது வெற்றி சமனாக்கப. பட்டது, யாருக்கும் நட்டமின்றி. இரண்டு நாட்களாக தூக்கம் சரியில்லை என்பதால் தொடரை எழுதாமலே உறங்கப் போனேன் .
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
(04/10/25)
சில வாரங்களுக்கு முன்னால் முடிவெடுத்தபடி கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலாவின் முதல் நாள். நண்பர்கள் ( Punch Pandavas) , ஒருவர் வர இயலவில்லை, கர்ணனுடன் சேர்ந்து அறுவர் அல்லவா ?. காலை 9 மணிக்குப் புறப்பட்டு, காலையுணவுக்குப் பின் Nice Road பிடித்து, பத்தே நிமிடங்களில், எக்ஸ்பிரஸ் வாயில் ஏறி, இன்னோவா கார், டிரைவர் ஹர்ஷாவின் லாவகமான ஓட்டத்தில் வேகமெடுத்தது.
மைசூர் இன்னும் தசரா ஹேங ஓவரிலிருந்து விடுபடவில்லை என்பது மணிப்பால் மருத்துவமனை சிக்னலில் நின்ற போதே தெரிந்தது. இடது பக்கச்சாலையில் திரும்பி நஞ்சன்கூடு வழியாக, குண்டுல் பேட்டில் நிறுத்தி தேநீர் அருந்திய பிறகு, வலது புறம் வயநாடு சாலையில் திரும்பி, பந்திபூர் வனச்சாலையைத் தொட்ட போது, மான் கூட்டமாவது தென்படும் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டே கேரள எல்லையைத் தொட்டபோது, குரங்குகள் தவிர விலங்குகள் எதுவும் தென்பட வில்லை. மழைக் காலமாதலால் காடு மட்டும் பசுமையாய் இருந்தது.
நான்கரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சுல்தான் பத்தேரியைக் கடந்து, முன்பே புக் செய்திருந்த ஹோம் ஸ்டே அடைந்த போது, எதிர்பார்த்ததை விடவும் வீடு நான்கு படுக்கை அறையுடனும், சமையலறை முதலான அனைத்து வசதிகளுடன் அனைவருக்கும் பிடித்திருந்தது. லக்கேஜ்களை இறக்கி வைத்து, அருகிலுள்ள ரெஸ்டாரெண்டில் மதிய உணவை முடித்து, கரப்புழா டேம் நோக்கிப் பயணித்தோம். சுமார் எட்டு கிமீ தொலைவில் இருந்த அப்பூங்கா, சிறுவர் விளையாட்டுகளுடன், மிக அழகான தோற்றத்துடன் காணப்பட்டது.
நுழைவுச் சீட்டுகள் பெற்று உள்ளே நுழைந்த போது , சுற்றிலும் பசுமை சூழ்ந்த மலைகளுடனும், பெரிய ஏரி போன்ற நீர்த்தேக்கத்துடனும் மனதைக் கொள்ளை கொண்டது. சனிக்கிழமையாதலால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. வித விதமாய் போட்டோக்கள் எடுத்த பிறகு , புறப்பட்டு வீடு சேர்ந்து முன்பே ஆர்டர் செய்த இரவு உணவு வரும் வரை சீட்டாட்டம், உணவு இடைவேளை, மீண்டும் சீட்டாட்ட தொடர்ச்சி, மறுநாள் செல்ல வேண்டிய இடங்கள் பற்றிய ஆலோசனை முடிந்து, அவரவர் அறைக்குச் சென்று, பயணக் களைப்பில் உறங்கச் சென்றோம்,மிக நீண்ட பயணத்தின் முதல் நாளின் முடிவில்
ஓவியம் ஆகிய நாட்கள்
ஆண்டு பலவாயினும் நினைவுகள் விடுத்து
மீண்டு வருதல் எளிதல்ல உண்மையே
கண்டு கொண்டேன் கனவில் மிதந்தேன்
நண்டு வாழுமிடம் வரப்போர துளைகளிலே
பெண்டு அவளோ உள்ள ஆழத்திலே
அன்றொரு நாள் அவளின் கடிதம்
அருகினிலே பேனா சுமந்து நின்றது
மெல்லத் திறந்த கதவில் கண்கள்
சொல்லித் தெரிவது இல்லை காதல்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
அடுத்தது கதவு மூடிய சத்தம்
காவியம் ஒன்று பிறந்தது அன்று
ஓவியம் ஆகிய நாட்கள் பின்னாளில்
நிழலாய் அவளும் நிஜமாய் கடிதங்களும்
நினைவினின்று மீண்டு வருதல் எளிதல்ல
ஆண்டுகள் மாறின ஆயிரம் நிகழ்வுகள்
தோண்டிய கிணற்றில் ஊற்று நீர்போன்றே
சுரக்கும் நீராய் தொடர்ந்து ஊறிடும்
சுற்றம் உறவு எத்தனை வரினும்
முற்றாய் இதற்கு புள்ளிகள் இல்லை
முதல் காதலுக்கு முற்றும் இல்லை
இயற்கை கொஞ்சும்
வானில் சுற்றியே வலம் வரும் மின்மினி
வாசம் செய்யுது காற்றில் கடலின் கரையில்
ஓடிய இடம் எங்கும் இயற்கை கொஞ்சும்
ஓயாது பாயும் நதியின் வேகம் கொண்டு
மலைகள் மீதும் சிலபோது நடனம் ஆடிடும்
சிலைகள் மேடையில் நாட்டியம் ஆடுதல் கனவினில்
விந்தைகள் புரிதல் தந்திரம் அல்ல மெய்யே
வியக்க வைக்கும் காட்சிகள் தோன்றி மறையும்
காரணம் இன்றிச் சிரிக்கும் கண் இமைக்கும்
வேடிக்கை இல்லை வேள்வித் தீயாய் எரியும்
வாடிக்கை அதனால் வண்ணம் தீட்டிய சொற்கள்
பாடித் திரியும் பறவை இதுவோ ஐயமே
சோடிப் புறாவைத் தேடி காடு மேடெங்கும்
காதலின் ஏட்டினில் வார்த்தைகள் கொட்டி கவிதையாகும்
ஆதலின் தோல்வியோ வெற்றியோ சரித்திரம் உண்டு
மீண்டு வருதல் எளிதல்ல
வாழ்வின் சக்கரச் சுழற்சியில் பற்பல நிகழ்வுகள்
சூழ்நிலை மாறுபடும் காட்சிகள் மாறும் நாடகம்போல்
சூறாவளி போன்றும் தென்றல் போன்றும் மாறிமாறி
ஆறாத இரணமாய் நினைவுகள் மறத்தல் எளிதல்ல
காதலிலே விழுந்து கனவாய் மாறிய உள்ளங்கள்
கணவனைப் பிரிந்த துணைவியர் உள்ளக் கவலை
போரிலே வீரமகன் துறந்த தாயின் உள்ளம்
கல்லூரிப் படிப்பைத் தொடர முடியா மாணவர்
தேர்விலே தோல்வி யுற்று நொந்த மனது
ஓட்டப் பந்தய வீரனின் கடைசி நிமிடம்
அந்நியப் படை எடுப்பில் வெற்றி தோல்வி
ஓட்டுப் போட்ட தலைவனின் தப்பான செயல்கள்
ஆயிரம் உண்டிங்கு உவமைகள் எடுத்துச் சொல்ல
மீண்டு வருதல் எளிதல்ல மனக் காயத்தினின்று
காலச் சக்கர சுழற்சியே மருந்தாய் பலநேரம்
என்னைத் துறந்து சென்ற அவள் நினைவுகள்
தன்னைத் துறந்து உயிர் துறந்த அன்னை
வளைந்த பாதையாய் வாழ்வின் எதிர்பாரா திருப்பங்கள்
வளையாத மூங்கிலாய் மாறிப் போன உள்ளங்கள்
தொலைந்த வாழ்க்கை திரும்புமா என்ற ஏக்கம்
வலையில் சிக்கிய மீனாய் துடிக்கும் உயிர்கள்
போகும் பாதை திசையற்றுப் போகுமோ அச்சம்
போகாத ஊருக்கு வழி தேடும் வாலிபம்
ஆகாது என்று அறிந்தும் ஆசையில் உள்ளம்
மீண்டு வருதல் எளிதல்ல தொடர்கதை வாழ்க்கை
பெங்களூரு காலைக்காட்சி
காலை ஆறே காலுக்கு மடிவாளா எனப்படும் பெங்களூருவின் நுழைவாயில் வண்ண மயமான பூக்களால் களை கட்டியிருந்தது. நண்பரின் மருமகன் திருமணம் ஒன்றுக்குப் போக வேண்டி, முன்பதிவு செய்த பேருந்து 7 மணிக்கு மேலே வருமென்பதால்,வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
சுறுசுறுப்பான காலை வேளையில் பல தரப்பட்ட மக்களும், உதிரிப் பூக்கள், கட்டிய பூ, பூமாலை, வெற்றிலை என வாங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர். மஞ்சள்,வெள்ளைநிற சாமந்தியும் , சிவப்பு நிற ரோஜாவும் உறவாடிய கட்டிய பூ முழம் போடப்பட்டு பைகளில் உள்நுழைந்தன. ஆட்டோக்கள், கார்கள், தள்ளு வண்டிகள் அணி வகுப்பை , போக்குவரத்துக் காவலர் விரட்டியபடி இருந்தார்.
அரசுப் பேருந்துகள், நீண்ட தூரப் பயண பேருந்துகள் விரைந்தபடி இருந்தன. நாளை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் இங்குமங்குமாக சூட்கேஸ், கைப்பை சகிதமாக பரவிக் கிடந்தனர். சாலையோரம் கடை விரித்திருந்த பெண்மணி தன்னை மறைத்தபடி நின்ற தள்ளுவண்டி மூதாட்டியை முன்னே போகச் சொல்லி விரட்டினார்.
பண்டிகை நாட்களின் பரபரப்புக் காட்சி கண் முன்னே, ஓடிக் கொண்டிருக்க நான் பயணிக்க வேண்டிய பேருந்தின் நடத்துனர் கை பேசியில் அழைத்து சற்று முன்னேயுள்ள RKT Travels வாசலில் நிற்குமாறு பணித்தார். சுமார் 20 நிமிட தாமதத்தில் பேருந்து வந்து இருக்கை 2 C ல் அமர்ந்து முன்னேயுள்ள நெடுஞ்சாலையும், எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலமும் கண்ணில் பட , பேருந்து திருச்சி நோக்கி வேகமெடுத்தது.
நாய்க்கனேர
எங்க ஊரில் வாரம் ஒருமுறை சந்தைக்கு சேப்பக் கிழங்கு, முள் கத்தரிக்காயை சுமந்து ஏழு கிமீ நடந்தே சென்று வேலூர் பஜார்லே அதை விற்று, அரிசி, பருப்பு , எணணெய் முதலான மளிகை வாங்கி வருவர்.
நெல் அறுவடை நேரங்களில் மூட்டை மூட்டையாய் நெல் ஆலைகளுக்குச் செல்லும். பெரிய பானைகளில் நெல் விதைகளுக்காகவும், அரிசிக்காகவும் வைத்திருப்பர். பெரும் பாலும் கேழ்வரகுக் களி , கூழ் இவையே உணவு. புளிய மரத்துத் தளிர் பல நாட்களில் களிக்கு தொட்டுக்க. எப்போதாவது கத்தரிக்காயும் கருவாடும்.
டவுனிலிருந்து போலீஸ்காரன் பையன் நான் போகும் போது மட்டும் அரிசிச் சோறு, தோசை உண்டு.
ஊர் முச்சூடும் உறவினர் ஆதலால், பல வீட்டில் அழைப்பு. தேங்காய் புண்ணாக்கு, வெல்லம் அக்கா வீட்டில் ஒடுகத்தூரில். கிராமத்து மலையேறும் பாதையில் ஓடை உண்டு நீரற்று. அதன் கரையில் ஈச்ச மரங்கள். பழுக்கும் வரை யாரும் காத்திருப்பதில்லை. மலை உச்சி வரை எப்போதாவது ஏறினால் மிகப் பெருமை. ஆடு மேய்க்க மலை ஏறிச் செல்லும் இளைஞர் இளைஞி இடையே மலரும் காதல் பெரும்பாலும் தோல்வியே.
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் சாராயம் விற்பது,மாலை வேலையில் வரும் மைனர்களுக்கு. ஓரிரு சமயம் அப்பாவும் போவார், அவருடன் செல்லும் போது உடைத்த கடலை பூண்டு மிளகாய் உப்பு கலந்த கலவை ருசியாக எனக்கு. ஒருவித பூச்சியை வறுத்து இதனுடன் சேர்த்தும் உண்பர்.
நாய்க்கனேரி இப்போது மாறி விட்டது. இளைஞர்கள் படித்தவர்களாக மாறி விட்டனர். ஒரு சிலரே பயிர்த்தொழில். குல தெய்வ வழிபாட்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வதோடு நின்று போனது தொடர்பு.
காரைக்குடி பயணம்
(2/9/25 to 6/9/25)
காலை உணவு வழக்கம் போல வகை வகையாய். 9 15 மணியளவில் அனைவரிடமும் விடை பெற்று மீண்டும் நமது வேனில் அமர்ந்த போது, மனது கனமாய்த் தான் இருந்தது.
வேன் திண்டுக்கல்லை நோக்கிப் பயணித்து வேகமெடுத்து, வழியில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, பழனி மலைத் தொடர் அடிவாரத்தை அடைந்து, மலைப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. தூரம் 15 கிமீ ஆனாலும் குறுகலான மலைப் பாதையில் இரண்டு வண்டிகள் வந்த போதெல்லாம், ஓட்டுநர் சிரமப் பட வேண்டியிருந்தது. ஒரு பக்கம் மலைச் சரிவின் பாறைகளும், மறுபுறம் பள்ளத்தாக்கும் என.
காட்டுப் பாதையில் ராஜக்காடு பையன் வழிகாட்ட வேன் சரிவில் ஏற ஆரம்பித்து, குறுகலான பாதையில், எஸ்டேட்டை அடைந்த போது எதிரே மிகப்.்பழமையான ஒரு வீட்டின் தோற்றம் விரிந்தது. எட்டே அறைகள் இருந்தாலும் பழமை மாறாத பாரம்பரியத்தை எங்கும் காணமுடிந்தது.
காப்பித் தோட்டத்தின் நடுவே பிரமாண்டமாய் இருந்தது. பலவித தாவரங்கள் காய்கறி, பழத் தோட்டமும் கூட. மழை விட்டு விட்டுப் பெய்து அறைகளுக்குள்ளே இருக்கச் செய்தது. மழை நீர் வீணாகாமல் அங்கஙகே தொட்டி போன்ற அமைப்பில் நீர. சேகரிக்கப்பட்டு, அதன் நடுவே பசுமையான செடி ஒன்றும். எனது பாட.டியின் பழங்கால வீட்டை நினைவூட்டியது. முற்றம் நடுவே சுற்றி தூண்களுடன் திண்ணை போன்ற அமைப்பு, அறையின் பினபுறம் மரத்தால் ஆன கதவைத் திறந்தால் பசுமையான தோட்டம்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சுடச்சுட ஆர்கனிக் மதிய உணவு, அணைத்தும் அங்கேயே தயாரிக்கப்பட்ட பங்களாவிலிருந்து மாறுபட்டு அளவான வகையில் உணவுப் பண்டங்கள். ஹவுஸி, சீட்டுக்கட்டு என சிறிது் நேரம் விளையாடி, ஓய்வெடுத்து, இரவு உணவும் முடித்த பின்னர், மறு்நாள் காலை நீலேஷ் கைடுடன் ஒருவர் மட்டும் கார்டன் வாக் சென்று, காய்கறி, பழத்தோட்ட புகைப் படங்கள் எடுத்து வந்தனர்.
காலை உணவு சுடச்சுட இட்லி, தோசை, சட்னி, சாம்பார், பிரெட் என முடித்து , அனைவரும் தயாராகி , வேனில் ஏறிய போது, மணி ஒன்பதைக் கடந்து இருந்தது. போகும் வழியில் பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளம் கொள்ளை கொண்டது. மதுரை நோக்கிப் பயணம். வழியில் தேநீர் இடைவேளைக்கு நிறுத்திய போது, இடம் அழகான மலைத்தொடரின் பின்னணியில், ஐ லவ் டெம்பிள் சிட்டி என்ற வாசகத்துடன்.
பயணம் முடிவுற்று நானகு் பேர் மட்டும் விமான நிலையத்தில், விடை்பெற்றுச் செல்ல, நான்கு பேர் இரவு தங்கி, மறுநாள் பயணிக்க, நாங்கள் இருவரும், சில மணி நேரங்கள் நீலேஷ் தங்கியிருந்த அறையில் ஓய்வெடுத்து, மதுரை பெங்களூர் ட்ரெயினில் இரவு எட்டு் மணிக்கு், ஏறி அமர்ந்து பயணிக்க ஆரம்பித்தோம். அடுத்த பயணம் எங்கே செல்லலாம் என்ற விவாதம் தொடர்ந்தது.
( முற்றும்)
காரைக்குடி பயணம்
காரைக்குடி பயணம் (2/9/25 to 6/9/25)
காரைக்குடி பங்களாவில் மூன்றாம் நாள். வழக்கம் போல உபசரிப்பு, பல் வகை சிற்றுண்டிகள் என வயிற்றை நிரப்பிய போது, நண்பர் பிரகாஷின் கமெண்ட், என்னுடைய மாமனார் வீட்டில் கூட இப்படி கவனித்ததில்லை என்பது.
முதலில் கோவிலூரில் உள்ள கொற்றலீஸ்வர் சிவன் கோயில். கோயிலில் உள்ள தூண்கள் அனைத்திலும் செதுக் கப்பட்ட சிற்பங்கள், வரிசையான தூண்களில் symmetrical இடது வலது யாளிகள், கண்ணைக் கவர்ந்தன. எதிரே குளத்தில் நீர் நிரம்பி சிலர் குளித்துக் கொண்டிருந்தனர. நடுவே பெரிய மண்டபம் அழகாய் வீற்றிருந்தது.
கோயிலின் எதிரே அருங்காட்சியகம், அதனருகே கைவினைப் பயிற்சிக் கூடம் இரண்டுமிருந்தது. மியூசியத்தில் செட்டி நாட்டினர் பயன்படுத்திய பொருட்கள், அவரது சரித்திரம், ருக்மணி அருண்டேலின் ( பரத நாட்டியப் புகழ்) வாழ்க்கைப் புகைப்படங்கள், கற் சிலைகள், பலவகை குடும்ப விழாக்கள் செய்முறைகள் என ஒரு அகராதி போல் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது.
அடுத்தது ஆத்தங்குடி அரண்மனை கட்டணம் 50₹ செலுத்தி உள்ளே சென்ற போது, கதவு, விசாலமான திண்ணை, திருமண விழாக்கள் போன்றவற்றிற்கு பெரிய கூடம், விருந்து பரிமாறும் கூடம் என பிரமாண்டமாய் வகை வகையான டைல்ஸ், மர வேலைப்பாடு, தூண்கள் அமைப்பு, பெல்ஜியம் கண்ணாடி என அழகாய் பராமரிக்கப் பட்டு இருந்தது.
அடுத்ததாய் செட்டி நாட்டுக்கே உரித்தான தின்பண்டங்கள் செய்யும் வீடு போன்ற பெண் முனைவர் சௌம்யா அவர்களின் குறுதொழில் நிறுவனத்தைப் பார்வையிட்டு, ரவா லட்டு, முறுக்கு, சீடை, தட்டை, மசாலா,சாம்பார் பொடி என அவரவர்க்குத் தேவையானவற்றை வாங்கி முடித்து, விடுதிக்குத் திரும்பி மதிய உணவை முடித்து, அறைக்குத் திரும்பினர் அனைவரும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சிலர் மட்டும் ஷாப்பிங் போக முடிவானது.
ஐந்து மணியளவில் நீச்சல் குளம் சென்ற போது ஒருவரும் இல்லை. நான் மட்டும் இறங்கி ஆசை தீர ஒரு மணி நேரம் நீச்சல் செய்து முடித்த போது நண்பர் பிரகாஷ் வந்து போட்டோ எடுத்து, அறைக்குத் திரும்பி, பங்களாவின் கடைசி இரவு உணவும் , தூக்கமும் எனக்கூறி அடுத்த நாள் பயணத்திற்குத் தயாராகினோம்.
காரைக்குடி பயணம்
(2/9/25 to 6/9/25)
காலை உணவு இரவைப் போலவே பலவித வகைகள். முடித்து பங்களாவைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். நீச்சல் குளம், பாத்திரங்கள் போன தலைமுறையில் பயன்படுத்தப் பட்டவை, பெரிய தோட்டம், வேலையாட்கள் தங்குமிடம் என பெரிதாய் விரிந்தது.
ஒன்பதே காலுக்குக் கிளம்பி முதலில் சென்றது திருமயம் கோட்டை. பாறைகள், படிகள் கடந்து உயரே பீரங்கி ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கைப்பிடி இல்லாத படிகளில் ஏறி இறங்குவது கடினமே. மிக உயரம் இல்லை எனினும் அழகாய்க் காட்சியளித்தது. இளஞ்சோடிகள் வந்த வண்ணம் இருந்தனர், தனிமை விரும்பி, கூட்டமில்லாத இடமாதலால். சிவன் மலைக் குகையில் லிங்க வடிவி்ல்.
அடுத்து திருமயம் விஷ்ணு கோயில் விஜயம். தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் இரசித்து, கைட் சொன்ன விவரங்களைக் கேட்டபடி, சயன நிலையில் முப்பத்து முக்கோடி தேவர்களோடு இருந்த விஷ்ணுவைத் தரிசித்து முடித்து அடுத்ததாக, அய்யனார் கோயில் கானாடுகாத்தானில், ஊருக்கு வெளியே காவல் தெய்வமாய், டெர்ரகோட்டா என்ற களிமண் குதிரை சிலைகள் பல நூறு, கஜா புயலில் மரமொன்று விழுந்து, சிலைகளைக் காப்பாற்றிய கதையைக் கேட்டு, போகும் வழியில் முந்திரி பாக்கெட்கள் வாங்கிக் கொண்டு , விசாலம் என்ற செட்டி நாடு அரண்மனை வீட்டில் மதிய உணவுக்கு அமர்ந்த போது, வகை வகையாய் சைவ அசைவ பதார்த்தங்கள். இப்படி சாப்பிட்டால் உடல் இன்னும் பெருத்துப் போகும் நிச்சயமாய். மிகவும் ருசியாக செட்டிநாட்டு சமையல் முறையில்.
கைட் அன்னபூரணி, செட்டி நாடு தோன்றிய கதையை விவரிக்க ஆரம்பித்தார். கடல் கடந்த வாணிகம், பூம்புகாரின் அழிவு, பாண்டிய மன்னரின் நெருக்கம், தென்கிழக்கு நாடுகளின் அரண்மனை போன்ற வீடுகளின் உருவாக்கம், கூட்டுக் குடும்பங்களின் இடப் பெயர்ச்சி, பராமரிக்க இயலாமல் சிதிலம் அடைந்த சில வீடுகள், ஓட்டல்களாக மாறிய அரண்மனை வீடுகள் என பலவற்றை தெரிவித்தார். ஆண் பெண் திருமணத்தின் போது வரதட்சிணையாக கொடுக்கப் பட்ட வீடுகள் இப்போது கேர் டேக்கர்களின் கவனிப்பில் இருக்க செட்டி நாட்டுக் குடும்பங்கள் வெவ்வேறு நகரங்களில், நாடுகளில் தஞ்சமடைந்த விவரங்கள் என தகவல்கள் அறிந்த பின், மீனாட்சி மெய்யப்பன் அரண்மனைக்குள் நுழைந்து, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கதவு, மூன்று கட்ட உள்ளமைப்பு, இரண்டு தெருக்களை இணைக்கும் அளவுக்கு பிரமாண்டம் எனினும், மெல்ல மெல்ல சிதிலமடைந்து கொண்டிருந்தது.
செட்டி நாடு அரண்மனை உள்ளே செல்ல அனுமதி இல்லாததால் ( சினிமா படப்பிடிப்புக்கு உண்டு) வெளியே இருந்தே போட்டோக்கள் எடுத்து, முன்னதாக கைத்தறி நெய்யும் வீடொன்றில் எங்கள் குழுவினர் சேலை, லுங்கி, துண்டு, போர்வை என வாங்கினர். இதற்குள் மாலை இரவுக்குள் நுழைய பறவகைள் கூடு திரும்புதல் போல் நாங்களும் ஓட்டல் பங்களாவுக்குத் திரும்பினோம். குளியல், ஓய்வுக்குப் பிறகு, இரவு உணவு நேற்றைப் போலவே மிக நீண்ட உணவுப் பட்டியல். பகலின் வெயில் தாக்கம், மலைப் படியேறல், நடந்த களைப்பு ஒன்று சேர சீக்கிரமே உறக்கம் ஆட்கொண்டது.
காரைக்குடி பயணம்
காரைக்குடி பயணம் ( 2/9/25 to 6/9/25)
பொதுவாக பயணக் கட்டுரைகள் புதிதாகப் பயணிக்கும் இடங்களைப் பற்றியே எழுதுவது வழக்கம். இம்முறை தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடிக்கு punch pandavs குழுவில் ஒருவரோடு போவதாக சில மாதங்களுக்கு முன்பாக முடிவானது.
மொத்தம் பனிரெண்டு பேர். பத்து பேர் மும்பையில் இருந்து. நாங்கள் இருவர், மதுரைக்கு ஒருநாள் முன்னதாக வந்து, ஓட்டலில் தங்கி, மீனாட்சி அம்மனை காலையில் தரிசித்து மதியம், அவர்களோடு சேர்ந்து கொள்வதாக முடிவானது.
சவுத் இண்டியன் மீல்ஸ் வரவும், ருசித்துச் சாப்பிட்டு, ஓட்டல் பங்களா என்ற காரைக்குடியின் ஹெரிடேஜ் ஓட்டலை நோக்கிப் பயணம் மீண்டும். இரண்டு மணி நேரப் பயணத்திற்குப பின் , ஓட்டலை அடைந்து, காப்பி அருந்தி, இன்று சுற்றுலா ஏதுமில்லாததால், அறை இரண்டில் ஓய்வெடுத்த பிறகு, எட்டே கால் மணிக்கு புல்வெளிக் கூட்டம்.
ஆரம்பமானது, இரவு உணவின் மிக நீண்ட பட்டியல். கார்ன் மற்றும் பாலாடையுடன் ஒரு டிஷ், ஆப்பம் மீன் குழம்பு, சிக்கன் வறுவல், ரவா தோசை கொத்துமல்லி சட்னி, முன்னதாக உருளைக் கிழங்கு சூப், முடிவாக மாம்பழப் பல்ப்புடன், வெண்ணிலா ஐஸ்கிரீம் இது நான் சாப்பிட்டது. இது போக இரவு உணவின் மெனுவை நீங்களே பாருங்கள். எனது வயிறு கெடாமல் இருக்க நீங்கள் கண்ணை மூடிக் கொள்ளுங்கள். இப்படி மூன்று நாட்கள் இங்கே சாப்பிட்ட பிறகு முப்பது நாட்கள் உடல் எடை குறைக்க நடக்க வேண்டும். இப்போது புரிந்தது எதனால் இப்பயணத்தில் இவ்வளவு அதிகமான கட்டணம் என்பது. நிச்சயமாக Value for money paid.
யாராவது இருக்கிறீர்களா ?
அவள் போகும் போது நான் பார்க்க இயலவில்லை
அவளைப் பார்த்தவர் யாராவது இருக் கிறீர்களா சொல்லுங்கள்
பல்லாண்டு ஆயிற்று கண்களை விட்டு மறைய வில்லை
பலகதை நான் சொல்லக் கூடும் சோகம் வேண்டாமே
எழுதாத காவியம் மனதில் எழுதிய கவிதைகள் உண்டு
பழுதாகித் திரும்ப பல காலம் ஆனது உண்மை
யாராவது சொல்வீர்களா தோல்வி காவியம் படைக்கும் என்று
போராடித் தோற்ற உள்ளம் போனது திசை மாறி அன்று
வாராது மீண்டும் என்பது வார்த்தை முள்ளாய் உறுத்தும்
சேராது போனது ஆனாலும் சேர்ந்தே இருப்பது என்றும்
தேடிய நேரம் நீயும் தொலை தூரம் சென்றாய்
வாடிய முகங்கள் வாழ்க்கை தொலைத்து பாதை மாறின
ஓடிய நாட்களில் நான் நினைவுகளை அசை போட்டேன்
ஓயாத கனவாய் தினமும் வந்து வந்து போனாய்
தேயாத நிலவு உண்டோ மனதில் உறைந்த காயங்கள்
வானத்து மின் மினியை தூதாய் அனுப்பி உள்ளேன்
வாடாத முகம் கண்டு நலமென வந்து சொல்ல
காலம் தான் உருண்டோடி முதுமை அணைத் தாலும்
காலன் தேடி வரும் வரையில் கவிதை தொடரும்
வேதனை இல்லை வேள்வி என்பேன் ஏற்றுக் கொள்
சாதனை இதில் ஏதும் உண்டோ சொல்ல இயலுமோ
முதல் காதல் என்பதே காவியம் போன்ற சொல்
முடிவு அதற் கில்லை தொடர் கதை நீளும்
எதிரே சில கோமாளிகள்
கோமாளிகள் நிறைந்த உலகமடா நண்பா
ஏமாளிகள் மக்கள் என்பதும் உண்மை
மயக்க நிலையில் மந்தமாய் மந்தையாய்
தயக்கம் இல்லாத பொய்யின் மடியில்
வியப்பாய் இவரின் பேச்சும் செயலும்
நயமாய்ப் பேசும் நய வஞ்சகர்
மழுங்கிய மூளை மூடச் சிந்தனை
தழுவிய பாதையோ சாக்கடை ஓட்டம்
எப்போது மாறுவர் என்பதே கவலை
தப்பான வழியில் தவறிப் போயினர்
பேசும் பேச்சில் உண்மை இல்லை
காசுக்காய் செய்யும் போக்கிரித் தனம்
பொறாமை ஒவ்வொரு கணமும் மனதில்
பொல்லாத மனிதர் இவர்கள் குழுவாய்
அடுத்தவர் வாழ்வில் நெருப்பைக் கக்குவர்
அடுத்தே இருந்து குழியும் பறிப்பர்
நல்ல பயிரின் நடுவே களைகளாய்
நச்சு கலந்த பாலின் குணமாய்
அட்டைப் பூச்சி உறியும் இரத்தமாய்
அழித்தே விடுவர் அனைவரின் வாழ்வை
கோமாளிகள் போலவே வித்தைகள் கற்றவர்
ஏமாளிகள் இல்லை ஏமாந்து விடாதீர் வன்மம் மனதில் வக்கிரம் கூடவே
ஜென்மம் ஆயிரம் எடுத்த போதிலும்
புத்தியே மாறாத நரியின் கூட்டமே
உத்தமர் வேடம் பொருந்தச் செய்வர்
சித்தம் கலங்கிடும் சினம் மேலோங்கும்
எத்தர் கூட்டம் எப்போது ஒழியும்
எத்தனை காலமோ இதனைப் பொறுப்பது
திரியில்லா தீபம்
திரியோடு தீபம் அமைதி கொள்ளட்டும்
திரியில்லா தீபம் கோபம் கொள்ளட்டும்
எரிக்க எனக்கு தீபம் வேண்டும்
திரியில்லா தீபம் உக்கிரக் கொழுந்தாய்
சாதிகள் பேசும் தலைகள் கருகிட
சாத்திரம் பேசும் பேதங்கள் பொசுக்கிட
பொய்கள் உரைக்கும் நாக்கை அழித்திட
அழிக்கும் கடவுள் நான் இப்போது
அக்னிப் பிழம்பாய் அலைந்து வருவேன்
அந்நியன் போலவே அநியாயம் தடுப்பேன்
அரசியல் காமுகர் அடுப்பில் எரிப்பேன்
மூடர்கள் கூடாரம் முற்றிலும் தீயில்
வேடங்கள் களைய வேட்டை இன்று
காற்றில் பரவி கானகத் தீபோல்
நூற்றில் மூன்றான முட்டாள் கும்பலை
ஒன்றாய் சேர்த்து எரிக்கத் தோன்றும்
ஒன்று நூறாய் பொய்கள் பேசும்
வாய்கள் யாவும் வறுக்கும் வாணலி
வாதங்கள் போலியாய் வலைதளம் பதியும்
வர்ணம் பேசும் கூட்டம் யாவும்
வளைத்து வந்து தீயை மூட்டும்
யாரடா அங்கே எழுந்திரு ஓடிடு
யாதும் எமது ஊரே மக்களே
பேதங்கள் பேசுதல் ஒழித்திடு விலக்கிடு
வேதங்கள் என்றால் வேற்றுமை தவிர்த்திடு
மனிதம் மட்டுமே மலர வழிவிடு
புனிதம் என்பதே வறுமை போக்குதல்
ஏழைகள் அற்ற சமுதாயம் மலரட்டும்
ஏய்த்தது போதும் உண்மை உயரட்டும்
திரியில்லா தீபம் தீவட்டி ஆகும்
திரிந்து எங்கும் தீமைகள் அழிக்கும்
உடன் பிறந்த உறவே
உடன் பிறந்ததோ உடன் பிறவாததோ
உறவு என்பதே உன்னதம் அன்றோ
கடன் பட்டார் நெஞ்சம் போன்றே
கலங்கும் எவ்வுறவும் என் உறவே
கண்ணடி பட்டதோ கல்லடி பட்டதோ
கண்ணாடி போன்றதே உறவுப் பிணைப்பு
உடையாத நாட்களாய் என்றும் தொடரணும்
அடையாத அன்பின் ஏக்கம் தீர்க்கும்
கள்ளங் கபடம் அற்ற உறவது
உள்ளம் திறந்து சிரித்து
மகிழும்
குதித்து ஓடும் குப்புறக் கவிழும்
குற்றம் பார்க்கா குழுவாய் மாறும்
சுற்றம் சூழ்ந்து வாழ்த்துப் பாடும்
என்னோடே வளர்ந்து நிழலாய் தொடரும்
எத்தனை நினைவுகள் எண்ணற்ற தருணங்கள்
என்வலி யாவும் தன்வலி போன்றே
என்னை அணைத்தே நடத்திச் செல்லும்
சிறுவயது முதலாய் முதிய வயதிலும்
சிதையாது என்றும் கைகோத்து நடக்கும்
படைக்கு அஞ்சாத துணிவைக் கொடுக்கும்
எடைக்கு எடையாய்த் தங்கம் தரலாம்
உறவே நட்பே உயிராய் நீயே
உடன் வருவாயா முதலாய் முடிவாய்
உடன் பிறந்த உறவே தமிழே
உடனே பயணித்து பெருமை தந்தாய்
கடன் கொடுத்த உனது மொழியில்
இடம் பிடித்தேன் பலரின் மனதில்
வடம் பிடித்து இழுத்த தேராய்
வலம் இடம் நடு வென்று
கவிதை வடிவில் கொட்டியது நீயே
கனவு உலகம் கற்பனைத் தேரில்
கடல் கடந்தும் வானிலும் ஊர்ந்தது
விடியாத இரவுகள் உனது மடியில்
விடைகள் தேடியே விடிந்து போனது
என்றோ போன ஏதோ ஒன்றை
இன்றோ நாளையோ எண்ணிப் பார்த்து
சோகம் கலந்த சொற்களில் கூட
சுகமாய் விழுந்த வரிகள் உனதே
வானம் தொட்டு பூமியில் குதித்து
வானரம் போன்ற நாட்களும் உண்டு
என்னோடே நீயும் நிழலாய் இருந்து
கன்னல் சாறாய் கவிதைகள் தருவாய்
காய் விட்டு நாளாச்சு
காய் விட்டு நாளாச்சு சந்தைக்குப் போகணுமோ
தாய் வீட்டுச் சீதனமாய் தருவதும் உண்டாமோ
சேய் பசிக்கு காயும் கனியாகிப் புசியுமோ
வாய் ருசிக்கக் காயும் சுவை ஊட்டுமோ
முற்றிய கதிரும் அறுவடை செய்யத் தயாரோ
சுற்றிய திசை எங்கும் பசுமைப் போர்வையோ
கனிந்த காயோ கடை வீதி சேருமங்கே
ஏனிந்த சொற்றொடர் ஆராய வேண்டு மன்றோ
வயது முதிர்ந்த வாலிபம் வாழ்வின் தொடக்கம்
வளைந்து நெளிந்து கரடு முரடாய் மாற்றம்
பருவ மாற்ற வட்டத்தில் ஒரு புள்ளி
உருவ மாற்றம் பூவில் தொடங்கி கனியில்
கனி இருப்ப காய் கவர்ந்தது ஏனோ
பனி நுனிப் புல்லுக்கு அழகு போல
பறிக்க நேரம் வந்து விட்டது என்றாரோ
கறிக்கு வகையாய் இருக்கும் என்ற கூற்றோ
பதமான வயதில் இதுவும் ஒன்று என்றாரோ
திருமணம் நடத்த தோதான வயது என்பதோ
எத்தனை கேள்விகள் எழுப்பி விடை காண்பது
பித்தம் பிடித்து விடும் தோழரே உதவுமின்
சத்தம் இன்றி இரகசி யமாய் உரைப்பீரா ?
நிமிர்
தலை குனிந்த நாட்கள் போயின நிமிர்
வலை வீசும் கயவர் தவிர்த்து நிமிர்
வன்மம் பேசும் மனிதரை விலகி நிமிர்
சாதி வெறியரை அறவே வெறுத்து நிமிர்
மோதிப் பார் மூடரோடு குனியாதே நிமிர்
பொய்யர் உலகில் உண்மை உரைத்து நிமிர்
பொறாமை கொள்வது தவறென்று உணர்ந்து நிமி்ர்
நிமிர் நேராக வளையாத முதுகு கொண்டு
திமிர் கொள்வது தவறில்லை நல்ல செயலில்
கவி பாடும் கவிஞர் குழுவில் நானும்
புவி எங்கும் பரந்த நிமிர் வட்டமதில்
ஞாயிறு உதயம் வாரம் ஒரு முறை
ஞாலத்துக் கவிகள் கலந்து சிறப்பிக்க மிளிரும்
என்னை ஏன் திருடினாய்
காதலன் கேட்கும் கேள்வி காதலி பார்க்கும் பார்வை
காதிலே பல காலம் கேட்ட சொல் தொடர்
திருடிய வனுக்கும் திருடப் பட்ட வளுக்கும் இடையே
வரும் சொல்லில் கொஞ்சல் தூக்க லாய் தோணும்
ஆற்று நீர் கேட்டது அருகில் உள்ள கால்வாயை
ஊற்று நீர் கேட்டது உயர்ந்த மணற் கேணியை
சிலையான பெண்ணை மலை கேட்டது ஏனோ திருடினாய்
வலையில் சிக்கிய மீனும் உயிர் நீக்கும் முன்னே
மானும் புலியிடம் இரத்தம் சிந்திய பார்வை யாலே
வானும் தாரகைக் கூட்டம் கண் சிமிட்டல் கண்டு
திருடர் கூட்டம் பெருகிப் போனது தீர்வு இல்லை
திருட்டு குற்றம் என்ற போதும் குறைவே இல்லை
அலைகள் கடலைத் திருடி கால்கள் வருடிச் சென்றன
மலைகள் மேகம் தழுவி கற்பைப் பறித்துச் சென்றன
வண்டோ மலரின் இதழைச் சுவைத்து கலவி செய்தது
பண்பு இல்லா செயல் எனச் சாடல் இயலுமோ
வழக்கு பதிய மன்றம் எங்கே உள்ளது சொல்வீரா
வழிவழி வந்த திருட்டு பலவும் நிலுவையில் இன்றும்
வாதாட வக்கீல் இல்லை வாதம் மட்டும் உண்டு
ஏதாவது செய்க இதனைத் தடுக்க இத்தனை காலமா
தொந்தி குறையும்
உறங்கும் நேரமிது கவிஞர் சொன்னார்
மறைந்த கதிரவன் காலையில் வருவான்
கறந்த பாலில் காப்பி தருவாள்
நிறைந்த நுரையொடு பித்தளைக் குவளையில்
அருந்தி முடித்து அடுத்து என்ன
அருகில் செய்தித் தாள் வாசிப்பு
அடுப்பில் சூடாய் இட்லி அடுக்கில்
குளித்து வந்து மேசையில் தட்டினில்
குனிந்து விண்டு சட்னியில் தொட்டு
சுவைத்துப் பார்த்தே சொக்கிப் போனேன்
சுட்டுத் தந்தவள் இல்லாள் தானே
இருக்காதா பின்னே இத்தனை சுவையும்
இப்படித் தின்றே கொழுத்துப் போனேன்
மருத்துவர் சொன்னார் மடமட. என்றே நடநட
மலையைப் போன்ற தொந்தி குறையும்
சொன்ன சொல்லைத் தட்ட இயலுமா
சொந்தச் செலவில் சூனியம் இதுதான்
முத்தம்
முத்த மழை ஓயவே இல்லை
சத்தம் இல்லா பல நூறு
நித்தம் வேண்டி சில நாட்கள்
சித்தம் மயங்கி சில வார்த்தை
ஓயாத முத்தம் பெற்றவர் உளரோ
காயாத வடுக்கள் உண்டோ அதனால்
அன்பும் காதலும் சேர்ந்த முத்தம்
அணைத்து உதடுகள் இணைவது சுகமே
பிணைப்பின் இலக்கணம் என்பதே அதுதானோ
நலமாய் வாழவும் முத்தம் வேண்டுமாம்
குலமகள் அவளுடன் நெருக்கம் அதனால்
காதல் கொள்வதும் காமம் கொள்வதும்
காதலன் காதலி
உறவு தொடர்வதும்
முத்தக் கதையின்
முத்திரை தானே
தத்தித் தவழும் மழலைக்கு தாயிடம்
எத்தனை வகைகள் முத்தம் என்பதில்
ஒன்று உண்மை உதடுகள் இணைய
ஒத்த மனங்கள் தேவை என்பதே
தண்ணீர்
உயிர் மூச்சு உள்ள வரை வேண்டும்
உனது ஓட்டம் நின்றால் நிற்கும் உலகம்
காற்றைப் போலவே இதயத் துடிப்பு நீயாகும்
போற்றிப் பாடிட என்றும் மறவோம் யாமும்
ஆவியாய் உயர்ந்து குளிர்ந்து உருவான மழலை
ஆனதொரு வெண் பனிக் கட்டி உருவம்
மலையில் உருவாகி கல்லை மணலாக்கி வருவாய்
அலையை உருவாக்கி அருகில் வந்து மறைவாய்
குளிர்ந்த வெண் பஞ்சாய் அருவி நீராய்
குடங்கள் நிரப்பி கொதிக்கும் வெப்பத்தில் நீயாய்
கோபம் கொண்ட நீயோ வெள்ளக் காடாய்
கோலம் பல கொள்வாய் நடன நங்கையாய்
எல்லாம் நீயே நீயின்றி அமையாது உலகு
என்றும் உனைப் போற்றி வணங்கி மகிழ்வோம்
புதைத்ததால் முளைத்தவர்கள்
உரமிட்டு வளர்த்து உயர்ந்த பின்னே சருகாகி சாய்ந்து போகும்
மரமென்ற இயற்கை வரமென்ற ஒன்று முதிர்ந்த வயதாகிப் போனதால்
மீண்டும் மண்ணிலே புதைந்து மக்கி உரமாகிச் செடிகள் வளரும்
கண்ணுக்கு முன்னே புதைந்ததால் முளைத்த இவை யாவும் தெரிந்ததே
மனிதருள் புதைத்ததால் முளைத்தவர்கள் யாவரென்று எண்ணிப் பார்த்தால் பலராவார்
மக்கட்காய் வாழ்நாள் முழுதும் உழைத்துத் தேய்ந்து ஓடாய்ப் போனவர்
வேறுபாடு அற்ற சமுதாயம் உருவாகப் பாடுபட்டே சிலையாய்ப் போனவர்
வேற்றுமையில் ஒற்றுமை கண்டே தாழ்ந்தவர் உயரக் கண்டு மகிழ்ந்தவர்
சாதிகள் களைந்து சரித்திரம் படைக்க உயிரீந்த உத்தமத் தலைவர்
சாகாவரம் பெற்று வரவில்லை புதைந்தும் மனதில் என்றும் வாழ்பவர்
மதங்கள் வேதங்கள் மாயையென்று உரக்கப் பேசியே உணர வைத்தவர்
மதம்பிடித்த மடையர் பலரை அடக்கி ஒடுக்கி முடங்க வைத்தவர்
அதிகார வர்க்கம் அடக்கு முறை எதிர்த்தே சிறையில் வாடியவர்
அதிசயம் இவர் என்றும் தன்னலம் பேணாப் பெருந் தலைவர்
புதைத்ததால் மீண்டும் மீண்டும் முளைத்த கொள்கைகள் விதைத்த வித்தகர்
புகழ்மாலை பெற்று போற்றுதர்க் குரிய தலைவர் மீண்டும் வருவரோ ?
மாற்றம் வருமா
மாற்றம் வேண்டி யாரிடம் செல்வேன்
மாற்றுப் பாதையை காண்பது எளிதா
சோற்றுக் கனவில் உறங்கும் மனிதர்
காற்றுப் புகாத குடிசை வாசிகள்
நேற்றுப் பெய்த மழையின் ஈரம்
வற்றாத நதிகள் வறண்ட மணலாய்
நூற்றுக் கணக்கில் வறுமைச் சூழல்
பெற்ற சுதந்திரம் சுவாசம் சேராமல்
கற்றவர் இருந்தும் கல்லாய் மனது
ஏற்றத் தாழ்வில் ஏழ்மை கொடியதாய்
உற்றுப் பார்த்தால் உண்மை புலப்படும்
வெற்றுத் தாளில் கரும்புள்ளி அதுவே
சுற்றிப் பார்த்தேன் சுருங்கி உடல்கள்
சுற்றம் அவரும் சூழ்நிலை வேறாய்
மாற்றம் வருமா கேள்வி மீண்டும்
காலைத் தென்றல்
காலைத் தென்றல் சன்னல் வழியே
காதல் சொல்ல வந்ததோ அறியேன்
முகம் தழுவிப் போனது மெல்ல
அகம் குளிர அணைத்தது போலவே
கற்பனைக் குதிரை கடிவாளம் போடாமல்
கண்மண் தெரியாமல் காடுமேடு கடந்தது
வெட்கம் கெட்ட மனதோ நகைத்தது
கட்டில் துறக்க மனமில்லா சுகத்தில்
மனதில் இளமை என்றும் தொடரும்
மகிழ்ந்து வாழும் வழிகள் தேடும்
மதவெறிக் கூட்டம்
பொய்யர்கள் கோமாளிகள் ஆட்சிக் கட்டிலில்
பொல்லாத ஆட்டம் இங்கும் அங்கும்
புரியாத புதிராய் மக்கள் வாக்கும்
தெரியாத அறிவிலி எனச் சொல்லலாகுமா
மதவெறிக் கூட்டம் தலை விரித்தாடுது
இனவெறி வார்த்தைகள் இறைக்கப் பார்க்குது
மொழியை வைத்து சதுரங்கம் ஆனது
மொத்த நாடும் புரியாமல் திணறுது
ஆடும் ஆட்டம் அடங்கி ஒழியுமா
தேடும் தலைமை மீண்டும் கிட்டுமா?
எங்கே போனாயோ
எங்கே போனாயோ தேடிக் களைத்தேன்
எத்தனை நாளோ உன்னைப் பிரிந்து
வாடிய மனம் துவண்டே போனதே
தேடியே கால்கள் தேய்ந்தே போனதே
பாடித் திரிந்த பழைய நாட்கள்
ஓடித் திரிந்த வயல் வரப்புகள்
காலை நனைத்த ஆற்று நீர்
மாலைக் கதிரவன் ஒளியில் உன்முகம்
மறக்க இயலா வண்ணக் கனவுகள்
உறக்கம் மறந்த பலப்பல இரவுகள்
வருவாய் எனவே ஏங்கிய நாட்கள்
வ்ந்திடு வாயா விரைவில் பெண்ணே
இன்றோ நாளையோ எண்ணித் தவிக்கும்
இதயம் அறிந்து வந்து சேர்ந்திடு
சீட்டுக் கட்டு
சீட்டுக் கட்டு ஒன்றாக நன்றாக இருந்தது
வீட்டுக் குள்ளே அறைகள் தோறும் உறவானது
பாட்டுப் பாடி அம்மா கதை சொல்லி பாட்டி
எட்ட நின்று உற்று நோக்கும் மாமன் மாமி
சுட்டிக் குழந்தை சுற்றி வர கூடவே தாத்தா
தட்டுத் தட்டாய் இட்லி சட்னியும் சாம்பாரும் கூட
மொட்டு மொட்டாய் மல்லிகை புறக் கடை தோட்டத்தில்
பட்டுப் பாவாடை சிறுமி இன்று பிறந்த நாள்
நட்ட நடுவே முற்றம் அதிலே துளசி மாடம்
மாட்டுத் தொழுவம் பசுவோடு கன்று முட்டிய மடி
தொட்டி நிறைய நீர் கிணற்றைச் சுற்றி பாத்திரம்
சொட்டிய வேர்வை உடல் தந்தை அவன் தான்
கூட்டுக் குடும்ப காட்சி இதுவே கனவாய்ப் போனது
வேட்டு வைத்தவன் எவனோ சீட்டுக் கட்டு கலைய
கலைந்த சீட்டிலே விதம் விதமான கலவைப் பிரிவு
கடல் கடந்து சென்று திரும்ப மனமில்லா மகன்
வளர்ந்து உயர்ந்து வளமான வாழ்வில் பிறப்பை மறந்தவன்
வயலுக்கு விடை கொடுத்து வனப்பான நாகரிகம் கண்டவர்
சிறகு முளைத்த பறவைகள் திசைக் கொன்றாய் பறந்தவை
விறகு சுமந்த தந்தை வியர்வை துடைக்க நேரமில்லை
மாறிய காட்சிகள் மனிதம் அறிந்தே இருந்தும் பயனில்லை
இரம்மியமான கூட்டுக் குடும்பம் மூன்று சீட்டாய் மாறியது
( கணவன் மனைவி ஒரு குழந்தை)
இல்லங்கள் குறுகிப் போயின மனங்களும் மாறிப் போயின
மாற்றம் மனித நேயம் பாசம் மறைந்து தேய்ந்தது
சுற்றம் தொலைந்து சுருங்கி அலைபேசி அழைப்பில் நின்றது
இயந்திர உலகில் சீட்டுக் கட்டாய் கலைந்து போனது
இயல்பு நிலை திரும்புமா வினாக்கள் மட்டும் தொடரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
