வெள்ளி, 8 மே, 2026
உயிர்த்தெழும் சொற்கள்
கடுகைத் துளைத்தும் அணுவைத் துளைத்தும்
கருவான தமிழே தாயே வணக்கம்
கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றி வந்தவளே
கண்நோக்கி கருத்தாகி கணையாகத் தோன்றியவளே
உயிரோடு என்வரியில் உறைந்து நிற்பவளே
உன்தாள் பணிந்து தொடர்கிறேன் பெருமகளே !
புதைந்து பூமியிலே புதையல் வரிகளாய்
புவியெங்கும் பரவி நின்று வாழ்பவளே
என்னுள்ளே புகுந்து உயிர் பெறுவாய்
எண்ணற்ற கவிதைகளை இவ்வுலகில் தருவாய்
எதுகை மோனை சீர் தளை
எதிலும் அடங்கா திமிரோடு நீயும்
விலங்கை உடைத்து உயிர்த் தெழுவாய்
கற்பனைத் தேரில் பவனி வரும்
கொற்றவை என்றே கொள்வேன் நான்
வரிகளில் கோடிட்டுக் காட்டிடுவேன்
சொற்கள் உயிரின் ஆழத்திலே உருவாகி
பற்பல வடிவம் தாங்கி வரியாகி
கவிதைக் களம் கண்டு வளர்ந்து
கற்பனை ஊற்றோடு கலந்து மரமாகி
காயும் கனியுமாய் நம்முன்னே நிற்குமாம்
காலம் கடந்தும் மனதில் நிலைக்குமாம்
புரிகின்ற பெருமகனார் சபைதனில் உன்புகழை
எல்லைகள் அற்ற உலகம் சுற்றிவர
தொல்லைகள் இல்லா விதிகள் செய்வோம்
புத்தி பேதலித்த உன்மத்த மானிடர்
கத்தியினால் காயம் தீண்டிச் செல்வார்
சத்தியம் சொல்லில் இல்லை இவர்தம்மில்
அமைதிக்கு அவதூறு செய்யும் ஆணவம்
அடங்க மறுக்கும் அதிகாரம் கொண்டதனால்
அடையப் பார்க்கிறார் அந்நிய மண்ணை
அழிவை நோக்கி அனைத்து மனிதரும்
அச்சம் கொண்டனர்
வானளாவிய அதிகாரம் கொடுத்தவர் எவரோ
வானரமாய் தாவிநின்று இங்கும் அங்கும்
அனைத்தும் எமதென்று ஆர்ப்பரித்து நிற்பார்
அடக்க வேண்டும் அநியாய ஆட்டமிதை
தொடக்கம் இதுவானால் முடிவும் உண்டன்றோ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக