வெள்ளி, 8 மே, 2026
சீட்டுக் கட்டு
சீட்டுக் கட்டு ஒன்றாக நன்றாக இருந்தது
வீட்டுக் குள்ளே அறைகள் தோறும் உறவானது
பாட்டுப் பாடி அம்மா கதை சொல்லி பாட்டி
எட்ட நின்று உற்று நோக்கும் மாமன் மாமி
சுட்டிக் குழந்தை சுற்றி வர கூடவே தாத்தா
தட்டுத் தட்டாய் இட்லி சட்னியும் சாம்பாரும் கூட
மொட்டு மொட்டாய் மல்லிகை புறக் கடை தோட்டத்தில்
பட்டுப் பாவாடை சிறுமி இன்று பிறந்த நாள்
நட்ட நடுவே முற்றம் அதிலே துளசி மாடம்
மாட்டுத் தொழுவம் பசுவோடு கன்று முட்டிய மடி
தொட்டி நிறைய நீர் கிணற்றைச் சுற்றி பாத்திரம்
சொட்டிய வேர்வை உடல் தந்தை அவன் தான்
கூட்டுக் குடும்ப காட்சி இதுவே கனவாய்ப் போனது
வேட்டு வைத்தவன் எவனோ சீட்டுக் கட்டு கலைய
கலைந்த சீட்டிலே விதம் விதமான கலவைப் பிரிவு
கடல் கடந்து சென்று திரும்ப மனமில்லா மகன்
வளர்ந்து உயர்ந்து வளமான வாழ்வில் பிறப்பை மறந்தவன்
வயலுக்கு விடை கொடுத்து வனப்பான நாகரிகம் கண்டவர்
சிறகு முளைத்த பறவைகள் திசைக் கொன்றாய் பறந்தவை
விறகு சுமந்த தந்தை வியர்வை துடைக்க நேரமில்லை
மாறிய காட்சிகள் மனிதம் அறிந்தே இருந்தும் பயனில்லை
இரம்மியமான கூட்டுக் குடும்பம் மூன்று சீட்டாய் மாறியது
( கணவன் மனைவி ஒரு குழந்தை)
இல்லங்கள் குறுகிப் போயின மனங்களும் மாறிப் போயின
மாற்றம் மனித நேயம் பாசம் மறைந்து தேய்ந்தது
சுற்றம் தொலைந்து சுருங்கி அலைபேசி அழைப்பில் நின்றது
இயந்திர உலகில் சீட்டுக் கட்டாய் கலைந்து போனது
இயல்பு நிலை திரும்புமா வினாக்கள் மட்டும் தொடரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக