வெள்ளி, 8 மே, 2026
ஒரு கோப்பை மௌனம்
கேள்விக்குறி கோப்பையினால் மௌனமா மௌனத்தால் கோப்பையா
வேள்விக்குப் பின்னால் வரமா வரம்பெற வேள்வியா
எதனால் இந்த மௌனம் வினாவிற்கு விடையென்ன
சோதனை அல்லவா விடையிறுக்க இயலாத நிலையிது
தெரிந்தே தவறு செய்யும் கூட்டம் ஒன்று
தெரிந்தும் தடுக்காத கூட்டமும் இங்கு உண்டு
அதிகார வர்க்கம் ஆணவம் தலை விரித்தாடுது
சதிகார கும்பல் சர்க்கார் என்பது வேதனை
விதியென்று நொந்து போவதா வழியேதும் இல்லையா
அறியாத மானிடம் கையில் ஒருகோப்பை மௌனமா?
அழியாமல் காப்பாற்ற வழியெது சொல்வது யாரோ
புதைகுழி தோண்டி புதைப்பது அறியா பாமரர்
விதைகள் அதுவாய் மாறி விருட்சமாய் மாறிடும்
மயக்க நிலைமாறி மௌனம் கலைத்து விழித்திடு
தயக்கம் இன்றி கேள்விக் கணைகள் தொடுத்திடு
இருளை விலக்க தீயொன்று எரிந்திட வேண்டும்
இல்லை என்றால் இருண்ட காலம் திரும்பிடும்
பிரிவினை சக்திகள் பேயாட்டம் பெரும் கூச்சல்
புரியாமலே ஆட்டம் போடும் விட்டில் பூச்சிகள்
நெருப்பில் எரியத் தயாராய் கும்மாளம் எங்கும்
நெருங்கும் அழிவைத் தானே தேடும் தற்குறிகள்
வெற்றுப் பேச்சும் பொய்களின் வாதமும் ஓங்குது
வெகுளியாய் கூட்டம் நம்பியே மயக்க நிலையில்
விழித்தெழு மானிடமே விரைவில் தெளிந்து வெளியேறு
பழித்திடும் கூட்டத்தில் நுழைவதை தவிர்த்து விலகிடு
விடியலைத் தேடு விடைகள் கிடைக்கும் உனக்கு
கொடியது எதுவென தெளிந்து நல்லதைப் பற்றிடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக