வெள்ளி, 8 மே, 2026

54 ஆண்டுகள் நட்பு

நட்பின் பரிமாணம், விட்டுக் கொடுத்தலில் விரிவாகிறது. மற்ற உறவுகளில் இருந்து மேம்படுவதும் இதனாலேயே, எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதது. அசோக்கின் பிறந்த நாளுக்கு, நேற்று, கேக் வாங்கி, வெட்டிக் கொண்டாடியதை, அசோக்கின் மகள் ஜனனி, பாராட்டியது மட்டுமல்ல, வீடியோ ஒன்றும் பதிவிட்டது அருமை. காலை உணவுக்குப் பிறகு, பத்து மணியளவில் புறப்பட்டு பூம்பாறை நோக்கிப் பயணம், சுமார் 20 கிமீ பயணம். வழி நெடுகிலும் பைன் மரங்களின் அணி வகுப்பு. சிறுத்தை ஜாக்கிரதை என்று அறிவிப்பு. பழனி மலை வியூவில் நிறுத்தி பள்ளத்தாக்கின் அழகை இரசித்தபடியே போட்டோக்கள் கிளிக்கிய போது, பழனி மலை பனி மூட்டத்தில் ஒளிந்திருந்தது. அடுத்த நிறுத்தம் மகாலஷ்மி கோயில் மலை உச்சியில், தனியார் நிறுவியது. மலைகளுக்கு நடுவே அழகாய் அமைந்திருந்தது. மீண்டும் புறப்பட்டு பூம்பாறை நோக்கிப் பயணித்து, குழந்தை வேலப்பர் கோயிலில் நிறுத்தி, நண்பர் சம்பந்தம் அர்ச்சனை செய்து, வெளி வந்து மலைப் பூண்டுகளை வகை வகையாய் வாங்கி சிறிய மூட்டை ஒன்றை காரில் வைத்து, கீழே கிராமத்தை அடைந்த போது, பள்ளத்தாக்கை நோக்கிய படி சிகரங்களின் முனையில் கிளாம்பிங் என்ற வெண் துணி டென்ட்கள் முளைத்திருந்தன. இதற்கா பல ஆயிரங்கள் வாடகை என எண்ணத் தோன்றியது. நாங்கள் தங்கியுள்ள நாயுடுபுர வில்லாவே இதை விட அழகான இடத்தில் அமைந்துள்ளது. போட்டோக்கள் கிளிக்கிய பிறகு, தேநீர் அருந்திய மெஸ்ஸில், மதிய உணவுக்கு நிறுத்தி, சுவையான வீட்டுச் சாப்பாடு சுடச்சுட. நண்பர்கள் பீட்ரூட் பொரியல், கீரைக் கூட்டை பலமுறை கேட்டு சுவைத்தனர். மீண்டும் பயணித்து, கோடை ஏரியை அடைந்து, துடுப்புப் படகில் ஏரியில் உலா, பிறகு அருகில் உள்ள பிரையண்ட் பூங்காவில், வலம் வந்த போது பல , இளஞ்ஜோடிகள், அங்கிருந்த போட்டோகிராபர்கள் உதவியுடன், பல வித போஸ்கள் கிளிக்கிய படி இருந்தனர். நினைவுப் படம் ஒன்றை நாங்களும் எடுக்கச் சொல்லி, புகைப்பட பிரிண்ட்டை வாங்கிக் கொண்டு, சிறு பருவ நினைவுகளோடு, மீண்டும் போட்டோக்கள் எடுத்த போது, பனி மூட்டம் சூழ ஆரம்பித்தது. கடை வீதிகளில் நடந்து , சுக்கு காபி குடித்து, பேரன் பேத்திகளுக்கு ஹூடிகள் வாங்கி, அறைக்குத் திரும்பி, சீட்டாட்டம், இரவு உணவு முடித்து, நண்பர்களுடன் அளவளாவி, உறங்கச் சென்ற போது அடுத்த நாளின் நீண்ட பயணம் மனத் திரையில் ஓடியது

கருத்துகள் இல்லை: