வெள்ளி, 8 மே, 2026

உடன் பிறந்த உறவே

உடன் பிறந்ததோ உடன் பிறவாததோ உறவு என்பதே உன்னதம் அன்றோ கடன் பட்டார் நெஞ்சம் போன்றே கலங்கும் எவ்வுறவும் என் உறவே கண்ணடி பட்டதோ கல்லடி பட்டதோ கண்ணாடி போன்றதே உறவுப் பிணைப்பு உடையாத நாட்களாய் என்றும் தொடரணும் அடையாத அன்பின் ஏக்கம் தீர்க்கும் கள்ளங் கபடம் அற்ற உறவது உள்ளம் திறந்து சிரித்து மகிழும் குதித்து ஓடும் குப்புறக் கவிழும் குற்றம் பார்க்கா குழுவாய் மாறும் சுற்றம் சூழ்ந்து வாழ்த்துப் பாடும் என்னோடே வளர்ந்து நிழலாய் தொடரும் எத்தனை நினைவுகள் எண்ணற்ற தருணங்கள் என்வலி யாவும் தன்வலி போன்றே என்னை அணைத்தே நடத்திச் செல்லும் சிறுவயது முதலாய் முதிய வயதிலும் சிதையாது என்றும் கைகோத்து நடக்கும் படைக்கு அஞ்சாத துணிவைக் கொடுக்கும் எடைக்கு எடையாய்த் தங்கம் தரலாம் உறவே நட்பே உயிராய் நீயே உடன் வருவாயா முதலாய் முடிவாய் உடன் பிறந்த உறவே தமிழே உடனே பயணித்து பெருமை தந்தாய் கடன் கொடுத்த உனது மொழியில் இடம் பிடித்தேன் பலரின் மனதில் வடம் பிடித்து இழுத்த தேராய் வலம் இடம் நடு வென்று கவிதை வடிவில் கொட்டியது நீயே கனவு உலகம் கற்பனைத் தேரில் கடல் கடந்தும் வானிலும் ஊர்ந்தது விடியாத இரவுகள் உனது மடியில் விடைகள் தேடியே விடிந்து போனது என்றோ போன ஏதோ ஒன்றை இன்றோ நாளையோ எண்ணிப் பார்த்து சோகம் கலந்த சொற்களில் கூட சுகமாய் விழுந்த வரிகள் உனதே வானம் தொட்டு பூமியில் குதித்து வானரம் போன்ற நாட்களும் உண்டு என்னோடே நீயும் நிழலாய் இருந்து கன்னல் சாறாய் கவிதைகள் தருவாய்

கருத்துகள் இல்லை: