வெள்ளி, 8 மே, 2026

எழுபதை நோக்கி...

இரவுகள் வழக்கம் போல, வயதானதை நினைவூட்டும் கனவுகளும், குறைந்த தூக்கமும், ரெஸ்ட் ரூமுக்கு பல நடைகளும். பர பரப்பான உலக நடப்புகளிலிருந்து ஓய்வு. காலை ஆறு மணிக்கு கம்பெனி பஸ் பிடிக்க பாஷ்யம் சர்க்கிள் வரை வேக நடை இல்லை. நடு இரவில் தண்ணீருக்கு க்யூவில் நிற்க அவசியமில்லை. காவிரி நீர் பெங்களூருக்கு வராத எண்பதுகள் காலம் போலில்லை. இரவுத் தூக்கம் ஒரு மணி நேர கம்பெனிப் பேருந்தில் தொடர வாய்ப்பு, சிற்றுண்டி சுவையற்றதானாலும் சாப்பிட்டு, வேலை துவங்க வேண்டும். வேலை நிமித்தம் பெங்களூரு சப்ளையரை சந்திக்க வேண்டுமானால் மெதுவாக எழுந்திருக்கலாம். ஒற்றைச்சாலை பெங்களூரு ஓசூர் இடையே. இந்தப் பயணம் தவிர்க்க ஓசூருக்கு குடி பெயர்ந்து, தளி ஹவுசிங் போர்டு B16 வீட்டுக்குப் போனதும், வாழ்க்கை முறை மாறி, தோட்டத்தில் கத்தரிக்காய், பீன்ஸ் நன்றாக விளைந்த போது மகிழ்ச்சி. பிள்ளைகளின் படிப்பிற்காக, சென்னைக்கு மீண்டும் திரும்பிய போது, ஏழு வருடங்களில் பல மாற்றங்கள். நகருக்கு வெளியே வண்டலூரில் குடியேறிய போது கிராமத்து வாழ்க்கை போல. மறைமலை நகர் செல்ல , பர பரப்பற்ற GST சாலை. போக்குவரத்து மிகக் குறைவு, மணல் லாரிகளின் ஆதிக்கம், பாலாற்று மணல் நகர் முழுதும் சப்ளை. ஒரு Lamby scooter, CAN 1733 , சென்னையில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் பவனி வந்தது என்னைச் சுமந்து. வண்டலூர், பெருங்குடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை என மே மாத வெயிலில் ஒரே நாளில் சுற்றியது கண் முன்னே இப்போது வியப்பாய். வேலை நிமித்தம் பல ஊர்களுக்குப் பயணங்கள், பெரும்பாலும் அவசரப் பயணங்கள், இரயில் ஃபுட்போர்ட் பயணம் நடுநிசி நேரத்தில், ரிசர்வ் செய்ய அவகாசமின்றி. காலம் உருண்டோட சென்னை, பெஙலகளூர் என மாறி மாறி, கம்பெனிகள் 12 , நாக்பூர் வாசம், சீனப் பயணம் என வாழ்க்கை வட்டமடித்தது. மிக நீண்ட கட்டுரையாக. இதை மாற்ற எண்ணமில்லை. நினைவலைகள் பின்னோக்கிப் போய் எட்டிப் பார்த்துத் திரும்பியது. பிசினஸ் என்ற முயற்சியும் ஒன்பதாண்டு காலத்தில், பாடம் கற்பித்தது. பிப்ரவரி 2021 க்குப் பிறகு, வேறு பரிமாணத்தில் ஊர் சுற்ற ஆரம்பித்து, உலகம் சுற்றும் வாலிபன், Man on Wheels என்ற பட்டங்கள். அனுபவங்கள் கலவை தான், வளைந்தும், நெளிந்தும், உயர்ந்தும் தாழ்ந்தும். காலம் நிற்பதில்லை, நரைத்த முடிக்கு வேண்டுமானால் கருப்பு சாயம் பூசலாம். உடல் மெதுவாகத் தளர்வதை தடுக்க இயலாது.காலையில் எழுந்து பரபரப்பாக ஓட வேண்டிய கட்டாயமில்லை. எழுபதை நோக்கி விரைகின்ற வயதில் எண்பது வயதைக் கடந்த நண்பர்களை நோக்கி வியப்பாகத் தோன்றுகிறது. கடிகார முற்களோ, மின்னணு கடிகாரமோ நிற்காமல் இயங்குவது போல் மனிதனும் இயங்க முடியுமானால் நலம். ரோபோக்களின் ஆளுமை உலகை தன் வசமாக்கும் காலம் வெகு தூரமில்லை.

கருத்துகள் இல்லை: