வெள்ளி, 8 மே, 2026

, நண்பர்கள் சுற்றுலா

பயணங்கள் பலவகை, தனி மனிதச் சுற்றுலா, குழுக்களுடன் சுற்றுலா, நண்பர்கள் சுற்றுலா என்று. பார்த்த இடங்களுக்கே பல முறை செல்லவேண்டியும் இருக்கும், சுற்றுலா என்பதை விட இன்ப உலா எனலாம், நண்பர்களுடன் கலந்துரையாடல், சூடான விவாதங்கள், சிறு சிறு சண்டைகள் அனைத்தும் உண்டு. பன்னிரண்டாம் தேதி சென்னையிலிருந்து, இரு நண்பர்கள், பெஙலகளூரில் இருந்து நான், டிரையினில் பயணித்து, நாகர்கோவிலில் சந்தித்து, Home stay அடைந்த போது அழகான பங்களா ஒன்றில் தனித்தனியான இரண்டு வீடுகளில் எங்கள் படுக்கைகள், சமையல் முதல் சிறிய நீர்த்தொட்டி வரை அனைத்து வசதிகளுடன். கணேஷ் ஐயர் சென்னை பல்லாவரத்திலிருந்து, குடி பெயர்ந்து, முப்பது வருடங்களுக்கு முன்பு இங்கே செட்டிலாகி இருந்தார். தயாராகி முதல் நாள் சென்ற இடங்கள் மண்டைக்காடு பகவதி அம்மன், முட்டம் கடற்கரை, விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, வேக்‌ஸ் மியூசியம். கன்யாகுமரி கோவில்கள் கேரள சாயலில். திருவள்ளுவர் சிலையின் காலடியில் உயரே பார்வையிட சுறறமைப்பு, முட்டம் கடற்கரை அழகு படுத்தப்பட்டு, பார்வையாளர்களுக்கு, வசதிகளும், கட்டுப்பாடுகளும். வேக்ஸ் மியூசியம் ₹150 கொள்ளை என்றே சொல்லலாம். அடுத்த நாள் ஜடாயு எர்த் சென்டர் மூன்றரை மணி நேரப் பயணத்தில், ₹555 இங்கும் கொள்ளை, ஜடாயுவின் சிலை, கேபிள் கார் பயணத்திற்கு இவ்வளவு கட்டணம், பராமரிப்புக்காக பல இடங்கள்மூடி இருந்தாலும் கட்டணம் குறைக்கப்படவில்லை. வர்க்காலா பீச்சின் வெப்பத்தில் கடல் அலைகள் காலைக் கழுவ, பிற்பகலில் Cliff தோற்றம், கடை வீதிகள் பார்வையிட்டு ஹோம் ஸ்டே திரும்பவே இரவாயிற்று. மூன்றாம் நாள், சுசீந்திரம் தாணுமாலயனும், ஆஞ்சநேயரும் தரிசித்து, பத்மநாப புரம் அரண்மனை சென்ற போது, தமிழ்நாட்டில் கேரளம் தெரிந்தது. முழுவதுமாக கேரள அரசின் பராமரிப்பில். படிகளில் ஏறி இறங்கி சுற்றிப் பார்த்து, தொட்டிப் பாலம், மாத்தூருக்குச் சென்ற போது, நீர் ஓடை போல் ஆற்றில். பல வருடங்களுக்குப் பிறகு அன்னாசிப் பழ இனிய சுவை, இவ்வூருக்கே உரித்தானது. திற்பரப்பு அருவி நீர் வரத்து குறைந்து ஞாயிற்றுக் கிழமை கூட்டம் அலை மோதியது. குளிக்கும் ஆசை தள்ளிப் போடப்பட்டது. மாலையில் சோத்தவிளை கடற்கரை சென்னை மெரீனா போன்று, மக்கள் கூட்டத்துடன். இரவு நண்பர் பரமநாதனை டிரையினில் அமர வைத்து, நானும் அசோக் மட்டும் பேருந்துகளில் பயணித்து, தென்காசி புதுப் பேருந்து எதிரில் ஓட்டலை அடைந்த போது இரவு ஒரு மணி. காலையில் அசோக்கின் இனிய நணபர் தந்துதவிய i10 காரில் மணிமுத்தாறு அணையைப் பார்த்து, சேமியா ஐஸ்கிரீம் சாப்பி்ட்டு, அனுமதிச் சீட்டு பெற்று, அருவியை அடைந்த போது ஆர்ப்பரித்துக் கொட்டிய நீர் வரவேற்றது. ஆசை தீரக் குளியல், குறைந்த கூட்டம் வார நாள் என்பதால். கடைசி நாளான 17/3 அன்று ஆர்யங்காவு ஐயப்பன் கோவிலில் சந்தனக் காப்புடன் பார்த்து, வற்றிய ஆற்றங்கரை, பிறகு குண்டாறு அணையும் வறண்ட தோற்றமுடன், ஓட்டல் திரும்பி, பேருந்தில் மாலையில் பயணித்து, அரை மணி இடை வெளியில், வெவ்வேறு பாதைகளில் அவரவர் ஊர்களுக்கு, இரவுப் பயணம். ஈரான் போரின் தாக்கம் ஓட்டல் உணவு வகைகளில் பிரதிபலித்தது. கேரள தமிழ்நாடு எல்லைகளில் தமிழும் மலையாளமும் உறவாடின. மழையின் வருகைக்கு குற்றால அருவிகள் கண்ணீர் வடித்தன. தென்காசி கோபுரக் காற்று ஏனோ காணவில்லை. பிரதோஷம் என்பதால், நந்தி வழிபாடு, காசி விஸவநாதரை தரிசிக்க கூட்டம் குறைந்திருந்தது. நணபர் சிவராமனின் விருந்தோம்பல் அரிய ஒன்று. பயணங்களும் நட்பும் தொடர்ந்தே வருவதால், வாழ்க்கை இனியதாகவே தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: