வெள்ளி, 8 மே, 2026

பிலிப்பைன்ஸ்

02/03/2025 Bohol தீவுக்கு விடையளிக்க வேண்டிய நேரம் வந்தது. மார்ச் 2, காலை உணவுக்குப் பிறகு எட்டு மணிக்குப் புறப்பட்டு Cebu செல்ல படகுத்துறைக்குச் சென்ற போது, விமான நிலையம் போல அனைத்துச் சோதனைகளும், முன்னதாக Ana முன்பதிவு செய்திருந்தார். நினைவுப் பொருட்களாக டி சர்ட், பைகள் வாங்கிக் கொண்டு, அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். கடலில் Ferry எனப்படும் சிறிய கப்பலில் வேகமான பயணம். பல தீவுக் கூட்டங்ளைக் கடந்து, சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, Cebuவை அடைந்த போது, Patrick காத்துக் கொண்டிருந்தார். பழமையான நகரமாய்த் தோன்றியது. மணிலாவின் ஆடம்பர மாளிகைகள் போலல்லாமல் பழமையான கட்டிடங்கள் அதிகமாக. வியாபாரத் தலங்களும் மிகுதியாக, போக்குவரத்து நெரிசலுடன். Golden Prince என்ற ஓட்டலில் செக் இன் செய்து, மதிய உணவுக்குப்பிறகு, நகரச் சுற்றுலா ஆரம்பம். முதலில் Sirao என்ற பூந்தோட்டம், Bali ல் பார்த்தது போல சுற்றி மலைகள் சூழ அழகாகக் காட்சியளித்தது. பூக்களின் நடுவேயும், தூரத்து மலைகளின் காட்சியும் போட்டோக்களில் வண்ண மயமாய் பதிந்தது. ஏனோ பராமரிப்பு அவ்வளவு சரியாக இல்லை. அடுத்துச் சென்ற இடம் Temple of Leah. இது Teodorico என்பவனால் தன் காதல் மனைவி Leah வுக்காக கிரேக்க கட்டிடக் கலையில் 2012ம் ஆண்டில் கட்டப் பட்டது. Cebuவின் தாஜ.மகால் என்று அழைக்கப் படுகிறது. Leah உபயோகித்த பொருட்கள், அவளது புகைப்படங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன. மிகப் பிரம்மாண்டமான தோற்றத்துடன் காட்சியளித்தது. அடுத்துச் சென்ற இடம், Tops எனப்படும் மலையுச்சியில் அமையப் பெற்ற காட்சியகம், பல அடுக்குகளில், நகரத்தின் முழுத் தோற்றத்தைக் காண முடிந்தது. கதிரவனின் Sun Set மேகங்களினூடே அழகாய்த் தெரிந்தது. கீழே ஆறு, கடல், நகரத் தோற்றம் அனைத்தும். வெகு நேரம் அழகை இரசித்து, இருள ஆரம்பித்ததும் ஓட்டலை நோக்கிப் பயணம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, இரவு உணவுக்கு அருகிலுள்ள மாலுக்கு நடந்து சென்ற போது நகரின் மையப் பகுதியின் பிரம்மாண்ட கட்டிடங்கள், நெரிசலான போக்குவரத்து இவைகளைக் காண முடிந்தது. Ayala mall அடைந்த போது கடைகள் அனைத்தும் எட்டு மணிக்கே மூடி இருந்தனர். burger kings மட்டும் திறந்திருந்தது, ஆர்டர் செய்து சாப்பிட்டு அறைக்குத் திரும்பி , சீக்கிரமே உறங்கச் செல்ல வேண்டிய கட்டாயம். மறுநாள் காலை இரண்டு மணிக்கு எழுந்து மூன்று மணிக்குக் கிளம்ப வேண்டும், Whale Shark பார்க்க வெகு தூரம் பயணிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: