வெள்ளி, 8 மே, 2026
பிலிப்பைன்ஸ்
01/03/2025
மார்ச் ஒன்று, காலை ஆறு மணி, முதல் நாள் இரவு சொல்லியிருந்த படி காலையுணவு பேக் செய்யப்பட்டு வரவேற்பில் தயாராக இருந்தது. Lester லாவகமாக வேன் Bohol ன் நேர்த்தியான சாலைகளைக் கடந்து கடற்கரையை நோக்கிச் சென்றார். இந்தத் தீவெங்கும் பசுமை கொட்டியிருந்தது.
Balcasag தீவின் கடற்கரையை அடைந்தபோது, படகோட்டும் கைட் தயாராக இருந்தார். இயந்திரப் படகு எங்களைச் சுமந்து கடலின் உள்ளே வேகமாகப் பயணித்தது. சுமார் இருபது நிமிடப் பயணத்திற்குப் பிறகு, திடீரென கடலில் வரிசையாக நீந்திச் செல்லும் டால்பின்கள் காட்சியளித்தன. பத்து டால்பின்கள் இருக்கலாம் நேர்கோட்டில் நீந்தியபடி படகுகளுக்கு இணையாக. காணக் கண்கோடி வேண்டும் என்று சொன்னது இதற்குத் தான் போலும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை கடலின் ஆழத்தில் மறைந்து மீண்டும் மேலே வந்து, விளையாட்டு காட்டின. எங்களைப் போன்றே பல படகுகள். சுமார் பத்து நிமிடத்திற்குப் பிறகு கரையை நோக்கிப் பயணம்.
அடுத்து Snorkelling, Turtle watch இரண்டுமெனச் சொல்ல, லைப் ஜாக்கெட் மற்றும் பிரத்யேகமான இரப்பர் ஷூ அணிந்து, நானும் கசினும் மட்டும் சிறிய படகொன்றில் ஏறி ஆழம் குறைவான பகுதிக்குச் சென்ற போது என்னை நீரில் இறங்கச் செய்தார். காலை பின்னோக்கி எடுத்துச் சென்று நீரில் மிதக்க வேண்டும். முடியவே இல்லை, வேண்டாமென்று படகில் ஏறுவதே ஆடும் படகில் அவ்வளவு கடினமாகத் தோன்றியது.
நீச்சலில் வல்லவரான எனது கசின் கடலில் இறங்கி நிற்க முற்பட்ட போது, அலைகள் அவரை அலைக்கழித்தன. ஒரு வழியாக சில நிமிடங்கள் நீந்திய பிறகு படகுக்குத் திரும்பினார். கடல் ஆமை ஒன்று எங்களைக் கடந்து சென்றது. படகோட்டி கடலின் தரைப்பகுதிக்குச் சென்று, Go pro வில் வீடியோ எடுத்து வந்தார். மீண்டும் கரை சேர்ந்து, மொபைலில் வீடியோ போட்டோக்கள் டவுன் லோடு செய்ய 1200 Pesos. நாங்கள் இருவரும் பிரெட் துண்டுகள் சாப்பிட்ட பிறகு இளநீர்க் கடையில் மிகப் பெரிய அளவில் இருந்த இளநீரைப் பருகுவதே சவாலாக இருந்தது.
மீண்டும் படகுச் சவாரி Oceanica Resort நோக்கி. கரையில் இறக்கி விட்டு படகோட்டி சென்று விட்டார். ரிசார்ட்டில் நுழைய ஆளொன்றுக்கு 500 Peso கட்டணம், ஆனால் அது மதிய உணவு பில்லில் குறைக்கப்படும் என்றனர். ஆடைகள் மாற்றி, கடலை நோக்கி அமைந்த ரெஸ்டாரெண்டில் அமர்ந்து நிதானமாக மதிய உணவை முடித்த போது, சில நூறு Pesoக்களே கொடுக்க வேண்டி இருந்தது. ஓய்வுக்குப் பிறகு, Lester க்குப் போன் செய்து வரச் சொல்லி, ஓட்டலுக்குத் திரும்பினோம். மதிய ஓய்வு, மாலையில் சோம பானம், இரவு உணவு கீழே ரெஸ்டாரெண்ட்டில் என்று நாள் கடந்தது. மறுநாள் காலை தீவிலிருந்து புறப்பட வேண்டும் என்ற போது மனது கனத்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக