வெள்ளி, 8 மே, 2026
பெண் எனும் பிரபஞ்சம்
படைப்பின் அதிசயம் இவளா என்றேன்
படித்துப் பார் எனச் சொன்னான்
உழைப்பின் சின்னம் இவளா என்றேன்
உரைத்துப் பார் எனச் சொன்னான்
அன்பின் உருவம் இதுவா என்றேன்
அணைத்துப் பார் எனச் சொன்னான்
காதலின் மொழியா இவளெனக் கேட்டேன்
காதலித்துப் பார் எனச் சொன்னான்
தாய்மை என்பதே இவளா என்றேன்
தாரமாய் ஏற்றுக் கொள் என்றான்
வீரமங்கை என்பதும் இவளா என்றேன்
பாரங்கே போரில் அவளை என்றான்
எத்தனை உண்டோ இவளில் என்றேன்
எல்லாமே உண்டிவளில் என்றது அசரீரி
தாயாக இவள் மடியில் குழந்தையானேன்
தமக்கையாய் விளையாட அவள் வந்தாள்
காதலைச் சுமந்து மனதில் பாரமானாள்
காமத்தைச் சுமந்து கர்ப்பம் ஆனாள்
மக்களைப் பெற்ற மகராசி ஆனாள்
மங்கை அவள் தாயவள் ஆனாள்
குடும்பத் தலைவி பதவி உயர்வு
குடுகுடு கிழவி மூன்றாம் கால்தேடி
வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி அவளே
வாழ்த்துப் பாடிட இன்று போதுமா ?
அழகின் சொல்லுக்குப் பொருளே அவள்தான்
அருகில் இருந்தாலே அனைத்தும் மறப்போம்
மெல்லிய நடையும் மெட்டி ஒலியும்
துல்லியப் பார்வையும் துறுதுறு கண்களும்
கருத்த கூந்தலின் நறுமண வாசமும்
களுக்கெனச் சிரிப்பும் கள்ளப் பார்வையும்
அன்பின் உருவமாய் பெண்ணே நீதான்
பாடிய புலவர் பலரும் இவளை
கூடியே நிலவின் குளிராய் மாற்றினர்
இன்பமும் துன்பமும் கலந்த கலவையாய்
இவளது அருகாமை என்றும் பகர்ந்தனர்
புரியாத புதிராய் வலம் வருபவள்
தெரியாத சூத்திரம் ஆனதும் உண்டு
மொத்தமாய் சேர்ந்து பிரபஞ்ச வெளியில்
சத்தமாய் சொல்வேன் இவளின்றி உலகில்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக