வெள்ளி, 8 மே, 2026

கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா

( 14/10 & 15/10/25) காலை சிற்றுண்டி அருகில் உள்ள விடுதியில் சாப்பிட்டு, எட்டரை மணியளவில் கொல்லி மலை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். தேநீர் இடைவேளைக்குப் பிறகு, பயணம் தொடர்ந்தது, மதிய உணவை தயார் செய்யுமாறு , BNS Village Resort உரிமையாளரிடம் சொன்னோம். மலைப்பாதையை அடைந்து மேலே ஏற ஆரம்பித்த போது எழுபது கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டுமென அறிந்து கொண்டோம். ஹர்ஷா தேர்ந்த ஓட்டுனர் ஆதலால் அழகாக ஓட்டினார். மதியம் ஒன்றே காலுக்கு ரிசார்ட்டை அடைந்து, சூடான சமையல் தயாராய் இருந்ததால், உணவை முடித்து சிறிது நேர ஓய்வுக்குப் பின், அரப்பளீஸ்வரர் கோயில் தரிசனம் முடித்து, முடக்கால் கிழங்கு சூப்பைக் குடித்து, சூப் பவுடரும் வாங்கிக் கொண்டு, ஆகாய கங்கை அருவி 1179 படிகள் கீழே என்பதும், மூன்று மணிக்கு மேல் அனுமதி இல்லை என்பதும் தகவல் பலகை மூலம் அறிந்து, மாசிலா அருவிக்குப் பயணித்து கீழே இறங்கிய போதே மழை தூற ஆரம்பித்தது. கொஞ்ச் தூரம் நடப்பதற்குள் மழை வலுத்தது. குடிசைக் கடை ஒன்றின் கீழே நின்று கொண்டோம். பிறகு ஒவ்வொருவராக குடையைப் பிடித்த படி அருவிக்கு அருகில் சென்று போட்டோக்கள் எடுத்து அறைக்குத் திரும்பி, ஓய்வெடுக்கும் நேரத்தில் சீட்டாட்டம் ஆரம்பம். இடையில் இரவு உணவு சப்பாத்தி, குருமா, சாதம், இரசம். மறுநாள் காலை எட்டரைக்குச் சிற்றுண்டி தயாராகும் என சமையல் அம்மா சொல்ல உறங்கச் சென்றொம். மழை பெய்தபடி இருந்தது. சிற்றுண்டி தோசை, சட்னி, சாம்பார் சுடச்சுட. மதியம், இரவு, காலை மூன்று வேளையும் simple but tasty. அவர்களிடம் விடை பெற்றுப் புறப்பட்டு சிறிது தூரத்தில் ஓட்டுநர் வயிறு சரி இல்லை, தலை வலி எனச் சொல்லவும் காரை ஓரமாக நிறுத்தி, வயிற்றைக் காலி் செய்து, முகம் கழுவி வந்தார். முப்பத்தேழு வளைவுகளை சற்று நிதானமுடன் கடந்தாலும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. நிறுத்த இடம் கிடைத்த இடத்தில் காரை நிறுத்தி, வெளிக்காற்று வாங்கவும் ஓய்வெடுக்கவும் செய்தும் அவர் சமநிலைக்குத் திரும்பவில்லை. பிரபாகர் ஓட்டுவதற்கு முன் வந்தார். ஹர்ஷா சட்டையைக் கழற்றி விட்டு ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டார். கார் மெதுவாக வளைவுகளைக் கடந்த போது, டிரைவரின் செயல்கள், அழுகை எங்களை பயமுறுத்தியது. கீழே இறங்கிய உடன் மருத்துவரிடம் செல்ல முடுவெடுத்தோம். கைவசம் இருந்த ஈனோ,Dolo மாத்திரைகள் கொடுத்து ஓய்வெடுக்கச் செய்தோம். மலையின் வளைவுகளைக் கடந்து கீழே இறங்கிய போது மெதுவாக, சம நிலைக்குத் திரும்பி, மருத்துவரிடம் போக வேண்டாமென்றும் ஊர் திரும்பிய பிறகு சென்று பார்ப்பதாகவும் கூறி, சேலத்திற்கு முன்பாக அவரே காரை ஓட்ட ஆரம்பித்தார். அதன் பிறகே நாங்கள் நிம்மதி அடைந்தோம். மதிய உணவு இடைவேளையில், அவர் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டார். நைஸ் ரோடு வழியாக பெங்களூரு பன்னரகட்டா ரோடு அடைந்த போதே மணி ஐந்தை நெருங்கி இருந்தது. பிரபாகர் , கோபால் இருவரும் வழியில் இறங்கி, டாக்ஸி பிடித்து தங்களது வீடுகளுக்குச் செல்ல முடிவெடுத்து, மீதமுள்ள நாங்கள் ஒவ்வொருவராக வழியில் இறங்கிக் கொள்ள, கடைசியாக பிரகாஷ் இறங்கிய போது மணி 7 45 ஆனதாக SMS வந்தது. ஒரு நீண்ட பயணம் இறுதியில் ஏற்பட்ட சிறிய நிகழ்வைத் தவிர மிக அழகான ஒன்றாய் அமைந்தது. இயற்கையோடும், கோயில்களோடும், சரித்திர இடங்களோடும் தொடர்பு கொண்ட மன நிறைவு. ஹர்ஷாவுடன் மறுநாள் தொலை பேசியில் பேசிய போது, மருத்துவரைப் பார்த்ததாகவும், வெறும் Gastric problem என்றும், ஓய்வில் இருப்பதாகவும் சொன்னார். ( முற்றும்

கருத்துகள் இல்லை: