வெள்ளி, 8 மே, 2026
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
( 8/10 & 9/10/25)
இயற்கை அழகை இரசிப்பதும், நண்பர்களுடன் இத்தகைய இடங்களுக்குச் செல்வதும், சிறு விவாதங்கள் செய்வதும். தங்குமிடங்களின் வசதிகள் வேறுபடுவதும், இவை யாவும் பயணங்களின் கூடவே வருபவை. திட்டமிடல், சகிப்புத் தன்மை, வளைந்து கொடுத்தல் இவைகளும் தேவை.
பயணம் தொடர்ந்தது, கொச்சியிலிருந்து புறப்பட்டு மூணார் நோக்கிப் பயணம். மலை மேலே ஏற ஆரம்பித்து சில மணி்நேரம் கழித்து, சீயபாரா என்ற இடத்தில் அருவி அழகாய்க் கொட்டிய படி இருந்தது. காரை நிறுத்தி பல் வேறு கோணங்களில் மொபைல் கேமராவில் கிளிக்கி, புறப்பட்டு வளைவுச் சாலைகளைக் கடந்து மேலேறிய போது, தேயிலைத் தோட்டங்கள் வரிசையாகத் தோன்ற ஆரம்பித்தன, மூணாரின் நுழை வாயில் போல. ஓரிடத்தில் நிறுத்தி தேயிலைத் தோட்டத்தின் பின்னணியோடு காட்சிகள் பதிவிடப்பட்டன.
ஹர்ஷாவின் வற்புறுத்தலில் மூலிகைத் தோட்டம் ஒன்றில் நுழைந்தோம். தோட்டத்தை ஒவ்வொரு செடியாக விளக்கிய படி, பெண்மணி குகை போன்ற வடிவிலிருந்த , செயற்கை மலைப் பாதையில் அழைத்துச் சென்றார். உடம்பில் உள்ள அத்தனை வியாதிகளும் போக்க மருந்து வகைகள் அங்குள்ள செடிகள், மரங்கள், வேர்களில் இருந்தன. சில ஆயிரங்கள் செலவு செய்தால் போதும். எனக்கென்னமோ நாட்டு மருந்துகளின் விலை மதிப்பு எப்போதும் அதிகமாகவே தோன்றியது. இருந்தும் மருந்தொன்றை நானும் நண்பரும் வாங்கிக் கொண்டு, Echo point நோக்கிப் பயணித்தோம். பெரிய ஏரி ஒன்று மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இருந்தது. எக்கோ அவ்வளவாக வரவில்லை. காட்சிப் பதிவுகள் மீண்டும்.
அங்கிருந்து புறப்பட்டு மதிய உணவை முடித்து, ஹோம் ஸ்டே நோக்கி, காடுகளின் ஊடே பயணித்து, வெகு நேரம் கழித்து, பசுமையான சூழலில் காட்டு கிராமத்தில் அழகிய வீடு். எதிரே மலைக் குன்று. தம்பதியர் சுனிலும் அவரது மனைவியும் சுவையான இரவு உணவு மற்றும் காலையில் இட்லி சுடச்சுட. இரவு சிறிது நேரம் சீட்டாட்டம், வெளியே சோவென்று் மழை.
சிற்றுண்டிக்குப் பிறகு பயணம் வாகமான் நோக்கி. சுமார் நான்கு மணி் நேரப் பயணத்தில் , இடையில் பள்ளத்தாக்கு ஒன்றில் நிறுத்தி போட்டோக்களுடன் ஐஸ்கிரீமும் சேர்ந்தது. வாகமான் Glass Bridge நோக்கிப் பயணித்த போது, சுற்றுலாப் பேருந்துகளின் அணிவகுப்பில் சிறுவர், சிறுமியர் கூட்டம். நல்ல வேளை Glass bridge நாங்கள் சென்ற போது கூட்டம் இல்லை. அதன்மீது நடக்கிற போது, பயம் மேலோங்குகிறது. எல்லா பக்கமும் காப்பு இருந்தும், காற்றின் வேகமும் மனப்பட படப்பும் அடங்குவதில்லை. தனியாக குழுவாக போட்டோக்கள் எடுத்த போது உதவியாளர் ஒருவர், நம்மை கவனித்த படி இருந்தார். சிறு சிறு குழுக்களாக மட்டுமே அனுமதித்தனர். தொங்கு பாலம் போன்று கீழே பள்ளத்தாக்கு. சுற்றிலும் மலைகள, மிக அழகான தோற்றம்.
மதிய உணவை Friends Restaurant ல் முடித்து ஆலப்புழா நோக்கிப் பயணித்த போது மழை வேகமெடுத்தது. மலைப் பாதையில் மூடு பனி, மழை மாறி மாறி வரும் போது பார்க்க அழகானாலும், கார் ஓட்டுவது கடினம்.
மூன்று மணி் நேரப் பயண முடிவில் Back waters கரையில் ஹோம் ஸ்டே அடைந்த போது, இரவு நெருங்கி இருந்தது. சிறிது நேர இளைப்பாறலுக்குப் பிறகு இரவு உணவு அருகில் உள்ள சரவணபவனில். மறுநாள் ஒன்பது மணியளவில் சிக்காரா போட் பயணம் என்ற முடிவில் உறங்கச் சென்றோம்.
தினமும் பயண நேரமே பல மணி்நேரம் விழுங்குவது மட்டுமல்ல, உடலும் அசதி அடைகிறது என்பதால், வருங்கால பயணங்களை ஓரிரு இடங்கள், குறைந்த பயணம் இவைகளோடு திட்டமிடலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக