வெள்ளி, 8 மே, 2026

கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா

( 6/10 & 7/10/25) திட்டமிட்ட படி காலை ஏழு மணிக்கு முன்னதாகவே கிளம்பி, காலையுணவை முடித்து, கொச்சி் நோக்கிப் பயணம். கூகுள் எட்டு மணி நேரப் பயணம் என்று சொன்னாலும், அச்சாலையில் சமீபத்தில் பயணித்தவர்கள், சாலை பழுது பார்த்தல், மேம்பால வேலைகள், மதிய உணவு இவற்றால் ஒன்பது மணி நேரம் ஆகுமென்று கூறினர். நெடுஞ்சாலை, மதிய உணவு கடந்து, Pearl house ஹோம் ஸ்டே அடைய மாலை நான்கு மணிக்கு மேலே ஆனது. பால்சன் வீட்டைச் சுற்றிக் காட்டி, மிலிடரி போன்ற கட்டுப்பாடுகள், டிரைவர் தங்க அனுமதி இல்லை என்ற நிபந்தனைகளோடு வீட்டை ஒப்படைத்தார். அனைத்து வசதிகள், வேண்டிய பொருட்கள் அனைத்தும் மிக வசதியான வீடு. மாலை ஆறரைக்குக் கிளம்பி, மெரீன் டிரைவ் என்ற கடற்கரையோரம் சென்று, படகுச் சவாரிக்கான டிக்கெட் வாங்கி, உள்ளே நுழைந்து, மூன்றாவது படகில் தாவி ஏறிப் புறப்பட்ட போது சுற்றிலும் விளக்கொளியில் மின்னியது. வானின் நிலவு கடல் நீரில் பிரதிபலித்து அழகூட்டியது. படகு கார்கோ கப்பல்களில் கண்டெய்னர் ஏற்றுவதைப் பார்க்க வசதியாக அருகில் சென்று வட்டமடித்துத் திரும்பியது. இரவு உணவு வெளியே முடித்து அறைக்குத் திரும்பி மறுநாள் ஏழு மணிக்கே, அதிரப்பள்ளி போக முடிவெடுத்து, உறங்கப் போனோம். காலை 6 45 க்கே கிளம்பி போகும் வழியில், காலைச் சிற்றுண்டி முடித்து, அதிரப் பள்ளி நுழைவாயிலை அடைந்த போது பேருந்து ஒன்றும் வர அதிலிருந்த அனைவரும் அருவி கொட்டும் கீழ்ப்பகுதிக்கு நடக்க ஆரம்பித்த போது நானும் நண்பர் சுப்ரமணியும் கடினப் பாதையில் இறங்க ஆரம்பித்தோம். இறங்க முடியாது என்று நினைத்த இருவரும் இறங்கியது சாதனை போன்றானது. அடுத்தது என்ன வெவ வேறு கோணங்களில் புகைப்படங்கள். மேலேறி வரும்போது பல இடங்களில் ஓய்வெடுத்து, வழியில் லைம் ஜூசும் குடித்து மேலேறிய போது உடம்பின் சக்தி முழுதும் கரைந்து போனது போல் தோன்றியது. மாற்றுத் திறனாளி விற்றுக் கொண்டிருந்த லாட்டரி டிக்கட்டில் இரண்டை (இதற்கு ஒரு தனிக் கதையை பிறகு சொல்கிறேன்) வாங்கிக் கொண்டு, அடுத்து யானை பயிற்சி முகாமுக்கு விஜயம். மான் வகைகள் முதலில் பார்த்த பிறகு யானைகள் வயது வாரியாக, 21 முதல் 63 வரை, பெயரிடப்பட்ட ஆணும் பெண்ணும். தந்தம் ஒன்றுக்கு மட்டும் பெரியதாய். மதிய உணவுக்குப் பிறகு நண்பர் சுப்ரமணியன் உடல் நலன் பாதிக்கப் பட்டதால், வீட்டில் இறக்கிவிட்டு, Fort kochiக்கு போக, வைபின் என்ற மெட்ரோ நிலையம் சென்று, கார்கோ Ferryக்கு பதில் எலக்டரிக் வாட்டர் மெட்ரோவில் தவறுதலாக ஏறி, ஹை கோர்ட் சென்று திரும்பி ஃபோர்ட் கொச்சி சேர்வதற்குள் சன் செட் ஆகி வெகுநேரமாய்ப் போனது. இது ஒரு இடம் தெரியாத குழப்பத்தின் விளைவு என்பது பின்பே புரிந்த போது , இதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு, இரவு உணவு முடித்து, மறு நாள் மீண்டும் வேறொரு பயணம் செய்யத் தயாரானோம்.

கருத்துகள் இல்லை: