வெள்ளி, 8 மே, 2026
கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா
(04/10/25)
சில வாரங்களுக்கு முன்னால் முடிவெடுத்தபடி கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலாவின் முதல் நாள். நண்பர்கள் ( Punch Pandavas) , ஒருவர் வர இயலவில்லை, கர்ணனுடன் சேர்ந்து அறுவர் அல்லவா ?. காலை 9 மணிக்குப் புறப்பட்டு, காலையுணவுக்குப் பின் Nice Road பிடித்து, பத்தே நிமிடங்களில், எக்ஸ்பிரஸ் வாயில் ஏறி, இன்னோவா கார், டிரைவர் ஹர்ஷாவின் லாவகமான ஓட்டத்தில் வேகமெடுத்தது.
மைசூர் இன்னும் தசரா ஹேங ஓவரிலிருந்து விடுபடவில்லை என்பது மணிப்பால் மருத்துவமனை சிக்னலில் நின்ற போதே தெரிந்தது. இடது பக்கச்சாலையில் திரும்பி நஞ்சன்கூடு வழியாக, குண்டுல் பேட்டில் நிறுத்தி தேநீர் அருந்திய பிறகு, வலது புறம் வயநாடு சாலையில் திரும்பி, பந்திபூர் வனச்சாலையைத் தொட்ட போது, மான் கூட்டமாவது தென்படும் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டே கேரள எல்லையைத் தொட்டபோது, குரங்குகள் தவிர விலங்குகள் எதுவும் தென்பட வில்லை. மழைக் காலமாதலால் காடு மட்டும் பசுமையாய் இருந்தது.
நான்கரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சுல்தான் பத்தேரியைக் கடந்து, முன்பே புக் செய்திருந்த ஹோம் ஸ்டே அடைந்த போது, எதிர்பார்த்ததை விடவும் வீடு நான்கு படுக்கை அறையுடனும், சமையலறை முதலான அனைத்து வசதிகளுடன் அனைவருக்கும் பிடித்திருந்தது. லக்கேஜ்களை இறக்கி வைத்து, அருகிலுள்ள ரெஸ்டாரெண்டில் மதிய உணவை முடித்து, கரப்புழா டேம் நோக்கிப் பயணித்தோம். சுமார் எட்டு கிமீ தொலைவில் இருந்த அப்பூங்கா, சிறுவர் விளையாட்டுகளுடன், மிக அழகான தோற்றத்துடன் காணப்பட்டது.
நுழைவுச் சீட்டுகள் பெற்று உள்ளே நுழைந்த போது , சுற்றிலும் பசுமை சூழ்ந்த மலைகளுடனும், பெரிய ஏரி போன்ற நீர்த்தேக்கத்துடனும் மனதைக் கொள்ளை கொண்டது. சனிக்கிழமையாதலால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. வித விதமாய் போட்டோக்கள் எடுத்த பிறகு , புறப்பட்டு வீடு சேர்ந்து முன்பே ஆர்டர் செய்த இரவு உணவு வரும் வரை சீட்டாட்டம், உணவு இடைவேளை, மீண்டும் சீட்டாட்ட தொடர்ச்சி, மறுநாள் செல்ல வேண்டிய இடங்கள் பற்றிய ஆலோசனை முடிந்து, அவரவர் அறைக்குச் சென்று, பயணக் களைப்பில் உறங்கச் சென்றோம்,மிக நீண்ட பயணத்தின் முதல் நாளின் முடிவில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக