வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்தியன்

நாள்தோறும் மழையா சென்னையிலே
இருமுறை மேட்டூர் நிரம்பியதா
காவிரியில் கரைபுரண்டு ஓடுகிறதா
கனவில்லை தானே நண்பா
கண்களை நம்ப ‌இயலவில்லை
காலங்கள் பருவங்கள் மாறுகின்றன
சமுதாயம் மாறும் நம்பிக்கையுண்டு
சரித்திரம் புரட்டிப் போடப்படுகிறது
புதைந்தவை மேலேறி புதிராய்
புதினங்கள் பனையோலையில் இன்றும்
கடல்கடந்த சரித்திரம் கண்கூடாய்
கல்வெட்டு கடாரம் வரையில்
மொழி மட்டுமல்ல பலவும்
விண்ணில் நிலவின் இருட்டில்
பகையும் பயந்தோடி கூட்டில்
மாற்றங்கள் மகிழ்வே என்றும்
மற்றொன்று உண்டு மனதினில்
ஏழ்மை ஒழிந்து ஏற்றமும்
ஏருழும் கலைஞன் உயர்வும்
சாதிகள் சவக்குழி போதலும்
சாக்கடை அரசியல் சாகவும்
அமைந்து விட்டாலே ஓங்கிடும்
இந்தியன் வல்லவன் என்றபுகழ்

தாயே உன் நினைவில்

தாய்க்கு மகனாக மறுமுறை பிறக்க வேண்டும்
தாலாட்டி அவளெனக்கு ஆரீரோ பாடவேண்டும்
நிலாவைக் காட்டி அவள் கையால் உண்ண வேண்டும்
நிதமும் குளிப்பாட்டி. தலைவாரி உடையணிவிக்க வேண்டும்
ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவளே நீவேண்டும்
ஈரம் மறையாத கண்கள் காயுமுன்னே வேண்டும்
யாரென்ன சொன்னாலென்ன அறுபதிலும் என்னருகே வேண்டும்
ஊரென்ன சொன்னாலும் உனதுமடி நானுறங்க வேண்டும்
உன்னுயிர் மறுபிறவி எடுத்து என்னோடு வேண்டும்
உனது பாசமும் நேசமும் எனக்கு வேண்டும்
தவமிருந்தால் மீண்டு வருவாயின் இறைவனை இறைஞ்சுவேன்
தாயே உன் நினைவில் தினம்தினம் மருகி உருகி நின்றேன்
வந்திடு அன்னையே உன்பிள்ளை புவிமீது காத்திருப்பேன்
வாழ்க்கைக் கணக்கை முடித்து சேர்ந்தே பயணிப்போம்

ஏனிந்த பேதம்

பாட்டு ஒன்று பாடி வச்சான்
பாரதி என்ற புரட்சிக் கவிஞன்
பெண்ணுக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று
கண்ணான பாப்பாவுக்கு நாட்டுக்கு தனியொருவனுக்கு
வளம் கொழிக்கப் பாடியவனோ வறுமையிலே
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வாழ்விக்கவில்லை
சொன்னவன் சொற்கள் வாழ பலகாலம்
சொற்ப நாட்களிலே சென்றான் பராசக்திகாண
நீர்வளம் நிலவளம் மனவளம் குணநலன்
நெருப்பாய் எரிமலையாய் நெஞ்சிலே ரௌத்திரமாய்
எத்தனை பாடல்கள் ஏட்டுச் சுரைக்காயாய்
ஏனோ மனதை வருத்தியது இந்நினைவு
நல்லவர் வாழ்வு நலிந்தே இருக்க
பொல்லாதவர் வாழ்வு உயர்ந்தே இருக்க
ஏனிந்த பேதம் என்றே மனதில்
எப்போதும் கேள்விகள் விடைதான் இல்லை

ஊர்ப்புறம்

நட்பே நலமா நாட்டினர் நலமா
நல்லோர் நலமா மும்மாரி பொழிகிறதா
ஊர்ப்புறம் நலமா ஊரணி நீருண்டா
உழவர் நலமா உழுத நிலமுண்டா
நெல்நாற்று நலமா நெடுவயல் நலமா
காடுகள் நலமா காட்டாறு நலமா
ஆடுகள் மேய்க்கும் அண்ணன் நலமா
தென்னைமரக் கீற்று பனைமர ஓலை
தெற்குக் காற்றில் அசையும் ஒலியுண்டா
குளமொன்றும் பரந்த ஏரியும் பார்த்தேனே
குறையாத நீரோடு கும்மாளமிடும் சிறார்
அப்படியே உள்ளது தானே உரைத்திடு
அடுத்த ஆண்டாவது வருவேன் உனைக்காண
அழகுக் கிராமம் அப்படியே இருக்கட்டும்
சொல்லடி தாயே சோர்வு ஏனுனக்கு
சொக்க வைக்கும் பார்வையெங்கே என்னவளே
நல்லசேதி சொல்வாயா நானிங்கே அமைதியாக
நாளைக் கடத்தி ஊர்வந்து சேர்வேன்

ஆணவக் கூத்தாடிகள்

மொழிகளும் மதங்களும் சாதிகளும் மனிதனால் தோன்றின
நாடுகள் எல்லைகள் சண்டைகள் சச்சரவுகள் இவைகளும்
வேற்றுமை பொறாமை சுயநலம் ஏய்த்தல் ஏளனம்
குணங்கள் பலவும் கூடவே வளர்நதன பெருகின
மண்ணாசை பெண்ணாசை பொருளாசை வேர்விட்டு விருட்சமாயின
தீமைகள் தீயினும் வேகமாய்ப் பரவின திசையெங்கும்
பொறுமை மறைந்து பெருங்கோபம் வளர்ந்து நின்றது
மனிதம் மெல்ல மெல்ல மறைந்து தேய்ந்தது
மீளவே முடியாத பாதைகளில் பயணம் தொடர்ந்தது
ஒன்று நிச்சயமாய்த் தெரிகிறது மனிதனை மனிதனே
அழிக்கும் காலம் புரவியிலேறி விரைந்து வருகிறது
ஆயினும் அறியாமலே ஆணவக் கூத்தாடிகள் ஒருபுறம்
ஆண்டவனே காப்பாற்று கூக்குரலிடும் மனங்கள் மறுபுறம்

நினைவலைகள்

உறக்கமற்ற இரவுகளில் உனது பாடல்கள் தாலாட்டுமா
உழைத்துக் களைத்து ஓயும்நேரம் உன்விரல்கள் வருடுமா
மாலைநேரத்து மங்கிய ஒளியில் தோள்சாயக் கிடைக்குமா
மயக்கும் இனிய ‌நிமிடங்களில் அணைப்பின் சுகம்தருமா
காலார நடந்து வர கைகோர்த்த விரல்கள் அழுத்துமா
காதோரம் பேசும் இரகசியங்கள் கற்கண்டாய் இனிக்குமா
தொலைதூரம் சென்றாலும் தொலையாத நினைவலைகள் தொடருமா
தொக்கி நிற்கும் கண்ணசைவில் கதைகள்பல தோன்றுமா
இதழோரம் சுவை சேர்க்க முத்தாரம் தருவாயா
இனியேனும் என்னோடு இணைந்தே எப்போதும் இருப்பாயா
காலமது் உருண்டோடி நரைதோன்றி முகச்சுருக்கம் வருமுன்னே
காதலியே வந்துவிடு காத்திருந்தே கண்கள் களைத்தனவே

கூப்பாடு, வரலாறு,சமுதாயம்

ஏண்டா செவலை என்ன சொன்னாலும் கேக்காதோ
மாண்ட‌‌ விசயத்த பேசிப்பேசி நேரம்தான் விரயம்
ஆண்ட ‌அவன் செத்து நூறாறு வருசமாச்சு
தோண்டிப் பாக்க இதுவென்ன கேணித் தண்ணியா
திராவிடனோ ஆரியனோ இசுலாமியனோ கிறித்தவனோ சீக்கியனோ
யாருக்கும் இந்த நிலம் சொந்தமில்வே நாடோடிகளே
ஒண்டிப் பிழைக்க காடுமேடேறி வந்தவங்க
ஒனது எனதுனு பேசுறது எதுக்கு வீணா
போனது போனது தான்மக்கா திரும்ப வாராது
மானம் மரியாத காப்பாத்த மனுசனா இருந்துக்க
கூப்பாடு போட்டு ஊரக்கூட்டி வேசம் எதுக்கு
கூட்டுலே ஆவிபிரிஞ்சா மண்ணா சாம்பலாத் தான்போவே
வரலாறு விட்டுபுட்டு வருங்காலம் பத்தி யோசி
வானத்த ஊடுருவு வாழுமிடம் தேடி வளம் சேரு
வார்த்தைலே வன்மம் வேணா உண்மை நிக்கட்டும்
கூட்டா இருக்க கத்துகிட்டா மாத்தம் வரும்
கூறுபட்ட சமுதாயம் ஒன்னுசேரும் வளம் கொழிக்கும்

நெஞ்சு பொறுக்குதிலை

பாரதி நெஞ்சு பொறுக்குதிலை என்றான்
ஓடி விளையாடு பாப்பா என்றான்
கங்கை நதிப் புரத்து கோதுமைக்கு
காவிரி வெற்றிலை பண்ட‌மாற்று என்றான்
காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
தீண்டாமை முதல் சாதிவேறுபாடு வரை
மனித மனங்கள் மாறுவதில்லை ஏனோ
புத்தன் காந்தி காமராசர் போதுமோ
இன்னும் எத்தனை காலம்தான் வேண்டுமோ
வேதனை மனதில் வேரூன்றி பலகாலம்
மறுபடி பிறந்து ரௌத்திரம் பழகி
ருத்திர தாண்டவமாடி மாய்த்திடு மிலேச்சரை
களையெடுத்தே நற்பயிரைக் காக்க இயலும்

சிந்தனை செய்திடு

முழு நிம்மதி என்பது யாது
முழு நிலவுக்கும் களங்கம் உண்டு
குறை என்பது யாது கூறுவீரோ
முறை அற்ற யாவும் குறையோ
சிறை செல்வது குற்றம் செய்தே
கறை படிந்த வாழ்வின் விளைவோ
ஏழைக்கும் செல்வந்தர்க்கும் நிம்மதி இல்லை
ஏனந்த நிலையென்று கூறுதல் இயலுமோ
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன்
ஆண்டவன் நடத்தும் நாடக
த்து விளைவோ
பாட்டுக்குப் பொருள் தேடி அலைந்தே
பதிவிட்ட போது உள்ளமே ஊற்றானது
தோண்டத் தோண்ட ஊற்றாய் சுரந்திடும்
தேங்கிக் கிடக்கும் ஆழ் மனதில்
நீயும் எழுதலாம் நிதமும் எழுதலாம்
காயங்கள் கனவுகள் கற்பனை கலந்தால்
காவியம் படைக்கலாம் கவிஞனும் ஆகலாம்
ஓவியம் தீட்டலும் ஒருசிலை வடித்தலும்
புத்தியைத் தீட்டும் கூர்மை அறிவாலே
சிந்தனை செய்திடு சிற்பியாய் மாறலாம்

வாழ்க்கை புரியவில்லை

சூலுற்ற பெண்ணுக்குச் சுமையில்லை பிள்ளை
தோளுக்கு வலியில்லை சாய்ந்திடும் தலையால்
போருக்குப் போகும் வீரர்க்குப் பயமில்லை
காதலுற்ற பெண்டிருக்கு கணமேனும் உறக்கமில்லை
நட்பென்று வந்தாலே சாதிமதம் பார்ப்பதில்லை
வாழும் நாட்களிலே வாழ்வியல் புரிவதில்லை
கல்லூரிக் காலத்தில் சூத்திரங்கள் தெரிவதில்லை
மூடநம்பிக்கை மூளைக்குள் ஆராய்ந்து பார்ப்பதில்லை
கயவர்க்கும் கொலைஞருக்கும் மனச்சாட்சி இருப்பதில்லை
அரசியல் வர்த்தகர்கள் நமக்காய் உழைப்பதில்லை
பிரித்தாளும் உள்ளங்கள் இன்றும் மாறவில்லை
இறைவன் பெயராலே ஏய்த்தலும் நிற்கவில்லை
எதுதான் வாழ்க்கையென்று எனக்கும் புரியவில்லை

நிலாப் பெண்ணே

எத்தனை ஆண்டுகளாய் உனைத் தேடி நின்றேன்
எங்கே நீயென்று அலைந்து திரிந்தேன்
இருளிலும் ஒளியிலும் இரவிலும் பகலிலும்
கடும் மழை பனிப் பொழிவு இவைகளும் கடந்தேன்
மதிமுகம் கண்டிட‌ மதிகெட்டு அலைந்தேன்
மலர்ந்த உன்சிரிப்பின் மறுபக்கம் தேடினேன்
யாரும்‌ பார்த்திராத ஒருமுகம் ஒளித்தாய்
சொல்லித்தானே வந்தேன் யாருமறியா இரவின்துணையில்
சொக்கிப் போனேன் இரண்டே மைல்கல்
சொந்தமாய் என்னை அணைத்திடு வாயென
என்னவாயிற்று மாயாவிப் பெண்ணே உன்நிலை
ஏற்றுக் கொள்ளாமல் எங்கே மறைந்தாய்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உயிரோடு உனது வாசலில் இருப்பேன்
நீயும் நானும் கலந்து பரந்தவெளியில்
நிலாவென உலகம் படைப்போம் தலைநிமிர்வோம் !

ஆசிரியப்பெருமானே

களி‌மண்ணாய் இருந்தேன் பாத்திரமாய் மாற்றினார்
கல்லாய் இருந்தேன் சிலையாய் வடிவமைத்தார்
இரும்பாய் இருந்தேன் உருக்கி வார்த்தார்
இலையாய் ஓலையாய் எழுத்தாணியால் நூல்களாக்கினார்
மணலைக்கூட சிற்பமாய் மாற்றியவர் வடிவமைத்தார்
மணல்மேடுகள் கோபுரங்களாய் உயர்ந்தன நிமிர்ந்தன
மயனோமாயனோ தொட்டவை அனைத்தும் காவியமாயின
தெய்வங்கள் சிலைகளாய் சிற்பமாய் கோவிலில்
தொட்டதெல்லாம் பொன்னாக மாற்றிய ஆசிரியப்பெருமானே
தொடுவதற்குப் பாதம்தந்திடு சிரம்தாழ்த்தி வணங்குவோம் !

நட்பின் ஆலமரம்

அழகான ஆலமரமொன்று செடியிலிருந்து மரமாயிற்று
அதன் கிளைகளும் விழுதுகளும் பரவிநின்றன
பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி. பசுமை
பறவைகள் ஒவ்வொன்றாய்க் கிளைகள் தோறும்
பச்சைக்கிளி மைனா புறா வல்லூறு காகம்
பருந்து கழுகு குயில் குருவி
பஞ்சவர்ணக்கிளி அன்னம் வாத்து ஆந்தை
பறந்து திரிந்து மீண்டும் கிளைகளில்
சரணலாயமாய் பலவிதக் குரல்களோடு ரம்மியமாய்
சண்டையிடும் நேரங்களில் கூக்குரலாய் சத்தங்கள்
காலமாறுதல் போலவே மகிழ்வும் பிணக்கும்
ஒரேமரத்துப் பறவைகள் ஆலமரம் அவைகளின் இல்லமாய்
ஒற்றுமை மற்றவர் கண்களுக்கு வியப்பாய்
எத்தனை அழகாய் ஆலும் பறவைகளும்
சத்தான நட்புக்கு இதுவே சாட்சி
(CEG79 நட்பின் ஆலமரம்)

கணேசா

ஆனை முகத்தோனே மூஞ்சூறு வாகனனே
ஆண்டவனே ஆதிசிவன் மகனே கணேசா
கும்பிட்ட கரங்களுக்கு குறையற்ற வாழ்வுண்டு
குலம்காக்க வந்தவனே தொப்பை கணபதியே
விநாயகனே வினை தீர்ப்பவனே வேதநாயகனே
விடியும் காலையிலே வணங்கி மகிழ்வோமே
மங்கள நாளுக்கு அதிபதியே பார்வதிமைந்தா
மயிலேறு முருகனின் தமையனே சிவனின்மகனே
நல்லவை யாவும் நின்பெயர் கூறியே
நாளும் செய்திடுவோம் யாமே பிள்ளையாரே
நல்வாழ்வு என்றும் தந்து காத்திடுவாயே

இயற்கை அழகு

ஆத்துலே வெள்ளம் கரை புரண்டு போகுது
ஆடையை தோள்மேலே போட்டு போறாளே பொன்னி
அசைந்தாடி நடந்து போவையிலே கொலுசு குலுங்குதடி
அன்னநடையோ அழகுச் சிலையோ ஆராயும் கண்கள்
படித்துறையிலே பக்கத்து வீட்டுமாமி கோடிவீட்டு கோகிலா
பலவண்ணத் துணிகளை சவுக்காரம் போட்டபடி பத்மா
பாவாடையை மார்போட உசத்திக் கட்டிய பார்வதி
விடிஞ்சும் விடியாத காலைப் போதிலே கோயில்மணி
விநாயகர் துதிபாடி அவனப்பன் சிவனையும் வணங்கி
கோலமிட்ட தெருவெங்கும் பூசணிப்பூ மாட்டுச் சாணம்
கோடியிலே டீக்கடை பெஞ்சிலே நாட்டாமை நாளிதழோட
இரம்மியமா விடிகிற கிராமத்துக் காலைப் போது
இயற்கை அழகுக்கு ஈடில்லை இங்கேதான் வாழவேண்டும்

மனிதம்காத்து மற்றவை மறந்திடு

மனிதம் என்றொரு‌ நிலையுண்டு
மக்களைக் காக்க வருவதுண்டு
புயலின் சீற்றம் அழிவின்போது
புரண்டோடும் வெள்ள அபாயத்தின்போது
சாதிமதங்கள் சாக்கடை நீரிலப்போது
சாத்திர சம்பிரதாயம் இல்லையப்போது
தீண்டத் தகாதவர் எவருமில்லை
தீட்டும் இல்லை சகுனமுமில்லை
வாழ்ந்திட மட்டுமே வழிதேடு
வர்ணங்கள் ஆயிரம் எதற்கிங்கே
எத்தனை வளர்ச்சி எந்திரவேகம்
எங்கே போனது மூளைவளர்ச்சி
பித்தம் பிடித்து அலையும்மனிதா
பிறவியொன்றே பிரித்தாளுதல் விட்டுவிடு
உரக்கச் சொல்வேன் உணரந்திடு
மனிதம்காத்து மற்றவை மறந்திடு

மகள்

காலங்கள் மாறும் கனவுகள் நனவாகும்
காற்றின் தழுவல்கள் கடலின் அலைகள்
தொட்டு விட்டுப் போகும் தொலைதூரம்
தொடரும் உறவுகள் தோளில் சுமக்கும்
பயணங்கள் பாதைகள் வளையும் நெளியும்
பாசக் கூட்டினில் அடைகாக்கும் அன்பாய்
மனையாளோடு மகளும் தாங்கிப் பிடிப்பர்
மகளென்றாலே தந்தைக்குத் தனியொரு பாசம்
விளக்குதற் கரிய வியத்தகு நேசம்
உள்ளம்மருகும் இந்த உறவின் பிணைப்பில்
மகளென்ற சொல்லே பெண்ணின் பெருமை
மக்களில் அவளே செல்வம் தந்தைக்கு !

இரண்டு காட்சிகள்

வானம் பொத்துகிட்டு ஊத்துதடா
வயலெல்லாம் வெள்ளத்துலே மூழ்குதடா
காஞ்ச நிலத்துலே ஈரமில்லேடா
கால்குடம் தண்ணிக்கும் தவிக்குதடா
இரண்டு காட்சிகளும் காணுதடா
இருப்பதோ ஒரேநாட்டுல தான்டா
ஆறெல்லாம் கரைபுரண்டு ஓடுதடா
ஆனாலும் ஏரியிங்கே காயுதடா
ஆர்செய்த குத்தமிது சொல்லுங்கடா
ஆண்டு பலவாச்சு யோசிங்கடா
ராக்கெட்டு செவ்வாய்க்குப் போச்சுடா
பக்கெட்டு நீருக்கு வழியில்லடா
வானத்துலே தேடறது இருக்கட்டும்
வறண்டு போகாதநீரும் வேண்டுமடா
கோரிக்கை வச்சுபுட்டேன் உனக்கிங்கே
சேரிக்கும் நீர்கொண்டு சேத்துடு !

சுதந்திரம் பெற்றோமா

இன்னொரு விடியல் இன்னொரு சுதந்திரதினம்
இனியதா கடியதா எல்லாம் மாறியதா
மாற்றம் எங்கே மனிதம் எங்கே
மறைந்து நிற்கிறது மானத்தைக் காக்க
இந்தியனும் பாகிஸ்தானியனும் சீனனும் இலங்கையனும்
வடநாட்டான் தெற்கத்தியான் கர்நாடக கேரளத்தான்
ஆந்திரன் தமிழன் திராவிடன் ஆரியன்
ஆட்சியாளன் அரசியல்வாதி முதலாளி தொழிலாளி
உயர்சாதி கீழ்சாதி தீண்டாமை மதவெறி
உண்மையாய்ச் சுதந்திரம் பெற்றோமா சொல்வீரா
நட்பில்கூட நால்வகைத் தேடல் இங்கே
நடப்பவை காணவும் கேட்கவும் நாராசமாய்
யாருக்கும் தெளிவில்லை ஏதோஒன்றைத் தேடியே ஓட்டம்
நெருப்பும் பஞ்சுமாய் எப்போது பொசுங்குமோ
விட்டுவிடக் கூப்பாடு செவிடன் காதில்சங்கு
விடுதலை கிடைக்குமா விடியலா காரிருளா ?

மனிதம் வாழட்டும்

காலம் காலமாய்க் கதறினாலும் மனமாற்றம் அடையாதவர்களை ஒன்றும் செய்ய இயலாது

பிறக்கும்போதும் இறக்கும்போதும் எதுவும் நமதில்லை, இடைப்பட்ட காலமோ சுமார் எண்பது வருடங்கள்.
யாருக்குப் பிறப்போம் என்பதும் நம் முடிவு அல்ல. எங்கே எப்போது உயிர் துறப்போம் தெரியாது.
குடும்ப வாழ்வில் சில‌ காலமும் சிறுவராய் சில காலமும் பணம் தேடி சில காலமும் ஓடிய பின்னே இருக்கும் சில நாட்களில் ஏன் இந்தக் கூச்சல்.
எம்மதமோ மொழியோ எல்லையோ இல்லாமல் தானே இருந்தோம். நாளையே உலகம் அழிகின்றது என்றால் கூக்குரல்கள் என்னவாகும்.
தீமை பொறாமை ஊழல் வன்முறையை எதிர்த்துப் போராடுவோம். அனைவர்க்கான தனித்துவம் இருக்கட்டும். மனிதர்களாய் அறிவோடு இருப்போம். சரித்திரத்தை மாற்ற இயலுமா, அதைப்பற்றிப் பேசுவது வீணே.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். கட்சிகளையும் வேற்றுமையும் வளர்த்து விட்டது நாமே. குற்றவாளியே நியாயம் பேசுகிறான்.
சிந்தியுங்கள் முதியோரே, நம்மைத் தான், இளையவரை நல் வழியில் செலுத்துங்கள், பழைய பஞ்சாங்கம் பரணில் போடுங்கள்.
இப்போதும் ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். நல்லவை தீயவை நிகழும் போதே அறியப் படுகிறது.
மனிதம் வாழட்டும்.

காலம்தான் மாறிப்போனது

இரகசியமாய் உனக்கு மட்டும் சொல்வேன்
ஓடிவிளையாடிக் களைத்த முகம் துடைத்தகதை
கைகோர்த்து கடற்கரையில் அலைதழுவ நடந்தகதை
கடலைமிட்டாய் நான்பாதி நீபாதி சுவைத்தகதை
உன்கண் பொத்தி யாரென்று கேட்டகதை
வீடெங்கும் ஒளிந்திருந்த விளையாட்டில் அணைத்தகதை
தொட்ட போதெல்லாம் உடல் சிலிர்த்த கதை
உன்வீட்டுத் தின்பண்டம் ஒளித்துக் கொண்டுவந்த கதை
கூட்டத்தில் நீயிருந்தபோது கண்கள் பேசியகதை
காலம்தான் மாறிப்போய் நடைதளர்ந்து போனதடி
அசைபோட அனைத்துமே என்நினைவில் தினம்தினமாய் !

பெண்பிள்ளை

உன்னோடு விளையாடி பலநாட்களாயிற்று
உறவாட நீயுண்டு தோள்சுமந்து
கண்ணுக்குள்உன்னுருவம் கலையாமலே
காலச்சக்கரம் சுழன்று கன்னியாகநீஇன்று
தந்தைக்கு மகளென்றால் தனிவிருப்பம்
தாயாக சிலநேரம் உன்செயல்கள்
சேயாக என்தோளில் பலநாட்கள்
சுமந்த காலங்கள் சுகமாகும்
பெண்பிள்ளை தந்தைக்கு என்றும்சிறப்பே
கண்ணாக கருத்தாக பாசம்நேசம்
உன்பிறப்பே சிறப்பு உறவுக்கு
உனக்கு இணையில்லை அன்புகாட்ட
தொலைதூரம் சென்று வாழ்ந்தாலும்
நிலையான உன்சிரிப்பு உள்ளம்சேரும்

எங்கே தவறு

நான் யோசித்துப் பார்க்கிறேன் கனவும் காண்கிறேன். சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்க்கிறேன். ஏதோ ஒரு காரணத்திற்காக மனிதன் சண்டையிட்டும் பிரிவினையோடுமே வாழ்கிறான். மண்,பெண்,மதம்,மொழி,நிறம் ஏதோ ஒன்று ஒற்றுமைக்கு ஊறு விளைவித்துக் கொண்டே இருக்கிறது.
மேடைகளில் முழக்கங்கள், அறைகளில் விவாதங்கள், பெரியோரின் அறிவுரைகள், கடவுளர் அவதாரங்கள் எவையும் இவற்றை மாற்ற இயலவில்லை. நூறாண்டுகளே வாழும் ஒருவன் தனக்கு இறப்பே இல்லாதது போல் நினைத்து செயல்பட்டு மாண்டு போகிறான்.
படைத்தவனா இயற்கையா எங்கே தவறு. ஏன் மாற்றவே இயலாமல் போனது. கூக்குரல்கள் பயனில்லாமல் கரைந்து போவதேன். தேடி விடை கண்டவராய்த் தோன்றுபவர் ஆசிரமத்தில் வசதியாய்ப் பேட்டி கொடுத்தே மறைந்து போவதேன்.
ஆட்சியாளர், மன்னர், மந்திரி பதவிகள் மாறுகின்றன. வியத்தகு தொழில்நுட்பம், வேற்றுக்கிரக ஆராய்ச்சி. எல்லாம் சரி . மனித மனங்கள் மட்டும் மாறாமலே இருப்பதேன். கேள்வி கேட்கும் நானும் ஒரு நாளில் இல்லாமல் போவேன், விடை காணமுடியாப் புதிராய் சமுதாயம் யுக அழிவுக்காய் விழித்திருக்கும்.

உழவும் உயரட்டும்

விடையொன்று இல்லை உழவர் வறுமைக்கு
கடையாணி தேரோட உயிர்வாழ உணவே
எங்கோ தவறு கணக்கு சரியில்லை
எப்படி திருத்தலாம் எட்டலை மனசுக்கு
ஏழையாய் அவனிருக்க மாளிகையில் நானும் நீயும்
உணவின்றி உயிரில்லை உழவின்றி உணவில்லை
கணமேனும் இதையாரும் நினைத்துப் பார்த்தோமா
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
உதட்டோர வார்த்தைகள் வாய்ச்சொல் வீரர்நாம்
வளமான பாரதத்தில் உழவர் வாழ்வுயர
வகையொன்று செய்திடல் கடமையெனக் கொள்வோமா
சாலைகள் நதிநீரோடு உழவும் உயரட்டும்
சான்றோர் நாட்டில் சரித்திரம் அதுவாகட்டும் !

மழலை

குறுகுறுன்னு பார்வை உன்னைச் சுற்றி
விறுவிறுன்னு அறையெங்கும் உன்தவழல்
சின்னக் கண்ணா சிரிப்பாய் நன்றாய்
கன்னக் குழியழகு காணக்கண் கோடிவேண்டும்
பொக்கை வாய்திறந்து பேசிடும் மழலைக்கு
பொற்காசு எடைக்கு எடையே தரலாம்
அம்மா என்ற முதல்வார்த்தை இதயம் நிறையும்
அழகு உன்முகமோ விரல்கள் மெத்தெனவே
கரம் பிடித்து தத்தி நடக்கையிலே
கவலை மறந்த நிலையைப் பெற்றோம்
கள்ளங் கபடமற்ற நிலையே மழலையன்றோ
உள்ளம் உருக்கி நின்றாய் உயிர்கலந்தாய்
என்றும் இதுபோன்றே இருத்தல் ஆகுமோ
துன்பம் உணராத நிலையே இதுவன்றோ !

கிராமத்துக் காட்சி

கட்டவிழ்த்த கன்றது துள்ளி ஓடிவரும்
மொட்டலர்ந்த தாமரை மலர்ந்து சிரிக்கும்
கூட்டைத் துறந்த பறவையினம் கூவிக்குரலெழுப்பும்
பாட்டையிலே ஏரோட்ட காளைரெண்டு ஓடிவரும்
முட்டையிட்ட கோழியது குக்குக் என்றோடும்
சட்டையில்லா பரட்டையர் ஓடைபக்கம் ஒதுங்க
பெட்டைப் பிள்ளைகள் புள்ளிக்கோலம் பின்னலிட
எட்டிநின்று மாமன்மகன் கண்ணெல்லாம் அவள்மீதே
காட்டுக்கு மஞ்சம்புல் அறுத்துவரப் போகணுமே
வீட்டு அடுப்பெரிக்க விறகும் வேணுமே
கட்டுச் சாதமோ கூழோ கலயத்தில்
தொட்டுக்க ஊறுகாய் இருந்தால் உண்டு
ஆட்டு மந்தையை அத்தைமகன் ஓட்டிப்போவான்
பாட்டுப் பாடிஆடி கூட்டாளி குரல்கொடுப்பான்
முட்டிமோதி விளையாடி முன்னாடி ஆட்டுக்குட்டி
சுட்டெரிக்கும் வெயில்தடுக்க தலையில் சும்மாடு துணியுண்டு
தொட்டியில் நீரருந்தி பட்டியிலே அடைச்சுட்டு
சுட்டநீராடி சுடுசோறு சாப்பிட்டு கண்ணயர்வான்
வட்ட நிலாவிலே தேவதைபோல் அவள்சிரிப்பாள்
நட்டநடு ராவினிலே கனவினிலே இவன்சிரிப்பான் !

வாரணம் ஆயிரம்

வாழும் காலம் ஒரு நூற்றாண்டுமில்லை
வாரணம் ஆயிரம் வன்மம் கோடி
விலங்கும் பறவையும் வாழ்வியல் சொல்லும்
வீண்பேச்சு மட்டுமே வீணர்கள் சொல்லில்
எத்தனை வேதங்கள் இலக்கிய நூல்கள்
ஏட்டுச் சுரைக்காய் இவர்க்கு உதவாது
பிரிவுக்குப் போராடும் கூலிக் கும்பல்
பிறத்தலும் இறத்தலும் மறந்ததும் எதற்கோ
நிரந்தரம் என்பதே இல்லா வாழ்வினில்
நிதமும் பகைமையைப் புகுத்துதல் முறையோ
என்மொழி உன்மொழி என்மதம் உன் மதம்
எத்தனை பிரிவுகள் எப்படி வந்தன
சொந்தம் என்றிட ஆறடி நிலமுமில்லை
சொர்க்கமோ நரகமோ போகுமிடம் அறியோம்
வேற்றுமை யாவையும் தீயினில் எரித்திட
வேள்வியொன்றை இன்றோ நாளையோ நடத்திடுவோமா
எண்ணமும் செயலும் நல்லவை ஆயிடின்
எதிரிகள் என்பதே வழக்கொழிந்து போகும் !

மயக்க நிலை

ஏனோ வானிலை மாறுது
ஏதோ ஒன்று சரியில்லை
சரிவு இது தெரிகிறது
சரித்திரம் தவறாக மாறுகிறது
பார்வை தெரிந்தும் குருடனாய்
நேர்மை தொலைத்த அறிவிலியாய்
விழுந்தவன் எழவே இல்லை
வியப்பாய் செயல் எல்லாம்
சவக்குழிப் பிணங்கள் சந்தையில்
சாத்திரம் பேசித் திரிகின்றன
மயக்க நிலையில் நாட்டினர்
மருந்தொன்று இல்லை இதற்கு
ஒற்றுமை கூறு போட்டு
ஒவ்வொரு தெருமுனையில் விலைக்கு
கடவுளர் செய்வதறியாது கல்லாய்
கள்வர்கள் கடவுளாய் பீடத்தில்
பொடிவைத்த வார்த்தைகள் புரியுமா
பொருள் தெரிந்தவர் புகலுவர்‌!

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் சேத்தப்ப ஆறு வயசு. ஊர்லே போய் எனக்கும் தங்கச்சிக்கும் மொட்டை அடிச்சு காது குத்தினாங்க.
ஒண்ணாம் கிளாஸ் சேந்தப்ப மொட்ட தான். கோ எட் ஸ்கூல் எப்பவும் எனக்கும் கிளாஸ் பொண்ணுங்களுக்கும் போட்டி ஃபர்ஸ்ட் யார் வாங்கறான்னு.‌ நான் டீச்சர்ஸ்ஸோட செல்ல பிள்ளை ஆயிட்டேன். போகப் போக ஸ்கூல் டிராமால நான். ரெண்டு மூணு வேசம்லாம் போட ஆரம்பிச்சேன். டெய்லர்ஸ் ரோடு ஏரியால ஐயா பாப்புலரா ஆயிட்டாரு. காலனிலேயும் நல்ல‌ பயன் படிக்கற பையன்னு எல்லாருக்கும் செல்லப்பிள்ளை ஆகிட்டேன்.
அப்பல்லாம் என்ன பண்டிகை வந்தாலும் அவங்க வீட்டுலே சாப்பிட கூப்பிடுவாங்க. தர்மசங்கடமா இருக்கும் அன்புத்தொல்லையா. எல்லாருமே உறவினரா பழகறது நல்லாவே இருக்கும்.
என்ன விட சின்ன‌வயசு குட்டி பசங்க அண்ணானு கூப்பிட்டுகிட்டு கூடவே வரது பெருமையா இருக்கும்.
அஞ்சாங்கிளாஸ் முடிச்சு கிறிஸ்டியன் காலேஜ் ஸ்கூல் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நாள். அப்பா டூட்டில இருந்து வரல‌ நான் பாட்டுக்கு மாடிமேல‌ போய் காத்தாடி விடறத பாக்க போயிட்டேன். அப்பா மேலே வந்து இரண்டு அடி போட்டு வீட்டுக்குப் போய் ரெடி ஆகி எக்ஸாம் ஹால் போறப்ப கேள்வித்தாள் கொடுத்துட்டு இருந்தாங்க. தமிழ் மீடியம் தான். முப்பது நிமிசத்துக்கு முன்னாடியே எழுதி முடிச்சு முதல் ஆளா வெளிய வந்தப்ப என்ன ஒரு மாதிரி பாத்தாங்க. எப்படியோ இடம் கிடைச்சு படிக்க‌  ஆரம்பிச்சப்ப தான் தெரிஞ்சது நெடுஞ்செழியன் புள்ளை, ஸ்டாலின்லாம் அங்க தான் படிக்கறாங்கனு. நான் சேந்தது 1967 ஆறாங்கிளாஸ்ல.
பாதிப்பேருக்கு மேல பணக்காரப் பசங்க, நடுத்தரக் குடும்பத்துக்கும் கீழேன்னு பசங்க‌ பிரிஞ்சுதான் இருப்பாங்க. நம்ம முதல் ரேங்க் இங்க வந்த பிறகு பறி போச்சு. ஆனாலும் டிஸ்டிங்சன் கார்டு வாங்க தவறனதே இல்லை. நம்ம டாக்டர். ராஜன் தான் முதல் ரேங்க் வாங்குவார்.
புட்பால்,ஹாக்கி தவறாம கிளாஸ் பசங்களோட ஆடுவேன். முதல்ல‌ ஸ்கவுட் அப்புறம் என் சி சி எல்லாம் உண்டு. ஸ்கூல் லைப்ரரியும் குமுதமும் சாண்டில்யன்,சுஜாதா,லஷ்மி,நா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. ராஜாஜி எழுதிய இராமாயணம் கூட விடவில்லை, ஸ்கூல் புக்ஸை விட‌ இதப் படிச்சதுதான் அதிகம்.
சேத்துப்பட்டு பிரிட்ஜ்,அப்ப பேரு மெக்னிக்கல் பிரிட்ஜ் ஏறி படிக்கட்டுலே இறங்கி ,இரயில்வே லைன் கிராஸ் பண்ணி ஸ்கூல் பின்னாடி கேட் வழியாதான் போவோம். நிறைய நாட்கள் ஆளுங்க‌ அடிபட்டு சைட்லே போட்டிருப்பாங்க, ஆனா போய்ப்பாக்கவே பிடிக்காது.
(இன்னும் வரும் )

விசும்பின் மழைத்துளிகள்

புவியன்னைக்கு காலை வணக்கம்
புலர்பொழுதில் புத்துணர்வு வணக்கம்
புதுமழைப் பொழிவில் கொள்ளை அழகாய்
புதுச்சேலை உடுத்திய பொலிவோடு
கண்களுக்குக் குளிர்ச்சியாய் உன்னழகு
காணக் கண்கோடி வேண்டும்
பசுமைப் போர்வையில் பரவசமாய்
விசும்பின் மழைத்துளிகள் நீர்முத்தாய்
இதுகாறும் வறண்ட உன்தோற்றம்
இப்போதே இனிதாய் இளமையாய்
எப்போதும் புன்னகைக்கும் உன்தோற்றம்
எம்மவர்க்கு உள்ளத்து உற்சாகம்
உன்னுருவம் எந்நாளும் இளமையோடு
உவகை கொண்டு இனித்திருக்க
மாதம் மும்மாரி பொழியட்டும்
ஏரிகுளம் நதியாவும் நிறையட்டும்
ஏற்றமிகு வாழ்வுதனை உன்மக்கள்
ஏர்பூட்டி பயிரிட்டு முப்போகம்
விளைவித்த நெல்மணிகள் காய்கறிகள்
உனது காலடியில் சமர்ப்பிப்போம் !



Image may contain: tree, sky, plant, outdoor and nature