வெள்ளி, 27 செப்டம்பர், 2019

எங்கே தவறு

நான் யோசித்துப் பார்க்கிறேன் கனவும் காண்கிறேன். சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்க்கிறேன். ஏதோ ஒரு காரணத்திற்காக மனிதன் சண்டையிட்டும் பிரிவினையோடுமே வாழ்கிறான். மண்,பெண்,மதம்,மொழி,நிறம் ஏதோ ஒன்று ஒற்றுமைக்கு ஊறு விளைவித்துக் கொண்டே இருக்கிறது.
மேடைகளில் முழக்கங்கள், அறைகளில் விவாதங்கள், பெரியோரின் அறிவுரைகள், கடவுளர் அவதாரங்கள் எவையும் இவற்றை மாற்ற இயலவில்லை. நூறாண்டுகளே வாழும் ஒருவன் தனக்கு இறப்பே இல்லாதது போல் நினைத்து செயல்பட்டு மாண்டு போகிறான்.
படைத்தவனா இயற்கையா எங்கே தவறு. ஏன் மாற்றவே இயலாமல் போனது. கூக்குரல்கள் பயனில்லாமல் கரைந்து போவதேன். தேடி விடை கண்டவராய்த் தோன்றுபவர் ஆசிரமத்தில் வசதியாய்ப் பேட்டி கொடுத்தே மறைந்து போவதேன்.
ஆட்சியாளர், மன்னர், மந்திரி பதவிகள் மாறுகின்றன. வியத்தகு தொழில்நுட்பம், வேற்றுக்கிரக ஆராய்ச்சி. எல்லாம் சரி . மனித மனங்கள் மட்டும் மாறாமலே இருப்பதேன். கேள்வி கேட்கும் நானும் ஒரு நாளில் இல்லாமல் போவேன், விடை காணமுடியாப் புதிராய் சமுதாயம் யுக அழிவுக்காய் விழித்திருக்கும்.

கருத்துகள் இல்லை: