வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கிராமத்துக் காட்சி

கட்டவிழ்த்த கன்றது துள்ளி ஓடிவரும்
மொட்டலர்ந்த தாமரை மலர்ந்து சிரிக்கும்
கூட்டைத் துறந்த பறவையினம் கூவிக்குரலெழுப்பும்
பாட்டையிலே ஏரோட்ட காளைரெண்டு ஓடிவரும்
முட்டையிட்ட கோழியது குக்குக் என்றோடும்
சட்டையில்லா பரட்டையர் ஓடைபக்கம் ஒதுங்க
பெட்டைப் பிள்ளைகள் புள்ளிக்கோலம் பின்னலிட
எட்டிநின்று மாமன்மகன் கண்ணெல்லாம் அவள்மீதே
காட்டுக்கு மஞ்சம்புல் அறுத்துவரப் போகணுமே
வீட்டு அடுப்பெரிக்க விறகும் வேணுமே
கட்டுச் சாதமோ கூழோ கலயத்தில்
தொட்டுக்க ஊறுகாய் இருந்தால் உண்டு
ஆட்டு மந்தையை அத்தைமகன் ஓட்டிப்போவான்
பாட்டுப் பாடிஆடி கூட்டாளி குரல்கொடுப்பான்
முட்டிமோதி விளையாடி முன்னாடி ஆட்டுக்குட்டி
சுட்டெரிக்கும் வெயில்தடுக்க தலையில் சும்மாடு துணியுண்டு
தொட்டியில் நீரருந்தி பட்டியிலே அடைச்சுட்டு
சுட்டநீராடி சுடுசோறு சாப்பிட்டு கண்ணயர்வான்
வட்ட நிலாவிலே தேவதைபோல் அவள்சிரிப்பாள்
நட்டநடு ராவினிலே கனவினிலே இவன்சிரிப்பான் !

கருத்துகள் இல்லை: