சனி, 6 ஜூன், 2020

வாழ்க்கை ஒரு வட்டம்

நல்லூரில் பிறந்து அமுதூரில் வளர்ந்து
அழகூரில் விளையாடி பல்லூரில் படித்து
கல்லூரில் நுழைந்து காதலூரில் திளைத்து
கண்ணூரில் கலந்து களவூரில் ஒளிந்து
மனவூரில் மகிழ்ந்து மணவூரில் இணைந்து
பிள்ளையூரில் சேர்ந்து வேறூரில் சென்று
வேலையூரில் உழைத்து ஓய்வூரில் சுருங்கி
மூதூரில் குனிந்து எமனூரில் உயிர்நீத்து
எரியூரில் சாம்பலாகி ஆறூரில் கரைந்து
கடலூரில் கலந்து விண்ணூரில் சேர்வாயே!

தாமரைத் தோட்டம் பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம் 7
மெது மெதுவா கல்லூரி வாழ்க்கை பழக ஆரம்பிச்சது. அசைன்மென்ட், வொர்க் சாப், லேப், டிராயிங் வகுப்புனு இடம் மாறிட்டே இருக்கனும். என் சி சி லே சேந்து பெரேட்,ஆக்கி, புட்பால் விளையாட்டு எதையும் விடறது இல்ல. ஆனா எதுலேயும் பெரிய லெவலும் வந்ததில்லே.
நண்பன் சம்பந்தம் பச்சையப்பன் கல்லூரிலே. மூன்றாம் வருசம் மெக்கானிகல் இஞ்சீனியரிங். என்ன சந்தோசம்னா நண்பர்கள் எல்லாருமே ஒரே வகுப்பு, பிராஞ்ச். இதுலே சோமு நல்ல ஆக்கி பிளேயர். பரீட்சை நேரத்துலே கூட ஆக்கி ஆடுவான்.
சுந்தர் தாசு எல்லா விதமான விளையாட்டுலேயும் சூரன். பாக்கவே பொறாமையா இருக்கும் மிலிட்டரி பள்ளிக்கூட வாழ்க்கை பலவும் கற்றுத்தந்ததுனு தாசு சொன்ன பிறகு புரிஞ்சது.
இரண்டு டூர். ஒண்ணு சவுத் இனனொனு நார்த். நிறய சுவாரசியமான நிகழ்வுகள். ஊட்டி எச் பி எப் கம்பெனிலே நண்பர்கள் பிலிம் ரோல் விலையில்லாம எடுத்தது, பிருந்தாவன் கார்டன்லே யாரோ பெண்ண கிண்டல் பண்ணதாலே போலீசு துரத்தினது், பாம்பேலே சுரேசு எடுத்த படம்லாம் பிலிம்லே லைட் பட்டு வெள்ளையாப் போனது, கிராண்ட் ரோடுலே பயத்தோட நைட் வாக், ஆக்ராலே சிவராமுடு காணாமப்போய் கிடச்சது, சிம்லா குளிர், குப்ரிலே சேதுராமன் மூக்குலே ரத்தம் இப்படி பலவும்.
உண்மையாச் சொல்லணும்னா படிப்ப தவிர மத்த விசயஙகள் ளே நேரம் அதிகம் செலவு பண்ணுவோம். பரீட்சை வரப்ப மட்டும் விழுந்து விழுந்து படிச்சு எழுதுவோம். எங்க கும்பல் 65 லெவல் மார்க் கிட்டே நிக்கும். KNV கொஞ்சம் உசாரா இருப்பான். அதனால பிற்காலத்துல பறக்கப் போயிட்டான்.
பரீட்சைக்கு படிக்க நான கந்தசாமியோட அண்ணன் வீட்டுக்கு நைட் போவேன் பாவம் எங்களுக்காக அவங்க காப்பி போட்டு கொடுக்க முழிச்சுட்டு இருப்பாங்க.
சில பரீட்சை எழுதிட்டு ரிசல்ட் வர வரைக்கும் பாசாவோமானு சந்தேகம் இருக்கும். நல்ல வேளை கடைசி வரைக்கும் தேறி வந்துட்டோம்
நடு நடுவே தமிழ் மன்றம், கட் அடிச்சு சினிமா, பிராசெக்ட் வொர்க்னு பிரேக் கிடைக்கும் காளிமுத்து அமைச்சரை தமிழ் மன்ற விழாவுலே பேச கோட்டைக்கு போய் அழைச்சது அவர் முதல்வர் MGRஐ கேட்டு வர ஒப்புக் கொண்டது எல்லாம் கனவு போல் இன்றும்.
( வளரும்)

காதலின் உணர்வு

மல்லிகை வாசம் மூக்கைத் துளைக்கும்
மஞ்சள் பூச்சு கைகளில் நிறக்கும்
கொலுசுச் சத்தம் தூரத்தே கேட்கும்
கொஞ்சும் குரலில் பேசும் பேச்சும்
தோழியர் கிண்டல் சிரிப்பாய் மாறும்
தோள்களில் பின்னல் ஊஞ்சல் ஆடும்
நடையின் அசைவே நாட்டியம் எனலாம்
கடைக்கண் பார்வை குறும்பாய் பார்க்கும்
காதலின் உணர்வு உதட்டினில் தோன்றும்
ஆதலால் உன்முகம் வெட்கம் பூக்கும்
நளினமாய் முகமும் தரையை நோக்கும்
நாடகம் ஒன்றே நடந்து முடியும்

இன்பம் தேடும்

இரவின் அமைதியில் மௌனங்கள் பேசும்
இதயம் மலரும் இதழ்கள் சிரிக்கும்
உறவின் தொடக்கம் உணர்வுகள் கலக்கும்
பிறக்கும் காதலில் பிணையும் கைகளும்
உறக்கம் துறக்கும் கிறக்கம் தொடங்கும்
இருளில் கண்கள் வெளிச்சம் தேடும்
மருளும் மான்போல் மங்கையின் மனமும்
இன்பம் தேடும் இரண்டு உள்ளமும்
துன்பம் யாவும் விலகிடும் நேரம்
மனித வாழ்க்கை மயக்கம் தேடும்
இனிதே இரவும் விடியலைத் தேடும்

நீரோட்டம்

ஆறு தனது பாதையில் அமைதியாகப் போகிறது. திடீரென பெரும் பள்ளமொன்று ஆற்று நீர் இப்போது அருவியாய் இரைச்சலோடு கீழே விழுகிறது.
கடல் நீர் கரையைத் தொடும்போது அலைகளாய் ஆர்ப்பரிக்கிறது.
என்றும் நிலையாக இருக்கும் கிணறு, குளம், ஏரி அமைதியாய். கல்லெறிந்தாலோ அதனுள் குதித்தாலோ அலைகளோடு சிறிய சத்தம் எழுகின்றது.
மழை நீரோ தான் பெய்யும் இடம் சார்ந்து நிறங்களைக் கொள்கிறது. அதுவே அளவுக்கு அதிகமாயின் வெள்ளப்பெருக்கும் பேரழிவும்.
குளிர்ப்பிரதேசங்களில் அதே நீர் உறைந்து வெண்பனியாய்.
கதிரவனின் வெப்பத்தில் ஆவியாகி மேகங்களாய் பவனி வந்து மழையாய் பூமியில் மீண்டும்.
இவையனைத்தும் நீரின் பரிமாணங்கள். வாழ்க்கையும் இப்படித்தானே.
இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கைப் பாதை நமக்கு கற்றுக் கொடுப்பவை ஏராளம்.
கரடு முரடான பாதைகள், உயர்ந்தும் தாழ்ந்தும், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாய், பருவ மாற்றங்கள், அமைதியாய் சில நேரம், விரைவாய் சில நேரம், கொந்தளிப்பாய் சில நேரம், சுழன்றும் உழன்றும் தொடர்கிறது

சித்து விளையாட்

இயற்கை சித்து விளையாட்டு எங்கும்
முயன்றும் முடியாத தொடராய் உலகில்
கற்பனைக் கெட்டாத நிகழ்வுகள் தினமும்
தோற்றம் முடிவு தெரியாத நுண்ணுயிர்
ஆடிய கால்களை முடக்கிச் சிரித்தது
ஆணவம் சுருங்கி பெட்டிப் பாம்பாய்
இன்று எனக்கு நாளை உனக்கோ
என்ற கேள்விக்கு விடையே இல்லை
அச்சம் அனைவர் மனதில் தினமும்
அறுவடை நாட்கள் மனிதப் பயிருக்கு
யாரிடம் வேண்ட இறைவனா இயற்கையா
பேரிடர் என்பது பேயாய் ஆடுது
ஓயும் நாளது விரைவில் வருமா
நீயும் நானும் உலவிட அச்சமின்றி !

பெருமனம் கொள்வீர்

உயிர்வாழ்தல் யாருடைய கையில் தெரியுமா
உயிர்மூச்சு எதுவரை எவரே அறிவர்
இக்கணம் மட்டுமே உனக்குச் சொந்தம்
எக்கணம் என்ன நடக்கும் அறியோம்
ஆயினும் எதிர்காலம் நமதென்று எண்ணுவோம்
ஆயிரம் கொள்கைகள் பேசியே அலைவோம்
எதிலும் வேற்றுமை உயர்வு தாழ்வு
எத்தனை பிரிவு எண்ணற்ற சாதிகள்
எதனால் மனதில் இந்தக் குழப்பம்
எதையும் அலசிப் பார்ப்பது அவசியம்
பிறப்பதும் இறப்பதும் நம்மிடம் இல்லை
பிறகேன் மனதினில் இத்தனை வன்மம்
வானமே எல்லைபோல் வார்த்தைப் போர்கள்
வாதங்கள் எங்கோ தொடங்கி முடிவதெங்கோ
பேதங்கள் நீக்கி பெருமனம் கொள்வீர்
பேரமைதி நிலவும் பெருமகிழ்வும் நிறையும் !

விந்தை மனிதன்

உலகில் மனிதர்கள் அதிசயப் பிறவிகள்
பலவும் கற்றும் பண்பினை மறப்பர்
ஏளனம் செய்தே நாட்களை ஓட்டுவர்
ஏனிந்த விளையாட்டு அவரே அறியார்
குரங்காய் சிலகாலம் மரங்களில் தாவுவர்
குயிலாய் எண்ணி குரல்வளம் தேடுவர்
புலியாய் உறுமி புல்லைத் தின்பர்
எலியாய் வலையில் ஒளிந்து பார்ப்பர்
பாம்பின் நஞ்சும் பேச்சினில் கொள்வர்
பாம்பாட்டி மகுடிக்கு மயங்கி ஆடுவர்
பச்சோந்தி சிலரோ வண்ணம் மாறுவர்
பசுங்கிளி சிலரும் சொல்வதைச் செய்வர்
சிங்கமும் சிலநேரம் சிந்தனை வயப்படும்
சிறுநரி வார்த்தையில் தந்திரம் தெரியும்
விந்தைகள் நிறைந்தவன் மனிதன் மட்டுமே
மந்தையில் ஆடுகள் மேய்வது போலவே !

ஏனிந்த வேற்றுமை

கவி பாட எவை வேண்டும் இறைவா
புவி வாழ யார் உதவி செய்வார்
இசையோடு தாளங்கள் சேர
இனிதான பாடலும் வருமா
அலையோசை நாதமாய் மாறுமா
கலைவாணி கவிதையைத் தருவளோ
எனையாளும் இறையே எங்கே
புனைகின்ற பாடலில் புகுந்திடு
பண்பாடும் பக்தியும் முறையோ
கண்மூடி உனைநாடல் சரியோ
வேதங்கள் செய்தவர் எவரோ
பேதங்கள் போக்குதல் தவறோ
ஏனிந்த வேற்றுமை எதிலும்
மானிடர் இனமே ஒன்றே
காலங்கள் மாற்றிடும் இதனை
ஓலங்கள் ஓய்ந்திடும் அந்நாளில் !

இனிய உறவாம்

உண்மை நட்புக்கு இணையேதும் இல்லை
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாது
கள்ளமில்லா உள்ளமது கபடும் அறியாது
கற்றது கடுகளவு கல்லாதது உலகளவு
உறவு பெரிதாகும் அன்பும் நிறையும்
பிறவிப் பயனே பிரிவினை எண்ணாது
கிடைத்தற்கு அரியது போனால் வராது
இடையில் வந்தாலும இறுதிவரை நிலைக்கும்
நட்பெனும் அணிகலனை இதயத்தில் இருத்திவை
கெட்டாலும் உன்னுடன் சேர்ந்தே இருந்திடும்
பலனை எதிர்பாரா பண்பு அதுவன்றோ
பகைமை பாராட்டா இனிய உறவாம்
என்றும் தொடரட்டும் நமது வாழ்வில்
இன்றுபோல் எந்நாளும் மகிழ்ந்தே இருப்போம் !

புதன், 3 ஜூன், 2020

சொக்கும் அழகு

கண்களுக்கு மையெழுதி புருவக் கீற்றிட்டு
பெண்ணுக்கு அணிகலனாய் வெட்கம் சூடி
இட்ட அடி நோகாமல் போகின்ற அணங்கே
கிட்ட வரவா கரம்பற்ற நெடுந்தூரம் நடைபயில
சொக்கும் அழகைப் படைத்தானோ பிரம்மன்
சொர்க்கம் பூமியிலே இதுவென்று சொல்வதற்கு
கண்ணசைந்தால் இதயத் துடிப்பு புரவிபோல்
விண்ணுக்கும் மண்ணுக்கும் மன ஓட்டம் துள்ளுவதேன்
மாயக்காரியோ மந்திரங்கள் கற்றாயோ புரியலியே
மான்போலத் துள்ளி ஓடும் உன்கால்கள்
மன்னவன் இவன் உயிரைக் கவர்ந்ததுவோ
உன்பிறப்பே அதிசயம் தானடி மங்கையே
ஊராரே உனக்கடிமை காந்தமோ உன்பார்வை
விடைதேடி பலநாட்கள் ஆராய்ந்து ஓய்ந்தேன்
வியப்பே மிஞ்சியது நீயே சொல்வாயா ?

பட்டே அறிவர் பாவியர்

ஆறடி நிலமே சொந்தமென்றே உணர்ந்தும்
ஆலாய்ப் பறக்கும் மனித மனம்
ஆசைகள் அடக்க முனிவராக வேண்டுமா
ஆயிரம் கதைகள் நல்வழி போக
ஆயினும் தொடர்வதோ கரடு முரடே
விட்டில் பூச்சிகள் தெரிந்தே தீயினில்
விடுகதை வாழ்க்கை விடையே இல்லை
பட்டே அறிவர் பாவியர் இவர்
சுட்ட பின்பே நெருப்பெனத் தெளிவர்
நல்ல நிலங்கள் வறண்டு கிடக்க
புல்லும் பூண்டும் உயர வளரும்
வேதனை மனதில் வேள்வித் தீயாய்
சோதனைக் காலம் முடிவது எப்போது ?

ஆட்டு மந்தைகள்

நான் மனிதன் மாறவில்லை இன்றும்
ஏன் என்று கேட்பாய் சொல்வேன்
அரசியல் மாற்றம் போன்றே நானும்
ஆசையில் எதையும் செய்வதே எனதுசெயல்
ஊழல் ஊழல் எனக் கதறுவேன்
பாழாய்ப் போன பணம் வேண்டும்
பாங்காக வாங்கி வாக்குச் சீட்டில்
ஏய்ப்பவன் எத்தனுக்கு முத்திரை குத்துவேன்
முகத்திரை கிழிப்பதாய் மேடையில் கத்துவேன்
முட்டாளாய் அவனோடு கூட்டாளி ஆவேன்
கொள்கையில் எனை மிஞ்ச எவருமிலை
கொள்ளை அடிப்பவனோடு கூட்டு வைப்பேன்
சமுதாய முன்னேற்றம் மக்கள் நலம்
சமச்சீர் கல்வி உழவர் நலன்
உதட்டினில் பேச ஆயிரம் வார்த்தைகள்
உண்மையென நினைத்திட ஆட்டு மந்தைகள்
மாற்றம் ஒன்றே மாறாதது என்பர்
மாறவே மாறாதது எம்நாட்டில் இதுவே !

225 CEG genesis day

இருநூறு ஆண்டுகள் முன்பு பள்ளியாய் இருந்து
கருவினிலே உருவான குழந்தை போலே
வளர்ந்து பெரிதாகி விழுதுகள் ஊன்றி
வண்ணக் கனவுகள் சுமக்கும் மாணவரை
பொறியாளராய் அறிஞராய் விற்பன்னராய் படைப்பாளியாய்
நெறிகாட்டி வழிநடத்தி மெருகேற்றும் ஆலயமாய்
உயர்ந்து நிற்கும் செவ்வண்ண மாளிகையாய்
உலகத்து நாடுகளில் கால்பதித்த பலதுறையினரும்
உருவான கல்லூரி என்ற பெருமையுண்டு
மரங்களோடும் மான்களோடும் இயற்கை எழிலுமுண்டு
எத்துறையிலும் சிறந்த கல்வியும் உண்டு
கட்டிடம் இயந்திரம் மின்னணு கணிதம்
கணிப்பொறி உற்பத்தி நிர்வாகம் பலதுறைகள்
ஒன்று பன்மடங்காய் ஓங்கி வளர்ந்தின்று
சென்னை என்றாலே கிண்டி பொறியியல் கல்லூரி தொன்மை நகரத்து பொறியியல் கல்லூரியாம்
தொழில் உலகில் மகுடம் சூட்டி
இருநூறு கடந்தும் இளமை கோலோச்சி
பருவ மாற்றம் பல்வகைக் கல்வியில்
முகப்புத் தோற்றம் பார்ப்போர்க்கு அழகு
முகவரி உனக்கு உலகம் தோறும்
ஆலமர விழுதாய் அறிஞர் பலரும்
ஆண்டுகள் தோறும் கருவில் தோன்றுவர்
பாறைகள் இங்கே உளிபட்டு சிலைகளாய்
பாசறை இதுவே பாரதம் ஓங்கிட
வீடுகள் முதலாய் விண்கலன் வரையில்
கோடுகள் உருப்பெற்று கோள்களைச் சேரும்
நாடுகள் தோறும் உனது புகழை
கொண்டு சேர்த்திடும் நண்பரோ பல்லாயிரம்
இருநூற்று இருபத்தைந்து சாதனை பெரிது
பெருமகன் கலாமைப் போன்ற அறிஞர்
பணியாற்றிய வளாகம் எமது கல்விக்கோயில்
பலநூறு ஆண்டுகள் புகழோடு உயர்ந்திடும்
இன்று 225 CEG genesis day celebration video conference ல் வாசிக்கப்பட்டது

யாருக்கு இந்நாடு

சாலையிலும் இரயில் பாதையிலும் நடப்பதைக் காணவே
சாகும் வரை நடத்துவோம் சத்திய சோதனை
யாருக்கு இந்நாடு யாரறிவார் சோற்றிற்கும் வழியில்லை
யாசகம் ஒன்றேதான் வழியோ சூசகமாய்ச் சொன்னீரோ
தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோமா சொல்வீரே
தலைவரெலாம் நல்லவராய் மாறுதற்கு வழியேதும் உண்டோ
உயரப் பறக்காமல் தரைமீது தத்தளிக்கும் உயிர்பாரீர்
உழைப்பவர் இல்லாமல் உயர்ந்திடுமோ இந்நாடு இயம்பிடுவீர்
இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்றானே கவிஞன்
இப்போது இல்லாமல் எப்போது நடக்குமது தெரியலியே
கோடிகள் கேடிகளிடம் கேட்பதற்கும் இயலாத நிலையிங்கே
கோமாளிகளாய் மாறிநின்ற மக்களுக்கு தினமொரு நாடகக்காட்சி

ஆசை உண்டு

காட்டிலொரு குருவி போல மர வீடும்
மலையிலொரு முயல் போல சின்னப் பொந்தும்
கடலிலொரு சிப்பி போல கிளிஞ்சல் வீடும்
நதியொலொரு மீன் போல மணல் வீடும்
குளத்திலொரு தாமரை போல் வேரின் காலும்
வானிலொரு தாரகையின் ஒளி வட்டமும்
கிணற்றிலொரு பாறையிடை மீனின் இடமும்
குகையிலொரு சிங்கம் போல இருண்ட அறையும்
சொந்தமாய் வைத்திருக்க ஆசை உண்டு சொக்கா
உள்ளமதில் உள்ளுவது உண்மையில் நிறைவேறச் செய்வாயா ?

கேள்விகள் தொடரும்

விடிந்தும் விடியாத காலைப் பொழுது
விடைகள் சிலவும் கேள்விகள் பலவும்
தொடர்கதை யாவும் முடிவு தெளிவில்லை
தொலைதூரப் பார்வை பசுமையாய் யாவும்
இயற்கை விளையாட்டில் இதுவும் கடந்திடும்
இயல்பு இதுதானே மனித வாழ்வினில்
வருவதும் போவதும் வாழ்வின் சுழற்சி
வளமுடன் இயங்கிட கற்றிடும் பாடங்கள்
அனுபவம் ஆயிரம் அனைத்தும் நன்மைக்கே
அடுத்தது என்ன கேள்விகள் தொடரும்

நட்பு

வட்டமோ சதுரமோ வாழ்க்கை புதிரே
பட்டதும் படித்ததும் அனுபவ அறிவே
இன்று நாளை என்பதே மாயையே
நன்று வாழ்வினை நல்வழி செலுத்தல்
பல்வகை மனங்கள் பல்வகை உறவுகள்
பசித்தவர் புசித்திட படியளப்போர் உத்தமர்
கசிந்திடும் கண்ணீரை முந்தானை துடைக்கும்
கடவுளின் பிறவியே தாயெனும் உருவம்
உத்தமக் காதலை உள்ளத்தே இருத்தி
உயிரையும் தருவாள் இன்னுயிர் மனையாள்
பயணத்தில் இடையே சேர்ந்திடும் நட்பு
பலனைப் பாராத பண்பாளர் ஆவார்

அன்னை

அன்னையென்ற சொல்லுக்கு ஈடில்லை உலகில்
அன்பென்ற உருவே அவளாய் என்றும்
சுமையென்று பாராத மனித தெய்வம்
சுமந்தாளே வயிற்றில் பத்து மாதம்
இரவென்றும் பகலென்றும் இல்லாத வாழ்வில்
இறைவியாய் இருந்தென்றும் காத்து நிற்பாள்
சொல்லொன்று போதாது அவள் புகழ்பாட
கல்லும் கரையும் தாயவள் குரலில்
பிறவி மற்றொன்று உண்டென்றால் இறைவா
பிறந்து தாய் மடியில் உறங்க வேண்டும்

நிழல்களின் காதலன்

நான் வறியவன் மதுவில் பிரியன்
நான் நல்லவன் மாதுவில் பிரியன்
நான் வல்லவன் களவுகள் செய்பவன்
நான் உயர்ந்தவன் நாடகம் ஆடுபவன்
நான் சிறந்தவன் கையால் ஆகாதவன்
நான் பேச்சாளன் மேடையில் பேசாதவன்
நான் உழைப்பாளி ஊருக்கு உழைப்பவன்
நான் ரசிகன் நிழல்களின் காதலன்
நான் குடிமகன் இரவலில் விலைபோவேன்
நான் குடும்பத்தலைவன் குடிபோதை மன்னன்
நான் மனிதன் இலக்கணம் அறியாதவன்
நான் வாழ்வேன் மண்ணில் வீழ்வேன்
மண்ணோடு மண்ணாய் மக்கிப் போவேன் !

வாழிய தாய்த்திருநாடு

வாழிய‌ நற்றமிழ் வாழிய தாய்த்திருநாடு
வளமுடன் என்றும் வாழ்கவே மக்கள்
சீரிய சிந்தனை சிறப்புற வாழ்வினை
காரிய தூய்மையை கொண்டே நடத்திடு
வறியவர் செல்வர் பேதமை அற்று
நன்மையே மனதினில் நாளும் இருத்தி
கொடிய செயல்கள் செய்வது தவிர்த்து
உழவும் தொழிலும் உயரச் செய்து
நானிலம் போற்றிட நற்செயல் செய்து
நல்லதோர் உலகை நாளைய சமுதாயம்
பெறுக பெருமை கொள்க சான்றோரே
விழைவது என்செயல் விடைகள் உம்மிடம்
செய்வீரா செவ்வனே செப்பிடுவீர் உறவினரே !

அரக்கன் விடுதலை

சிறையிருந்த அரக்கன் விடுதலை
சிரிப்போடு வரவேற்கும் சீடர்கள்
சிக்கனம் இதிலில்லை தாராளம்
சிக்கியவர் திரும்பிய சரித்திரமில்லை
வண்ணமாய் வகையாய் வடிவாய்
வயிற்றுக்குள் போனாலே தள்ளாட்டம்
உண்மைகள் அம்பலம் உளறுவாயில்
ஆண்மையே இதுவென்றும் சிலர்
குடி கெட்டு குடல்கெட்டு குப்பையில்
மதிகெட்ட மானிடரோ மயக்கத்தில்
அரசுக்கு அளவில்லாமல் பணம்
ஆண்டிக்கு ஆறடி நிலம் திண்ணம்
தெரிந்தே தீயினில் கருகும்
புதிரான விளையாட்டு தொடக்கம்

நுண்ணுயிர்

சிறியது‌ பெரியதாய் பெரியது சிறியதாய்
நுண்ணுயிர் பல்லுயிர் நுழைந்து பலிவாங்கி
ஆணவப் பேய்களும் அடங்கி ஒடுங்கி
ஆடிய உலகம் மூடிய கதவினுள்
நிரந்தரம் எதுவுமில்லை நிலைப்பதும் உறுதியில்லை
நிம்மதி அற்ற வாழ்வில் நெடுநாட்கள்
உண்பதும் உறைவதும் கேள்விக் குறியாய்
உலகமே ஒடுங்கி கூட்டினில் தனிமையாய்
விடையொன்றைத் தேடியே காலம் நகர்ந்தது
இன்றோ நாளையோ என்றோ யாரறிவார்
இனிவரும் நாட்கள் இனிதாக வேண்டுவோம் !

விடியல் காணுமா

இரவு தோறும் நிலவு தோன்றி இனிமை சேர்க்குமா
இமைகள் மூடி இனிய கனவு உலகம் விரியுமா
கானக் குயிலின் கீதம் அங்கு காதில் சேருமா
வான வெளியில் மேகக் கூட்டம் பவனி வந்திடுமா
கோடை வெப்பம் தணியும் வரையில் மழையும் பெய்யுமா
கோல மயிலின் தோகை விரித்து நடனம் புரியுமா
கடலின் அலைகள் கரையைக் சேர்ந்து கால்கள் தழுவுமா
குடகு மலைக் காவிரியும் தஞ்சையின் நெல்வயலைச் சேருமா
மூங்கிலிலே காற்று நுழைந்து இனிய நாதம் பிறக்குமா
மூடிய கண் இமைகள் திறந்து விடியல் காணுமா

உழைப்பாளிகள் தினம்

உழைப்பாளிகள் தினம் புதுமையாய் இவ்வாண்டு
உடலுக்கு ஓய்வு உலகுக்கே ஓய்வு
அனைத்தும் இயக்கம் மறந்து அமைதியாய்
அவரவர் இல்லங்களில் குடும்ப உறவுடன்
கட்டாய விடுப்பு கால்கடுக்க ஓட்டமில்லை
பாட்டாளி மட்டும் பசியில் சிலநாட்கள்
தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் ஒருகிருமி
வயது வறுமை வளமை பாராமல்
வந்தது வதைத்தது வாழ்வைச் சிதைத்தது
எப்போது விலகிப் போகுமென்று எவருமறியார்
எல்லைகள் கடந்து தாண்டவம் ஆடுதிங்கு
நான்கு சுவர்களுக்குள் நாட்கள் மாறியது
என்றோ எமக்கு விடுதலை சொல்வாயா
உழைக்கும் கரங்களுக்கு ஓய்வு போதும்
பிழைப்பே அவருக்கு உழைப்பில் தானே
விலகிச் சென்றிடு இயக்கம் தொடரட்டும்
உலகச் சக்கரம் சுழலட்டும் விரைவில் !

எங்கும் கடவுள்

ஆங்கோர் ஏழை பசி போக்கின் கடவுள்
தூங்கா விழியோடு எல்லை காப்பான் கடவுள்
தன்னுயிர் நோக்கா பிறருயிர் காப்பவன் கடவுள்
இன்னுயிர் இரக்கம் படைத்தவன் வறியவானியினும் கடவுள்
ஏரைப் பூட்டி நிலமதை உழுபவன் கடவுள்
ஏளனம் பேசாத கருணை உள்ளமும் கடவுள்
தெருவெங்கும் தூய்மைப் படுத்தும் எவரும் கடவுள்
ஊரக தெருக்களை காத்திடும் காவலர் கடவுள்
மக்கள் நலனே உயர்ந்தது என்பவன் கடவுள்
மனதில் நேர்மை கொண்டவர் யாவரும் கடவுள்
உன்னிலும் என்னிலும் பிறரிலும் எங்கும் கடவுள்
உணர்ந்தவர் உயரியர் உண்மையும் அதுவே நினைவில்கொள் !

கனவுலகிலா

விமானங்கள் வானில் பறக்கின்றன
பேருந்துகள் சாலையில் பயணிக்கின்றன
வாகனங்கள் நெரிசலின்றி செல்கின்றன
நீண்ட பயணங்களில் இரயில்கள்
உணவகங்கள் உணவைப் பரிமாறுகின்றன
அலுவலகங்கள் இயல்பான நிலையில்
சுற்றுலாப் பயணிகள் வழக்கம்போல்
சிறுவர்கள் விளையாட்டுத் திடல் களில்
கிரிக்கெட் போட்டி வர்ணனைகள்
பனிச் சறுக்கு விளையாட்டு
ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
இந்தியாவில் தொழில் ஒப்பந்தங்கள்
உலக நீதிமன்றத்தில் சீனா
சென்னைக் கடற்கரைக் காதலர்
ஓ கரோனா போயே விட்டது
கைபேசி அழைத்தது அருகில்
கனவுலகிலா இதெல்லாம் விடியலா

கடந்துபோகும்

அழகான நீர்பரப்பு அதிலொரு ஓடம்
அமைதியாய் தனியொருவன் தன்னிலை மறந்து
மனதில் சலனமில்வை பார்வை தொலைதூரம்
சுற்றிலும் மரங்கள் மெல்லிய காற்று
தன்னிலை மறந்த மயான அமைதி
ஏகாந்தம் என்பதே இதுவன்றோ உண்மையாய்
இருண்ட அன்னை வயிற்றை நீங்கி
இவ்வுலகில் கண்விழித்த நிர்மலமான வேளை
பூவுலகை நீத்து ஆவி பிரிந்து
வேற்றுலகு செல்லும் சூன்ய நிலை
இரண்டுக்கும் நடுவே இருக்கும் இடைவெளி
இருப்பதே சிலநாட்கள் எத்தனை மாற்றங்கள்
மனதில் ஆயிரம் பிரிவு எண்ணங்கள்
அமைதி போயிற்று வேதனை சேர்ந்தது
படகு ஆட்டத்தில் தத்தளிக்கும் நிம்மதி
இதுவும் நிரந்தரம் இல்லை கடந்துபோகும்

அமைதி தேடி

அமைதி தேடி பயணம் தொடரும்
அலையும் மனதில் ஆயிரம் சிந்தனை
கடலின் அலைகள் ஓய்வது எப்போது
கவலைகள் மனதில் ஓய்ந்திடும் அப்போது
ஓடிய கால்கள் நிற்பதும் இல்லை
நாடியே ஓடிடும் நான்கையும் தேடி
பிரிவுகள் மனதில் பிறந்தவை அதனால்
பரிவும் பாசமும் வற்றிப் போனது
ஆறறிவு படைத்த மனிதன் மனது
ஐந்தறிவு படைத்த மிருகத்தினும் கீழாய்
அறுபதோ நூறோ ஆயுளே முடியும்
அதற்குள் எத்தனை ஆட்டம் உன்னிடம்
புரிதல் வேண்டும் மானிடம் ஒன்றே
எரிதழல் எலும்பையும் எரித்துச் சாம்பலாக்கும்

மன வெளிப்பாடு

மனிதன் எதையாவது தேடிக் கொண்டே இருக்கிறான். அவனுடைய தேடல் சாகும் வரை தொடர்கிறது. குறையில்லை என்று சொல்பவன் எவனும் இல்லை.
கால ஓட்டத்தில் ஏற்படும் தன் அனுபவங்களை வெவ்வேறாக வெளிப்படுத்துகிறான். சில நல்ல நூல்களும் இவ்வாறே உருவாகின்றன.
நமது நண்பர் சம்பத் எழுதும் கட்டுரைகள் கண்ணதாசனின் வாழ்வில் வெவ்வேறு கட்டடங்களைப் பாடல்களாக அவர் மாற்றியது காண்கிறோம்.
பட்டுக்கோட்டையார் முப்பத்து இரண்டு வெவ்வேறு தொழில்களை செய்தாராம் தன் வாழ்நாளில். இளம் வயதிலே இறந்து விட்டாலும் அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை.
கவிஞர்கள் பொய்யை சில நேரங்களில் கையாளலாம். ஆனாலும் ஏதோ ஒரு உணர்வு அதில் இழையோடும். தான் இப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு கற்பனைத் தேரில் கவிதையாக வலம் வரும்.
கபீர்,பங்காளி போன்றோர் வாழ்க்கையில் நடக்கும் சிறிய நிகழ்வுகளை நகைச்சுவையோடு எழுதும் போது நம்மை ஈர்க்கும்.
பேச்சாளர்களும் உரைநடையில் கவிஞர்களே. தான் கேட்ட படித்த கண்டறிந்த அனுபவங்களைக் கோர்வையாகச் சொல்லி கேட்போரை தன் வசப்படுத்துவர்.
பர்வீன் சுல்தானா பேச்சு மன்றத்தில் சொன்ன ஒரு கதையை நினைவு கூர்கிறேன். பறவையொன்று தன் குஞ்சுகளோடு கண்டம் விட்டு கண்டம் எட்டாயிரம் மைல்கள் கடல் மேல் பறக்குமாம். அவ்வளவு தூரம் நீரின் மேல் பறக்கும்போது அவை ஓய்வெடுப்பது எவ்வாறு என அறிவது சுவாரசியமானது.
வாயில் குச்சியொன்றைக் கவ்வி பறந்து செல்லும் அவை ஓய்வு தேவைப்படும் போது அக்குச்சியைக் கடல் நீரின் பரப்பில் போட்டு அதன் மீதமர்ந்து ஓய்வெடுத்து மறுபடியும் அக்குச்சியை வாயில் கவ்விப் பறக்கத் தொடங்குமாம். எவ்வளவு அழகான புரிதல் இது நமக்கு.
உணர்வுகள்,நினைவுகள் பாடல்களாகவும் இலக்கியமாகவும் மாறி நம்மை அதிசயிக்க வைக்கின்றன.
கடந்த இரண்டு வருடங்களில் நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சர்யம்.
நமது குழுவிலே எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருப்பதை நாமே பார்க்கிறோம்.நமக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையைத் தூண்ட ஏதோ ஒரு சிறு தீ தேவைப்படுகிறது.
மன வெளிப்பாடு மனிதனின் அற்புத நிகழ்வு. சமுதாய நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. கற்றலும் கேட்டலும் காணலும் காலமெல்லாம் தொடரும்.

உயர்ந்தவன் நீயில்லை மானிடா

பூமித் தாயே உனது உடலைச் சிதைத்தோம்
அமிலக் காற்றால் உன் சுவாசம் குறைத்தோம்
காடுகள் அழித்து உயிர் மூச்சை இறுக்கினோம்
வேடுவர் போல வேட்டையாடினோம் இயற்கை வளத்தை
மேனியெங்கும் ரணப் படுத்தி அழகைக் குலைத்தோம்
மேதாவி நாங்கள் என்று மார்தட்டிக் கொக்கரித்தோம்
பொறுத்த நீயோ பொங்கி எழுந்தாய் சினங்கொணடு
சிறிய கிருமியொன்றே சிதைக்கும் வாழ்வென்று புரியவைத்தாய்
என்னிலும் உயர்ந்தவன் நீயில்லை மானிடா உணரவைத்தாய்
என்றுவரை தொடருமென்று அறியாது தவிக்க விட்டாய்
உணர்ந்தோம் அன்னையே உனது சக்தியை இன்று
உய்விக்க வழியொன்று சொல்வாயா மானிடம் வாழ்ந்திருக்க!