புதன், 3 ஜூன், 2020

மன வெளிப்பாடு

மனிதன் எதையாவது தேடிக் கொண்டே இருக்கிறான். அவனுடைய தேடல் சாகும் வரை தொடர்கிறது. குறையில்லை என்று சொல்பவன் எவனும் இல்லை.
கால ஓட்டத்தில் ஏற்படும் தன் அனுபவங்களை வெவ்வேறாக வெளிப்படுத்துகிறான். சில நல்ல நூல்களும் இவ்வாறே உருவாகின்றன.
நமது நண்பர் சம்பத் எழுதும் கட்டுரைகள் கண்ணதாசனின் வாழ்வில் வெவ்வேறு கட்டடங்களைப் பாடல்களாக அவர் மாற்றியது காண்கிறோம்.
பட்டுக்கோட்டையார் முப்பத்து இரண்டு வெவ்வேறு தொழில்களை செய்தாராம் தன் வாழ்நாளில். இளம் வயதிலே இறந்து விட்டாலும் அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை.
கவிஞர்கள் பொய்யை சில நேரங்களில் கையாளலாம். ஆனாலும் ஏதோ ஒரு உணர்வு அதில் இழையோடும். தான் இப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு கற்பனைத் தேரில் கவிதையாக வலம் வரும்.
கபீர்,பங்காளி போன்றோர் வாழ்க்கையில் நடக்கும் சிறிய நிகழ்வுகளை நகைச்சுவையோடு எழுதும் போது நம்மை ஈர்க்கும்.
பேச்சாளர்களும் உரைநடையில் கவிஞர்களே. தான் கேட்ட படித்த கண்டறிந்த அனுபவங்களைக் கோர்வையாகச் சொல்லி கேட்போரை தன் வசப்படுத்துவர்.
பர்வீன் சுல்தானா பேச்சு மன்றத்தில் சொன்ன ஒரு கதையை நினைவு கூர்கிறேன். பறவையொன்று தன் குஞ்சுகளோடு கண்டம் விட்டு கண்டம் எட்டாயிரம் மைல்கள் கடல் மேல் பறக்குமாம். அவ்வளவு தூரம் நீரின் மேல் பறக்கும்போது அவை ஓய்வெடுப்பது எவ்வாறு என அறிவது சுவாரசியமானது.
வாயில் குச்சியொன்றைக் கவ்வி பறந்து செல்லும் அவை ஓய்வு தேவைப்படும் போது அக்குச்சியைக் கடல் நீரின் பரப்பில் போட்டு அதன் மீதமர்ந்து ஓய்வெடுத்து மறுபடியும் அக்குச்சியை வாயில் கவ்விப் பறக்கத் தொடங்குமாம். எவ்வளவு அழகான புரிதல் இது நமக்கு.
உணர்வுகள்,நினைவுகள் பாடல்களாகவும் இலக்கியமாகவும் மாறி நம்மை அதிசயிக்க வைக்கின்றன.
கடந்த இரண்டு வருடங்களில் நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சர்யம்.
நமது குழுவிலே எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருப்பதை நாமே பார்க்கிறோம்.நமக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையைத் தூண்ட ஏதோ ஒரு சிறு தீ தேவைப்படுகிறது.
மன வெளிப்பாடு மனிதனின் அற்புத நிகழ்வு. சமுதாய நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. கற்றலும் கேட்டலும் காணலும் காலமெல்லாம் தொடரும்.

கருத்துகள் இல்லை: