வெள்ளி, 27 செப்டம்பர், 2019

வாரணம் ஆயிரம்

வாழும் காலம் ஒரு நூற்றாண்டுமில்லை
வாரணம் ஆயிரம் வன்மம் கோடி
விலங்கும் பறவையும் வாழ்வியல் சொல்லும்
வீண்பேச்சு மட்டுமே வீணர்கள் சொல்லில்
எத்தனை வேதங்கள் இலக்கிய நூல்கள்
ஏட்டுச் சுரைக்காய் இவர்க்கு உதவாது
பிரிவுக்குப் போராடும் கூலிக் கும்பல்
பிறத்தலும் இறத்தலும் மறந்ததும் எதற்கோ
நிரந்தரம் என்பதே இல்லா வாழ்வினில்
நிதமும் பகைமையைப் புகுத்துதல் முறையோ
என்மொழி உன்மொழி என்மதம் உன் மதம்
எத்தனை பிரிவுகள் எப்படி வந்தன
சொந்தம் என்றிட ஆறடி நிலமுமில்லை
சொர்க்கமோ நரகமோ போகுமிடம் அறியோம்
வேற்றுமை யாவையும் தீயினில் எரித்திட
வேள்வியொன்றை இன்றோ நாளையோ நடத்திடுவோமா
எண்ணமும் செயலும் நல்லவை ஆயிடின்
எதிரிகள் என்பதே வழக்கொழிந்து போகும் !

கருத்துகள் இல்லை: