வெள்ளி, 8 மே, 2026
பிலிப்பைன்ஸ்
03/03/2025
உறங்கும் நேரம் மிகக் குறைவாகவே இப்பயணத்தில் கடல் வாழ் டால்பின், திமிங்கல சுறாவோடு அவர்களது நேரத்திற்கேற்ப அனுமதி பெற வேண்டி இருந்ததால். இரண்டு மணிக்கு எழுந்து மூன்று மணிக்குத் தயாராகி, டிரைவர் Consorcio வின் வேகமான 130 கிமீ பயணம், Oslob கடற்கரை நோக்கித் தொடங்கியது. சாலை பல இடங்கிளில் பள்ளம் மேடுகளோடு இருந்ததால் கடினமான பயணமாகவே இருந்தது.
Oslob அடைந்தபோது, Mrs. Rose காத்திருந்தார், கல்லூரிப் பெண் என நினைத்து, பிறகே தெரிந்தது, இரண்டு குழந்தைகளுக்குத் தாயென. முதலில் சென்று அனுமதிச் சீட்டு பெற்று வந்து, கொண்டு வந்த பிரெட் சேண்ட்விச்சை சாப்பிட்டு, படகுத் துறையை அடைந்தபோது, மக்களின் கூட்டம் அலை மோதியது. வாகனங்கள் பார்க்கிங்கில் நெருக்கமாக, திருவிழா போன்று. படகில் ஏறி கரைக்கு மிக அருகிலேயே, நமது நண்பர்கள் அகலமான வாயைத் திறந்து, படகோட்டி போடும் ஜெல்லி மீனுக்காக சுற்றிச் சுற்றி வந்தன. பலரும் படகிலிருந்து கடலில் இறங்கி அதனருகில் நீந்தினர். பழகிய மிருகம் போல் சாதுவாய் அவைகள், படகின் கூட்டங்களுக்கிடையே, பவனி வந்த படி இருந்தன. வீடியோக்கள், போட்டோக்கள் என எடுத்துத் தள்ளினோம். நாங்கள் யாரும் கடலில் இறங்கவில்லை.
சுமார் அரை மணி நேரம் கண் கொள்ளாக் காட்சியாக, திமிங்கல சுறா என்ற பயமின்றி கண்டு களித்த பிறகு கரை சேர்ந்து, ஜீப் ஒன்றில் பயணித்து, அடுத்த இடமான மணல் திட்டு ( Sand bar) எனப்படும் சிறிய தீவான Sumilonக்கு படகொன்றில் பயணம். ஆரஞ்சு நிறப் படகு , அதே கலர் படகில் திரும்ப வேண்டுமென, தகவலுடன். தீவு, தூரத்து மலை, தெளிந்த நீருடன் கடல் என அழகாய் கண்ணைக் கவர்ந்தது. சிறு குன்று ஒன்றும் காடு போன்று. நாங்கள் யாரும் குளிக்கச் செல்லவில்லை. அழகை இரசித்தபடி, ஓய்வெடுத்து, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கரை சேர்ந்து, எங்களது வேனுக்குத் திரும்பி, Tumalong அருவி நோக்கிப் பயணம்.
அருவியை அடைய மலைச் சரிவில், பைக் ரைடர்கள் பின்பு அமர்ந்து சென்றபோது, சற்று பயமாகத் தான் இருந்தது. அருவியை அடைந்த போது, சாரல் போன்று மிக உயரத்திலிருந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது. இத்தகைய அருவியை முதன் முதலாகக் காண்கிறோம். ஆசை தீர ரோஸ் உதவியுடன் போட்டோக்கள் எடுத்தும், நான் மட்டும் குளம் போல் தேங்கியிருந்த ,நீரில் சுண்ணாம்பு கலந்த நிறத்தில், உள்ளே நின்று, போஸ் கொடுத்த பிறகு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தபோது, மாற்று உடை இல்லாததால் குளிக்க இயலவில்லையே என்ற வருத்தம் மனதில். Ana வுக்கு முன் கூட்டியே தெரிவித்திருக்கலாம் என feed back கொடுத்தேன். Mango ice cream, Avacado ice cream சாப்பிட்டு, ரோஸிடம் விடை பெற்ற போது, சில மணி நேரங்களே செலவிட்டிருந்தாலும், நல்ல நண்பியாய் மனதில் பதிந்தார். அவரை இறக்கி விட்டு வேன் மீண்டும் Cebu நோக்கிப் பறந்தது. மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க நிறைய நேரம் கிடைத்தது.
மாலை ஆறு மணி போல நான், கசின், பிரகாஷ் மூவரும் அருகில் இருந்த மசாஜ் செண்டருக்குச் சென்று முதன் முறையாக, Foot மசாஜ் நானும், பிரகாஷ் மட்டும் செய்து கொண்டோம். கசின் வேடிக்கை பார்த்துக் கொண்டு, மசாஜ் செய்த பெண்களிடம் கிண்டல் செய்து பேசிய படியும் ஒரு மணி்நேரம் வேகமாகப் போனது. ஓட்டலுக்குத் திரும்பி, இரவு உணவை முடித்து, படுக்கச் சென்ற் போது, மறுநாள் காலை பிலிப்பைன்ஸ் விட்டு, இந்தியப் பயணம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தலையில் சுற்றியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக