திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண்- 6

இன்று ( 21/7/22) அருகிலுள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்க முடிவானது. முதலில் கூகுள் அண்ணனின் உதவியை நாடி ஓஷோ கார்டன் போக வேண்டுமென நிதானமாகக் கிளம்பி ஆட்டோ பிடித்து, காட்டிய வழியில் சென்ற போது, ஓஷோ இன்டர் நேஷனல் அருகே நின்றது. ஆட்டோ ஓட்டுநர் தாத்தா புலம்பலில் மேலும் ஐம்பது ரூபாய் கொடுத்து வழியனுப்பிய பிறகே குடையை விட்டது ஞாபகம் வந்தது. இன்னொரு குடையும் போயிற்று.

அருகிலுள்ளவர்களிடம் விசாரித்து, பக்கத்து தெருவுக்கு நடந்து சென்றபோது அங்கே ஓஷோ தீர்த் பார்க் தென்பட்டது, ஆனால் பார்வை நேரம் காலை 6 முதல் 9 வரையும், மாலை 3 முதல் 6் எனவும் போட்டிருந்தது. கூகுளைத் திட்டியபடியே நடந்தபோது, ஆளரவமற்ற சாலையில் என் மீது பரிதாபப்பட்ட நல்ல மனிதர், அவரது ஸ்கூட்டரில் மீண்டும் ஓஷோ இன்டர் நேஷனல் வாசலில் கொண்டு வந்து விட்டுப் போனார்.
அங்கிருந்த செக்யூரிட்டி உள்ளே அழைத்துச் சென்று வரவேற்பு அலுவலகத்தைக் காட்டினார். அங்குள்ளவர் விளக்கிய பிறகே புரிந்தது குறைந்தது ஐந்தாயிரம் செலவு செய்து, அவர்கள் கொடுக்கும் உடையணிந்து உணவருந்தி் தியானத்தில் ஈடுபட மட்டுமே அனுமதியென. அவர்கள் கொடுத்த துண்டுப் பிரசுரத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கான கட்டணம் ஒன்பதாயிரம் என இருந்தது.அனைத்திற்கும் கட்டணம் சேர்த்து பதினைந்தாயிரம் வரை ஆகலாம். சரி வேறொரு முறை வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து, அடுத்து எங்கே போவது என நினைத்த போது ஆகாகான் அரண்மனை நினைவுக்கு வந்தது.மேப் நான்கு கிமீ தூரம் என்றது.
மறுபடி ஆட்டோ பிடித்து ஆகாகான் அரண்மனை நுழைவுச்சீட்டு இருபத்தைந்தைக் கொடுத்து, உள்ளே நுழைந்தபோது அமைதியாய் இருந்த தோட்டமும், அரண்மனையும் கண்ணில் விரிந்தது.
இரண்டாம் உலகப் போரில் ஆரம்பிக்கும் சரித்திர நிகழ்வுகள், காந்தி, மகாதேவ் தேசாய் (செயலாளர் போன்ற நண்பர்), கஸ்தூரிபாய் என பலரும் சிறை வைக்கப் பட்ட அரண்மனை.
கிரிப்ஸ் என்ற பிரிட்டன் பிரதிநிதி, காந்தியைச் சந்தித்தது முதல், சுதந்திரப் போராட்டம், மாணவர் உயிரிழப்பு, இரகசிய ரேடியோ ஒலி பரப்பு, காங்கிரஸ் கூட்டங்கள், காந்தியின் உண்ணாவிரதம், சிறைப்போராட்டம் என விரிந்து கொண்டே போகிறது.
பல தியாகிகள் சிறை வைக்கப் பட்ட இடமாதலால் தொல்லியல் துறை பராமரிப்பு நன்றாகவே உள்ளது.
காந்தியின் சாம்பல் கொண்டு வரப்பட்டு மகாதேவ் மற்றும் கஸ்தூரிபாய் சமாதிகளோடு் இவருக்கும் ஒன்றென மூன்று சமாதிகள்.
சரித்திரம் அறிய ஆர்வமுள்ளவர்கள் இந்த இடத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும். பல நிகழ்வுகளின் விவரங்கள் பிரேம் செய்யப்பட்டு வைக்கப் பட்டுள்ளன. அடுத்த பயணம் ஞாயிறு சிர்டி என்பது முடிவானதால், வெள்ளியும் சனியும் பயண விடுமுறை.
(வரும்)

கருத்துகள் இல்லை: