திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண்- 10

தங்குமிடம் தேடி மெதுவாக காரை உருட்டியபோது கண்களில் பட்டது ஜெயின் ஹோம் ஸ்டே என்ற பெயர்ப் பலகை. உள்ளே நுழைந்து விசாரித்து அறையைப் பார்வையிட்டு அந்த வீட்டில் தங்க முடிவெடுத்து, காரைப் பார்க் செய்து, சூடான குளியல் போட்டு வெளியே வந்த போது, ருசியான டீ கிடைத்தது. மிகவும் விருந்தோம்பல் உள்ள குடும்பம் என்பதை அறிந்து கொண்டேன். அவர்களிடம் கேட்டறிந்து, மிக அருகிலுள்ள கடற்கரை சென்ற போது, பறவைகளின் பலவித சத்தமுடன் அழகான மலைப் பாதையில் நடந்து சென்று, அழகிய கடலின் தோற்றத்தை உள்வாங்கி, மீண்டும் திரும்பிய போது இருட்ட ஆரம்பித்தது.

மிகவும் ருசியான ஜெயின் உணவு சாப்பிட்டு, குடும்பத்தலைவர் டாக்டரிடம், மருந்துகள் சிலவும் பெற்று, அடுத்துச் செல்லும் இடங்கள் பற்றி அளவளாவி, அறைக்குத் திரும்பி உறங்கி,காலையில் சற்று நிதானமாகக் கிளம்பி, சூடான உப்புமா, போகா, டீ சாப்பிட்டு விடை பெற்று பயணம் தொடர்ந்தது.
ஷ்ரீவர்தன் பீ்ச் சென்றடைந்த போது, முதல் முறையாக நேர்த்தியான ஒரு கடற்கரை மெரினா போன்ற நடை பாதையுடன் காண முடிந்தது. சிறிது நேரம் செலவிட்டு காட்சிகளை கிளிக்கிய பிறகு மீண்டும் பயணம். அடுத்தது அரிவா பீச். வெயில் சுள்ளென்று. ஒரு பெட்டிக் கடையில் வித விதமான மீன் வகைகளின் வறுவல் படங்கள். அர்மான் என்றவரின் கடை, அவரிடம் பாங்டா மீன் வறுவல் என்ற போது, வீட்டுக்குச் சென்று, மசாலா ஊற வைத்த மீன்களைக் கொண்டு வந்து, சூடாக வறுத்துக் கொடுத்தார்.
அவரிடம் பேச்சுக் கொடுத்த போது அருகில் தீவொன்று இருப்பதாகவும் மழைக் காலம் முடிந்த பிறகு போக அனுமதி உண்டென்றும் அவரது படகைக் காண்பித்தார். குடும்பமாக வந்தால் சென்று நேரம் செலவிட அழகான கடற்கரையும் உண்டென்று சொன்னார்.அவரது கை பேசி எண்ணைப் பெற்று, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு அடுத்த பீச்சுக்குப் பயணம். வழி நெடுகிலும் கிராமங்கள். மலைப் பாதை, காட்டுப் பாதைகள் கண்களுக்கு விருந்து, பச்சைப் பசேலென்ற பசுமைப் போர்வை ஒரு புறமும், உயர்ந்த மலைகளும், கடலையொட்டிய மலைமீதான சாலைகளும், கீழே கூடவே பயணிக்கிற கடலும் அங்கேயே கூடாரம் போட்டுத் தங்கலாம் எனத் தோன்றியது.
இப்போது திவாகர் என்ற பீச்சை அடைந்து மதிய உணவுக்கான ரெஸ்டாரெண்டை அடைந்து மீன் உணவை ஆர்டர் செய்து, அமர்ந்த சிறிது நேரத்தில், ஓட்டல் நிரம்பி விட்டது, அந்த ஊரில் சுமாரான பெயர் பெற்றதால். சாப்பிட்டு முடித்து, பயணம் தொடர்ந்து மீ்ண்டும் ஆற்றைக் கடக்க Ferry பயணக் கட்டணம் 200₹ செலுத்தி காரை படகில் ஏற்றிய போது, ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட போடப்பட்ட சிமெண்ட் தூண்கள் பாதியில் நிறுத்தப் பட்டு பல நாட்கள் ஆகி இருக்கும் போன்று தோன்றியது. ஏனோ இவ்வாறு முடிக்கப் படாத பாலங்கள் ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே. மூன்றாவது Ferry சவாரி முடித்து கரை இறங்கிய இடம் முருட் பீச்.
காரை நிறுத்தி தங்குமிடம் கூகுளில் தேடி புக் செய்து பயணித்து நடகோன் பீச் அடைந்து வீட்டின் முதல் மாடிதான் தங்குமிடமென அறிந்தேன். இரண்டு குட்டிப் பெண்கள் அழகாய் ஆங்கிலத்தில் பேசி அறையைத் தயார் செய்து தந்தனர். ஜூன் மாதத்திறகுப் பிறகு வரும் விருந்தாளியாக நான். இங்கும் சூடான டீ ஒன்று ஜியூ கையால் கிடைத்தது, இவளைப் போல் சுட்டிப் பெண் ஒருத்தி நமக்கு மகளாக பிறந்திருக்கக் கூடாதா என மனதில் தோன்றியது. தந்தை அலிபாக் போயிருப்பதாகச் சொன்னாள். அவர் வந்த போது இரவு உணவை அவரிடமே ஆர்டர் செய்து சுடச்சுட சப்பாத்தி சப்ஜி, தாள் இவைகளுடன் சிறிது சாதமும். பால்கணியில் நின்று பார்த்த போது பின்புறம் பெரிய தோட்டம். காலையில் பார்வையிடலாம் என்று சொன்னார்.
ஜன்ஜீரா கோட்டை போகலாம் என அவரிடம் விசாரித்த போது மழைக் காலமாதலால் அனுமதி இல்லை எனச் சொன்னார். கடல் நீருக்கு நடுவே உள்ள கோட்டை, படகில் சென்றுதான் பார்க்க வேண்டும். படகுகள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப் பட்டு இருந்தது. படகுகளும் கடைகளும் பிளாஸ்டிக் போர்வைகளில் உறங் கியதை பல இடங்களில் காண முடிந்தது.
( வரும்)

கருத்துகள் இல்லை: