திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண் - 2

 மராட்டிய மண்

தொடர் 2
புனே வந்து ஒரு வாரமாயிற்று. கீழே உள்ள கடைகளுக்குச் செல்வது, சமைப்பது தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்கள் கடந்தது. ஞாயிறன்று பீனிக்ஸ் மாலில் படம் (Thor - Love and Thunder) பார்த்த போது 4DX தியேட்டரில் உட்காரும் சீட்டோடு குலுக்கி எடுத்தனர். இனி நமது ஆட்டம் துவங்க வேண்டுமென முடிவானது.
மகனுக்கு வேலைப்பளு அதிகமானதால் வார நாட்களில் எங்கும் வர இயலாத நிலை. நமக்கென்ன தனி ஒருவன் புதியது அல்ல. எனவே வாரத்தில் மூன்று நாட்கள் ஒன்று விட்டு ஒருநாள் ஊர் சுற்றப் போகலாம் என முடிவானது. முதலில் மனதில் தோன்றியது 2013ல் போன மகாபலேஷ்வர் மழைக்காலத்தில் எப்படி இருக்குமெனப் பார்க்க வேண்டுமென விருப்பம்.
திங்கட்கிழமை காலையில் கிளம்ப முடிவாகி, அலாரம் வைத்து எழுந்து தயாராகிக் கிளம்பிய போது மணி காலை 6 30ஐக் கடந்திருந்தது. காரை ஸ்டார்ட் செய்து, கூகுள் அண்ணனை எழுப்பியபோது, அவர் தூரம் 133 கிமீ என்றும், அடைவதற்கு மூன்று மணி, மூன்று நிமிடம் எனச் சொன்னார்.
மேப்பை ஆன் செய்து அவர் காட்டிய வழியில் பயணிக்க ஆரம்பித்தேன். புனே நகரைக் கடந்து ஹைவே 48த்தை தொட்டு வேகம் அதிகமானது. மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானிலையும் அவ்வப்போது காட்சியளித்த மலைத் தொடர்களைக் கடந்து எட்டு மணியளவில், பெட்ரோல் நிரப்பி, காலை உணவும் முடித்து,மகாபலேஷ்வர் பாதையில் திரும்பிய போது இன்னும் 42 கிமீ என கூகுள் அண்ணா சொன்னார். சிறிது நேரத்தில் மலைப்பாதை ஆரம்பம், கூடவே மழையும் ஆரம்பம். வேகம் அதிகமெடுத்தபோது பாதையில் கவனமும், பார்க்கிங் லைட் போட்ட படியும் zig zag வளைவுகளும், fog மூடிய சிகரங்களும் கூடவே பயணித்தன. மிக இரம்மியமான காட்சிகளைக் கண்ட போது, கண்களே காமிராவானால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. சுமார் பத்தரை மணியளவில் இலக்கை அடைந்தபோது எங்கே எப்படிப் போவது எனத் தெரியாமல் சில நிமிடங்கள் விடாத மழையில் கழித்த போது கைட் ஒருவர் தென்பட அவரிடம் முந்நூறு ரூபாயெனப் பேசி உடன் வர யானை முக வியூ பாயிண்ட் முழுதாக மறைக்கப் பட்டு இருந்தது. என்னைப் போன்றே சிலரும் கொட்டும் மழையில் ரெயின் கோட் போட்டும், காற்றோடு பறக்கத் துடிக்கும் குடை பிடித்தும், மொபைல் கேமரா நனைய கிளிக்கிக் கொண்டிருந்தனர். மிக அற்புதமாய் மங் கி பால்ஸ் நீர் வீழ்ச்சி கீழே கொட்டிக் கொண்டிருந்தது.
அடுத்து ஸட்ராபெர்ரி தோட்டத்துடன் கூடிய ஐஸ்கிரீம் பார்லரில் சுவைத்து, சிக்கி கடையில் சில சிக்கிகளை வாங்கிக் கொண்டு, கடை வீதியில் விட்டு விட்டு, கைட் விஷால் ஜாதவ் விடை பெற்றுக் கொண்டார். ஒரு கிமீ நீளமுள்ள கடைவீதியில் கொட்டும் மழையில் நோட்டமிட்ட படி எதுவும் வாங்கக் கூடாதென நினைத்தும் பேரனுக்கு ஒரு குளிருக்கு அணியும் உடை வாங்கிக் கொண்டு, புறப்பட்டபோது மணி பதினொன்றரை.
மீண்டும் பயணம், மழை விட்ட பாடில்லை, அருவிகள் மலைப் பாதையில் பலவும், ஓரிடத்தில் பாறை விழுந்த கற்கள் சிதறிய தோற்றமும் கடந்து, பஞ்சகினி கடந்து பள்ளத்தாக்கு காட்சியைக் காண கட்டணம் (ஊருக்குள் நுழைய ஏற்கனவே கட்டணம்)செலுத்தி உள்ளே நுழைந்து, காரிலிருந்து இறங்கிய்போது காற்றின் வேகம் ஆளையே தள்ளுமளவுக்கு, போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்துக் கொண்டே இருக்கலாம். இயற்கைதான் எத்தனை அழகு.
மதிய உணவை முடித்து, நெடுஞ்சாலை அடைந்து கூகுள் அண்ணன் காட்டிய வழியில் பயணித்து, கடைசி 22 கிமீ கடக்க ஒன்றரை மணி, வீட்டை அடைந்தபோது மணி/மாலை 5 45. அடுத்த பயணம் சிர்டி புதனன்று என முடிவெடுத்து, சூடான இட்லி, புதிய குக்கரில் சமைத்து உண்டு, இனிதான நாளாய் தொடர்ந்தது.
( வரும்)

கருத்துகள் இல்லை: