திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண் - 11

காலையில் சுடச்சுட போகா சாப்பிட்டு, டீ குடித்த பிறகு, அறையைக் காலி செய்து, கீழே இறங்கி, காரில் பைகளை வைத்து விட்டு, ஓனருடன் வீட்டு பின்பக்கமுள்ள பெரிய தோட்டம் பார்வையில் விரிந்தது. பாக்கு, பலா, தென்னை என பலவித மரங்கள், தோட்டம் முடியும் இடத்தில் கடல் தென்பட்டது. அவரிடமிருந்து விடை பெற்று, அவரது அறிவுரைப் படி கோரலை என்ற போர்ச்சுகல் கோட்டை நோக்கிப் பயணம். அங்குள்ள கிராமத்தில் போர்ச்சுகல் மராத்தி கலந்த மொழி பேசுவார்கள் என்பது கூடுதல் தகவல்.

புறப்பட்டு பயணித்த போது, வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பசுமைத் தோரணங்களாய். முந்தைய நாள் வினாயகர் கோயில் சென்றதைக் கூற மறந்தால் தவறாகி விடும். சிறியதாய் அழகாய், செந்நிற கட்டிடத்தில் வீற்றிருந்தார்.
கோட்டைக்குச் செல்லும் பாதையில் பயணித்து கிராமத்தை அடைந்த போது, கூகுள் தனது உரையை முடித்துக் கொண்டார்.மலை உயரத்தில் கோட்டை தெரிந்தது. மேலே போவது எப்படியென, செய்வதறியாது திகைத்து, வினவிய போது, புதியதாய் போடப்பட்ட சிமெண்ட் சாலையைக் காட்டினார் கிராம நண்பர். காலையிலேயே மீன் வியாபாரம் களை கட்டியிருந்தது. கார் அங்கே வந்ததை விநோதமாய் பார்த்தார்கள். மெதுவாக மலைப் பாதையில் ஏற ஆரம்பித்த போது, கூகுள் கண்களில் இப்பாதை படவில்லை போலும் என நினைக்கத் தோன்றியது. பாதை முடிவில் வழக்கம் போல இடது புறம் கடலின் தோற்றம். கலங்கரை விளக்கு கட்டிடம் கண் முன்னே. அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் மலை மீது ஏறும் போது ஏற் படும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்ற பொறுப்புத்துறப்பு வாசகங்கள் கண் முன்னே.
நுழைவாயிலில் காலடி வைத்ததும் நாய்களின் குரைப்பு வரவேற்றது. குதறி விடுமோ என யோசித்தபடி நின்ற போது அலுவலர் ஒருவர் வந்து அழைத்துச் சென்று 20₹ நுழைவுச் சீட்டு கொடுத்து, மெதுவாக கவனமாக ஏறிப் போகச் சொன்னார். மழை மெதுவாக பெய்து கொண்டிருந்ததால் குடையுடன் கிளம்பி, முதல் படியில் கால் வைத்த போதே, ரொம்ப , Steep எனத் தோன்றியது. படிக்கட்டுகள் தாறுமாறான உயரத்தில், படிகள் இல்லாமலும், மழை பெய்ததால் சறுக்கும் களிமண் பாதையும் மேலே போகத்தான் வேண்டுமா என மனதில் தோன்றியது.
முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என தீர்மானித்து, ஏறத் துவங்கிய போது பழைய முட்டி வலி ஞாபகம் வந்தது. மெதுவாக ஏறத் துவங்கி கம்பிக் கயிற்றை பிடித்து, பாதி தூரத்தில், படிக்கட்டுகள் முடிந்து, மீண்டும் சிறிது தூரத்தில் செங்குத்தாக துவங்கியது. திரும்பி விடலாமா எனத் தோன்றியது.
இருந்தாலும் மனதைத் திடப்படுத்தி மெதுவாக மேலேறி் கோட்டை வாயிலில் நுழைந்த போது, தனி ஒருவனாக, நானூறு வருடம் பழமையான கோட்டையில் நான் மட்டுமே. மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கிருந்து கலங்கரை விளக்கும், கடலும், மலைப்பாதையும் மிக அழகான தோற்றம். பீரங்கி ஒன்றும் கண்ணில் பட்டது. கோட்டையின் பாதி தூரம் சென்றதுமே பார்த்தது போதுமெனத் தோன்றியது. மூச்சிரைத்துக் கொண்டே இருந்தது.
வீடியோக்களும் போட்டோக்களும் எடுத்துக் கொண்டு,கீழே இறங்க படிகளை அடைந்த போது இறங்க முடியுமா என ஐயம் மனதில். ஒவ்வொரு படியாக கவனமாக இறங்கினாலும், கடைசிப் படி முடியும் இடங்களில் படியில் உட்கார்ந்து காலைத் தரையில் வைத்து மெதுவாக இறங்குவதே கால்களுக்கு நல்லதென முடிவெடுத்து அதன் படியே ஒருவழியாக, கீழே இறங்கி தரையைத் தொட்டபோது ஒரு சாதனை சேதாரமில்லாமல் முடித்த மனதிருப்தி.
காரில் அமர்ந்து ஓய்வெடுத்து மலைப்பாதையில் இறங்க ஆரம்பித்த போது இளஞ்சோடி ஒன்று பைக்கில் மேலே போனது. இவர்கள் எப்படி மேலே ஏறப் போகிறார்கள் என்று நினைத்தபடி பயணம் தொடர்ந்தது. ஒரு மணி அளவில் லோனாவாலா செல்லும் மலைப்பாதையில் ஆரம்பித்து, மதிய உணவும் முடித்து, கண்டாலா பள்ளத்தாக்கில் அழகான தோற்றம் கண்டு, காரை நிறுத்தி, இரம்மியமான காட்சிகளை கண்களிலும், மொபைலிலும் கண்டு, புறப்பட்டு, NH48 வழியாக வீட்டை அடைந்த போது மணி நான்கரை. பயணங்கள் இதனோடு முடித்துக் கொள்ளலாம் என நினைத்தபோது லாவாசா போகவில்லையே எனத் தோன்றியது. அடுத்த வாரத்தில் ஒருநாள் அங்கு சென்று வந்த பிறகு, ஆகஸ்ட் 12ல் மராட்டிய மண் விட்டு மீண்டும் பெங்களூர் நோக்கி பயணம்.
(வரும்)

கருத்துகள் இல்லை: