திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண் - 5

இரண்டு நாள் பயணம் திட்டமிட்டபடி 18/7/22 காலை 7 30க்கு தொடங்கியது முதலில் லோனாவாலா செல்வதென முடிவெடுத்து NH 753F வழியாக பயணம் ஆரம்பமானது. பம்பாய் நோக்கி பயணித்து, பான்வெல் வரை நெடுஞ்சாலையிலும், டனல்களிலும்,பயணித்து, பழுதடைந்த சாலைகளை அடைந்து, கரடு முரடாய் பயணித்து லோனாவாலா எக்சிட் அடைந்து, ஊருக்குள் நுழைந்தபோது, மழை வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது.

இப்போது காலை உணவுக்காக ரெஸ்ட்டாரென்ட் ஒன்றில் நிறுத்தி, பிரெட் டோஸ்ட் மற்றும் காபியை உள் செலுத்தி, மேனேஜரிடம் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என விசாரித்த போது,அவர் விசிட்டிங் கார்ட் ஒன்றைக் கொடுத்தார் அதை ஸ்கேன் செய்துகொண்டு,
கூகுள் அண்ணனின் உதவியோடு டைகர் / லையன் பாயிண்ட் 11கிமீ என்று சொல்ல பயணம் தொடர்ந்தது.
மழை விடாமல் பெய்தது. டேம் ஒன்னறக் கடந்து சாலையில் நுழைந்த போது பிரமாண்டமாய் ஏரி கண்ணில் பட்டது. பலரும் வாகனங்களை நிறுத்தி, கிளிக்கிக் கொண்டிருந்தனர், நானும் சேர்ந்து கொண்டேன். அழகான தோற்றம். மீண்டும் மலையேற ஆரம்பித்த போது, மேகமே கீழே இறங்கியது போல் மழையும், மேக மூட்டமும் ஒரு சேர , 'U' வளைவுகளில் பயமுறுத்தியது.
பார்க்கிங் லைட் போட்ட படி கவனமாக காரை ஓட்டி உச்சியை அடைந்த போது, கொட்டும் மழையிலும் மக்கள் நனைந்தபடி, போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தனர். புகை மண்டலமாய் ஒன்றுமே தெரியவில்லை. ஒரு திரில்லிங் டிரைவிங் அனுபவம்.
பிறகு அங்கிருந்து அடுத்த இலக்கான அலிபாக் பீச் நோக்கி பயணம். இப்போது சாலையில் பல இடங்களில் பழுதானதும், குறுகியும் இருந்தது. மலைப்பாதை, காடுகள் வழியாக பயணித்து ஏற்கனவே புக் செய்திருந்த ,"Small Wonder La" ரெசாரட் பேருக்கேற்றபடி சிறியதாய் அழகாய் இருந்தது. நீச்சல் குளம் கூட சிறிய இடத்தில் அழகாய். மறுநாள் காலை குளிப்பது எனவும் மனதில் தீர்மானம்.
உணவு அங்கேயே ஆர்டர் செய்து சாப்பிட்டபோது அருமையாய் இறால் வறுவலும் மீன் குழம்பும் பிரமாதம். மாலை 5 வரை ஓய்வெடுத்து, அருகிலுள்ள கடற்கரை நோக்கிச் சென்றபோது, ஆட்கள் இல்லாத, அங்கொன்று இங்கொன்றாக மனிதர்கள், கருப்பு நிற ஈரமான மணல் பரப்பு வரவேற்றது. ஆயில் வாசனை வேறு, கடல் உள்வாங்கி தொலை தூரத்தில். கடல் நீரில் கால் வைக்கவும் தோன்றவில்லை. கதிரவன் மறையும் அந்தி வேளையில், உதயமாகும் காட்சிபோல் கண்களுக்கு, மேகங்களூடே. இது அரபிக்கடல் மேற்கு திசை என்பது ஞாபகம் வந்தது. போட்டோக்களும், வீடியோவும் எடுத்து முடித்து சிறிது நேரம் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்த போது, கிராமத்து மக்கள் சிலர் மாலை விசிட் செய்ய வந்தனர்.நானும் அறைக்குத் திரும்பி, இரவு உணவு காரமில்லாத சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சுடச்சுட சாப்பிட்ட போது ஆம்லெட்டுடன் அருமையான ருசி.
காலையில் நிதானமாக எழுந்து, ஏழரை மணியளவில், நீச்சல் குளத்தில் இறங்கிய போது, இரவெல்லாம் மழை பெய்தும், தண்ணீர் குளிரவில்லை.
ஒன்பது மணியளவில், காலையுணவாக பிரெட் ஆம்லெட் சாப்பிட்டு, கொலாபா
கோட்டைக்குப் பயணித்த போது, தூரத்தே தெரியும், கடலுக்கு நடுவே பாழடைந்த தோற்றத்தில். கடலும் உள்ளே தள்ளி் தொலை தூரத்தில். ஏனோ கடற்கரையைக் கண்ட உற்சாகமே இல்லை. அழுது வடிந்தது.
மீண்டும் பயணம். இப்போது தாமினி காட் நோக்கி. மலையேற ஆரம்பித்த உடனே மழை மீண்டும். இரண்டு அருவிகள் கொட்டிய இடத்தில் காரை நிறுத்தி, சுடச் சுட மக்காச் சோளம் சாப்பிட்டு இயற்கையை ரசித்தபடியே டீ குடித்து, படமெடுத்து, கிளம்பி வெகுதூரம் வந்த பிறகே குடையை கடையில் விட்டது ஞாபகம் வந்தது. திரும்பவும் அதே பாதையில் வந்தால் எடுத்துக் கொள்ளலாம் என தாமினி அருவி நோக்கிப் பயணித்தபோது, ஒன்றல்ல அருவிகள் மலைப் பாதையில் நூற்றுக் கணக்கில். இலக்கை அடைந்து, அங்குள்ள கடையில் சூடாக பக்கோடாவும், டீயும் சாப்பிட்டு, அருவியை நோக்கி கரடுமுரடான காட்டாற்றில் நீரில் நடந்து, அருவி மிக உயரமான மலையிலிருந்து நீர் வீழ்ச்சி அழகாய் கொட்டியது. இளைஞர்களும் இளைஞிகளுமே பயண மார்க்கத்தில் அதிகமாய்.
ஓட்டலில் சாப்பிடவில்லையெனில் பார்க்கிங் கட்டணம் கொடுக்க வேண்டுமென பெண்ணொருத்தி 50₹ வாங்கிக் கொண்டு பேப்பரில் கிறுக்கி இரசீது தந்தாள்.
மீண்டும் பயணித்த போது மழை விட்டிருந்தது. முல்ஷி ஏரிக்கரையில் சிவ் சாகர் ஓட்டலில் மதிய உணவு. முட்டை தாளி ஆர்டர் பண்ணி, வந்த போது, எல்லாமே முட்டை மயம், முட்டை பொரியல், முட்டை குழம்பு, அப்பளம் சாப்பிட முடியாமல் சாப்பிட்டு மீண்டும் பயணம், மிகப் பெரிய ஏரி, சுமார் 50 கிமீ மலைப்பாதை மிக அழகாய், சாலையும் அழகாய், வீடு வந்து சேர்ந்த போது மனதுக்கு நிம்மதி.மறு நாள் பயணம் ஏதுமில்லை ஓய்வு நாள். வியாழனன்று அருகிலுள்ள இடங்கள் செல்ல முடிவானது.
( வரும்)

கருத்துகள் இல்லை: