திங்கள், 7 செப்டம்பர், 2020

ஓசூர்

 அழகிய சிறு நகரம். மெட்ரோபாலிடன் நகரம் எனலாம். 1986 முதல் 1989 வரை இங்கே வசித்திருக்கிறேன். எனது முதல் மகனின் எல்கேஜி படிப்பு, இரண்டாம் மகன் ஓராண்டும் நிறையாத நேரத்தில் சென்னைக்கு வேலைமாற்றத்தில் சென்று விட்டேன்.

இப்போது 31 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த நகர வாசம். நன்றி வகுப்புத்தோழன் ரவிக்கு.
எத்தனை மாற்றங்கள். பரந்து விரிந்து நான்காம் தளத்திலிருந்து பார்க்கும் போது கட்டிடக் காடுகளை பார்க்க நேர்கிறது கண்ணுக்கெட்டிய தூரம் வரை.
இரு மாநில எல்லையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இருந்தாலும், தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த நகரம். மும்மொழி இங்கே புழங்கக் காணலாம்.
மலைக்கோயில் சந்திரசூடேஸ்வரர் இந்த நகரின் மகுடம் போன்றது. இரு பெரிய ஏரிகள். சிறிய ஏரிகள் பலவும் வளர்ச்சியில் மறைந்து விட்டன.
அசோக் லேலண்டில் வேலை செய்த போது இங்கே டென்ட் கொட்டாய்களில் மலையாளப் படங்கள் பார்த்த நினைவு. எனது லேம்பி ஸ்கூட்டர் நண்பன் மோகனையும் என்னையும் சுமந்தே தேய்ந்து போனது.
படம் பார்க்கப் போவதானால் ஆபீஸ் வேலை அதிகமென்ற பொய். வீட்டு மனைகள் சில ஆயிரங்களில் வாங்க முடியும். ஆனால் மாதச் சம்பளமே இரண்டாயிரத்துக்கும் குறைவாய். அப்போது தந்தையின் உதவியோடு என் பணமும் சேர்ந்து வாங்கிய மனைகள் விற்க முடியாமல் இன்றும் உள்ளன.
பெங்களூரு போன்றே சீதோஷ்ண நிலை என்றாலும் நகர நெருக்கடி இல்லா அமைதி.
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை, சென்னை சில்க்ஸ், ஜிஆர்டி, டி மார்ட், பிக்பஜார் என்று வணிக வளாகங்கள் ஊருக்குள்ளே நெருக்கடியான தெருக்கள், உயர்ந்த அடுக்கு மாளிகைகள்,உழவர் சந்தைகள், பூ மார்க்கெட் என ஜன நட மாட்டம் அதிகரித்து ஆரவாரமாய் மாறியுள்ளது. கரோனா என்பதால் பேருந்துகள் இல்லை,இன்னும் அதிக நடமாட்டம் விரைவில்.
இரு சக்கர வாகனங்கள் , கார்கள் குழப்பமான சாலை சந்திப்புகள் மாற்றத்தின் விளைவு. இரயில் போக்குவரத்தும் உண்டு இப்போது.
டென்னிஸ் பந்தில் இரவு நேர கிரிக்கெட் டி20ன் முன்னோடி. மாலூர், பாகலூர்,தளி,தேன்கனிக்கோட்டை என்ற சிற்றூர்கள், அப்படியே போனால் காவிரி ஆறும் ஒகேனக்கல் அருவியும் 100 கிமீகுள்ளாக வந்து விடும்.
கோடை தவிர எப்போதும் மிதமான வெப்பம், குளிர்காலத்தில் அதிகக் குளிர், பருவ மழை தவறாமல்.
தெற்கு நோக்கிப் பயணம் செய்யும் நுழை வாயில். சென்னை செல்லும் நெடுஞ்சாலை என்று பெருமைக்குரிய நகரமாய் தொழிற்சாலைகள் நிரம்பி பல நகரங்களிலும் இருந்து வந்து செல்வோருக்கு நட்சத்திர விடுதிகள் என்று் அனைத்து வசதிகளும் பெருகி விட்டாலும் பழைய ஓசூர் நினைவு மறக்க இயலவில்லை.

கருத்துகள் இல்லை: