திங்கள், 7 செப்டம்பர், 2020

அந்த நாள் நினைவுகள்

 ஆராரோ ஆரிரரோ கண்ணுறங்கு மகனே

ஆனை கட்டிப் போரடிச்ச ஊரிதுவே
ஏரு பூட்டி வயலுழுத ஊருமிதுவே
தேரு பூட்டி வீதியுலா வந்ததிங்கே
ஆண்டு தோறும் திருவிழா தவறவில்லே
ஆத்துத் தண்ணி வாய்க்கால்லே எப்போதும்
வயக்காடு பாய்ச்சலுக்கு வாலிப நீச்சலுக்கு
சாயங்கால மரத்தடி கூட்டம் தவறாது
ஆடுமாடு மணியோசை வீடு திரும்பும்
ஆத்தாவும் சூடாவே களிகிண்டி உருட்டுவா
கருவாட்டுக் குழம்போட ருசியான சாப்பாடு
கம்பங் கூழும் நீர்மோரும் மத்யானம்
தெருமுக்கு டீக்கடைலே சூடா வடையும்
தெரியாத சந்துகள்ளே சாராயம் காரக்கடலை
உறவுன்னா ஊரக்கார சனங்க முச்சூடும்
உருத்தெரியாம மாறிப்போச்சு வறுமை இப்போ
வயிறெல்லாம் ஒட்டிப் போச்சு வாடிப்போச்சு
பயிறெல்லாம் இங்கொண்ணு அங்கொண்ணா தண்ணியில்லே
யாரிதுக்கு காரணமோ புரியவில்லே நீயுறங்கு
மாரியாத்தா வருவாளோ மாத்தமொன்னு தருவாளா ?

கருத்துகள் இல்லை: