சனி, 18 டிசம்பர், 2021

கார் போன போக்கிலே - 4

காலை ரெடியாகி டிபன் சாப்பிட்டு அம்பா சமுத்திரம் பயணம். திட்டமிட்டபடி கன்யாகுமரி செல்லுதல் முதல் மாற்றம். ஏற்கனவே பல முறை சென்றதால் போக வேண்டாமென முடிவெடுக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் பயண தூரம் 41 கிமீ மட்டுமே. மாஞ்சோலை போகணும்னா இங்கேயுள்ள பாரஸ்ட் ஆபீசில் அனுமதி பெற்றே போகவேண்டுமெனச் சொன்னார்கள். அம்பாசமுத்திரம் அடைந்து மெயின்ரோடுல இருக்கிற பாரஸ்ட் ஆபீசில் நுழைஞ்சப்ப அதிகாரி யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்த கிளார்க் உடன் பேசிக் கொண்டிருந்தப்ப மாஞ்சோலை அனுமதி இன்னும் வரலைனும் இன்னும் சில நாட்களில் வரலாமுன்னும் சொன்னார்.
அவ்வனுமதி கிடைத்தால் மணிமுத்தாறு அணை, அருவி,மாஞ்சோலை இவையனைத்தும் பார்க்க முடியும். சிறிது நேரத்தில் ஆபிசர் அழைக்க அவருடன் பேசிய போது அனுமதி தற்போது ஹெட் ஆபீசில் கொடுப்பதாகவும் இன்னும் சில நாட்களில் கொடுக்க வாயப்பிருப்பதாகவும் கூறினார்.அனுமதி தினமும் ஐந்தே வண்டிகளுக்கு மட்டுமெனச் சொன்னார். நல்ல மனிதர் அமைதியாகப் பேசினார். முதல் ஏமாற்றம்.
வெளியே வந்து காபி சாப்பிட்டப்ப அந்த தெருக்கோடிலே ஆறு ஓடுகிறதெனத் தகவல். காரைக் கிளப்பி அங்கே கோயிலொன்றைச் சுற்றி போனபோது தாமிரபரணி ஆறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நிறைய ஆண்களும் பெண்களும் குளிச்சுட்டு இருந்தாங்க. ஏனோ எனக்கு குளிக்கத் தோணலே. போட்டோக்கள் எடுத்துட்டு அங்கே பாறைமேல் உட்கார்ந்து கால்களை நனைச்சுட்டு கிளம்பிட்டேன்.
அடுத்தது காரையார் ் அணை மற்றும் பாணதீர்த்த அருவி போகலாம்னு நண்பன் சிவராஜ் சொல்ல சுமார் பத்து கிமீ பயணம் செஞ்ச பின் மலை அடிவாரத்துலே காவலர் நிறுத்தி போக அனுமதி இல்லேனு சொல்லிட்டார். இரண்டாவது ஏமாற்றம். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதுண்ணு ஓட்டலுக்கே போக முடிவெடுத்து திரும்பியாச்சு. கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்ட பொம்மன் இடங்களுக்குப் போகலாமானு யோசிச்சு அங்கேயும் அனுமதிக்கலேன்னா போறது வேஸ்ட்னு விட்டாச்சு. ஓட்டல் அறைலே ஓய்வெடுத்துட்டு மாலை ஐந்து மணி போல கிளம்பி நெல்லையப்பர் கோயில் வாசலையாவது பாக்கலாம்னு பஸ்லே பயணிச்சு வாசல்லே நிண்ணு பாத்துட்டு, இருட்டுக்கடை அல்வா வாங்கிக்கிட்டு பஸ்லே ஓட்டலுக்குத் திரும்பி போற வழிலே டிபன் வாங்கிட்டு ரூமுக்குப் போய் சாப்பிட்டு, மறுபடி டிஷ்கஷன்லே மேகமலை போவது வேணாமுன்னு முடிவாச்சு. சிறுமலை போல தான் அதுவும்னு நண்பன் சொன்னதாலே அந்தப் பயணமும் கட்.
மறுநாள் காலை மதுரைக்குப் பயணிப்பதாய் முடிவானது. உறக்கம் கண்களைத் தழுவ அன்றைய நாள் ஏமாற்ற நாளாக முடிந்தது.
(நாள் நான்கு)

கருத்துகள் இல்லை: