சனி, 18 டிசம்பர், 2021

அண்ணாமலையாரும் அழகிய அருவியும் - 1

 அண்ணாமலையாரும் அழகிய அருவியும்

நீண்ட நாட்களாக தள்ளிப் போட்டு இனிமேலும் தள்ளிப்போட வேண்டாமென முடிவெடுத்த பயணம். காலை 7 மணி, 21/10/21, வியாழன், மீண்டுமொரு தனிமைப் பயணம்.
பெங்களூருவில் கிளம்பி, கிருஷ்ணகிரிக்கு முன்னால் , கிருஷ்ணாபவனில் காலையுணவு, காருக்கு HP பெட்ரோல் பங்க் டேங்க் நிரப்பல், 104+₹ , வைரமாய் காசுக்கு.
திருவண்ணாமலை சாலையில் திரும்பி பயணித்த போதே ஆரம்பம் பத்து வருடங்களுக்கு மேலாக போடப்பட்டுக் கொண்டு இருக்கும் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி. புரியாத புதிராய் மனதில் கிரிவலம் செல்பவர்கள் அதிகம் பயணிக்கும் சாலை இவ்வளவு நாட்களாய் கிடப்பில் இருக்க யார் காரணம் !? விடை கிடைக்குமா?
செங்கம் வரை இப்படியே, அதற்குப் பிறகே ஒழுங்கான சாலை. அடி அண்ணாமலை அடைந்த போது மணி 11.20. நண்பர் அசோக்குடன் சுக்கு காபியும் பட்டர் பிஸ்கட்டும் சாப்பிட்டு,அறை எடுத்து, ஓய்வுக்குப் பிறகு, பள்ளிகொண்டாபட்டு பயணம். மழை பெய்து எங்கும் பசுமை. மதிய உணவுக்கு நண்பர் சக்திவேல் வீட்டில் ஏற்பாடு. தடபுடலாய் அசைவ உணவு, வெகுநாட்களுக்குப் பிறகு, கிராமத்து கைவண்ண சமையல். திருமதி சக்திவேல் அவர்களுக்கு நன்றி சொல்லி வந்த வேலை பார்க்க,நண்பரின் இருசக்கர வாகனத்தில் வயல்களூடே பயணம்.
இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட மரங்கள் பணப் பயிராக. மலை வேம்பு பத்தடிக்கு மேல் ஏழு மாதங்களில். பூவரசு, தேக்கு, மகோகனி என்று பல மரங்கள். அவைகளின் வளர்ச்சி குழந்தைகள் வளர்வதைப் போன்று ஆர்வமாய் வீடியோவும் எடுத்த பின்பு, அசோக்கின் தந்தை தொண்ணூறு வயது இளைஞரைப் பார்த்துப் பேசிவிட்டு, ஊர் எல்லையில் அண்ணாமலையார் வருடந்தோறும் வந்து செல்லும் சம்பந்தியின் ஆற்றங்கரை விசிட். மழை பெய்து நீரோடிக் கொண்டிருந்தது.
சாத்தனூர் செல்ல முடிவெடுத்து நண்பர்களுடன் கொட்டும் மழையில் காரோட்டி அணையை அடைந்தபோது அனுமதி இல்லையெனச் சொன்னபோது மனம் ஏமாற்றமடைந்தது. திரும்பி நகரை அடைந்தபோது, அரண்மனை 3 படம் போக திடீரென முடிவெடுத்து அரங்கத்தில் நுழையவும் படம் ஆரம்பிக்கவும், பேய் மாளிகை கண்முன்னே விரிந்தது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: