சனி, 18 டிசம்பர், 2021

ஒன்றிய அரசும் அண்டை நாடுகளும்

 ஒன்றிய அரசும் அண்டை நாடுகளும்

எங்க வீடு போல பல வீடுகள்ளேயும் இந்த காலத்துலே ஒன்றிய அரசு தான். ஜனநாயக முறை வீட்டுக்கு வீடு மாறுபடும்.
பிள்ளைங்க வெவ்வேறு இடங்கள்ள இருப்பாங்க, நாட்டுக்குள்ள அல்லது வெளிநாட்டுல. மாதச் செலவுக்குண்ணு ஒரு தொகை வந்துரும், ஒன்றிய அரசுக்கு. இதுலே ஆட்சிமுறைகள் மாறுபடும். பெற்றோரையும் பிள்ளைகளும் பொறுத்து. மாநில சுயாட்சி முறை இங்கே உண்டு.
ஒன்றிய அரசு மாநில அரசுகளை ஏமாத்த முடியாது. பெரும்பாலும் மாநில அரசுகளே தீர்மானிக்கும் பண பங்கீடுகளை.
ஒன்றிய அரசுகள் தனக்கென உள்ள சொத்துகளை விற்றும் சில நேரங்களில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். சில ஒன்றிய அரசுகள் சோமாலியா மாதிரி வறண்டு போகும் காலப் போக்குலே.
குறிப்பிட்ட காலம் வரைக்கும் முடியாட்சி முறை இருக்கும், மெதுவாக ஒன்றிய அரசாக மாறி, சிறிய நாடாக மாறி, மற்ற நாட்டில் அடைக்கலம் ஆவது உண்டு.
ஒன்றிய நாடுகளுக்கு பல அண்டை நாடுகள் (உறவுகள்) இருக்கும்.அதில் சில பகை நாடுகளும் உண்டு. பல நேரங்களில் அண்டை நாடுகளுக்கு ஒன்றிய அரசு உதவி செய்யும். ஆனால் ஒன்றிய அரசுக்கு உதவி தேவைப்படும் போது அண்டை நாடுகள் உதவாமல் போகலாம். அது ஒன்றிய அரசுக்கும் அண்டை நாடுகளுக்குமான உறவைப் பொறுத்தது.
அண்டை நாடுகளும் நம்மைப் போலத் தான் ஒன்றிய அரசுகள்,சிறியது முதல் பெரியது வரை.
இந்த நூற்றாண்டில் ஒன்றிய அரசுகள் மறைந்து குறுநாடுகளாக மாற ஆரம்பித்துள்ளன.

கருத்துகள் இல்லை: