ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

காத்திருக்கேன் வந்துவிடு

கண்ணுக்கு மையெழுதி கால்கொலுசு ஓசையிட
பெண்ணுக்கு அணிகலனா போறவளே பொன்னுத்தாயி
சொல்லுக்குச் சுவையுண்டு பார்வைக்குப் பொருளுண்டு
சொக்க வைக்கும் உன்னழகு கண்படுமோ
கணநேரப் பார்வையிலே கட்டிப் போட்டாயே
காந்தக் கண்ணழகி கருங்கூந்தல் பின்னலடி
மெல்லநடை நடந்து இடையசைத்து செல்கையிலே
மெய்மறந்து பார்த்திருப்பேன் பேச்சேதும் வருவதில்லை
காணக் கிடக்கலையே கழனியிலும் வாரலியே
காய்ச்சலேதும் வந்ததுவோ நலம்தானே சொல்லடி பெண்ணே
மாமனிங்கே தவிச்சிருக்கேன் மறுவார்த்தை சொல்லிவிடு
மாங்காயை பறிச்சு பைநிறைய வச்சிருக்கேன்
காத்திருக்கேன் வந்துவிடு காலதாமதம் வேண்டாமடி
பூத்துவிடும் கண்ணெல்லாம் உன்னுருவம் கண்டாலே !

கருத்துகள் இல்லை: