சனி, 18 ஏப்ரல், 2020

பயணங்கள் முடிவதில்லை

சின்ன வயசுலே வீவு விட்டா பெரும்பாலும் அப்பா ஊரு நாய்க்கனேரி, இல்லேனா வாலாஜாபேட்டை, சில வருஷத்திலே வேலூர் பக்கத்துலே இடையஞ்சாத்து கிராமம். ஒவ்வொரு ஊரும் நல்ல கிராமத்து வாழ்க்கைய உணர்த்தும். சீக்கிரமே விழிச்சு சீகீகிரம் தூங்கிடும். மாட்டோட சலங்கை சத்தம் அலாரம் மாதிரி.
சாணம் தெளிச்சு கோலம் போடறதுலே இருந்து பம்ப் செட் குளியல் துணி துவைக்கறது தினம் தினம் காட்சி. ஆடு மாடு மலை மேல புல் மேய ஓட்டிட்டு போற சிறுவர் சிறுமிகள பாக்கலாம்.
சுடச்சுட இட்லி சட்னியோ சாம்பாரோ காலை உணவு. நிறைய வீடுங்களே இந்த வியாபாரம். மோர் வித்துட்டு போற பெண்மணியோட கூப்பாடு.
நண்பகலுக்கு முன்னாடி வயல் பக்கம் போனா கிணத்துலே குதிச்சு தண்ணிலே கோட்டை கட்டற பசங்கள பாக்கலாம். நீச்சல் கத்துக்கற ஆசை வரப்ப இடுப்புலே கொடிய கட்டி உள்ளே குதிக்க சொல்லி மாமன் ஒரு முனைய புடிச்சுப்பார். பட்டணத்து ஆறுமுகம் பையனுக்கு ஊரெல்லாமே சொந்தம். யார் வீட்டுலே என்ன சாப்பிடறதுனு போராட்டம். பெரும்பாலும் கைக்குத்தல் அரிசி. கத்தரிக்கா சாம்பார். சில நாள்ளே சேப்பக்கிழங்கு புளிக் குழம்பு. மத்தியானம் சில நாள்ளே கேழ்வரகுக் கூழ். அதுலே வேர்க்கடலை போட்டு அது வாயில மசியறப்ப தனி ருசி.
வயல் வேலை செய்யவும் ஆசை வரும். தண்ணி மடை மாறுறது, பாத்தி பாத்தியா சேனையோ கத்தரியோ செடிகள பாக்க சந்தோஷமா இருக்கும். இடையஞ்சாத்துலே பெரியப்பா, அண்ணங்க,தம்பியோட செங்கல்சூளைல கல்ல அடுக்கி ஊடாற விறக போட்டு அத பத்த வைக்கறப்ப ஏதோ பெரிய சாதனை மாதிரி தெரியும்.
வாலாஜாவுலே பாட்டியோட (ஆயானு கூப்பிடுவோம்) நிலத்துக்குப் போய் துவர மண்டை, வேர்க்கடல செடிங்கள கட்டி சின்னதா தல மேல தூக்கிட்டு வர வேலயும் உண்டு. மாடுங்களுக்கு தீனியாவும் அடுப்பெரிக்கவும் அது உபயோகமாகும்.
பாட்டி பல நேரங்கள்ளே புளிய இலை துளிர் இல்லேனா புளிக்கீரை குழம்பு வச்சு சில நேரம் போரடிப்பாங்க
உறவுக்காரங்க பாசம் லீவு முடிஞ்சு பஸ்லே திரும்பறப்ப கண்ணுலே நீர் முட்டும்.
17/01/2020
சதாப்தி பெங்களூர் சென்னை

கருத்துகள் இல்லை: