சனி, 18 ஏப்ரல், 2020

வருமோ ஒருமாற்றம்

ஓய்ந்த பின்னே உட்கார இடம்தேடி
காய்ந்த சருகாய் சுமந்த உடல்தனை
வேய்ந்த கூரைக்குள் உள்ளடக்கி சுருக்கி
சாய்ந்த உடலுக்கு சாமரம் வீசுவையோ
பட்ட மரமாய் பரிதவித்த மனிதனுக்கு
கெட்ட குடியே கெடுமென்று விட்டிடுவாயோ
சொட்டச் சொட்ட வியர்வை சிந்தி
வட்டிலிட்ட அன்னம்தானே உன்னுயிராய் இங்கே
சோற்றுக்கு நெல்தந்து சோர்ந்த உழவன்மனம்
கூற்றுவன் வரும்நேரம் நோக்குதல் முறையாமோ
பற்றற்ற உள்ளமதை பற்றியது ஏனோநீவிர்
கற்றது இதைத்தானோ கசடராய் மாறுதற்கோ
உலகிற்கே உணவளித்த ஊரிலிப்போ உழவில்லை
ஊருணி நீருமிங்கே உலர்ந்து போனதய்யா
வெள்ளநீர் வந்தாலே வாய்க்கால் வழிந்தோடும்
கொள்ளை போனமணல் கொண்டுபோனது நதிகளையே
கூக்குரல் யார்செவியும் சேராது என்செய்ய
கூனிக்குறுகி நிதம் கும்பிட்டு நின்றால்
வறியவர் கூப்பாடு புல்லுக்குச் சேருதிங்கே
வருமோ ஒருமாற்றம் இன்றோநாளையோ யாரறிவார் ?

கருத்துகள் இல்லை: