ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தாமரைத்தோட்டம், பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம் ஐந்து
தொடரின் இப்பாகத்தை இன்று எழுதுவதே சிறந்தது. அன்னை உயிர் நீத்த நினைவு நாள் இன்று.
பள்ளி வாழ்க்கையை முடிச்சு கல்லூரி வாழ்க்கை ஆரம்பம். குவார்ட்டர்ஸ்லே இருந்து மெக்னிகல்ஸ் பிரிட்ஜ் வழியா நடந்து சேத்பட் ஸ்டேஷன்லே டிரெயின் பிடிச்சு தாம்பரத்துலே இறங்க 40 நிமிஷம் ஆகும். கிழக்கு பக்கமாக வெளியே வந்தா நேரெதிர் கல்லூரி. மிகப் பேரிய இடம்.
பக்கத்து ஏர்போர்ஸ் காம்பவுண்ட் கிட்ட தான் விளையாட்டு மைதானம். தமிழ் மீடியத்துலே இருந்து இங்கிலீஷ் மீடியம் சேந்தப்ப கொஞ்ச காலம் படிப்பே கஷ்டமாத்தான் இருந்தது.
அடுத்து என்ன படிப்புன்னு யோசிச்சு கணித குரூப் எடுத்தது அப்பா மெடிகல்லாம் செலவு பண்ண முடியாதுனு சொன்னதும் பயாலஜி மேலே எனக்கு ஆர்வம் இல்லாததும்.
இந்த ஒரு வருஷப் படிபபபுலே NSS லே சேந்து பக்கத்து கிராமங்களுக்குச் சேவை செய்யப் போனப்ப சுவர்ணலதானு ஒரு வருஷ சீனியர் பாடிய கண்களிரண்டும் உன்னைக் கண்டு பேசுமோ பாடலும் அவளோட அழகின் ஈர்ப்பும் ஞாபகம் வருது.
காலம் உருண்டோட அம்மாவின் உடல் நிலை மோசமா ஆயிட்டே வந்தது. பி யூ சி இறுதிப் பரீட்சையும் நெருங்கிடுச்சு. அம்மா உடல் உருகி கோமா நிலைக்குப் போயிட்டாங்க.
கவலையோடவே ஒவ்வொரு பரீட்சையும் எழுதிட்டு வருவேன். அன்னைக்கு ஏப்ரல் 1,1974 தமிழ் பரீட்சை. பரீட்சைலாம் மத்தியானம் தான்.
விடியற்காலைல அம்மாவுக்கு மூச்சு இழுக்க ஆரம்பிச்சுடுச்சு. பாட்டி பாலாடைலே பால் ஊத்தி வாயிலே ஊத்தச் சொன்னாங்க. அது முழுசா உள்ளே போறதுக்கு முன்னாடி உயிர் பிரிஞ்சிடுச்சு.
நான் கதறிய கதறல் குவார்ட்டர்ஸ் முழுசும் கேட்டிருக்கும். பரீட்சைக்குப் போகணும்னு எண்ணமே இல்ல எனக்கு. அடுத்த வீட்டுக்காரங்களாம் வந்து பரீட்சைக்குப் போய்ட்டு வானு சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு காதுல விழலே.
ஜானகிராமன்னு மாமா அரும்பாக்கத்துலே வந்திருந்தார். அவர் என்னை ரெடியாகச் சொல்லி வற்புறுத்தி என்னோடவே காலேஜ்க்கு வந்து பரீட்சை ஹால்லே விட்டு வெளியேகாத்துட்டு இருந்தார்.
பரீட்சை எழுதி முடிச்சு வீட்டுக்கு வந்து அம்மாவோட இறுதிச் சடங்கு நடந்தது. கொள்ளி போடறப்பவும் கதறி அழுகை.
அதுக்கப்புறம் இருந்த பரீட்சைங்க, பிராக்டிகல்ஸ் எல்லாம் முடிச்சேன். அன்னைக்கு நான் தமிழ் பரீட்சைக்குப் போகாம இருந்தா இந்தக் குழுவிலே இருந்திருக்க மாட்டேன்.
ரிசல்ட் வந்தப்ப பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி இருந்தேன். கணக்குலே நூறறுக்கு நூறு. பிசிக்ஸ்லே டிஸ்டிங்சன் கெமிஸ்ட்டிரிலே மார்க் குறைவு. ஆச்சரியம் என்னண்ணா தமிழ்லே முதல் மார்க்.
எஸ்எஸ்எல்ஸிலேயும் கணிதத்துலே நூற்றுக்கு நூறு. அதனாலே BSc மேத்ஸ் அப்ளை பண்ணி அதே கல்லூரிலே சேந்துட்டேன்.

கருத்துகள் இல்லை: