புதன், 31 மார்ச், 2021

தாத்தா

 பழைய நினைவுகளை அசை போடுவது ஒருவித மன மகிழ்வு. அன்னை வழி தாத்தாவின் ஒன்று விட்ட தம்பி ஜமேதாராக(Special Armed Police) இருந்த அதே குடியிருப்பில் பின்னாளில் எங்கள் குடும்பம் குடிபெயரும் என்பதை அறிந்திருக்கவில்லை. அவர் டூட்டியில் இருந்தபோதே மாரடைப்பால் இறந்தார் என்பதும் அப்போது எனக்கு மூன்று வயது என்பதும் பின் நாட்களில் தெரிய வந்தது.

எனது தந்தை ஜவ்வாது மலைக்காட்டில் காட்டிலாகா காவலராக இருந்து, அம்மாவைத் திருமணம் செய்த பிறகு, மேலே சொன்ன தாத்தா சிபாரிசால் சென்னை நகரக் காவலராகச் சேர்ந்தார் என்பதும் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அம்மாவின் தந்தையும் தலைமைக் காவலர் பணியிலிருந்து பாதியில் இன்ஸ்பெக்டர் அவரை மரியாதையில்லாமல் பேசியதால் விலகியவர்.
தந்தையோ எட்டாம் வகுப்பே படித்திருந்தாலும் தூரத்துச் சொந்தமென்று திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். அம்மாவும் அப்பாவும் பொருத்தமான ஜோடிகள், அழகானவர்களும். பிற்காலத்தில் ஏனோ எல்லாம் மாறிப்போனது. அம்மாவும் இளம் வயதிலே (36) இயற்கை எய்தினார்.
வாலாஜாபேட்டை கச்சால நாயக்கர் தெரு, ஆஞ்சனேயர் கோயில் பஜனை கோஷ்டியில் தாத்தா பிரபலமானவர். ஆஜானுபாகுவான அவர் கோபத்தில் கண்கள் சிவக்க பலமுறை பார்த்திருக்கிறேன். ஆஞ்சநேயரை நேரில் பார்ப்பது போலவே இருக்கும்.
தாத்தா வீட்டில் கழித்த நாட்கள் மறக்க முடியாதவை. மங்களூர் ஓட்டுக் கூரையுடன் நீண்ட வீடு. நடுவில் முற்றம். அந்த முற்றத்தில் சிட்டுக் குருவிகளும் சில நேரங்களில் குரங்கும் விசிட்டர்ஸ்.
பரணையில் மத்தளம் முதலான வாத்தியங்கள் இருக்கும் பின் கொட்டடியில் கிணறும், மாடும் கன்றும், சமையலறை, அதனையொட்டி வைக்கோல் அறையென்றும் இருக்கும். அந்த வைக்கோல் அறையில் புதையலொன்று வெள்ளிக்காசுகள் நிறைந்த பாத்திரம் கிடைத்தது என பாட்டி எனக்கு இரகசியம் சொல்லி இருக்கிறார்.
மகாபாரதம், இராமாயணக் கதைகள் பலவும் சொல்லக் கேட்ட காலம். அதே தெருவில் வசித்த தூரத்து மாமா பாலுவிடம் சிலம்பம் சுழற்றக் கற்றுக் கொடுக்கச் சொல்வேன். கடைசி வரை நிறைவேறவில்லை. கம்பை கையில் வைத்து தூரமாய் நின்று பார்த்ததோடு சரி.
வேர்க்கடலை அறுவடை சமயங்களில் பச்சையாக சாப்பிடுவதும், காராமணி போன்ற காய்களை சுட்டு சாப்பிடுவதும், சின்னக் கொட்டகையொன்றில் உட்கார்ந்து காவல் காப்பதும் ஆண்டு தோறும் நடக்கும்.
துவரை மண்டை எனச்சொல்லும் பயிறு அறுக்கப் பட்ட செடிகள் கட்டாகக் கட்டி தலையில் சுமந்து வீட்டிற்கு வந்து உலர்த்தப்பட்டு அதுவே சமையல் விறகாக்கப் படும்.
உழவுத் தொழிலுக்கும் எனக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருந்திருக்கிறது. ஏர் ஓட்ட முயலும்போது கலப்பை நேராகப் பிடிக்கத் தடுமாறியது நினைவில் இருக்கிறது. வயலில் நீர் பாய்ச்ச மடை மாற்றம் செய்வதில் அவ்வளவு ஆர்வம்.
மீர்சாகிப் பேட்டை வாடகை வீட்டிலிருந்து, அப்பா மைலாப்பூர் நல்லாங்குப்பம் காவல் நிலையத்தில் காவலராக, கீழ்பாக்கம் குடியிருப்புக்கு மாறிய வருடம் 1962. கல்வி வாழ்க்கையின் ஆரம்பம்.


கருத்துகள் இல்லை: