புதன், 31 மார்ச், 2021

தேடுதல் தொடரும்

 வாழ்க்கை அப்பப்ப பேலன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும். உயரப் பறக்குறது கீழேயும் கீழே இருக்குறது மேலேயும் போற ராட்டினம் மாதிரி.

எதிர்காலம் இப்படித் தான்னு தேர்தல் ரிசல்ட் மாதிரி வாழ்க்கையை சொல்ல முடியாது. இரயில் சிநேகம்னு சொல்ற மாதிரி வண்டி மாறி சனங்களும் மாறிக்கிட்டு இருக்கும்.
வடக்கே போறமா தெற்க நோக்கி போறமா எந்த ஸ்டேஷன் வந்தா இறங்கனும்னு குழப்பம் கூட வரும். பேச்சு கொடுக்க ஒருத்தர் கிடச்சா காலம் முழுக்க அவரோட இருக்கப் போற கணக்கா பேசிட்டு, இறங்கறப்ப வரேங்க பாக்கலாம்னு சொல்றப்ப, வாழ்க்கைலே இனிமே அவர பாப்பமான்னு தெரியாது.
ஞானம் பிறக்கும் சில வேளைலே, இனிமே இப்படிச் செய்யவே கூடாதுன்னு, விடிஞ்சா போச்சு குடிகாரன் பேச்சு கணக்கா திரும்ப அதே தப்பை செஞ்சுட்டு கைய பிசையறப்ப தன்னையே திட்டிக்கத் தோணும்.
உலகம் ரொம்ப கெட்டுப் போச்சுப்பா, நல்லதுக்கே காலமில்லை சொல்லிட்டே இருப்போம், செவ்வாய் கிரகத்துக்கா போக முடியும். இருக்கறவங்க மேலே மேலே சேக்கறதும் இல்லாதவன் அத பாத்து ஏங்கறதும் வறுமையின் வரம்.
எல்லாமே மாறும்னு கனவு மட்டும் நிறைய காணுவோம். இன்னொரு தடவ தண்ணிலே உலகம் அழியப் போதுன்னு யாரோ சொன்னது நினைவு வருது.
ஓடிட்டே இருக்கனும் ஓய்வில்லாம எதையோ ஒன்று தேடிக்கிட்டு, திருப்தி இல்லாத, மனசு அமைதியில்லாம, காலமெல்லாம்.
யாராவது ஒருத்தனையாவது பாத்துரவோமா, இந்தப் பயணம் முடியறதுக்குள்ளனு, தேடுதல் தொடரும்.
உருண்டையா இருக்கறதாலே தேட ஆரம்பிச்ச இடத்துக்கே திரும்பவும் வருவோம். தேய்ந்த உடம்பும் சோர்வான உள்ளமும் ஞானி போன்ற எண்ணங்களும் மட்டுமே மிஞ்சும்.

கருத்துகள் இல்லை: