திங்கள், 15 ஏப்ரல், 2024

இமாசலப் பிரதேசம் நாள் ஆறு ( 16/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஆறு ( 16/03/24)
காலை உணவுக்குப் பிறகு பயணம் தொடங்கியது. Para gliding பற்றிய பேச்சு நமது சாரதியுடன் வந்த போது நான் அவ்வளவாக விருப்பம் காட்டவில்லை. அவர் கில்லாடி, குலுவுக்கு சில கிமீ முன்னணி, தமது நண்பரிடம் சில நிமிட வேலை இருப்பதாகக் கூறி ஆற்றோரக் கடையில் நிறுத்தினார். வேடிக்கை பார்த்து நின்றிருந்த என்னிடம் அவரது நண்பர் பேசிப் பேசியே Para gliding ஆசையைத் தூண்டி சம்மதிக்க வைத்து விட்டார்.
அங்கிருந்த திறந்த ஜீப்பில் மலை உச்சிக்குப் பயணம், குலுக்கு மலை பயணம் போன்றே இருந்தது. கீழே விழாமலிருக்க கம்பியைப் பிடித்த கைகள் மிக வலிக்க ஆரம்பித்தன. என்னோடு அதே ஜீப்பில் பயணித்த இளஞ் சோடியில் இளைஞன் இளைஞியை அணைத்துக் கீழே விழாமல் பார்த்துக் கொண்டான். வழியில் பெரிய கிட் பேக் ( kit bag) சகிதமாக நபருக்கு ஒன்றாக பைலட்கள் எனப்படும் வழிநடத்துனர்கள் ஏறிக் கொண்டனர். உச்சி 8000 அடி உயரம். அப்போது தான் ஒரு பெண் தவறுதலாக டேக் ஆஃப் செய்து கீழே சரிந்திருந்தாள். நல்ல சகுனம்.
எல்லாமே துரித கதியி்ல் ஏனோ இவர்கள் செய்கிறார்கள். ஆபத்தான இப்பயணத்தை போதிய விளக்கத்தோடு நடத்த அதிகாரிகள் இக்குழுவினருக்கு வலியுறுத்த வேண்டும்
எனது உடலைச் சுற்றி பல கிளிப்கள், இருக்கை என இணைக்கப்பட்டன. பைலட்டும் என்னோடு இணைக்கப் பட்டார். அச்சரிவில் கால்களை மடக்காமல் ஓடி டேக் ஆஃப் செய்ய வேண்டுமெனச் சொல்லி, நான் தயாராவதற்குள், இருவர் என்னை சரிவில் ஓட வைத்தார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் வானத்தில் பறக்க ஆரம்பித்தேன். சரியாக உட்கார்ந்திருக்கவில்லை. நான் டென்ஷன் ஆனது விட பைலட் அதிக டென்ஷன் ஆகி, கத்திக் கொண்டிருந்தார். அவர் சொன்னது புரியவே பல நொடிகள் ஆனது. ஒரு வழியாக அவரது உதவியுடன், பின்னோக்கி நகர்ந்து, சரியாக உட்காரவே சில நிமிடங்கள் ஆனது. என் வலது கையில் கோ புரோ எனும் கைப்பிடியுடன் கூடிய கேமரா வேறு, கைகளை வலிக்கச் செய்தது. பைலட் அவ்வப்போது அட்ஜஸ்ட் செய்தார். இந்த வீடியோவுக்கு தனிக் கட்டணம்.
முகத்தில் சிரிப்புடன் ஒரு வழியாக பறந்து கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் சில உரையாடல்களைப் பதிவு செய்து கொண்டே, பைலட் காலை உயர்த்தி வைக்க வேண்டும் தரையைத் தொடும் போது என லேண்டிங் முறையைத் தெரிவித்தார். மெது மெதுவாக பறவை போல் வட்டமடித்து, ஸ்டண்ட் எதுவும் வேண்டாமெனக் கூறி, கீழே பெரிய இறங்கு தளமொன்றில் விமானம் போன்றே இறங்கிய போது, எல்லாம் இனிதே நிறைவேறிய மகிழ்வு மனதில். வீடியோ காப்பியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தாயிற்று. கீழே ஆற்றுப் படுகையில் இறங்கி, போட்டோ எடுத்த பிறகு பயணம் 160 கிமீ மேல் எனக் காட்டியது. நமது காரோட்டி சொன்னார், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு இளம்பெண் மேலிருந்து விழுந்து இறந்து விட்டாள் எனவும், அவளுடன் வந்த பைலட் லைசென்ஸ் இல்லாத இளைஞன் என்றும், அதனால் சில நாட்கள் Para gliding நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது எனவும் தகவல் சொன்னார்.
பயணம் முழுவதும் மலைப் பாதைகளிலேயே. மண்டி வரை் சிம்லாவிலிருந்து போன் அதே சாலை, மூன்று குகைப் பாதைகள், ஒற்றை சாலை வெட்டப்பட்ட பாறைகள் ஒரு புறம், வெகு ஆழத்தில் ஆற்று நீரோட்டம் என பயணம் தொடர்ந்தது. 16 deg C வெயில் சுட்டது உடலை. மதிய உணவு, டீ வழியில் அருந்தி , மலை ஏற்ற வழியில் அமைந்த ஓட்டலை அடைந்த போது, உயரம் குறைவான தர்மசாலா 13 deg C வெப்பம் காட்டியது. அறையை அடைந்த போது இருட்டியிருந்தது. தூரத்தே பனி மூடிய மலைகள், நகர ஒளிக் கீற்றுகள், சமீபத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் மைதான சிவப்பு விளக்கு என அழகான காட்சிகள். நண்பர்களுடன் மொபைல் அரட்டை, இரவு உணவோடு இன்றைய நாள் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை: