திங்கள், 15 ஏப்ரல், 2024

இமாசலப் பிரதேசம் நாள் இரண்டு (12/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் இரண்டு (12/03/24)
குளிரில் நடுங்கி, ஹீட்டர் வைத்தும் குளிர் குறையாத இரவில் தூங்கி, வழக்கம் போன்று ஆறரைக்கு உறக்கம் கலைந்தது. வெளியே பார்த்த போது கதிரவன் மெல்ல மேலேறி வந்து கொண்டிருந்தான். படுக்கையிலே முதல் நாள் தொடர் முடித்த போது மணி ஒன்பது நெருங்கியிருந்தது. குளியலுக்குப் பிறகு காலையுணவு சாப்பிட 9 45 ஆகி விட்டது. சுமாரான உப்புமாவும், ஆலு பரோட்டாவும், காப்பியும் உள்ளே தள்ளி, சந்தன் வந்தவுடன் சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ள குஃப்ரிக்குப் பயணம்.
அவ்விடத்தை அடைவதற்கு முன்பே இப்போது பனிப் பொழிவு இல்லையென்றார் நமது சாரதி.
மலை உச்சி அடைய நமது குலுக்கு மலை ஜீப் சவாரியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதை விட மோசமான சகதி நிறைந்த பாதை. குதிரையில் போக வரப் பேசி சிரமத்துடன் ஏறி உட்கார்ந்த போது, எப்போது வேணாலும் சகதியில் விழுந்து விடுவேன் போல சவாரி. எதிரே சிலர் வேகமாக புரவிச் சவாரி செய்து வந்த போது நிச்சயம் ஒலிம்பிக் போகலாம் என்று நினைத்தேன். நடந்து போகக்கூட முடியாத அப்பாதையில் சுமார் மூன்று கிமீ பயணம் போகும் போது முன்னாடி சாய்ந்தும், வரும்போது பின்னாடி சாய்ந்தும், பேலன்ஸ் செய்து விழாமல் வரும் அனைவருக்கும், நிச்சயமாக எனக்கு, பரிசு கொடுக்க வேண்டும். ஆயிரக் கணக்கில் குதிரைகள் மேல் பெண்கள், ஆண்கள், பெரியவர்களோடு குழந்தைகள் எனப் பயமின்றிப் பயணிப்பது ஆச்சரியப் பட வைத்தது. 2800 மீக்கு மேல் உயரமான மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கின் அழகு மிகவும் கண்ணுக்கினிமை.
தொலைநோக்கியில் பார்ப்பது வேண்டாமெனச் சொல்லி, மலைப் பிரதேச வாழ் மக்களின் உடையணிந்து போட்டோக்கள் எடுத்த பிறகு, மீண்டும் படியேறி மாதா தரிசனம் முடித்து, கீழே இறங்கும் போது, சிறிய பனிக்கட்டிகள் சர்க்கரை உருண்டைகள் போல மேலே விழ ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் நமது குதிரை ஓட்டுநர் வரவும், மேலேறுவது விட கீழே இறங்கும் போது சிறுவனின் உதவி அடிக்கடி தேவைப் பட்டது. சாகசப் பயணம் எனக்கு. சூடாக சுவையான இஞ்சி டீ சாப்பிட்டு அடுத்த இடமான, institute of Advance studyக்குப் பயணம். இதைப் பற்றிய முழு விவரங்கள் கூகுளில் உள்ளது. 1888 ல் கட்டப்பட்டு, பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் அனைவரும் தங்கிய, 1947ல் பாகிஸ்தான் பிரிவினை விவாதம் நடந்த இடமும், ஜனாதிபதிகள் கோடைக்கால வாசம் செய்யும் மாளிகையுமாய் இருந்து, டாக்டர். இராதா கிருஷ்ணன் அவர்களால்,institute ஆக மாற்றப் பட்டது. அரண்மனை போலுள்ள மாளிகை, பல புகைப்படங்கள் உள்ளே உள்ளது என்ற செய்தியை அறிந்து கொண்டேன். உள்ளே போக அனுமதி ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, போட்டோ எடுக்க அனுமதியில்லை.
எல்லோரும் வெளிப்புறப் பாதையில் வித விதமாய், புகைப்படங்கள் எடுத்தனர், நானும் எடுத்தேன், எடுத்துக் கொண்டேன். அடுத்தது ஜக்கு அனுமன் கோயில், அதற்கு முன்பு மாலை உணவு( late lunch).
சிம்லா ஏழு மலைகளால் ஆனது என்றும், ஒன்றின் உச்சியில் Advance Study Institute, இன்னொன்றின் உச்சியில் அனுமன் சிலை மற்றும் கோயில். இங்கிருந்து, நகருக்கு நடுவில் உள்ள கடை வீதி வரை கேபிள் கார் உண்டு, இந்தியாவின் மிக நீண்ட கேபிள் கார் இதுதான் எனத் தகவல். நான் காரில் சென்றதால் மலை அடிவாரம் வரை சென்று, படிக்கட்டுகளில் ஏறி, அனுமன் சிலையைக் கண்டபின், கோயில் உள்ளும் சென்று, கீழிறங்கி தேநீர் அருந்தி, ஓட்டலுக்குத் திரும்பிய நொடியில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஹீட்டர் இப்போது படுக்கைககு அருகில் உள்ள ஸ்விட்சில் வேலை செய்ய ஆரம்பித்தது. நாளை காலை எட்டு மணிக்கே கிளம்பலாம், மணாலி பயணம் ஆறு மணி நேரமாகலாம் என்பதாலும், போகும் வழியில் பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளதாலும், அவ்வாறு முடிவெடுக்கப் பட்டது. பயணம் இனிதாகவும் அட்வென்சரோடும் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை: