திங்கள், 15 ஏப்ரல், 2024

ஊதா கலர் அழகி

 ஊதா கலர் அழகி

சண்டிகர் விமான நிலையம், பாதுகாப்பு சோதனை முடித்து, ரெஸ்டாரண்டில், மதிய உணவு முடித்து, கேட் எண் மூன்றை அடைந்து, மொபைலில் சார்ஜ் நாற்பதை நெருங்கிய தால், சார்ஜில் போட்டு அதனருகில் உள்ள இருக்கையில், அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பிற்பகல் இரண்டரைக்கு மேல் பல விமானங்களின் தரையிறங்குதல், புறப்பாடு நடை பெற்றுக் கொண்டிருந்தது.
நடுத்தர வயதுப் பெண்மணி வேக வேகமாக வந்து, தனது மொபைலைச் சார்ஜ் போட்டு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். முப்பது, முப்பத்தைந்து வயதிருக்கலாம். கொட்டைப்பாக்கு கொழும்பு வெத்தலைப் பாடலுக்கு நடனமாடிய குஷ்பூ போன்று அழகாய் இருந்தாள். வெளிர்நீல புடவையும், கறுப்பு முக்கால் கை பிளவுஸூம், மேட்சிங்காக கறுப்பு ஷூ, கறுப்பு, கோல்ட் கலந்த நெற்றிப் பொட்டு என வர்ணிக்கும் அளவுக்கு, ஃபேர் கலராகவும் இருந்தாள்.
சார்ஜ் போடுவது ஐந்தே நிமிடத்தில் எல்லாவற்றையும் தனது கைப்பையில் போட்டு எடுத்துக் கொண்டு கேட் நான்கு வரை சென்று, யாருக்கோ காத்திருப்பது போன்ற நிலையற்ற பதட்டம் அவள் முகத்தில்.்நான்கைந்து முறை இது தொடர்ந்தது. பலரது பார்வையும் அவள் மேலேயே, அவளது நடவடிக்கை அவ்வாறு, புடவையை அடிக்கடி சரி செய்ததில் இருந்து, புடவை அடிக்கடி கட்டாத பெண்ணாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். பதட்டத்தின் காரணம் கேட்கலாமா எனத் தோன்றினா
லும், கேட்கத் தயங்கி அவளது நடவடிக்கைகளை கவனித்தவாறு இருந்தேன்.
ஐந்தாவது முறையும் , சார்ஜ் போட்டுவிட்டு, எனது பக்கத்து இருக்கையில் அதே பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள். அவளே என்னிடம் பேச்சு கொடுத்தாள் இப்போது. ஆங்கில உரையாடல். நீங்கள் பெங்களூர் போகிறீர்களா என்றாள். ஆமாம் என்றேன். Vistara விமானத்திலா என்றாள். நான் மிக அமைதியாக இருந்த்து அவளுக்கு வியப்பாய் இருந்திருக்க வேண்டும். இல்லை நான் இண்டிகோ நான்கரை மணி விமானம் என்றேன். யாருக்காவது காத்திருக்கிறீர்களா எனக் கேட்டதற்கு இல்லை Vistara அரை மணி நேரம் தாமதம் என்றும், பெங்களூருவில் ஏழு மணிக்கு Conference என்றும் சொன்னாள். மணி மூன்றை நெருங்கி இருந்தது. எங்கே எனக் கேட்டதற்கு பெல்லந்தூர் என்றாள். ஏழு மணிக்கு நீங்கள் அங்கே அடைவது சாத்தியமே இல்லை எனச் சொன்னதும் நீங்கள் பெங்களூரா என்றாள், நான் ஆமென்று கூறி, பெங்களூருவின் மாலை நேர டிராபிக்கில், குறைந்தது ஒன்றரை மணி நேரம் அவுட்டர் ரிங் ரோடில் ஆகும் எனச் சொன்னேன். விஸ்டாரா விமானம் ஒன்று தரையிறங்கியதைக் காண்பித்து, இது உங்களது விமானமாக இருக்கலாம் என்றேன். அவளது பதட்டம் என்னுடன் பேசிய போது குறைந்திருந்ததாகத் தோன்றியது.
மீண்டும் அனைத்தையும் கைப்பையில் போட்டு, இருக்கையிலிருந்து எழுந்து,Happy Journey என்றபடி புறப்படத் தயாரானவளிடம், Same to you என்றேன். All the best to your Conference என்று சொல்லி முறுவலித்தேன், அவள் புன்னகைத்தபடி, நன்றி எனச் சொல்லி, கேட் நான்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

கருத்துகள் இல்லை: