திங்கள், 15 ஏப்ரல், 2024

இமாசலப் பிரதேசம் நாள் ஏழு , எட்டு ( 17/03, 18/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஏழு , எட்டு ( 17/03, 18/03/24)
காலை ஒன்பதரைக்கு வழக்கம் போல் கிளம்பி, தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தை அடைந்த போது, உள்ளே போக அனுமதிச் சீட்டு கேட் 5 ல் கொடுப்பதாகக் கூறி, சுமார் ஒருமணி நேரம் கழித்தே கொடுக்க ஆரம்பித்தார்கள். ஞாயிற்றுக் கிழமையாதலால் மக்கள் கூட்டம் நிறையவே இருந்தது.
உள்ளே சென்ற போது வண்ண வண்ண இருக்கைகள், பசுமை போர்த்திய மைதானம், ரெட் கலரில் கட்டிடங்கள், பின்புறத்து மலைக் குன்றுகள் என மிக அழகாக இருந்தது. கூடிய விரைவில் IPL போட்டிகள் இங்கு தொடங்கப் படலாம். பச்சைப் புல்வெளி போர்த்தியதால் ஃபீல்டிங் செய்வது நன்றாக இருக்குமென எண்ணினேன். மைதானம் மற்ற இடங்களை விடச் சிறியது எனவே தோன்றியது.
அடுத்தது திபெத் கைவினைப் பொருட்களின் கடை வீதி. வெறும் கண் நோக்கு மட்டுமே. ஏன் விலையை உயர்த்தி வைத்து ஏமாற்றுகிறார்களோ தெரியவில்லை. சரியான இலாபம் வைத்து விற்றால் வியாபாரம் அதிகரிக்கலாம். வேர்க்கடலை கொரித்தபடி பார்வையிட்டுத் திரும்பி, டல்ஹவுசி நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம். நான்கு மணி நேரப் பயணம். ஒரு மணி நேரத்தில் முப்பது கிமீக்கு மேல் கடக்க இயலவில்லை. முழுவதுமே மலைப் பாதை. ஸ்டேட் ஹைவே குறுகி், சாலைப் பழுது நடந்து கொண்டே இருந்தது. சிறிது தூரமே தேசிய நெடுஞ்சாலை. சாலைகள் வளைந்து வளைந்து, பல இடங்களில் ஒரு வாகனம் மட்டுமே போவதற்காள அகலம. மதிய உணவு முடித்து மீண்டும் பயனித்து, ஓட்டலை அடைந்த போது, ஐந்து்மணி. ஓய்வெடுத்து இரவு உணவை மூன்றாம் மாடியில் சாப்பிட்டு, அறைக்கு வந்து, வழக்கம் போல் பத்தரைக்கு உறங்கப் போயாயிற்று.
காலை உணவுண்ண மூன்றாவது மாடிக்குச் சென்ற போது, கதிரவன் ஒளி வெள்ளம் அதிகமாகவே இருந்தது. பார்க்க தூரத்து பச்சையும், மலை முகடுகளும் அழகாக. ஒன்பதரைக்கு கஜ்ஜியார் நோக்கிப் பயணம். வழி நெடுகிலும் பசுமையான பைன் மரக் காடுகள், மிகப் பிரசித்தி பெற்ற டல்ஹவுஸி பப்ளிக் பள்ளி, பனிப் பொழிவு நிறைந்த மலைகள் எனக் கண்களுக்கு இனிமையான காட்சிகள். சுமார் 24 கிமீ கடந்த பிறகு திடீரென கண்ணில் பட்டது, பசுமை போர்த்திய மிகப் பெரிய சமவெளிப் பிரதேசம். மினி சுவிட்சர்லாந்து என்ற பெயரோடு வரவேற்றது. சிறியதாய் நடுவே ஏரி ஒன்று. பனி உருகிய நீர் புல் வெளியில் ஊறி, கால்களை நனைத்தது, நடக்கும்போது. வட்ட வடிவத்தில் அழகாய், சுற்றிலும் பைன் மரக்காடுகள், குதிரை ஏற்றம் செய்வதற்கென சிமென்ட்டால் ஆன பாதை என மிக அழகாய் இருந்தது. ஒரு டூயட் பாட ஏற்ற இடம். பலர் ஜோடிகளாய்த் திரிந்தார்கள். தொப்பை குறைய வழி சொல்வதாக இளைஞர்கள் சிலர் பெட்டியுடன். ஒரு கூட்டம் கிரிக்கெட் ஆடிக் கொண்டு, பாராசூட்டை கயிற்றால் கட்டி மேலுயர்த்தி சிலர், புல்வெளியில் போஸ் கொடுக்கச் சொல்லி நிழற்படம் காமிராவில் எடுத்துக் கொடுக்க சிலர், கடைகளில் துரித உணவு சுடச் சுட தயாரித்துத் தந்தபடி சிலர் என மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். ஒரு முழுச் சுற்று முடித்து, பிரட் ஆம்லெட் சூடாய் வயிற்றுக்குள் தள்ளி் தேநீர் அருந்தி, மீண்டும் டல்ஹவுசி நோக்கிப் பயணம். இடையில் இரண்டு இடங்களில் நிறுத்தி பள்ளத்தாக்கு ஒன்றையும், ஆர்மி பள்ளி அருகே இருந்த ஜீப், போர்க்கப்பல், விமானம் முதலானவற்றோடு் போட்டோ எடுத்து, நகரை அடைந்து கடை வீதியைச் சுற்றி வந்தபோது கால்கள் வலிக்க ஆரம்பித்தன.
ஒரு கடையில் பிரட் மற்றும் பிஷ் டிக்கா ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து, ஓட்டலை அடைந்தபோது, இமாசலப் பிரதேசத்து எட்டு நாட்கள் சுற்றுலா முடிவடைந்ததை உணர்ந்தேன். நாளை ஒரு நீண்ட பயணம், சண்டிகரை நோக்கி, 340 கிமீ தூரம். சுமார் ஒன்பது மணி நேரமாகலாம்.

கருத்துகள் இல்லை: