திங்கள், 15 ஏப்ரல், 2024

குணா குகை, கொடைக்கானல்

 குணா குகை, கொடைக்கானல்

1989 - 2003 இந்த காலக் கட்டங்களில் பலமுறை கொடைக்கானல் சென்றிருக்கிறோம். L&T ல் , மேலாளராக ஆன பிறகு , கெஸ்ட் ஹவுஸில் தங்க இரண்டாண்டுக்கு ஒரு முறை அனுமதி கிடைக்கும். அதற்குப் பிறகும் முன்பும் நண்பர்களோடு சென்று வந்த்து இதில் அடக்கமில்லை.
அவ்வாறு செல்லும் போது உணவு தயாரிப்பதிலிருந்து, துணி துவைப்பது வரை வேலையாட்களே பார்த்துக் கொள்வர். அதனருகில் ஜெமினி கணேசனின் வீடொன்றும், L&T founder லார்சன் வீடும் இருந்தன. ஏரியிலிருந்து உயரும் பாதையிலே உள்ளது.
மகன்கள் சிறுவராய் இருந்த போது சில நாட்கள், செப்டம்பர் விடுமுறையில் போய்த் தங்குவோம். சுற்றிப் பார்க்க ஜீப்பும் முன்னமே சொல்லி வைத்தால் டிரைவருடன் செல்ல அனுமதி கிடைக்கும்.
முதன் முதலாகச் சென்ற போது, டிரைவரின் துணையோடு நானும் மனைவியும் உள்ளே இறங்கிச் சென்ற போது இருட்டாக பயமாகவே இருந்தது. தண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. சிறிது தூரம் சென்ற பிறகு ஆக்ஸிஜன் சப்ளை இருக்காது போக வேண்டாமென டிரைவர் சொல்லி விட்டார். அப்போதே அதற்கு குணா குகை என்ற பெயர் ( Devil's Kitchen) வந்து விட்டிருந்தது. நாங்கள் சென்ற வருடம் நினைவில்லை. அப்போது தடை செய்யப் பட்டிருக்கவில்லை. பில்லர் ராக்ஸ் என்று சொல்லப் படும் அதன் உச்சிப் பாதையில் தான் பல புதை குழிகளும் ( மஞ்சுமோல் பாய்ஸ் குணா குகை குழி) இருந்தன. டிரைவர் கூடவே வந்து வழி காட்டிச் சென்றார். மேலே இருந்து கீழே பார்க்க தலை சுற்றியது.
படத்திற்காக அனுமதித்தார்கள் போல உள்ளது, ஏனென்றால் அதன் பின் சென்ற பல முறையும் அது தடை செய்யப்பட்டு விட்டது. இறந்தவர்கள் பலரது உடலை மேலே கொண்டு வருவதற்கென்றே சிலர் உண்டு என்றும், அவர்களுக்கு பல ஆயிரங்கள் கொடுத்தாலே உடலை மீட்க முடியும் என்றும் அவ்வூரில் வாழ்பவர் மூலமாக பிறகு அறிந்து கொண்டோம்.
இன்று அந்த மலையாளப் படம் பார்த்த போது பழைய நினைவு தூண்டப்பட்டு, எழுதத் தோன்றியது. இயற்கை அழகானது மட்டுமல்ல சில நேரங்களில் ஆபத்தானதும் கூட.

கருத்துகள் இல்லை: