திங்கள், 15 ஏப்ரல், 2024

இமாசலப் பிரதேசம் நாள் ஒன்று (11/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஒன்று (11/03/24)
வெகு நாட.களாய்க் கண்ட கனவு நிறைவேறப்போகிறது என்ற எண்ணத்துடன், காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தயாரான போது, Makemy trip ல் புக் செய்து, உறுதிப் படுத்தப் பட்ட கார் வரவில்லை, கொடுக்கப் பட்ட மொபைல் நம்பரில் பதிலும் இல்லை, பலமுறை முயற்சித்து, ஓலா ஆப்பில் மூன்றே நிமிடத்தில் டாக்ஸி வருமென தகவல் வர, போன் செய்து உறுதி செய்து, ஐந்து மணிக்குப் பதிலாக, ஐந்து பதினைந்துக்கு வீட்டிலிருந்து கிளம்பியாயிற்று. நாற்பத்தைந்து கிமீ கடக்க, ஒன்றரை மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டு, ஓட்டுநரின் கதையைக் கேட்டுக் கொண்டே பயணித்து, ஆறு இருபதுக்கே, ஏர்போர்ட் புறப்பாடு வாசலை அடைந்தாயிற்று.
செக் இன் செய்து, செக்யூரிட்டி சிக்கல் பல மாற்றங்கள். நான்கு பெட்டிகளில் தனித் தனியாக, லேப்டாப், சார்ஜர், பேக், பெல்ட்,பர்ஸ்,ஷூ அனைத்தும். எட்டு இருபதுக்குச் சரியாக கிளம்பி கோவா சேர்ந்த போது ஒன்பதரை. மூன்று மணி நேர காத்திருப்பு அங்கே. காலை உணவை பெங்களூர் ஏர்போர்ட்டில் ஏழு மணிக்கெல்லாம் முடித்ததால், பதினொரு மணிக்கே பசித்தது. பிஸிபேளா பாத்தும், மோரும் சாப்பிட்டு, கடைகளைப் பார்வையிட்டு, பொழுது போனது. இங்கும் செக்யூரிட்டி செக் வேறு விமானமானதால். சரியாக 12.35 க்கு விமானம் ஆகாயத்தில் உயர்ந்து 37000 அடியில் பறப்பதாக கேப்டன் சொல்ல துணை கேப்டனாக பெண் ஒருவர். நாற்பது விழுக்காடு பெண்களாம் இண்டிகோ பணியாளர்களில்.
இரண்டரை மணி நேரப்பயணம் கோவாவிலிருந்து சண்டிகருக்கு. மூன்றரை மணிக்கு, தயாராக இருந்த டிரைவர் சந்தன் காரில் ஏறி உட்கார்ந்த போது 28 டிகிரி செல்சியஸ். நெடுஞ்சாலை NH5 ல் பயணம், 117 கிமீல் சிம்லா. வழிநெடுக சாலை விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது. பெட்ரோல் 96 க்கு விற்றது, பத்து ரூபாய் குறைவு பெங்களூரை விட. நடுவே நிறுத்தி பேல்பூரி, லெமன் டீ அருந்தி இமாசல்பிரதேச மலையேற்றம் ஆரம்பித்த போது குளிரின் தாக்கம் ஆரம்பித்தது. மாலைக் கதிரவன் செங்கதிராய் மேகங்கள் ஊடே, மலைகளின் தலையில் கிளிக்கி, மீண்டும் பயனித்து, pine view cottage ,சிம்லா அடைந்தபோது மணி எட்டு. வெப்ப அளவை சோதித்த போது, 9 டிகிரி எனக் காட்டியது. தரை சில்லிட்டது. ஹீட்டர் வேண்டுமென்று வாங்கி, அறைக்குள் வைத்த போதும், குளிர் குறையவே இல்லை. முகத்தை மூடித் தூங்கிப் பழக்கமில்லாத நான், ஸ்வெட்டர் போட்டு, கம்பளிக்குள்ளே புகுந்து உறங்க வேண்டியதாயிற்று. குளிரின் தாக்கம் தோலை ஊடுருவி, உடம்பு சி்ல்லென இருந்தது, இப்போது மெதுவான கத கதப்பில் உறக்கம் வந்நது. நாளை முதல் ஊர் சுற்றல் ஆரம்பம். சந்தன் சிம்லாவைச் சேர்ந்தவர் ஆதலால் காலை பத்து மணிக்கு வருவதாகச் சொல்லி, சென்ற பிறகு, சுவையுடன் சூடான இரவு உணவு முடித்து, உறங்கி ஆயிற்று. குளிரின் தாக்கத்தை எவ்வாறு பழக்கப் படுத்திக் கொள்வது என்ற யோசனையுடன் இந்த நாள் முற்றுப் பெற்றது, நாளை தொடரும்.

கருத்துகள் இல்லை: