திங்கள், 15 ஏப்ரல், 2024

இமாசலப் பிரதேசம் நாள் ஐந்து ( 15/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஐந்து ( 15/03/24)
இங்கு வந்த நாள் முதலே, கதிரவன் பகல் வேளைகளில் தன் முழுச் சக்தியையும், இம்மலைப் பகுதிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறான், குளிருக்கு இதமாக. வெளியே 2 deg C என்று அலைபேசி சொல்கிறது. முன்னர் பயந்தவாறு மைனஸ் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
இன்றைய முதல் பயணம் இடும்பாதேவி கோயில். மகாபாரதத்தில் பீமனின் மனைவியும், கடோத்கஜனின் அன்னையும் நினைவு கூறப் பட்டு மரத்தினால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் பழமையாய், பைன் மரக் காட்டுக்கு நடுவே அழகாக அமைந்திருந்தது. அருகிலேயே மகன் கடோத்கஜனுக்கும் கோயில் மரத்தடியில் காணப்பட்டது. மதங்கள் எத்தனையானாலும், கடவுளர் எண்ணற்றவர் ஆனாலும், இருந்தனரா இல்லையா என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு, மனிதரை நல்வழிப்படுத்தவே என்று கொள்ளலாம்.
அடுத்து வசிஷ்ட முனிவரின் ஆலயம், சிவன் மற்றும் இராமரின் ஆலயங்களில் வழிபாடு. சுமார் 500 மீ மலையேற்றப் பாதையில் நடந்து மூச்சு வாங்கி, தேநீர்அருந்தி, திரும்பிய போது, ஜோக்னி என்ற அருவி அருகில் உள்ளது, கரடு முரடான ஒரு கிமீ பாதை என்று கூகுள் சொன்னதால், காருக்குத் திரும்பி இப்போது மணாலி நகரில் உள்ள வன விகார் என்ற மிகப் பெரிய பைன் மரக்காடு, பார்வையிட, அனுமதிச் சீட்டு பெற்று உள்ளே நுழைந்த போது, இளசுகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இளஞ்சோடிகள் விதம் விதமாக போட்டோக்கள் கிளிக்கினர். அங்கிருந்த மரப் பெஞ்சில் உட்கார்ந்து சாம் மற்றும் அசோக் இவர்களோடு வீடியோ காலில் அரட்டை அடித்து சில மணித்துளிகள் போனது. ஆட்டுக் குட்டி ஒன்று அழகாய் இருந்ததால் இருபது ரூபாய் கொடுத்து அதனுடன் படமெடுத்தது வாய்நிறைய பல்லாகத் தோன்றியது.
வனத்தை விட்டு வெளியேறி எதிரே சிலநூறு மீட்டர்களில் உள்ள புத்தக் கோயிலுக்குப் போனபோது கால்கள் அழுதன, பாடாய்ப் படுத்துகிறாயே என்று. உள்ளே சென்று புத்தரை வணங்கி, சிறிய நன்கொடையும் கொடுத்து, வெளியே வந்து பெஞ்சில் அமர்ந்த போது, எதிரே பனி மூடிய மலைகள் அழகாய்த் தோன்றின.
முன்னதாக இங்குள்ள கிளப் ஹவுஸில் சென்று, சில பரிசுப் பொருட்கள் விலை பேசி வாங்கிய போது, பலவித கைவினைப் பொருட்களைக் காண நேர்ந்தது. மதிய உணவை முடித்து நான்கு மணிக்கே அறைக்குத் திரும்பி, நாளைக் காலையில் தர்மசாலாவுக்குப் பயணிக்க அனைத்து துணிகளையும் அடுக்கி வைத்து, சன்னல் வழியாக, சிறுவர்கள் ஆடிக் கொண்டிருந்த கிரிக்கெட்டை வேடிக்கை பார்த்து பொழுது போனது.

கருத்துகள் இல்லை: