புதன், 17 ஜனவரி, 2024

அரபிக் கடலோரம் நாள் ஆறு, ஏழு

 அரபிக் கடலோரம்

நாள் ஆறு, ஏழு
பயணங்கள் ஏதாவதொரு வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும். மூணாரில் இருந்து காலை உணவுக்குப் பிறகு புறப்பட்டு வாகமான் நோக்கிப் பயணம். வழியெங்கும் பசுமை போர்த்திய மலைத் தொடர்கள். அழகிய தோற்றத்துடன் அரண்மனை போன்ற வீடுகள். இத்தகைய வீடுகளில் பசுமைத் தோட்டம் நடுவே வாழ்வது உடல், உள்ளம் இரண்டுக்கும் மிக நலம்.
பல மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, மதிய உணவை மெஸ் போன்ற கடையில் முடித்து, கேரள பாரம்பரிய முறையில், மீண்டும் பயணித்து வாகமான் அடைந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. ஓட்டலில் செக் இன் செய்தபோது அழகான நீர்த்தேக்கத்தில் பல வண்ண மீன்கள் நிறைந்து, அழகாய் தோற்றமளித்தது. ஹனிமூன் அறையை உரிமையாளர் காட்டினார், நல்ல இரசனையோடு கட்டப் பட்டிருந்தது.
சிறிது நேர ஓய்வுக்குப் பின், மலைப் பாதையில், வார விடுமுறையாதலால், வேன்களும் கார்களும் இளைய தலைமுறையினரைச் சுமந்து மெதுவாக ஊர்ந்து சென்றன. கண்ணாடிப் பாலம் அடைந்த போது மழை வேகமாகப் பெய்தபடி, பலத்த காற்றும் கூட, குடை முதல் முறையாகப் பயன்பட்டது. ஆனாலும் நனையாமல் இருக்க முடியவில்லை. கண்ணாடிப் பாலத்தை தூரத்திலேயே நின்று பார்த்துவிட்டு, மெடோஸ் என்ற புல்நிறைந்த மலை முகடு ஒன்றில் மேலேறி, போட்டோக்கள் எடுத்து திரும்பினோம். மழை பெய்தபடியே இருந்ததால், அறைக்குத் திரும்பி, மறு நாள் காலை ஆறு மணிக்கே புறப்பட முடிவானது. மூணார் பார்த்த பிறகு வாகமான் மிகச் சாதாரணமாய்த் தோன்றியது.
ஆறரை மணிக்குக் கிளம்பி, வல்லப் புழா சென்று, பழைய நட்பொன்றை விசாரிக்க நினைத்து, பாதி வழியில், அந்த முகவரியில் வீடு விற்பனைக்கு என கூகுளில் அறிந்து, அங்கு போவதற்குப் பதில் அதிரப்பள்ளி அருவி போக முடிவானது. ரெனி அட்டைப் பூச்சியொன்று இருப்பதைக் கண்டு வெளியே எறிந்தார். சில நிமிடங்கள் கழித்து, என்னுடைய பேண்ட் கால் பகுதியில் தற்செயலாகத் தடவியபோது, சொரசொரவென இருந்தது. குனிந்து பார்த்தபோது அது இரத்தக் கறை, பேண்ட்டை மேலேற்றி பார்த்த போது இரத்தம் கணுக்காலுக்கு மேலே இரண்டு ரூபாய் நாணயம் அளவு உறைந்திருந்தது. அப்போதே உணர்ந்தோம், ரெனி வெளியே எறிந்த அட்டைப் பூச்சி சில மிமீ இரத்தத்தை உறிஞ்சியுள்ளது என. காரை நிறுத்தி, கால்களைக் கழுவி, சானிடசைரில் துடைத்த பிறகு பயணப் பட்டோம்.
அதிரப்பள்ளி அடைந்த போது, ஆற்று நீரோட்டம் மிகக் குறைவாகவும், அருவியின் தோற்றம் சிறிய இரண்டு நீர் வீழ்ச்சியாகவும் அழகு குறைந்து காணப்பட்டது. முந்தைய இரண்டு முறை வந்தபோது ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவி மிக அடக்கமாக. பாறையில் அமர்ந்து சிறிது நேரம் கழித்து, மீண்டும் பயணித்து, மதிய உணவுக்கு ஓட்டல் சென்று, சூடான மீன் வறுவலோடு முதன்முறை நாவிற்குச் சுவையாய், சாப்பிட்ட பிறகு, விமான நிலையம் நோக்கிப் பயணம். நான்கு மணிக்கே ஏர்போர்ட் வாசலில் இறக்கி விட்டு, அசோக் சென்னை பஸ் பிடிக்க கொச்சி நகருக்கு ரெனியோடு சென்றார். செக் இன் செய்து, பேக் டிராப் செய்து, செக்யூரிட்டி முடித்து, கேட் நான்கருகே அமர்ந்த போது விமான நிலையத்தின் அழகை இரசிக்க முடிந்தது. சமீபத்தில் திருமணமான ஜோடியொன்று வித விதமாய், போட்டோக்கள் எடுத்தபடி, பாரம்பரிய வேட்டி புடவை சகிதமாய், அழகாய் இருந்தனர்.
மற்றொரு பயணத் தொடர் முடிவுக்கு வந்தது.ஒரு மணிப் பயணம் என்ற அறிவிப்புடன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே அடைந்து டாக்ஸியில் வீட்டை அடைய ஒன்றரை மணியளவு ஆனது, முப்பத்தாறு கிமீ தூரம் கடக்க. பயணங்கள் தொடரும், மீண்டும் கட்டுரைகளும் தொடரும்.
( மலைத் தொடர் முடிவு)

All reacti

கருத்துகள் இல்லை: