புதன், 17 ஜனவரி, 2024

மனக்குமுறல்கள்

 ஒன்று மட்டும் புரியவே இல்லை. மனிதன் தோன்றிய நாள் முதலாய் அழியாமல் தொடர்கிறது. உயிர்த் தியாகங்கள் பல. போராடிய தலைவர்கள் பலர்.

விடாப் பிடியாய் மனித இனத்தை ஆட்டிப் படைக்கிறது. வெறியாக மாறி இரத்தம் சுவைக்கிறது. படித்தவர் கூட முட்டாள்களாய். சுனாமி, கரோனா என்ற இயற்கைப் பேரழிவுகள் வந்து எல்லோரும் சமம் என்று உணர்த்தினாலும் வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும்.
விசிறி கொண்டு இந்நெருப்பை அணையாமல் பார்த்துக் கொண்டிருப்பவர், தன் சுய நலத்திற்காக சிலர். ஆறடி நிலமோ, ஒரு பானை சாம்பலோ தான் இறுதியில் மிஞ்சுவது என்பது தெரிந்தும் ஆட்டம் அடங்குவதில்லை. மதம், சாதி, மொழி, நிலம் ஏதாவது ஒன்று இவர்கள் மண்டையைக் குடைந்து பைத்தியமாய் மாற்றி விடுகிறது.
எந்த இறைவனும் மற்றவரைத் தாழ்த்தி தன்னை உயர்த்திக் கொள்ள சொல்லவில்லை. எந்த மனிதனும் தாழ்ந்தவன் என்று சொல்லவில்லை. கோயில், மசூதி, சர்ச் என்பவை மனிதனால் உருவாக்கப் பட்டவை. எந்தப் பிரிவும் மனிதனே உருவாக்கியதே. தானே உருவாக்கிய பிரிவை தலையில் ஏற்றிய அறிவிலி மனிதனே.
திருந்தவே மாட்டானோ என ஐயப்பாடு அடிக்கடி தோன்ற வைத்து, சுயநலமிகளின் பொய்ச் சொற்களை நம்பி அழிந்துபோகும் முட்டாள்கள் நிறைந்த உலகாய் மாறி வருவது வெட்கக் கேடு.
எத்தனை தலைவர்கள் வந்து போனாலும் அழியாத இந்த ஆணவம் மனித இனத்தையே அழித்து விடுமோ என ஐயம் தோன்றுகிறது.
மனக்குமுறல்கள் என்னில் தோன்றுவது போல் பலரது மனதிலும் உண்டு. விழித்துக் கொள்வாயா இப்போதாவது. மனிதம் என்ற ஒன்று தான் நமது இணைப்பு, மற்ற அனைத்தும் இடைச் செருகல்கள். மிருகங்கள் கூட கட்டுப்பாடோட வாழ்வதைப் பார்க்கிறோம். திருந்திய சமுதாயம் ஒன்றை வருங்காலத்திற்கு விட்டுச் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை: