புதன், 17 ஜனவரி, 2024

அரபிக் கடலோரம் நாள் இரண்டு, மூன்று

அரபிக் கடலோரம்
நாள் இரண்டு, மூன்று
கனவுகள் மெய்ப்பட வேண்டும், மனதிலே உறுதியோடு செயல்படும் கனவுகள் நினைவுகளாக மாறும் என்பதற்கு எனது பயணங்களே சாட்சி. திட்டமிடல் அவசியம் என்பது இன்று மேலும் உணர்த்தப் பட்டது. நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்குள் நுழைந்து, சுற்றுலாத் தலங்களைப் பார்க்க பல்வேறு வழிகளை யோசித்து முடிவாக, எர்ணாகுளம் ( கொச்சி) சென்று தங்கி அங்கிருந்து பயணப்படுவதென, இரயில் பயணம் காலை 9 15க்குத் தொடங்கியது.
கேரளாவிற்குள் நுழையும் எல்லா இரயில்களும், எர்ணாகுளத்திற்கும் திருவனந்தபுரம் இடையே பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை இரயில் நிலையங்களில் நின்றே செல்கின்றன. இரயில் பாதையின் இருபுறமும் பச்சைப் பசேலேன்ற தோற்றம் தொடர்ந்து வருகிறது. கோட்டயம், கொல்லம், வர்க்கலா என பல நிறுத்தங்கள்.
மாலை நான்கு மணிக்கு ஓட்டலை அடைந்து, சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, லூலு மால் செல்ல முடிவெடுத்து, சவுத் ஸ்டேக்ஷன் மெட்ரோவில் பயணித்து, எடப்பள்ளியில் இறங்கி, மாலில் நுழைந்தபோது, சில வருங்களுக்கு முன்பு பிரமாண்டமாய் தோன்றிய மால் இப்போது சாதாரணமாய்த் தோன்றியதன் காரணம், பெங்களூர் பீனிக்ஸ் மாலின் சமீபத்திய விசிட்.
மறுநாள் வர்க்கலா செல்ல முடிவெடுத்து, இரயிலில் காலை 7 15க்கு புறப்பட்டு, நண்பகலில் இரயில் நிறுத்தம் அடைந்தபோது, டாக்ஸியுடன் ஷியாம் காத்திருந்தார். மூன்று இடங்களுக்குச் செல்ல முடிவெடுத்து ஆறு மணிக்குள் மீண்டும் வந்து எர்ணாகுளம் இரயிலைப் பிடிக்க வந்துவிடவேண்டுமெனச் சொன்னோம். முதலில் சுமார் 35 கிமீ தூரத்தில் உள்ள ஜடாயு பார்க். சிறிய கோயிலாக இருந்த இடம், கேரளாவின் சினிமாத்துறை சேர்ந்த சிலரால் ஆசியாவின் மிகப் பெரிய பறவைச் சிலையாக உருப்பெற்று சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.
மலை மேலே செல்ல 800+ படிகளில் செல்லலாம், கேபிள் காரும் உண்டு. நுழைவுச்சீட்டு 250₹ ஜடாயு பார்க் (கேஷ் மட்டுமே), 250₹ கேபிள் கார், சீனியர் சிட்டிஜனுக்கு 10% தள்ளுபடி. கேபிள் காரில் பயணித்து மேலே சென்ற போது பிரமாண்டமாய் ஜடாயு சிலை. சிறிய கோயில் ஒன்றும். இராமயணப் புகழ் பெற்ற இவ்விடத்தில் பாறையொன்றில் பாதச் சுவடுகள் பதிந்து. வட இந்தியர்கள் அதிகமாகக் காணப் பட்டனர்.
அடுத்த பயணம் கப்பில் கடற்கரை, ஒருபுறம் கடலும், மறு புறம் பேக் வாட்டரும் சாலையின் இருபுறமும் விரிந்து அழகான தோற்றம். தேநீர் அருந்தி, மறுபடி பயணித்து வர்க்கலா கிளிஃப்
சென்ற போது, மலை உச்சியிலிருந்து கீழே கடல், பச்சைப் பசேலென்ற மலையோரத் தாவரங்கள் என அழகான தோற்றம். சுமார் மூன்று கிமீ மலைப்பாதையில் நடந்து கடை வீதி, ரிசார்ட்கள் என எண்ணிலடங்கா கடைகளைக் கடந்த போது, கோவாவை விட அழகாய்த் தோன்றியது. மினி கோவா என்றழைக்கப் படுவது மிகப் பொருத்தம். கால்கள் வலியில் கெஞ்சின, கல் பெஞ்சில் உட்கார்ந்து, கடலின் அழகை இரசித்த போது, அயல் நாட்டினர் பலரையும் காண முடிந்தது.
மீண்டும் எர்ணாகுளம் பதினொரு மணியளவில் அடைந்து மறுநாள் மூணார் பயணிக்க பேக்கிங் செய்து உறங்கச் சென்றபோது, மூன்று நாட்கள் மலைப் பிரதேச சுற்றுலா கண் முன்னே தோன்றியது.
(மலை தொடரும்)


 

கருத்துகள் இல்லை: