புதன், 17 ஜனவரி, 2024

இராஜ புதனப் பயணம் - பகுதி ஏழு

 இராஜ புதனப் பயணம் - பகுதி ஏழு

முன்னரே முடிவெடுத்தது போல காலை ஆறு மணிக்கு முன்பே தயாராய் ஆன போது நமது சாரதி போன் வந்தது. 45 நிமிடம் தாமதம் என்று. அவர் மறுமுறை போன் செய்து வெளியே வருவதற்குள், நான் செல்ல வேண்டிய கேன்டர் வேன் சென்று விட்டதால், காரில் துரத்திச் சென்று ஏறிய போது பல வெளிநாட்டினர் கண்ணில் பட்டனர்.
சஃபாரி செல்ல வேண்டி, அடையாள அட்டை முதலானவற்றைக் காண்பித்து, காட்டின் நுழை வாயிலை அடைந்த போது பல ஜீப்களும், கேன்டர்களும் அங்கே வெயிட்டிங். 1700 சதுர கிமீ பரப்பளவுள்ள ரன்தாம்போர் நேஷனல் பார்க் ஆசியாவின் மிகப் பெரிய புலிகள் சரணாலயத்தில் ஒன்று என நமது கைட் மான்சிங் தெரிவித்தார். 350 சதுர கிமீ மட்டுமே சஃபாரி செல்ல அனுமதி உண்டு.
சில வருடங்களுக்கு முன்பு கபினி, மைசூரில் சொன்னது போன்றே இங்கும் கோடை காலங்களில் விலங்குகள் நீர்நிலைக்கு வருவதால் பார்ப்பது எளிது எனச் சொன்னார். புலி ஒரு சோம்பேறி மிருகம், சிங்கத்திலும் வலிமையானது, சுமார் 300 கிலோ எடையுள்ளது, தனித்தனியாகவே பயணிக்கும் என்ற மிருகங்கள் பற்றிய தகவல் பலவற்றைக் கூறினார். நாங்கள் சென்ற பகுதி Zone 3, மொத்தம் பத்து zone களாகப் பிரித்திருக்கிறார்கள், இந்த zoneல், ரித்தி, சித்தி என ஆண் பெண் புலிகளும், அதன் மூன்று குட்டிகளுமாக ஐந்து உள்ளதாம். மொத்தம் 77 புலிகள் அக்காட்டில் உள்ளதாகத் தெரிவித்தார். மான்களில் புள்ளி மான் மற்றும் சாம்பார், முதலை, குரங்கு, பறவைகள், பாம்பு வகை என பலவும் நிறைந்துள்ளன எனத் தெரிவித்தார்.
காட்டின் உள்ளே வெகுதூரம் பயணித்தும் மான்கள், முதலை, பறவையினங்கள் தவிர புலி எதுவும் கண்ணில் படவில்லை. அங்கங்கே நிறுத்தி, புலி நடந்த காலடிகள் கண்ணில் பட்டன. புலி தென்படவில்லை. வெகு தூரம் காட்டின் உட்பகுதிக்குச் சென்று மலை உச்சி, ரன்தாம்போர் கோட்டை முதலானவற்றைப் பார்த்து கைட் சொல்லும் கதைகளைக் கேட்டபடி சென்ற போது, மற்ற காடுகளைப் போலவே இங்கும் புலி கண்ணில் தென்படப் போவதில்லை என மனதைத்திடப் படுத்திக் கொண்டோம். காட்டின் எல்லை வரை வந்து சிறிது நேரம் பார்க்கலாம் என வேன் நிறுத்திய போது, தூரத்தே வண்டிகள் செல்லும் பாதையில் எங்களை நோக்கி ரித்தி எனப்படும் பெண் புலி வந்தபடி இருந்தது. வேனை ரிவர்ஸில் செலுத்த எங்களை நோக்கி சில அடிகள் நடந்து வந்த புலி காட்டிற்குள் இடது பக்கம் திரும்பி மெதுவாக மறைந்து போனது.
அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி, கைட் மொபைலில் தெளிவாகப் பதிந்திருந்தார். அனைவரும் அதனது காப்பியை பகிருமாறு சொன்னோம். நான் வாட்ஸப் குரூப் ஒன்றை உடனே தொடங்கி, அனைவரது கைபேசி எண்களையும் அதில் இணைத்தேன். ஆனால் அந்த குரூப் உருவாக வெளி வாயில் வரும் வரை காத்திருக்க வேண்டியது ஆயிற்று. நெட்வொர்க் காட்டின் உள்ளே கிடையாது.
திரும்பும் வழியில் சாம்பார் ஒன்றையும்,முதலைகள், மான்கள், குரங்குகள் அதன் குட்டிகள் விளையாட்டு என பார்த்தபடி வாயிலுக்கு வந்த போது நெட்வொர்க் திரும்பவும் அனைவரது கைபேசிகளுக்கும் வீடியோ வந்தது.
பெரு மகிழ்வோடு விடுதிக்குத் திரும்பி உடலில் மற்றும் கைபேசியில் ஒட்டியிருந்த காட்டு வழி மணல் தூசியைச் சுத்தம் செய்து, காலை உணவருந்த பதினொரு மணி ஆனது. பயணத்தின் கடைசி இடத்திலிருந்து விடை பெற்று, ஜெய்ப்பூர் 175 கிமீ நோக்கிப் பயணித்த போது, நமது சாரதி feedback link அனுப்பி தன்னைப் பற்றி நல்லபடியாக எழுதச் சொன்னார்.
சுமார் மூன்றரை மணியளவில் ஏர் போர்ட் அடைந்த போது, நான்கரைக்கே கவுண்டர் திறக்குமெனச் சொன்னதால், காத்திருந்து, ஐந்து மணியளவில், செக் இன் செய்து ( Excess baggage எதுவும் சொல்லவில்லை), அரை மணிக்கு மேல் தாமத்த்திற்குப் பிறகு புறப்பட்ட விமானம் ஐதராபாத் அடைந்த போது பத்து மணி ஆகிவிட்டது. சக பயணியோடு பேசியபடி வந்ததால் நேரம் போனது தெரியவில்லை. இடையே விமானம் தாமதமானதால், எங்களுக்கு மட்டும், பர்கர் ஒன்றும், குளிர் பானமும் கிடைத்தது. மறுபடி டேக் ஆஃப் ஆகி, பெங்களூரை அடைந்த போது, புதிய Terminal 2 லிருந்து எக்ஸிட் அடையவே வெகுதூரம் நடக்க வேண்டியதாயிற்று. ஓலா புக் செய்து வீட்டை அடைந்து, இரண்டு மாதத்திற்குப் பிறகு வருவதால், கிளீன் செய்து உறங்க காலை இரண்டு மணி ஆயிற்று.
நீண்டதொரு பயணம் முடிவுக்கு வந்தபோது, இறைவனுக்கு நன்றி சொல்லி, உடல் நலம் குன்றாத பயணமாய் அமைந்த்தற்காக. பயணங்கள் மனதிற்குப் புத்துணர்ச்சியும், புதிய தகவல்களையும் அளிப்பதோடு, பல நிலப் பரப்புகளின், வாழ்வியல் முறைகள், மூட நம்பிக்கைகள், தேசப் பற்று, வீரம், இயற்கையின் அமைப்பு, மனித நட்புகள் என பலவித அனுபவ அறிவையும் வளரச் செய்கிறது. மீண்டும் தொடரும் வரை ஓய்வெடுப்போம். நன்றி.
( முற்றும் )
All reactions:
Ashok Kumar, Younes Matheen and 1 other

கருத்துகள் இல்லை: